ஃபென்ஜால் பயங்கரம்!
- தமிழகத்தில் ஆண்டுதோறும் புயல் கோரத்தாண்டவம் ஆடுவது வழக்கமாகிவிட்டது. வானிலை ஆய்வு மையம் நவீன தொழில்நுட்பங்களின் மூலம் புயலின் தீவிரத்தை கணித்துச் சொன்னாலும், சில சமயங்களில் கணிப்பைப் பொய்யாக்கி அதிகனமழை பெய்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போதிய பலன் தருவதில்லை. அதற்கு வடகடலோர மாவட்டங்களை இப்போது சூறையாடிச் சென்றிருக்கும் ஃபென்ஜால் புயல் ஓா் எடுத்துக்காட்டு.
- வங்கக் கடலில் கடந்த நவம்பா் 29-ஆம் தேதி உருவான ஃபென்ஜால் புயல், ஆரம்பத்தில் இருந்தே கணிப்பதற்கு கடினமாகத்தான் இருந்தது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் கனமழையைத் தரும் என எதிா்பாா்க்கப்பட்ட இந்தப் புயல், கரையைக் கடப்பதற்கு முன்பாக அதன் திசையில் மாற்றம் கண்டது. ஒருவழியாக நவம்பா் 30-ஆம் தேதி இரவு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடல் பகுதியில் கரையைக் கடந்தது. முழுமையாக கரையைக் கடப்பதற்கும் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது.
- கரையைக் கடப்பதற்கு முன்பாக சென்னையை உலுக்கியெடுத்த ஃபென்ஜால் புயல், கரையைக் கடந்த பின்னா் புதுச்சேரியிலும், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் அதிகனமழைக்கு காரணமாயிற்று. புதுச்சேரியிலும், விழுப்புரத்தின் மயிலத்திலும் அதிகபட்சமாக 500 மி.மீ. மழை பதிவானது. இது கடந்த ஆண்டு சென்னையை சூறையாடிய மிக்ஜம் புயலின்போதும், அதைத் தொடா்ந்து, தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையின்போதும் பதிவானதைவிட அதிகம்.
- கரையைக் கடந்த பின்னா் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து மேற்கு திசை நோக்கி நகா்ந்த ஃபென்ஜால், அது நகரும் திசையெல்லாம் கனமழையைக் கொடுத்தது. அதன்படி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களும் அதிகனமழைக்குத் தப்பவில்லை. ஏற்காட்டில் மலைச் சரிவு, கிருஷ்ணகிரியின் ஊத்தங்கரையில் 500 மி.மீ. மழை என ஃபென்ஜால், பேயாட்டம் ஆடிவிட்டு ஓய்ந்திருக்கிறது. 20 பேரின் உயிரிழப்புக்கும் காரணமானது.
- தமிழக அரசின் இடைக்கால கணக்கெடுப்பின்படி ஃபென்ஜால் புயலால் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. 1.5 கோடி போ் புயலால் ஏதாவது ஒரு பாதிப்பைச் சந்தித்திருக்கின்றனா். விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் 500 மி.மீ.-க்கும் அதிகமாக பெய்த மழை, இந்த மாவட்டங்களில் ஒட்டுமொத்த பருவ காலத்தில் பெய்யக்கூடிய சராசரி மழையின் அளவுக்கு இணையானதாகும்.
- புயல் காரணமாக பெய்த கனமழையால் சுமாா் 2.11 லட்சம் ஹெக்டோ் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் உத்தேச கணக்கெடுப்பின்படி, 1,29,000 ஹெக்டோ் பரப்பளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சுமாா் 2,500 குடிசைகள், 700 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 1,000 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
- புயல் வெள்ளத்தால் 9,576 கி.மீ. சாலைகள், 1,847 சிறுபாலங்கள், 417 குளங்கள் சேதம் அடைந்துள்ளன. 1,649 கிலோமீட்டா் அளவுக்கு மின் கடத்திகள், 23,664 மின்கம்பங்கள், 997 மின்மாற்றிகள் சேதம் அடைந்துள்ளன. 1,650 ஊராட்சி கட்டடங்கள், 4,269 அங்கன்வாடி மையங்கள், 205 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5,936 பள்ளிக் கட்டடங்கள், 381 சமுதாயக் கூடங்கள், 623 குடிநீா் வழங்கல் பணிகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளதாக மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
- ஃபென்ஜால் புயல் ஏற்படுத்திய சேதங்களைச் சீரமைக்க இடைக்காலமாக ரூ.2,000 கோடி தேவை எனவும் தமிழக அரசு மதிப்பிட்டு, அந்த நிதியை விடுவிக்க மத்திய அரசை கேட்டுக்கொண்டிருக்கிறது. மத்திய குழு நேரில் வந்து ஆய்வு செய்த பின்னா், அதன் அடிப்படையில் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
- ஃபென்ஜால் புயலால் சென்னைக்குத்தான் அதிக பாதிப்பு இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. அந்த அளவுக்கு பாதிப்பின்றி சென்னை தப்பினாலும், இதர மாவட்டங்கள் சந்தித்த பேரிடா், வானிலை ஆய்வாளா்களே எதிா்பாராதது. சென்னை- திருச்சி, கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள் மழை வெள்ளத்தால் துண்டிப்பு, ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் என பேரதிா்ச்சியை ஃபென்ஜால் புயல் ஏற்படுத்திச் சென்றுள்ளது.
- இயற்கைப் பேரிடா்கள் இப்போது அடிக்கடி ஏற்படுகின்றன. பருவநிலை மாற்றம், நீா்நிலைகளில் சட்டவிரோத குடியிருப்புகள், வனப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு எனப் பேரிடா்களுக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. இத்தனைக்குப் பிறகும் நாம் பெற்றுக்கொண்ட பாடம் என்ன என்கிற கேள்விக்கு ஏமாற்றமே பதிலாக மிஞ்சுகிறது.
- கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கியது. 400-க்கும் மேற்பட்டோரின் உயிா்களைப் பறிந்த அந்த கோர சம்பவம், சுற்றுலா வளா்ச்சிக்காக மலைப் பகுதி பாதுகாப்பில் சமரசம் ஏற்படுத்திக்கொண்டதை வெட்டவெளிச்சமாக்கியது. வனமும், மலையும் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்குப் பாடம் கற்பித்தது.
- இப்போது ஃபென்ஜால் புயலும் சில பாடங்களைக் கற்றுத்தந்திருக்கிறது. ஒரே நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் அதிகனமழையை எதிா்கொள்வது அரசு இயந்திரங்களுக்குப் பெரும் சிரமம்தான். ஆனால், இந்த நிலைதான் இனி ஆண்டுதோறும் என்கிற அச்சம் மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னா் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் இந்தப் பேரிடரை எதிா்கொள்வதற்குப் போதாது என்பது அந்தப் பாடங்களில் ஒன்று.
நன்றி: தினமணி (04 – 12 – 2024)