அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: அரசாணை 121 உயிர் பெறுமா?
- ஒரு நல்லாட்சிக்கான இலக்கணம் எது? இதற்குப் பல அளவீடுகளைச் சுட்டிக்காட்ட முடியும். அதில் குழந்தைகள் சார்ந்த அளவீடுகள் மிக முக்கியமானவை. ஓர் அரசுக்கு - குழந்தை நேயப்பார்வையும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான - சுதந்திரமான சூழலை உருவாக்கும் ஆற்றலும், குழந்தைகளின் நலம் பேணலும், தரமான இலவசக் கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்துதலும், குழந்தைகளுக்கான சட்டங்களைச் சமரசமின்றி நடைமுறைப்படுத்தும் திறனும் இருப்பது அவசியமான அளவீடுகளில் ஒன்றாகும்.
- குழந்தைகள் மீதான வன்முறைகளையும், பாலியல்ரீதியான, சாதியரீதியான வன்முறைகளையும் ஓர் அரசு எவ்வாறு குறைத்திருக்கிறது அல்லது கட்டுப்படுத்தியிருக்கிறது, பள்ளி மாணாக்கர்களிடையே சாதியப் பாகுபாடு இல்லாச் சமத்துவச் சிந்தனை உணர்வை எவ்வாறு ஏற்படுத்தியிருக்கிறது என்பதெல்லாம் இந்த வரையறைக்குள் அடங்கும்.
- குழந்தைகளுக்கான இந்த அளவீடுகளைத் தமிழகக் களச்சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், ‘நல்லாட்சிக்கான அறிகுறிகள்’ இதயத் துடிப்புக் குறியீடுபோல் மேலும் கீழுமாக இழுத்துக்கொண்டு இருப்பது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.
- தமிழகத்தில் குழந்தைகளுக்கான சில அளவீடுகள் நம்பிக்கை தந்தாலும், சில அளவீடுகள் ஆட்சியாளர்கள் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றன. பள்ளி வளாகங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடப்பது, ஆசிரியர்கள் முதல் அறங்காவலர் வரை பலர் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவது என அண்மைக்காலமாக வெளிவரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன.
போக்சோ செயலாக்கத்தில் தொய்வு:
- நாடு முழுவதும் பாலினப் பாகுபாடின்றி 18 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக ‘பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்’ (The Protection of Children from Sexual Offences Act) 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
- இதனை ‘போக்சோ சட்டம்’ (Pocso act) எனச் சுருக்கமாக அழைக்கிறோம். இந்தியச் சட்ட வரலாற்றில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைக் களையும் நோக்கில் வரையப்பட்ட முதல் சட்டம் இதுதான். இச்சட்டம் பாலியல் குற்றங்கள், பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல், கொடூரப் பாலியல் தாக்குதல், பாலியல் பட நோக்கத்துடன் சித்திரித்தல் எனப் பல்வேறு விதமாக வகைப்படுத்தி அவற்றுக்கான தண்டனை முறைகளை வகுத்துள்ளது.
- இக்குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அபராதமும், அதிகபட்சமாக மரண தண்டனையும் வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அதுபோல பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை, உளவியல் ஆலோசனை, பாதுகாப்பு, நிவாரணம் வழங்கிட வேண்டும்.
- இவ்வழக்குகளைச் சிறப்பு நீதிமன்றமே விசாரித்து ஓராண்டுக்குள் தீர்ப்பும் வழங்கும். இவையெல்லாம் சட்டமாக மட்டுமே இருக்கின்றன; இன்னும் முழுமையாக உயிர் பெறவில்லை. அதாவது, இச்சட்டம் 13 ஆண்டுகளைக் கடந்தும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. சிறப்பு நீதிமன்றங்கள்கூட இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. ஓராண்டுக்குள் தீர்ப்பு என்பது கனவாகவே நீடிக்கிறது. புகார் அளிப்பது முதல், தீர்ப்பு பெறுவது வரையிலான நடைமுறைகளில் பெரும் தொய்வு காணப்படுகிறது.
அரசாணை 121இன் முக்கியத்துவம்:
- பள்ளி மாணவ / மாணவிகளிடம் முறைதவறி நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், தவறுகள் ஏற்படாமல் தவிர்த்தல் தொடர்பாக மிக முக்கியமான அரசாணை (நிலை) எண் 121ஐ கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் அன்றைய தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் த.சபிதா இ.ஆ.ப. வெளியிட்டார்.
- பள்ளி மாணாக்கர்களிடம் முன்னுதாரணமாகச் செயல்பட வேண்டிய ஆசிரியர்களுள் சிலர் மாணவ / மாணவிகளிடம் முறைதவறி நடப்பதும், இதனால் அந்தக் குழந்தைகள் மோசமாகப் பாதிக்கப்படுவதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. இத்தகைய அவலநிலையைக் களைந்திட, பள்ளிக் குழந்தைகளிடம் ஆசிரியர்கள் முறைதவறி நடந்துகொள்வதை முற்றிலும் தவிர்த்திட, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இந்த அரசாணை வெளியிடப்பட்டது.
- இதன்படி, முறைதவறிய நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்குக் கட்டாய ஓய்வு (Compulsory Retirement) அல்லது பணி நீக்கம் (Removal) அல்லது அரசு சார்ந்த எந்தப் பணிக்கும் செல்வதைத் தடுக்கும் வகையிலான பணியறவு (Dismissal) போன்ற கடும் தண்டனை வழங்கப்படும். குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19 (2) இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 8இல் கூறப்பட்டுள்ளது.
- மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். பள்ளிக் குழந்தைகள் பிறரின் தவறான நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஆசிரியர்கள் முறைதவறிய செயல்களில் ஈடுபடாவண்ணம் உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும்.
- பள்ளிக் குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும் பிரச்சினைகளைக் களைவதாக இந்த ஆலோசனைகள் இருக்கும். இதற்காக உளவியல் ஆலோசகர், உதவியாளர், அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வும், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும் என இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளிகளில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறையைத் தடுத்திட, கடும் நடவடிக்கை எடுத்திடக் கொண்டுவரப்பட்ட இச்சிறப்பான அரசாணை நாடளவில் பாராட்டைப் பெற்றது. ஆனால், இந்த ஆணை இயற்றப்பட்டு 13 ஆண்டுகள் ஆன நிலையில், இதன்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் செயல்படும் குடிமைச்சமூக அமைப்புகள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் இந்த ஆணை இன்னும் செயல்பாட்டுக்கு வந்தபாடில்லை.
- முதன்மைக் கல்வி அலுவலர்கள் முதல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் வரை இந்த அரசாணையை முறையாகச் செயல்படுத்த யாரும் தயாராக இல்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. இத்தகைய போக்கு, குற்றமிழைக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவான நிலைப்பாடாகவே கருதப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளில் இந்த அரசாணை செயல்படுத்தப்பட்ட முறை குறித்துத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இனி என்ன செய்ய வேண்டும்?
- தமிழகத்தில் பல மாவட்டங்களில் நாள் தோறும் பள்ளிக் குழந்தைகள் பாலியல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தனது சிறப்பான செயல்பாடுகளால் கவனம் ஈர்த்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் போக்சோ சட்டம் சமரசமின்றி நடைமுறைப்படுத்தப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை (நிலை) எண் 121இன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
- இதன் தொடக்கமாகத் தற்போது கிருஷ்ணகிரி அரசுப் பள்ளியில் நடந்துள்ள சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்கள் உள்பட இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களும் நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்களின் கல்விச் சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். தமிழக முதல்வர் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி நியாயத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்தால், பள்ளிகளில் பயிலும் அனைத்துக் குழந்தைகள், பெற்றோர், சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு நம்பிக்கை துளிர்க்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 02 – 2025)