2024 - அயோத்தியில் மீண்டும் மலர்ந்த ராமராஜ்ஜியம்!
- உலகம் முழுவதும் பெரியளவில் தொடர்ந்து பேசப்பட்ட கோயில் என்றால் அயோத்தி ராமர் கோயிலாகத்தான் இருக்கும்.
- பல்வேறு போராட்டங்கள், சர்ச்சைகள், கலவரங்களைக் கடந்து மாபெரும் கோயிலாக உருவெடுத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ராமஜன்ம பூமியில் ஸ்ரீராமருக்கு சிலை அமைத்து பிராண பிரதிஷ்டை கடந்த ஜனவரி 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
- இந்த கோயில் உருவான விதம் பற்றி..
அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை
- 1528-ல் முகலாய பேரரசர் பாபரின் தளபதி மீர்பாகி என்பவரால் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, 1853-லிருந்து அயோத்தியை இஸ்லாமியர்களும், இந்துக்களும் சொந்தம் கொண்டாடி வந்தனர். 1859-ல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இரு மதத்தினரும் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது. 1885-ல் முதன்முதலாக ராமர் கோயில் எழுப்ப அனுமதிக்கக் கோரி ஃபரிதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 1949-ல் சர்ச்சைக்குரிய இடத்துக்கு வெளியே உள்ள மசூதியின் மண்டபத்தில் ராமர் சிலையை வைத்தனர். சர்ச்சை வெடித்தது. இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருதரப்பினரும் மசூதிக்குள் நுழையாதவாறு அரசு தடை செய்தது. இந்தக் குழப்பங்களால் சர்ச்சைக்குரிய இடமாக மாறியது அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம்.
- 1950-ல் கோபால் சிம்லா விஷாரத் என்பவர் ராமர் சிலைகளை வழிபட ஃபைசாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மசூதிக்குள் ராமரை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. 1989-ல் பாபர் மசூதி அருகே ராமர் கோயில் கட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அடிக்கல் நாட்டியது. 1991-ல் உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது.
- 1992-ல் அயோத்தி நிலத்தில் இருந்த பாபர் மசூதியை கரசேவகர்கள் இடித்துத் தள்ளினர். இந்த தகர்ப்பின்போது, ஆர்எஸ்எஸ், பாஜக, விஎச்பி தலைவர்களும் இருந்தனர். இது நடந்த சில மணி நேரங்களுக்கெல்லாம் உ.பி. முதல்வரான கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டு, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
- இதைத் தொடர்ந்து, அயோத்தியின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் வெடித்த பயங்கர கலவரத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல இரண்டாயிரம் உயிர்கள் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பாபர் மசூதியை தொடர்ந்து இடிக்கப்பட்டு வந்த நிலையில், லக்னௌ, வாராணசி நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
- அடுத்த சில ஆண்டுகள் அயோத்தி பதற்றமிக்க நகரமாக இருந்தது. பின், 2002-ல் மசூதி இருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு ஹிந்துக் கோயில் இருந்ததா என்று ஆய்வு செய்யப்பட்டது. 2010-ல் சர்ச்சைக்குரிய இடத்தில் மூன்றில் ஒரு பகுதி ராமர் கோயிலுக்கும், மற்றொரு பகுதி இஸ்லாமியர்களுக்கும் வழங்க அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக அகில பாரத ஹிந்து மகாசபை முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தை நாடியது.
- தொடர் வழக்குகளுக்கிடையே 2019 ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம். அயோத்தி ராமஜன்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 2.77 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தில் அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட ஒதுக்கப்பட வேண்டும் என்று ஹிந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒருசேர திருப்திப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
- அதன் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்ற பூமி பூஜையைத் தொடர்ந்து கோவில் கட்டுமானப் பணிகள் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்றன.
அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில்..
- உத்தரப் பிரதேசத்தின், அயோத்தி ராமஜன்ம பூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலின் மூலவர் ஸ்ரீபாலராமர் சிலை 2024 ஜனவரி 22 ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 51 அங்குல உயர பாலராமர் சிலை கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாடு முழுவதும் உள்ள கோயில்கள், வீடுகளிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை நேரலையில் தரிசனம் செய்தனர். அயோத்தி ஸ்ரீராமர் பிராண பிரதிஷ்டை ஒட்டுமொத்த இந்தியாவும் விழாக்கோலம் பூண்ட வகையில் நடைபெற்றது.
- வட இந்தியாவில் பெரும்பாலும் பின்பற்றப்படும் நாகரா பாணியில் இந்த ராமர் கோயில் கட்டடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சோமநாதர், துவாரகை போன்ற கோயில்களும் இந்த பாணியில் கட்டப்பட்டவையே. சோம்நாத் கோயிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன் அயோத்தி கோயிலை வடிவமைத்ததாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.
- இந்த பிரம்மாண்ட ராமர் கோயில் 2.27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 57,400 சதுர அடியில் கோயில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. 12 நுழைவு வாயில்களுடன் 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரத்துடன் மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோயிலில் கீழ்த் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளன.
அயோத்தி ராமருக்கு குவிந்த காணிக்கைகள்
- பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற பிராணப் பிரதிஷ்டை விழாவுக்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும், இலங்கை உள்பட வெளிநாடுகளிலிருந்தும் அயோத்தி ராமர் கோயிலுக்கு மதிப்புமிக்க காணிக்கைகள் குவிந்தன.
- எட்டு உலோகங்களால் ஆன 2,100 கிலோ எடையில் செய்யப்பட்ட மணி, 108 அடி நீளத்தில் பிரம்மாண்ட ஊதுவத்தி, 1,100 கிலோ எடையில் பஞ்சலோக விளக்கு, வெள்ளி பாதுகைகள், ஆபரணங்கள், சுவாமிக்கு அணிவிக்கும் உடைகள், 5,000 கிலோவுக்கும் அதிக எடையில் 44 அடி உயர உலோக கொடிக் கம்பம், 10 அடி உயரம், 4.6 அடி அகலத்தில் பெரிய பூட்டு மற்றும் அதற்கான சாவி, அஷ்டதாது எனப்படும் 8 உலோகங்களின் கலவையால் உருவாக்கப்பட்ட 2,100 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட மணி, 5,000 அமெரிக்க வைரங்கள் மற்றும் 2 கிலோ வெள்ளியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கழுத்தணி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள் சிறப்புக் காணிக்கையாக ராமருக்கு வழங்கப்பட்டன.
விரதம் மேற்கொண்ட பிரதமர் மோடி...
- ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 11 நாள்கள் விரதம் இருந்தார். விரதக் காலத்தின் இறுதி நாள்களில் தமிழகம் வந்து ஸ்ரீரங்கம், ராமேசுவரம் கோயில்களில் வழிபாடு நடத்திவிட்டு பின்னர் அயோத்திக்குச் சென்று பிராண பிரதிஷ்டையில் பங்கேற்றார்.
பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி...
- அயோத்தியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு நாட்டின் 50 பாரம்பரிய இசைக் கருவிகளுடன் பிரம்மாண்டமான மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தில்லி, சங்கீத நாடக அகாதெமியுடன் சேர்ந்த அயோத்தியின் புகழ்பெற்ற கவிஞர் யதீந்திர மிஸ்ரா ஒருங்கிணைத்திருந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடெங்கும் கொண்டாட்டம், பொது விடுமுறை...
- ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு நாட்டின் பிரசித்தி பெற்ற கோயில்களில் நடத்தப்பட்ட சிறப்புப் பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று ராம பஜனையில் ஈடுபட்டனர். வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களும், தங்கள் பகுதிக்கு அருகேயுள்ள ஹிந்து மதத் தலங்களில் கூடி வழிபாடு நடத்தினர். தமிழகத்தின் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நடந்த நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாஜக ஆளும் மாநிலங்கள், ஹிமாசல பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
தீபம் ஏற்றி வழிபாடு
- அயோத்தியில் ஸ்ரீராமர் பிரதிஷ்டையையொட்டி அன்றைய தினம் நாடு முழுவதும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில், கோயில்கள், வீடுகள், மண்டபங்கள், தனியார்ப் பள்ளிகள் உள்பட பல்வேறு இடங்களில் தீபங்கள் ஏற்றியும், வண்ண கோலமிட்டும், ஸ்ரீராம நாமத்தை உச்சரித்தும் கோலாகலமாகக் கொண்டாடினர்.
- பாலராமர் பிரதிஷ்டை விழாவையொட்டி, அன்றிரவு தில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி தீபமேற்றினார்.
ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்...
- அயோத்தி ஸ்ரீராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, அவரின் மனைவி நீடா அம்பானி, நடிகர் ரஜினிகாந்த், பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் அபிஷேக் பச்சன், ஆயுஷ்மான் குரானா, விக்கி கௌஷல், ரன்பீர் கபூர், விவேக் ஓபராய், பாடகர் சோனு நிகாம், அனுபம் கெர், நடிகைகள் கங்கனா ரணாவத், ஆலியா பட் உள்பட பலரும் பங்கேற்றனர்.
- மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ், பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெவால், முன்னாள் தடகள வீராங்கனை பிடி. உஷா பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகர் ராம் சரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அயோத்தி மக்களின் 500 ஆண்டு கனவு நனவானது...
- ராம ஜன்ம பூமியில் மீண்டும் ராமர் கோயில் அமைக்க வேண்டும் என்பதற்காக உயிர்விட்ட பலரின் தியாகத்திற்குக் கிடைத்த பரிசுதான் இந்த ராமர் கோவில் என்றும் உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களின் 500 ஆண்டுகால கனவு நிறைவேறியதாகவும் ஹிந்துத் தலைவர்கள் கூறினர்.
நன்றி: தினமணி (30 – 12 – 2024)