அடுத்த சாம்பியன்!
- இந்தியாவில் தமிழகத்திலிருந்து செஸ் சாம்பியன்கள் உருவாவது புதிது அல்ல. ஆனால், சிலருடைய வெற்றி அர்த்தமுள்ள வெற்றியாகக் கருதப்படுவது உண்டு. அந்த வகையில் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக ஜூனியர் செஸ் சாம்பியன் பட்டத்தை 18 வயதான தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரரான கிராண்ட் மாஸ்டர் பிரணவ் வெங்கடேஷ் வென்று, நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.
- ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள மாண்டெனெக்ரோவில் அண்மையில் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. 67 நாடுகளைச் சேர்ந்த 260 பேர் இந்தத் தொடரில் பங்கேற்றிருந்தனர். இத்தொடரில்தான் தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
- இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் (1987), பெண்டலா ஹரிகிருஷ்ணா (2004), அபிஜித் குப்தா (2009) ஆகியோர் மட்டுமே இந்தப் பட்டத்தை வென்றுள்ளனர். இதன்மூலம் இந்தப் பட்டத்தை வெல்லும் நான்காவது இந்தியர் என்கிற பெருமையைப் பிரணவ் வெங்கடேஷ் பெற்றுள்ளார்.
- ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் தொடர் சாதாரணமானது அல்ல. இது போன்ற தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினால் மட்டுமே பட்டத்தை நெருங்க முடியும். அதைப் பிரணவ் கச்சிதமாகச் செய்திருந்தார். தொடர்ந்து புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் நீடித்து, இறுதிச் சுற்றான 10ஆவது சுற்றுவரை பிரணவ்வின் கை ஓங்கியிருந்தது.
- 11ஆவது சுற்றில் குரோஷியாவின் மாடிக் லாவ்ரென்சிக்கை வெள்ளை நிறக் காய்களுடன் எதிர்த்து விளையாடினார் பிரணவ். 10ஆவது சுற்றின் முடிவில் 8.5 புள்ளிகளுடன் இருந்ததால், கடைசி சுற்று ஆட்டத்தை சமன் செய்தால்கூட வெற்றி பெறலாம் என்ற நிலையில்தான் பிரணவ் இருந்தார். எதிர்பார்த்தது போலவே பிரணவ் அந்தப் போட்டியின் 18ஆவது நகர்த்தலில் போட்டியைச் சமன் செய்து வெற்றியை வசப்படுத்தினார்.
- மொத்தம் 11 சுற்றுகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்ற பிரணவ், 4 போட்டிகளைச் சமன் செய்தார். இதன்மூலம் 9.0 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை சூடிகொண்டார், பிரணவ். கடைசியாக 2009இல் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியர் வென்ற பிறகு யாரும் வெல்லாமல் இருந்தனர். 16 ஆண்டுக்குப் பிறகு இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரணவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
- தற்போது பெங்களூருவில் வசிக்கும் பிரணவ், இந்தியாவின் 75ஆவது கிராண்ட் மாஸ்டர், தமிழகத்தைச் சேர்ந்த 27ஆவது கிராண்ட் மாஸ்டர். தற்போது உலக செஸ் ஜூனியர் பட்டம் வென்றுள்ள பிரணவ், 2024 நவம்பரில் நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இரண்டாவது சீசனில் சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவரும்கூட.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 03 – 2025)