அட்டை வடிவமைப்பு என்கிற தனிக் கலை
- நூல் அட்டை வடிவமைப்பு, ஒரு காலக்கட்டம் வரை தனித் துறையாக இல்லை. உள்ளடக்க வடிவமைப்பாளர்களே அட்டைகளையும் வடிவமைப்பார்கள். பிரசித்திபெற்ற தொடர்கள், தனி நூல்களாக வரும்போது, ஓவியர்கள் அவற்றுக்கான அட்டையை வரைவார்கள்.
- நவீனக் கவிதையைப் போல் மறை முகமாகப் பொருளை உணர்த்துவது அட்டை வடிவமைப்பிலும் வரத் தொடங்கியது. இன்றைக்கு அட்டை வடிவமைப்பே தனிக் கலையாக உருவெடுத்துள்ளது. மணிவண்ணன், தில்லை முரளி, சந்தோஷ் நாராயணன், ரோஹிணி மணி, நெகிழன் என வடிவமைப்பாளர்கள் இன்று உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் லார்க் பாஸ்கரன்.
- ‘மஜா’, ‘ஆறு’, ‘யாவரும் நலம்’ உள்ளிட்ட 100 படங்களுக்கு மேல் போஸ்டர் வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர் லார்க் பாஸ்கரன். இவர் ஒரு கவிஞரும்கூட. விருப்பத்தின் பேரில் நூல்களுக்கு அட்டை வடிவமைப்பைச் செய்யத் தொடங்கியுள்ளார் இவர். வேரல் பதிப்பகத்தின் கவனம் ஈர்த்த பல அட்டைகளை வடிவமைத்தவர் இவர்தான்.
- “அட்டை வடிவமைப்பில் தனித்துவம் அவசியமானது. மேலும் உள்ளடக்கம் சார்ந்து அட்டை இப்படித்தான் இருக்க வேண்டும் என அந்த நூலே சில விஷயங்களைக் கேட்கும். சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலுக்கான அட்டை வடிவமைப்பில் அந்தத் தலைப்பை ஓவியர் ஆதிமூலம் உருவாக்கிய முறை முன்னுதாரணமானது. அதுபோல் 1,000 எழுத்து வடிவ முறைகளைத் தனிப்பட்ட முறையில் உருவாக்கியிருக்கிறேன்” என்கிறார் லார்க்.
- நூலைப் படித்து, எழுத்தாளர், பதிப்பாளர் ஆகியோரிடம் கலந்துகொண்டு ஓர் உருவத்தை உருவாக்குவது என்கிற பாணியில் செயல்பட்டுவருகிறார் பாஸ்கரன். அட்டைப் படம் முழுவதும் படங்களைக் கொண்டு நிரப்புவது முறையானது அல்ல என்கிறார். பாதிக்கும் மேல், அதாவது 60 சதவீதம் இடத்தைவிட்டுவிட வேண்டும். அப்போதுதான் அட்டை கவனம் ஈர்ப்பதாக இருக்கும் எனத் தான் கைக்கொள்ளும் நுட்பம் பற்றித் திருத்தமாகச் சொல்கிறார். பிறகு, நூல் தலைப்புக்கான ஓர் எழுத்து முறையை உருவாக்குவதையும் இவர் கவனத்தில் கொள்கிறார்.
- புதிய தொழில்நுட்பங்கள் ஆங்கிலத்தில் வரத் தொடங்கியுள்ளன. அதனால், ஆங்கில நூல்களின் வடிவமைப்பு மேம்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவாகவும் உள்ளடக்கரீதியிலும் அட்டைகளை எளிதாக உருவாக்கிவிட முடிகிறது. அதுபோல் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் அட்டைகள் உருவாக்கப்பட்டுவருகின்றன. இந்த நுட்பங்கள் தமிழில் இல்லை. தமிழ்ச் சொற்கள் இந்த நுட்பத்துக்கு இசைந்துவரச் சில ஆண்டுகள் ஆகலாம் என்கிறார் பாஸ்கரன்.
- அட்டை வடிவமைப்பின் மீதான ஆர்வம் நான்கைந்து ஆண்டுகளாக அதிகரித்துவருவதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, எழுத்தாளர்கள் தங்கள் நூல் இப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். அதனால், அவர்களும் வடிவமைப்புக்குச் சில யோசனைகளுடன் வருகிறார்கள். அதேவேளை, எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் சில ஓவியங்களை அட்டையில் வைப்பதில் சிரமமும் இருக்கிறது என்கிறார் பாஸ்கரன். அதேநேரம் அட்டை வடிவமைப்பு குறித்து உருவாகியுள்ள இந்த மாற்றம், இதை ஒரு தனித் துறையாக மாற்றும் எனலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 01 – 2025)