TNPSC Thervupettagam

அண்ணா சரித்திரம் படைத்த சாமானியன்!

September 13 , 2024 6 hrs 0 min 29 0

அண்ணா சரித்திரம் படைத்த சாமானியன்!

  • ‘நாடு என்பது பூகோளப் படம் அல்ல, அங்கு வாழும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு. நாடு வாழ, நம்முடைய உழைப்பும் தேவை என்ற உணர்வு எல்லோருக்கும் எழ வேண்டும்’ என்று சொன்னவர் - சி.என்.ஏ. என்கிற சின்னக் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை என்கிற ‘அறிஞர் அண்ணா’. எழுத்​தா​லும், பேச்சாலும் முன்னாள் முதல்வர் என்பதாலும் மட்டும் தமிழர்​களின் இதயத்தில் அண்ணா இடம்பிடித்து​விட​வில்லை; தனது பாசத்தால் தமிழ் இதயங்​களைக் கவர்ந்த பண்பு நலன் கொண்ட தகைசால் தமிழர் அவர்.
  • அண்ணா என்கிற சாமானியனின் பின்னால் ஒரு சரித்​திரமே கட்டி எழுப்​பப்​பட்​டிருக்​கிறது என்று சொன்னால், தமிழர்​களின் அடையாளம் தொலைந்​து​விடாமல் இருப்​ப​தற்கு அவர் கண்ட கனவும் ஒரு காரணம். தமிழர்​களுக்கு மொழி உணர்வு ஊட்டி, தமிழினத்​துக்கு முகவரி தந்து, முத்தமிழால் அரசியலில் புதிய பாதையை அமைத்துக் கொடுத்​தவர். ஓர் எளிய நெசவாளக் குடும்பத்தில் பிறந்த அண்ணா, தனக்கான ஆடையை மட்டும் நெய்ய​வில்லை; தமிழினத்தின் தன்மானத்​துக்​காகவும் ஆடை தைத்துக் கொடுத்​தவர்.

பேச்சும் எழுத்தும்:

  • அண்ணாவை அறிஞர் என்று சொல்லக் காரணம், அவரது அறிவின் மேதைமை​தான். குறுகிய காலமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்​திருந்​தா​லும், தமிழ்​நாட்டின் அரசியல் போக்கை நீண்ட காலத்​துக்கு மாற்றிப் போட்டவர் அண்ணா. அரசியல் மேடைகளைத் தமிழ் வளர்க்கும் அரங்க​மாகவே மாற்றிக் காட்டியவர். தமிழ் உள்ளத்​தோடும் உணர்வோடும் ஆட்சிக்கு வந்த காரணத்​தினால், என்றும் இல்லாத அளவுக்குத் தமிழுக்குப் பெரும் முக்கி​யத்துவம் தந்த ஆட்சி​யாளர்.
  • தனது ஆட்சிக் காலத்தில் தமிழர்​களின் இனமானத்தைக் கட்டிக் காத்து, அதன் உரிமையைத் தட்டி எழுப்பி, மானுடப் பற்றை மறக்காமல் விதைத்த மனிதநேயப் பண்பாளர் அண்ணா. அவரது மறைவின்போது மக்கள் கூடிய கூட்டத்தின் அளவுக்கு, வேறு எந்தத் தலைவருக்கும் கூடியதாக வரலாறு கிடையாது. அந்த அளவுக்குத் தமிழ் மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்து​விட்டார் என்று கண்ணீர் மல்கத் தன் சீடரின் இறுதி அஞ்சலி நிகழ்வைத் துல்லிய​மாகப் படம்பிடித்துக் காட்டினார் தந்தை பெரியார்.
  • அண்ணா மிகச் சிறந்த தமிழ்ச் சொற்பொழி​வாளர் என்பதை நாடறி​யும். அவரது மேடைப் பேச்சின் மேன்மையை அறிந்து வியக்​காதவர்கள் இல்லை. தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், அன்னைத் தமிழ் நாவாட, கரகரத்த குரலில் பேசி அனைவரையும் கட்டிப்​போடும் ஆற்றல் கொண்டவர்.
  • தொடர்ந்து 5 மணி நேரம் பேசக்​கூடிய ஆற்றல் படைத்​தவர்; வெறும் 5 நிமிடங்​களில் பேசி அணுவைத் துளைத்துக் கடலைப் புகட்டும் வகையில், தேர்தல் நேரத்​தில், ‘மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களைத் தழுவுவதோ நித்திரை, இடுவீர் எங்களின் சின்னத்தில் முத்திரை’ என்கிற ரத்தினச் சுருக்கப் பேச்சைக் கேட்டு வியக்​காதவர்களே இல்லை. ஒரு முறை, செட்டிநாட்டுப் பகுதிக்குச் சென்றிருந்த அண்ணா, ஆளுயர மாளிகையைக் கண்டு வியந்​து​போய், ‘சென்னையிலோ வீடில்லாத மனிதர்கள், செட்டிநாட்டிலோ மனிதர்கள் இல்லாத வீடுகள்’ என்றார். கூட்டத்தில் கரகோஷம் அடங்கு​வதற்கு நீண்ட நேரமானது.

திராவிட அரசியலின் உயிர்நாடி:

  • பிராந்தியச் சிந்தனை​களின் மூலம் வந்தவர் அண்ணா. ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்றொரு முழக்​கத்​தோடு, மேலும் ஒரு புதிய தத்து​வார்த்​தத்தை, அதாவது ‘வடக்கில் இருந்து வந்தது தெற்கு அல்ல. தெற்கின் தொடர்ச்சியே வடக்கு’ என்கிற சிந்தனைப் பரிமாற்​றத்தை விதைத்​தவர். ஆகவேதான் தமிழர்கள் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்​தாமல் வாழ வேண்டும் என்பதே தனது குறிக்கோள் எனப் பிரகடனப்​படுத்​தினார்.
  • பல்வேறுபட்ட மொழிகளின் பண்பாக்​கங்​களால், இந்தியா கட்டமைக்​கப்​பட்​டிருக்​கிறது. அவற்றுள் தமிழ் மொழி மூவாயிரத்து ஐநூறு ஆண்டு​களாய்ச் சேமித்து உருவாக்கிய அறிவைக் கொண்டு, அறிவுலகின் செயல்​பாட்​டாளராக அண்ணா தன்னைத் தகவமைத்​துக்​கொண்​டார்.
  • பெரியார் மூலம் மேற்கத்தியப் புத்தொளி காலத்தால் செதுக்​கப்பட்ட பகுத்​தறிவுப் பாதையை​யும், தமிழ்ப் பாரம்​பரி​யத்தின் மூலம் நீண்ட வரலாற்​றையும் சேமித்து அவற்றை நவீன கால அரசியலுக்குத் தக்க விதமாய் இழந்தும், மீட்டும் உருவான சிந்தனையைத் தன்னகத்தே கொண்டார்.
  • ஒரு மரபானது நவீன மாற்றத்தை மேற்கொள்​கை​யில், அதே மரபு ஒரு புது மரபாக உருவாகிறது என்கிற கருத்​தியலே அண்ணாவின் பாதை என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சுதந்​திரம் பற்றி பெரியாருடன் முரண்​பட்​டவர்; திராவிட நாடு கோரிக்கையை 1962இல் நாடாளு​மன்​றத்தில் வாதிட்ட பின்பு, கைவிட்டவர் என்று ஆராய்ச்சி செய்து பார்த்​தோமே​யானால், ஆமாம்! இழப்ப​தை​யும், பெறுவதை​யும், மீட்ப​தையும் தனது உத்வேகக் கருத்துகளாக மாற்றிக்​கொண்டவர் என்கிற புதிய அடையாளத்தை அதுதான் அவருக்குத் தந்திருக்​கிறது.

மனித நேயர்:

  • ஒரு தலைவர் எவ்வகையில் ஜனநாயகத்​துக்கு முக்கி​யத்துவம் கொடுக்​கிறாரோ, அதைப் பொறுத்தே பரந்துபட்ட தலைவராக அவர் பார்க்​கப்​படு​வார். அண்ணாவின் கனவும் உலகளாவிய கனவுதான். ஆகவேதான், போப் ஆண்டவரை அவர் சந்தித்த தருணத்​தில், அவரது உரையைக் கேட்டு அகமகிழ்ந்த போப் ஆண்டவர், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்ட​போது, கோவாவின் விடுதலை வேள்வியை நடத்தி, போர்ச்​சுக்கல் சிறையில் வாடிக்​கொண்​டிருந்த மைக்கேல் ரானடேயின் விடுதலைக்காக யாசித்தார். மானுடப் பற்றாளரான அண்ணாவின் யாசகத்தைக் கண்டு வியந்து, அவரது கரங்களில் முத்தமிட்டு மெச்சிப் போனார் போப் ஆண்டவர்.
  • போப் ஆண்டவரின் கடிதப் போக்கு​வரத்​துக்குப் பிறகு போர்ச்​சுக்கல் சிறையில் இருந்து விடுதலை பெற்ற மைக்கேல் ரானடே இந்தியா வந்தார். அவரை வரவேற்கக் காத்திருந்த, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி​யிடம், ரானடே கேட்ட முதல் கேள்வி, “இங்கு யார் அண்ணா? எங்கே அண்ணா?” என்பது​தான். “அண்ணா மறைந்​து​விட்​டார்” என்ற அதிர்ச்சிப் பதிலை இந்திரா காந்தி கூறிய​வுடன், அதைத் தாங்கிக்​கொள்ள முடியாமல் கதறி அழுதார் ரானடே. பின்னர், தனி விமானம் மூலம் கோவாவுக்குச் செல்லுமாறு மத்திய அரசு சொன்ன​போது, “இல்லை... நான் முதலில் சென்று கண்ணீரைக் காணிக்கை​யாக்க வேண்டிய இடம் அண்ணாவின் கல்லறை​தான்” என்றார் ரானடே.
  • இதனால்தான் எல்லோரும் அண்ணா என்று அவரை அழைத்​தார்களோ! ஆமாம், அத்தகைய ஆளுமைமிக்க தலைவர் தமிழ்​நாட்டின் முதல்​வ​ராகப் பதவியேற்கச் சென்ற​போது, உடன் செல்லத் தயாராக இருந்த மனைவி ராணியை அவர் அழைத்துச் செல்ல​வில்லை. “அண்ணியார் ராணி அவர்கள் ரொம்ப ஆவலாக இருக்​கிறார் அண்ணா.
  • முதல்​வ​ராகத் தாங்கள் பதவியேற்கும் விழாவுக்கு அவரையும் அழைத்துச் செல்லலாமே” என்று தம்பிகள் சொன்ன​போது, “தம்பி, வீட்டுக்கும் ஆட்சிக்கும் இடையே ஓர் இடைவெளி வேண்டும்” என்றார் அண்ணா. அவர்தான் அண்ணா!
  • செப்டம்பர் 15: அறிஞர் அண்ணாவின் 115ஆம் பிறந்தநாள்

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories