TNPSC Thervupettagam

2024 - அதிகரித்த ரயில் விபத்துகள்!

January 1 , 2025 3 days 40 0

2024 - அதிகரித்த ரயில் விபத்துகள்!

  • ரயில் போக்குவரத்து தொடங்கியதில் இருந்தே ரயில் விபத்து தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. 2024-ஆம் ஆண்டிலும் ரயில் விபத்துகள் அதிகம் நேரிட்டிருப்பதாகவே தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டில் இந்த ஆண்டில் நவம்பர் 26 வரை 25-க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இவ்விபத்துகளில் சிக்கி 17 பேர் பலயாகியுள்ளதாகவும், 71 பேர் காயமடைந்துள்ளதாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • ரயில்வே என்பது மிகப்பெரிய போக்குவரத்துத் தொடர்பு. இதில் மனித தவறுகள், தொழில்நுட்பக்கோளாறு, நாசவேலை போன்ற காரணங்களால் ரயில்வே விபத்துகள் நடக்கின்றன. இந்தாண்டு நிறையவடையவுள்ள நிலையில் நாட்டில் நடந்த சில முக்கிய ரயில் விபத்துகள் பற்றிய அலசல்.

ஜம்தாரா ரயில் விபத்து - பிப்ரவரி 28, 2024

  • ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தரா மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றவர்கள் மீது ரயில் மோதியதில் 2 பேர் பலியாகினர். 'வித்யாசாகர்-கசித்தர் இடையேயான ரயிலின் (அங்கா விரைவு ரயில்) அவசரகால ரயில் நிறுத்த சங்கிலி இழுக்கப்பட்டதால் அசன்சோல் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற இருவர் மீது அவ்வழியே வந்த உள்ளூர் மின்சார ரயில் மோதி இந்த சம்பவம் அரங்கேறியது.

ஹௌரா-மும்பை பயணிகள் விரைவு ரயில் விபத்து - ஜுலை 2024

  • மேற்கு வங்க மாநிலம் ஹௌராவிலிருந்து மும்பைக்கு பயணிகள் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தபோது, பாராபம்போ ரயில்வே நிலையத்துக்கு அருகில் உள்ள வழித்தடத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு அதன் ஒரு பெட்டி மட்டும் தண்டவாளத்தில் சரிந்திருந்தது.
  • அதன்மீது பயணிகள் ரயில் மோதியதில் ரயிலின் 16 பயணிகள் பெட்டிகள், ஒரு மின்சார விநியோகப் பெட்டி, ஒரு உணவு தயாரிக்கும் பெட்டி என மொத்தம் 18 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகினர். 22 பேர் படுகாயமடைந்தனர்.
  • ஜாம்ஷெட்பூரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள பாராபம்போ என்ற இடத்தில் அதிகாலை 3.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்து - ஜூன் 17

  • மேற்கு வங்க மாநிலம், டாா்ஜீலிங் மாவட்டத்தில் தண்டவாளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி இவ்விபத்து ஏற்பட்டது.
  • நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ரங்கபாணி ரயில்நிலையத்துக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
  • திரிபுராவின் அகா்தலாவிலிருந்து மேற்கு வங்கத்தின சீல்டா நோக்கிச் சென்றுகொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு (13174) ரயில், சிக்னல் காரணமாக தண்டவாளத்தில் நின்றிருந்தபோது, பின்னால் அதே பாதையில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியது.
  • இந்த விபத்தில் விரைவு ரயிலின் பின்பகுதியில் இருந்த 3 பெட்டிகள் உருக்குலைந்து தடம்புரண்டன. சரக்கு ரயிலின் என்ஜினும் கடுமையாகச் சேதமடைந்தது. இதில் சரக்கு ரயிலின் இரு ஓட்டுநா்கள் மற்றும் விரைவு ரயிலில் இருந்த 7 பயணிகள் பலியானதாகவும் 41 போ் பலத்த காயமடைந்தாகவும் ரயில்வே உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • அதேநேரம், இந்த விபத்தில் 15 போ் பலியானதாக மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மைசூரு - தார்பங்கா பாகமதி விரைவு ரயில் விபத்து -அக்டோபர் 11

  • மைசூரு - தார்பங்கா பாகமதி விரைவு ரயில், கவரப்பேட்டை அருகே, தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
  • இந்த விபத்தில், எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் எரிந்து நாசமானது. ரயில் பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு தடம்புரண்டது. இவ்விபத்தில் நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் சிலர் காயமடைந்தனர்.
  • ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட தெற்கு ரயில்வே அதிகாரிகள், எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனில் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று கூறியிருந்தனர்.

ரயில் கவிழ்ப்பு முயற்சி சம்பவங்கள்

  • பிரயாக்ராஜில் இருந்து பிவானி நோக்கிச் சென்று கொண்டிருந்த காலிந்தி விரைவு ரயிலை தடம் புரளச் செய்யும் நோக்கத்துடன் தண்டவாளத்தில் எல்பிஜி சிலிண்டரும் அதனருகே பெட்ரோல் நிரப்பிய குப்பிகள் மற்றும் தீப்பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. லோகோ பைலட் ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்தார்.
  • கான்பூரில் உள்ள பிரேம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் காலி எரிவாயு உருளை இருப்பதை கண்ட லோகோ பைலட் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
  • கான்பூரின் கோவிந்த்புரி ரயில் நிலையம் அருகே சபர்மதி விரைவு ரயில் தண்டவாளத்தில் இருந்த பொருளின் மீது மோதியதில் அதன் 20 பெட்டிகளும் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
  • ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே சாா்பில் ‘கவாச்’ தானியங்கி அமைப்பு முறையை உருவாக்கினாலும் சில மனித தவறுகள், நாசவேலை உள்ளிட்ட காரணங்களால் ரயில் விபத்துகள் நேரிடுகின்றன. அந்த வகையில், இந்தாண்டு ரயில் தடம்புரண்ட சம்பவங்கள் அதிகம் நடைபெற்ற ஆண்டுகளில் ஒன்றாகிப்போனது.
  • எனவே, மிகப்பெரிய போக்குவரத்தாகவும் பாதுகாப்பு நிறைந்த போக்குவரத்தாகவும் கருதப்படும் ரயில் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றும் பொறுப்பில், மத்திய ரயில்வே அமைச்சகமும் மக்களும் அதிக கவனம் செலுத்தினால், உண்மையில் லட்சோப லட்ச மக்கள் கொண்டாடும் ரயில் போக்குவரத்து, பாதுகாப்பான பயணம் எனும் மகுடத்தைத் துறக்கவேண்டியதேயில்லை.

நன்றி: தினமணி (31 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories