TNPSC Thervupettagam

73 சதவீத உயிரினங்களின் தொகை சரிவு: லிவிங் பிளானட் அறிக்கை எச்சரிக்கை

November 2 , 2024 6 hrs 0 min 35 0

73 சதவீத உயிரினங்களின் தொகை சரிவு: லிவிங் பிளானட் அறிக்கை எச்சரிக்கை

  • உலகில் வாழும் உயிரினங்களின் தொகை குறித்து உலக இயற்கை நிதியம் (WWF) ஆண்டுதோறும் அறிக்கைகளை வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான அறிக்கையின்படி 1970-2020க்கு இடைப்பட்ட 50 ஆண்டுகளில் உலகின் ஒட்டுமொத்த உயிரினங்கள் தொகை 73 சதவீதத்துக்குப் பெரும் சரிவைக் கண்டுள்ளன. இதன் காரணமாக ஆபத்தான உச்சப் புள்ளிகளைப் புவி எதிர்கொண்டிருப்பது மனித குலத்தின் இருப்புக்கே பேராபத்தாக மாறிவருகிறது. இயற்கை எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியையும் அத்துடன் காலநிலை மாற்றம் சார்ந்த பேராபத்தையும் தடுத்து நிறுத்த மக்கள் ஒன்றுகூடிச் செயல்பட வேண்டிய தேவை தீவிரமாக எழுந்துள்ளது.
  • லண்டன் விலங்கியல் சங்கம் வெளியிடும் லிவிங் பிளானட் குறியீடு 1970-2020 வரையிலான 50 ஆண்டுகளில் 5,495 உயிரினங்களின் 35,000 உயிரினத்தொகை போக்குகள் குறித்து ஆராய்ந்திருக்கிறது. அந்த வகையில் நன்னீர் உயிரினத் தொகை 85 சதவீதமும், தரைவாழ் உயிரினத் தொகை 69 சதவீதமும், கடல்வாழ் உயிரினத் தொகை 56 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன. நமது உணவுத் தேவைக்காக மேற்கொள்ளப்படும் வாழிட அழிவு-சிதைவு, அதிகப்படியான சுரண்டல், அயல் உயிரினங்கள், நோய்கள் போன்றவை காட்டுயிர் உயிரினத்தொகைகளின் சரிவுக்குக் காரணமாக மாறியுள்ளன. ஆசிய, பசிபிக் கண்டங்களில் உயிரினத்தொகையின் 60 சதவீத சரிவுக்குச் சுற்றுச்சூழல் மாசுபாடு கூடுதல் காரணமாக உள்ளது.
  • காட்டுயிர் உயிரினத்தொகை சரிவு என்பது சில உயிரினங்கள் பூண்டோடு அற்றுப்போவதற்கான ஓர் எச்சரிக்கை மணி, அதேபோல் ஆரோக்கியமான சூழலியல்தொகுதிகள் அழிந்துபோவதற்கான அறிகுறியும்கூட. சூழலியல் தொகுதிகள் சிதைக்கப்படும்போது, உச்சப் புள்ளிகளுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியவையாக அவை மாறிவிடும். அது அழிவின் தொடக்கமாக, மீட்கப்படமுடியாத மாற்றமாக மாறுவதற்கான சாத்தியமே அதிகம். அமேசான் காட்டுத் தாவரங்களின் நுனிக்கருகல் (dieback), பவளத்திட்டுகளின் பேரழிவு போன்ற இயற்கை அழிவுகள் அவை இருக்கும் பகுதிகளைத் தாண்டிப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றின் காரணமாக மனிதர்களுக்கான உணவுப் பாதுகாப்பும், வாழ்வாதாரங்களும் நிச்சயம் பாதிக்கப்படும்.
  • அதேபோல் இந்தியாவில் வெண்முதுகுப் பாறு, இந்தியப் பாறு, வெண்கால் பாறு ஆகிய பறவைகளின் எண்ணிக்கை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 2002க்குப் பிறகு 2022இல் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், வெண்முதுகுப் பாறு 67 சதவீதம், இந்தியப் பாறு 48 சதவீதம், வெண்கால் பாறு 89 சதவீதம் எண்ணிக்கை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. சூழலியல் தொகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துப்புரவுப் பணி செய்யும் இந்தப் பறவைகளைப் பாதுகாப்பது, சூழலியல் சமநிலையைப் பராமரிக்க அவசியம்.
  • இப்படிப் பல உயிரினங்களின் தொகை பெரும் சரிவைக் கண்டிருந்தாலும், சில உயிரினங்களின் தொகை நிலை நிறுத்தப்பட்டுள்ளது, மீட்சியைக் கண்டுள்ளது. அரசின் ஆக்கபூர்வ நடவடிக் கைகள், வாழிட மேலாண்மை, அறிவியல் பூர்வ கண்காணிப்பு, உள்ளூர் சமூகப் பங்களிப்பு, சமூக ஆதரவு போன்றவற்றின் மூலம் இது சாத்தியப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, அகில இந்திய அளவில் 2022இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன. 2018இல் 2,967 என்கிற எண்ணிக்கையைவிட இது அதிகம்.
  • சூழலியல் சிதைவு, காலநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக உள்ளூர், மண்டல அளவிலான உச்சப்புள்ளிகள் சார்ந்தும் இந்த அறிக்கை கவனப்படுத்தியுள்ளது. சென்னை அதிவேகமாக நகர்மயப் படுத்தப்பட்டதன் காரணமாக அங்கிருந்த 85 சதவீத ஈரநிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதன் காரணமாக நீரைப் பிடித்துவைத்தல், நிலத்தடி நீர் மீட்சி, வெள்ளத் தடுப்பு போன்ற இயற்கைச் செயல்பாடுகள் பெருமளவு சரிந்து, சென்னை மக்கள் வறட்சியிலும் வெள்ளத்திலும் மாறிமாறித் தத்தளித்துவருகின்றனர். இந்த நிலைமைகளைக் காலநிலை மாற்றம் மேலும் தீவிரப்படுத்துகிறது. தற்போது நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு அவற்றையும், இயற்கை நீர் வடிகால் பகுதிகளையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு படிப்படியாக முன்னெடுத்துவருகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories