TNPSC Thervupettagam

அதிகரிக்கும் வாகனப் பதிவு: தமிழகம் உணர வேண்டிய செய்தி

January 16 , 2025 2 hrs 0 min 7 0

அதிகரிக்கும் வாகனப் பதிவு: தமிழகம் உணர வேண்டிய செய்தி

  • 2023-2024இல் வாகனப் பதிவில் தமிழ்நாடு இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், ஆக்கபூர்வமான பல அம்சங்களைக் கூறுவதுடன் கவனம் செலுத்த வேண்டிய முக்கியப் பிரச்சினைகளையும் சேர்த்தே உணர்த்துகிறது.
  • நாடு முழுவதும் உள்ள சாலைப் போக்குவரத்து அலுவலகங்களைக் கணினிமயமாக்கம் செய்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை பதிவுச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் குறித்த தரவுகளை ‘பரிவாகன் சேவா’ என்கிற இணையதளம் மூலம் பகிர்கிறது. இதில் கடந்த ஆண்டு இந்தியாவில் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் மாநிலம்வாரியாக அண்மையில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பதிவுசெய்வதில் தமிழ்நாடு தொடர்ச்சியாகவே முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்துவருகிறது. புதிய வாகனங்களைப் பொறுத்தவரை, 2021இல் 15.15 லட்சம் வாகனங்களும் 2022இல் 17 லட்சம் வாகனங்களும் 2023இல் 18.26 லட்சம் வாகனங்களும் பதிவுசெய்யப்பட்ட நிலையில், 2024இல் இந்த எண்ணிக்கை 19.5 லட்சமாக அதிகரித்துள்ளது. இக்காலக்கட்டத்தில் வாகனங்களைப் பதிவுசெய்வதிலும் பதிவைப் புதுப்பிப்பதிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) 10,076.64 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன. இது 2022-2023ஐவிட, 33.29% அதிகமாகும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 148 அலுவலகங்களில் 98.4 லட்சம் பணப்பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இது இந்தியாவிலேயே மிக அதிகம்.
  • தமிழகத்தில் 2022ஐவிட, 2023இல் கார் விற்பனை 17.04% அதிகரித்தது. இரு சக்கர வாகன விற்பனை 4.64% அதிகரித்தது. மின் இரு சக்கர வாகன விற்பனையில் தமிழ்நாடு இந்திய அளவில் மூன்றாமிடத்தில் உள்ளது. வருவாய் அதிகரிப்பு, விரைவான நகரமயமாக்கம், சாலைப் போக்குவரத்துக் கட்டமைப்பில் மேம்பாடு ஆகியவற்றின் அடையாளமாக இத்தரவுகளைக் கருதலாம். சாலைப் போக்குவரத்தை மேற்கொள்வதில் ஒருவர் பெறும் சுதந்திரமாகவும் வாகன விற்பனை அதிகரிப்பைக் கூறலாம். எனினும், இதன் இன்னொரு பக்கத்தையும் கணக்கில் கொள்வதே நல்லது.
  • பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதை அரசின் இலக்குகளில் ஒன்றாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஐ.நா. அவை, உலக வங்கி போன்ற அமைப்புகளும் தொடர்ந்து அறிவுறுத்திவருகின்றனர். உலகம் காலநிலை மாற்றத்தின் எதிர்மறை விளைவுகளை அளவுக்கு அதிகமாகவே காணத் தொடங்கிய பின்னர் டீசல், பெட்ரோல், எரிவாயு ஆகிய வரம்புக்கு உள்பட்ட எரிபொருள் சார்ந்த வாகனப் போக்குவரத்தைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்கிற இலக்கு கட்டாயமானதாக முன்வைக்கப்படுகிறது.
  • அத்துடன், இந்தியாவில் சாலை விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளில் 45% இரு சக்கர வாகன ஓட்டிகளின் இறப்புகளாகும். தமிழகத்தின் நிலையும் இதைப் பிரதிபலிப்பதாக இருப்பதை மறுக்க முடியாது. வாகனப் பதிவில் ஆர்டிஓ அலுவலகம் வாரியாக தமிழகத்தில் முதல் ஐந்து இடங்களை சென்னையின் மூன்று பகுதிகளும் கோவையின் இரு பகுதிகளும் வகிக்கின்றன. சாலை விபத்துகளிலும் இந்த இரு நகரங்களும் கவலையூட்டும் இடத்திலேயே உள்ளன.
  • தனியார் வாகனப் பதிவின் அதிகரிப்பையும் வாகனப் பெருக்கத்தையும் கட்டுப்படுத்தும்வகையில் அரசு கொண்டுள்ள சில திட்டங்களை உறுதிப்படுத்துவதும் புதிய திட்டங்களை உருவாக்குவதும் இந்தத் தருணத்தில் அவசியம். அரசுப் பேருந்துகளின் பயண வழித்தடங்களை அதிகரிப்பது, பேருந்துகளை நன்றாகப் பராமரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தனி வாகனங்கள் பயன்பாட்டைப் பெருமளவு குறைக்கும். அதிவேகம் தரும் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்குக் கட்டுப்பாடு, அவற்றைச் சாலையில் ஓட்டுவதற்கும் கட்டுப்பாடு, காரைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள ஊக்கப்படுத்துவது போன்றவற்றிலும் அரசு ஈடுபடலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories