TNPSC Thervupettagam

அதிகரிக்கும் வக்கிரம்!

March 1 , 2025 4 hrs 0 min 6 0

அதிகரிக்கும் வக்கிரம்!

  • இந்தியாவிலேயே அதிகமானவர்கள் படித்த மாநிலம் என்றும் முன்னேறிய மாநிலம் என்றும் கருதப்படும் கேரளத்தில் அண்மைக்காலமாக நடைபெறும் நிகழ்வுகள் அச்சம் ஏற்படுத்துகின்றன. மனிதாபிமானம் இல்லாமல் ஆதிவாசிகள் கும்பல் தாக்குதலுக்கு உள்ளாவது, மூட நம்பிக்கை காரணமாக நரபலி கொடுக்கப்படுவது உள்ளிட்டவை கேரளத்தில் நடைபெறுவது வியப்பாக இருக்கிறது.
  • கடந்த 6 வாரங்களில் மட்டும் கேரளத்தில் ராகிங் தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • கோட்டயம் அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் 5 பேரை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கடந்த 2024 நவம்பர் முதல் ராகிங் செய்து வந்துள்ளனர். அதில் ஒரு மாணவரின் ஆடையைக் களைந்து கட்டிலுடன் சேர்த்து கை - கால்களைக் கட்டி காம்பஸ் உபகரணத்தால் உடல் முழுவதும் குத்தி ரத்தக் காயம் ஏற்படுத்தினர்.
  • இதன் உச்சகட்டமாக, உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் "டம்புள்ஸ்'-ஐ பிறப்புறுப்பில் கட்டித் தொங்கவிட்டதுடன், காயம் ஏற்பட்ட இடங்களில் எரிச்சல் தரக்கூடிய மருந்தை (லோஷன்) தடவி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 மாணவர்கள் கடந்த பிப். 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
  • இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், கேரளத்தில் மேலும் ஒரு மாணவர் ராகிங் கொடுமைக்கு உள்ளானது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருவனந்தபுரம் கார்யவட்டம் அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு உயிரி தொழில்நுட்பம் படிக்கும் மாணவரை 7 மாணவர்கள் மூங்கில், பெல்ட்டால் அடித்து, சட்டையை அகற்றி மண்டியிட வைத்ததுடன் குடிக்கத் தண்ணீர் கேட்டபோது, அதில் எச்சில் உமிழ்ந்து குடிக்க நிர்ப்பந்தப்படுத்தி உள்ளனர்.
  • கோழிக்கோடு அருகே எரண்ணிபாலத்தில் உள்ள ஹோலிகிராஸ் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு மாணவர் அணிந்திருந்த கூலிங் கிளாûஸ அகற்றச் சொல்லி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கடந்த பிப். 14-ஆம் தேதி கொடுமைப்படுத்தினர்.
  • கல்லூரிகளில் மட்டுமல்ல, பள்ளிகளிலும் ராகிங் குறித்த புகார்கள் எழத் தொடங்கி உள்ளன. கொச்சியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவர் மிஹிர் அகமது அடுக்குமாடிக் குடியிருப்பின் 26-ஆவது தளத்தில் இருந்து குதித்து கடந்த ஜன. 15-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் ராகிங் கொடுமைக்கு ஆளானதால்தான் தனது மகன் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது தாயார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
  • வயநாடு மாவட்டம், பூக்கோடில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் மாணவர் ஜெ.எஸ்.சித்தார்த்தன் பொதுவெளியில் 19 மாணவர்களால் பெல்ட், கேபிள் வயர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த 2024 பிப். 18-ஆம் தேதி விடுதி கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதுபோன்ற ராகிங் கொடுமைகள் கேரளத்தில் மட்டுமே நடைபெறுகின்றன என்று கருத வேண்டாம். கோவையில் படித்த திருப்பூர் மாணவர் தன்னை சக மாணவர் ஒருவர் தொடர்ந்து மிரட்டுவதாகவும், வெளியாள்களை அழைத்து வந்து ஏதாவது செய்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது என்றும் வாட்ஸ்ஆப் ஆடியோ பதிவை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிவிட்டு கடந்த ஜன.3-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
  • கர்நாடக மநிலம், பிஜாபூரில் உள்ள அல் அமீன் மருத்துவக் கல்லூரியில் ஜம்மு - காஷ்மீர் மாணவரை ராகிங் செய்ததாக 5 மாணவர்கள் மீது கடந்த பிப். 19-ஆம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கேரளத்தில் கடந்த 2020}இல் 16 ராகிங் சம்பவங்களும், நாடு முழுவதும் 226 சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதுவே 2021-இல் கேரளத்தில் 14, நாடு முழுவதும் 546, 2022-இல் கேரளத்தில் 39, நாடு முழுவதும் 1,103, 2023-இல் கேரளத்தில் 30, நாடு முழுவதும் 964, 2024}இல் கேரளத்தில் 43, நாடு முழுவதும் 1,086 என பதிவாகி உள்ளன.
  • ராகிங் சம்பவங்கள் முன்பெல்லாம்கூட இருந்ததுண்டு. ஆனால், இப்போது கத்தி, காம்பஸால் குத்துவது, கழிப்பறையை நக்கவைப்பது, ஆடையைக் களைந்து நிர்வாணமாக்குவது, பெல்ட் - வயர் போன்றவற்றால் கடுமையாகத் தாக்குவது என ராகிங் செய்வதில் கொடூரத்தனம் மிகவும் அதிகரித்துள்ளது கவலை அளிக்கும் அம்சமாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மாணவர்கள் என்பதால் பெரும்பாலும் சாட்சியம் இல்லை என்றுகூறி விடுவிக்கப்படுகின்றனர். கடும் தண்டனைகள் விதிக்கப்படுவதில்லை.
  • கல்லூரிகளில் ராகிங் தடுப்புக் குழுக்கள் அமைத்தல், கட்டணமில்லா உதவி எண் அறிவித்தல், தான் நிரபராதி என்பதைக் குற்றஞ்சாட்டப்பட்டவர் நிரூபிக்கச் செய்தல், பாடத்திட்டத்தில் ராகிங் குறித்த விழிப்புணர்வு, மூத்த - இளம் மாணவர்களிடையே அடிக்கடி கலந்துரையாடல் உள்ளிட்ட பல பரிந்துரைகளை இதற்கென அமைக்கப்பட்ட ராகவன் கமிட்டி அளித்துள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த 2009-ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. எனினும், அது இன்னும் ஏட்டளவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஒரு சம்பவம் நடக்கும்போது சில நாள்கள் பேசிவிட்டு மறந்துவிடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. இது மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது என்பதால் இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
  • ராகிங் சம்பவங்கள் இளைஞர்களின் மன நிலையில் காணப்படும் வக்கிரத்தனத்தின் வெளிப்பாடு. அதை அகற்றுவதற்கு ஆன்மிக சிந்தனையும், உளவியல் ஆலோசனையும் உதவக்கூடும்.

நன்றி: தினமணி (01 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories