TNPSC Thervupettagam

அதிகரிக்கும் இணைய முடக்கம்

March 9 , 2025 4 hrs 0 min 21 0

அதிகரிக்கும் இணைய முடக்கம்

  • உலக அளவில் 2024ஆம் ஆண்டில், முன் எப்போதும் இல்லாத அளவில் இணைய முடக்கங்களும் கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளன. 2023இல் 39 நாடுகளில் 283 முறை இணைய முடக்கங்கள் இருந்ததாகவும், 2024இல் 54 நாடுகளில் 296 முறை என இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் ‘அக்சஸ் நவ்’ (Access Now) அமைப்பு கூறுகிறது. 2018 முதல் வகுப்புவாத/மதவாத வன்முறை காரணமாக அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்ட இணைய முடக்கங்களில் 95% இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பின்னணி என்ன?

  • இணையப் பயன்பாட்டை அணுக முடியாத வகையில், தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துவதே இணைய முடக்கம் எனப்படுகிறது. ஜனநாயகரீதியில் ஆட்சி தொடரும் நாடுகளில் ஏற்படும் இணைய முடக்கங்களில் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியா முதலிடத்தில் உள்ளது; 2024இல் மட்டும் இந்தியாவில் 84 முறைபும் ஜனநாயக முறை அல்லாமல் ராணுவ ஆட்சி தொடரும் மயன்மாரில் 85 முறையும் இணைய முடக்கம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 21 முறையும், ரஷ்யாவில் 19 முறையும் இணையம் முடக்கப்பட்டுள்ளது.

போர், வன்முறை:

  • 2024இல் இணைய முடக்கத்துக்கு முக்கியக் காரணமாக, பல்வேறு மோதல்கள் இருந்துள்ளன. குறிப்பாகப் போர், வன்முறை காரணமாக 11 நாடுகளில் 103 இணைய முடக்கங்கள் பதிவாகியுள்ளன. இதில் போராட்டங்களால் 74 முடக்கங்களும், தேர்வுகளால் 16 முடக்கங்களும், தேர்தல்களால் 12 முடக்கங்களும் பதிவாகியுள்ளன. இதில் இணைய முடக்கத்தைப் பயன்படுத்திப் பல்வேறு நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவிடாமல் தடுத்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
  • சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை 2024இல் எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ தளம் 14 நாடுகளில் 24 முறை முடக்கத்தைச் சந்தித்துள்ளது. இதைத் தொடர்ந்து ‘ஃபேஸ்புக்’ (22 முறை), ‘வாட்ஸ் அப்’ (20), ‘யூடியூப்’ (15), ‘டெலிகிராம்’ (13) ஆகியவையும் முடக்க நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கின்றன. ‘டிக்டாக்’, ‘சிக்னல்’ போன்ற இணையதளங்களும் 2023ஆம் ஆண்டைவிடவும் 2024இல் அதிகளவு முடக்கத்தைச் சந்தித்துள்ளன.

இந்தியாவில்...

  • 2024இல் இந்தியாவில் ஏற்பட்ட 84 இணைய முடக்கங்களில், 41 முடக்கங்கள் போராட்டங்கள் தொடர்புடையவை; 23 - வகுப்புவாத/மதவாத வன்முறை தொடர்புடையவை; 5 - அரசு வேலை சார்ந்த போராட்டங்கள் தொடர்பானவை. மணிப்பூர் மாநிலத்தில்தான் அதிக முறை இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது (21).
  • அதைத் தொடர்ந்து ஹரியாணா (12), காஷ்மீர் (12) ஆகியவை வருகின்றன. குறைந்தபட்சமாக 16 இந்திய மாநிலங்கள், மத்திய ஆட்சிப்பகுதிகள் ஒரு முறையாவது இணையச் சேவை முடக்கத்தைச் சந்தித்துள்ளன. இந்தியாவில் தொடர்ச்சியாக நிகழும் இணைய முடக்கங்கள் டிஜிட்டல் யுகம், செயற்கை நுண்ணறிவில் தலைமை வகிக்க வேண்டும் என்கிற இந்தியாவின் கனவுக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர்.

காரணங்கள்:

  • இணைய முடக்கத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பயங்கரவாத எதிர்ப்பு - வகுப்புவாத வன்முறைகளே முதன்மைக் காரணங்களாக அரசால் முன்வைக்கப்படுகின்றன.
  • தேசியப் பாதுகாப்பு - பயங்கரவாத எதிர்ப்பு: 2019ஆம் ஆண்டில் அரசமைப்பு 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு - காஷ்மீரின் பதற்றமிக்க பகுதி​களில் இணைய முடக்கம் நடைமுறைப்​படுத்​தப்​பட்டது. சுமார் 213 நாள்கள் அங்கு இணையச் சேவை முடக்​கப்​பட்​டது.

போராட்டங்கள்:

  • 2020–2021 காலக்கட்டத்தில் விவசாயிகள் போராடியபோது டெல்லியின் எல்லைகளில் போராட்டம் வலுப்படுவதைக் கட்டுப்படுத்த அரசுத் தரப்பில் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டன.

வகுப்புவாத/மதவாத வன்முறைகள்:

  • 2023இல் ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வகுப்புவாதக் கலவரத்தைக் கட்டுப்படுத்த இணையச் சேவை முடக்கப்பட்டது.

போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள்:

  • 2024இல் நடந்த பொதுப் பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த போட்டித் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க இணையச் சேவையை ஜார்க்கண்ட் அரசு முடக்கியது.
  • இனக் குழுக்களுக்கு இடையேயான மோதல்: 2023இல் மணிப்பூர் மாநிலத்தில் மெய்தேய் - குக்கி மக்களிடையே நிகழ்ந்த இன மோதலைக் கட்டுப்படுத்த இணையச் சேவை பல முறை முடக்கப்பட்டது.

பாதிப்புகள்:

  • இந்திய அரசமைப்பின் 19(1) சட்டக்கூறு, குடிமக்களுக்குப் பேச்சு, கருத்துரிமைச் சுதந்திரத்தை வழங்குகிறது. ஆனால், அரசால் மேற்கொள்ளப்படும் இத்தகைய இணைய முடக்கங்கள் தனிநபர்கள் சுதந்திரமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவதையும், தகவல்களை அணுகுவதையும், பொது விவாதங்களில் ஈடுபடுவதையும் தடுக்கின்றன.
  • வணிகம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், பிற இணையச் சேவைகள், மருத்துவ உதவிகளை இணைய முடக்கம் மோசமாகப் பாதிக்கிறது. மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஜம்மு - காஷ்மீரில் 213 நாள்கள் நீடித்த இணையச் சேவை முடக்கத்தால் சுற்றுலா - வணிகத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
  • மேலும், இந்திய அரசமைப்பின் 21(A) சட்டக்கூறு குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி வழங்குவதை உறுதிப்படுத்துகிறது. கல்விக்கான அணுகுதலைத் தடுக்கும் தடைகளை அகற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இணையச் சேவை முடக்கம் இச்சட்டப் பிரிவின் அடிப்படை நோக்கத்தையே நிராகரிப்பதாகச் சமூகச் செயற்பாட்டாளர்கள் விமர்சிக்கின்றனர்.
  • இந்தியாவில் 2023ஆம் ஆண்டின் முதல் பகுதியில் மட்டும் (ஜனவரி - ஜூன்), இணைய முடக்கம் காரணமாக 1.9 பில்லியன் டாலர் (ஏறக்குறைய ரூ.16,597 கோடி) இழப்பு ஏற்பட்டதாகவும், அந்நிய முதலீட்டில் ரூ.1,030 கோடியை இழக்க நேரிட்டதாகவும், 21,000 வேலைகள் பறிபோனதாகவும் ‘இணையச் சமூகம்’ (Internet Society) அமைப்பு தெரிவித்திருக்கிறது. கல்வி, சுகாதாரம், மக்களின் வாழ்வாதாரத்திலும் இணைய முடக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
  • சமூகம், பொருளா​தாரம், அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இணையம் இன்றைக்கு மாறி​யுள்ளது. அந்த வகையில் ஜனநாயக உரிமை​களைக் காத்திட மக்களைப் பாதிக்கும் இணைய முடக்​கங்​களைத் தவிர்ப்பது சார்ந்து மறுசீரமைப்பு தேவைப்​படு​கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories