2024: வயநாடு நிலச்சரிவு பேரிடரல்ல, எச்சரிக்கை மணி!
- 2024 ஆம் ஆண்டை கேரள மக்கள் மட்டுமல்லாமல் உலகமே மறக்க முடியாத ஆண்டாக்கிய சில சம்பவங்களின் வரிசையில் வயநாடு நிலச்சரிவும் இடம் பெறுகிறது.
- மனிதர்களின் அசுர ஓட்டத்துக்கு இயற்கைக் கொடுத்த வேகத் தடையாக (பேரிடராக) அமைந்துவிட்ட வயநாடு நிலச்சரிவு கிட்டத்தட்ட 250 உயிர்களைப் பலிகொண்டது. 200 பேரின் நிலை என்னவானது என்பது இன்னமும்கூட தெரியவில்லை (எல்லாரும் கண்டுபிடிக்க முடியாதபடி மண்ணுக்குள் புதைந்துபோயிருக்க வேண்டும்).
2024 ஜூலை 30 இரவு
- மிக அழகிய ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் அடிவாரங்களில் அமைந்திருந்த சூரல்மலை, முண்டக்கை பகுதிகளே நிலச்சரிவின் மையம். நிலச்சரிவு நேரிடுவதற்கு முதல் 24 மணி நேரத்துக்கு முன்பு 204 மி.மீ. மழையும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் 372 மி.மீ. மழைப்பொழிவும் ஏற்பட்டதே இந்த மோசமான நிகழ்வுக்குக் காரணம் எனக் கூறுப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் சூரல்மலை மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே இருந்தது பலி எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகிவிட்டது.
- தரையில் பெய்தாலே தாங்காது. மலையில் பெய்தால்... மழையால் உருண்டோடி வந்த வெள்ளத்தின் ஆற்றல் பன்மடங்குப் பெருகி, காட்டாற்று வெள்ளமாக வழியில் இருந்த வீடுகளையெல்லாம் வேரோடு பறித்துப் புரட்டிப் போட்டுக்கொண்டே அருகிலிருந்த சாளியாற்றில் கொண்டு சேர்த்தது. அங்கு ஒரு ஊர் இருந்தது என்பதைக் காட்ட ஒருசில கட்டடங்களை மட்டுமே மிச்சம் வைத்திருந்தது.
பேரிடியாகக் கேட்ட சப்தம்
- ஜூலை 30 இரவு, நிலச்சரிவு நேரிட்டபோது கனமழை பெய்துகொண்டிருந்தது. அப்போது காட்டாறு வெள்ளம் போல கட்டடங்கள் நிலச்சரிவில் உருண்ட சப்தம் பேரிடியாகக் கேட்டுள்ளது.
- செவ்வாயன்று விடிந்தபோதுதான் முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளே காணாமல்போய்விட்ட தகவல் மக்களுக்குக் கிடைத்தது. சாலைகள், வீடுகள் என மக்கள் வாழ்ந்து வந்த பகுதியே சாட்சியில்லாமல் நிலச்சரிவில் அழிந்துபோயிருந்தது. 93 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவ வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
31 மணி நேரத்தில் பாலம்
- ஆக. 1ஆம் தேதி 144 ராணுவ வீரர்கள் சேர்ந்து 190 அடி நீளமுள்ள பாலத்தை 31 மணி நேரத்தில் கட்டி முடித்தனர். இதனால் இருவஞ்சிபுழா ஆற்றைக் கடந்து சூரல்மலையிலிருந்து முண்டக்கை செல்ல பேருதவியாக இருந்தது.
ஆக. 2 இந்திய விமானப் படை
- ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்திய விமானப் படை தேடுதல் பணியில் இணைந்தது. மேம்படுத்தப்பட்ட ரேடார் கருவிகள் மற்றும் மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
- பூமியை துளைத்தெடுக்கும் கருவிகளும் கொண்டுவரப்பட்டன. பல மாநிலங்களிலிருந்தும் தன்னார்வலர்கள் குவிந்தனர். ஆழத்தில் புதைந்த உடல்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள் உடல்களைத் தேடிக் கண்டுபிடித்தன. ஆறுகளில் நீச்சல் வீரர்கள் உடல்களைத் தேடி எடுத்தனர்.
நான்கு நாள்களுக்குப் பின்..
- படவெட்டி குன்னுவில் தங்களது உறவுகள் இருந்ததாக மக்கள் கூறியதால் நிலச்சரிவு நேரிட்டு 4 நாள்களுக்குப் பிறகு, சேற்றுக்குள் சிக்கியிருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஓரிரு நாள்களில் மாறிய மனம்
- நிலச்சரிவு நேரிட்ட அடுத்த நாள், தேடிக் கொண்டு வரும் உடல்கள் தங்கள் உறவாக இருக்கக் கூடாது என்று மன்றாடிய மக்கள் மனங்கள், ஓரிரு நாள்களுக்குப் பின், கொண்டு வரும் உடல் நம்முடைய உறவாக இருந்துவிட்டால் போதும் என்று நினைக்கத் தொடங்கியிருந்தது.
40 நாள் குழந்தை உயிருடன்
- சூரல்மலையில் பிறந்து 40 நாள்களே ஆன ஒரு குழந்தையும் அதன் 6 வயது சகோதரனும் உயிர் பிழைத்திருந்த அதிசயம் நிகழ்ந்தது. கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மீட்புப் படை வீரர்களுக்கு இது சற்று ஆறுதலை அளித்தது.
கடைசிப் பேருந்து
- முண்டக்கைக்கு திங்கள் இரவு சென்ற பேருந்து, பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, பாலம் வழியாக சென்று சூரல்மலையில் நிறுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை, பேருந்து பயணித்து வந்த ஊரும் பாதையும் நிலச்சரிவில் காணாமல்போன நிலையில், நிகழ்ந்த பேரிடருக்கு சாட்சியாகப் பேருந்து மட்டும் நின்றிருந்தது.
மரபணு சோதனை
- உருக்குலைந்த உடல்களை அடையாளம் காண மரபணு சோதனை நடத்தப்பட்டது. பல உடல் பாகங்கள் கிடைத்ததால் அதனை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதில்தான் துயரமே அடங்கியிருந்தது.
ஆக. 9 மீண்டும் கேட்ட சப்தம்
- எடக்கை பகுதியில் இரவு 10 மணிக்கு மிகப்பெரிய சப்தம் கேட்டது. ஆனால் இது நிலச்சரிவு சப்தம் அல்ல என்றும், மலைப்பகுதிகளில் பலவீனமான நிலப்பரப்பு தன்னைத் தானே சரி செய்யும்போது ஏற்படும் சப்தமாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
86,000 சதுர மீட்டர் நிலம் எங்கே
- சூரல்மலை பகுதியில் நிலச்சரிவுக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. அதில் 86,000 சதுர மீட்டர் நிலம் காணாமல் போயிருந்தது.
கடவுளின் பூமியில்..
- கடந்த பத்து ஆண்டுகளாகவே, கேரளத்தில் பருவமழை, அசுர மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது பேரிடர்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அதில், கனவிலும் கண்டிருக்க முடியாத கோரத் தாண்டவத்துடன் வயநாடு நிலச்சரிவும் சேர்ந்துகொண்டது.
புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கை
- வயநாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆய்வு மையம், நிலச்சரிவு நேரிடுவதற்கு 16 மணி நேரத்துக்கு முன்பு விடுத்த எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவு ஏன்?
- மலைப்பாங்கான பகுதியில் மக்கள்தொகைப் பெருக்கம், மோசமான கட்டட அமைப்பு, மலைப்பகுதியில் அதற்கேற்றவாறு திட்டமிடப்படாத நகரமயமாதல் காரணங்களுடன், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பல காரணிகள், உலக வெப்பமயமாதலின் வேகத்தை அதிகரித்து, அதனால், திடீரென அதிக கனமழை பெய்து கூட்டாக நிலச்சரிவுக்கு வழிவகுத்தன.
காளான் போல கட்டடங்கள்... இன்றோ?
- கல்பேட்டை பகுதியில் 2021 - 22ல் மட்டும் புதிதாக 3,500 கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. வயநாடு மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்று?
மீண்டவர்களின் கண்ணீர் கதை
- மாநில அரசு, அறிவித்த ரூ. 300 உதவித் தொகைக்கான முதல் தவணை செப்டம்பரிலும் 2 ஆம் தவணை நவம்பரிலும்தான் கிடைத்திருக்கிறது. தற்போதைக்கு தேயிலைத் தோட்டத் தொழில் மட்டுமே உதவிக்கொண்டிருக்கிறது. ஆண்களுக்கு வேலை கிடைப்பதில் பெரும் சிக்கல். வேலை கிடைத்தாலும் முகாமிலிருந்து இரண்டு மணி நேரம் பயணித்தால் மட்டுமே வேலை என்ற நிலை. தற்போதைக்கு வாடகைக்கு ரூ. 6,000 கொடுக்கும் உதவி மட்டும் கைகொடுக்கிறது என்கிறார்கள் மக்கள்.
நிவாரண உதவிப் பட்டியலில் தவறுகள்
- மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பயனாளர்களைத் தேர்வு செய்யும் முறையில் அரசும் அதிகாரிகளும் மெத்தனமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட இடத்துக்கு நேரில் வந்து பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே தப்பும் தவறுமாக தயாரிக்கப்பட்டிருக்கும் பட்டியலை ரத்து செய்யவும் வலியுறுத்துகிறார்கள்.
நிதியின்றி..
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பியவர்கள் மீண்டும் தங்களது வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொள்ள இயலாமல் தவித்து வருகிறார்கள். மாநில அரசு பெரும் நிதியை ஒதுக்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டாலும் போதுமானதாக இல்லை.
அபாய ஒலி
- வயநாடு இயற்கைப் பேரிடராக இருந்த போதும், அதன் பின்னணியில், மக்களின் தவறுகளால் நேரிடும் அபாயங்களுக்கான எச்சரிக்கை மணியாகவே இது அமைந்துள்ளது. இனியும் மலைப் பகுதிகளில் கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல், இதுபோன்ற அபாயங்களுக்கு வித்திடும் என்பதற்கான அபாய ஒலியாக எடுத்துக்கொண்டு கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் மற்றும் வானிலை ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
வயநாடும் பிரியங்கா காந்தியும்
- வயநாடு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நவ. 13ஆம் தேதி வாக்குப்பதிவும், 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வதேரா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதுவரை கட்சிக்காக பணியாற்றி வந்த பிரியங்காவுக்காக அவரது சகோதரர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்தார்.
- வயநாடு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவால், தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பிரியங்கா சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்வானார். பிரியங்கா காந்தி பெற்ற வாக்குகள் 6.22 லட்சம். இந்திய கம்யூ. வேட்பாளர் சத்யன் மெகேரி பெற்றிருந்த வாக்குகள் 2.11 லட்சம். இதனால், 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வயநாட்டில் வெற்றிபெற்று ராகுல் படைத்திருந்த சாதனையை பிரியங்கா காந்தி முறியடித்தார்.
- மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டு முதல் முறை மக்களவை உறுப்பினராக பிரியங்கா காந்தி வதேரா நுழைந்த போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் (தாய் சோனியா, சகோதரர் ராகுல், இப்போது பிரியங்கா) நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் புதிய சாதனை படைக்கப்பட்டது.
நன்றி: தினமணி (25 – 12 – 2024)