TNPSC Thervupettagam

அதிகரித்த நிலத்தடி நீர் மாசு

February 12 , 2025 5 hrs 0 min 3 0

அதிகரித்த நிலத்தடி நீர் மாசு

  • இந்தியாவின் நிலத்தடி நீர் நிலைமை குறித்து, மத்திய நிலத்தடி நீர் வாரியம் (CGWB - Central Ground Water Board) ஆய்வு ஒன்றை நடத்தியது. நைட்ரேட், யுரேனியம் மாசுபாடு பிரச்சினையால் நாட்டின் பல மாநிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின், யேல் பல்கலைக்கழகம் 2022இல் ‘பாதுகாப்பற்ற குடிநீர்’ தொடர்பாக நடத்திய ஆய்வில், உலகின் 180 நாடுகளில் இந்தியா 141ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போதைய சூழல் நீடித்தால், 2030க்குள் இந்தியாவில், 70% தண்ணீர் மாசடையும் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

நைட்ரேட் பரிசோதனை:

  • நைட்ரேட், யுரேனியம் கலந்துள்ள குடிநீரைத் தொடர்ச்​சி​யாகப் பருகும்போது சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வாளர்கள் கூறியுள்ள நிலையில், நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு தொடர்பான பரிசோதனைகளை அதிகரிப்பது அவசிய​மாகிறது. 2017இல், நாடு முழுவதும் 13,028 தண்ணீர் மாதிரிகள் சேகரிக்​கப்​பட்டுப் பரிசோ​திக்​கப்​பட்டன. இதில் 21.6% என்கிற அளவில் நிலத்தடி நீரில் நைட்ரேட் கலந்திருந்தது தெரிய​வந்தது.
  • அப்பரிசோதனை​யில், நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்​துள்ள மாவட்​டங்​களின் எண்ணிக்கை 2017இல் 359ஆக இருந்த நிலையில், 2023இல் அது 440ஆக அதிகரித்​திருந்தது. இதன் மூலம் 56% மாவட்​டங்​களின் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்​துள்ளது கண்டறியப்​பட்டது. ஒரு லிட்டரில் 50 மில்லி கிராமுக்கு மிகாமல் நைட்ரேட்டும், 30 மைக்ரோ கிராமுக்கு மிகாமல் யுரேனியமும் கலந்திருப்பது பாதுகாப்பான குடிநீர் என உலக சுகாதார அமைப்பு வரையறுக்கிறது.
  • இந்த அளவீடுகளுக்கு மேல், நைட்ரேட்டும், யுரேனியமும் கலந்திருந்தால் அது பாதுகாப்பற்ற குடிநீர் ஆகும். தண்ணீரில் அதிகப்​படியான நைட்ரேட் கலந்திருப்பது இரண்டு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்​தக்​கூடியது. ஒன்று, உடலுக்குள் ஆக்சிஜனை எடுத்​துச்​செல்லும் ரத்த அணுக்​களின் திறனைக் குறைக்​கிறது; இரண்டாவது, தண்ணீரில் நைட்ரேட் அளவு கூடுதலாகும்போது குளம், ஏரி போன்ற நீராதா​ரங்​களில் நைட்ரேட்டும் ஓர் அங்கமாக மாறி நீர்வாழ் சுற்றுச்​சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்து​கிறது.

எந்தெந்த மாநிலங்​களில் பாதிப்பு?

  • ராஜஸ்​தான், குஜராத், ஹரியாணா, பஞ்சாப், தமிழ்​நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்​களில் நிலத்தடி நீர் கடுமை​யாகப் பாதிக்​கப்பட்​டுள்ளது. இம்மாநிலங்​களில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரி​களின் அடிப்​படை​யில், ராஜஸ்​தான்​(49%), கர்நாடகம்​ (48%), தமிழ்​நாடு (37%), மகாராஷ்டிரம்​(35.74%), தெலங்​கா​னா (27.48%), ஆந்திரப் பிரதேசம்​(23.5%) மத்தியப் பிரதேசம் (22.58%) ஆகிய மாநிலங்​களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் உள்ளது. 2017 முதலே, இந்தியாவின் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு கணிசமாக அதிகரித்து​வரு​கிறது. குறிப்பாக, மத்திய இந்தியா​விலும் தென்னிந்தியா​விலும் நிலைமை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்​காட்டு​கின்றன.

யுரேனியம் மாசு:

  • மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் வெளியிடப்பட்ட நிலத்தடி நீர் நிலை குறித்த சமீபத்திய அறிக்கை​யில், 12 மாநிலங்​களின் நிலத்தடி நீரில் அனுமதிக்​கப்பட்ட அளவைவிட யுரேனியம் கூடுதலாக இருப்பது தெரிய​வந்​துள்ளது. ஜனவரி 2023இல் வெளியிடப்பட்ட நிலத்தடி நீர் குறித்த ஆவணத்​தில், நாட்டின் நிலத்தடி நீரில் யுரேனியம் அளவு ஒரு பில்லியனுக்கு 0 முதல் 532 பாகங்கள் (parts per billion) வரை இருக்கும் எனக் கணிக்​கப்​பட்​டுள்ளது.
  • அந்த ஆய்வில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்​தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்​களில் அனுமதிக்​கப்பட்ட அளவைவிட நிலத்தடி நீரில் யுரேனி​யத்தின் இருப்பு அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது. குறிப்பாக, பஞ்சாபில் உள்ள கிணறுகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 10இல் மூன்று கிணறுகளில் யுரேனியம் மாசு இருப்பது கண்டறியப்​பட்டது.

காரணம் என்ன?

  • நிலத்தடி நீரின் மாசுபாட்டுக்குப் புவிசார் செயல்​முறைகள் (Geogenic processes) முதன்மைக் காரணமாக இருந்​தா​லும், நிலத்தடி நீர் சுரண்​டப்​படு​வதும் மாசுக்குக் காரணமாகிறது. ஆக்சிஜனேற்றம், நிலத்​தடியில் நிகழும் வேதியியல் மாற்றங்கள் காரணமாக நிலத்தடி நீரில் யுரேனியம் அதிக அளவு இருப்பதாக அமெரிக்​காவின் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்​சி​யாளர்கள் குறிப்​பிடு​கிறார்கள்.
  • நிலத்தடி நீரில் யுரேனியம் கூடுதலாகக் காணப்​படு​வதற்கு அதிக பைகார்​பனேட் (bicarbonate) அளவும் ஒரு காரணமாக உள்ளது; அதிகப்​படியான பைகார்​பனேட்டால் பாறையி​லிருந்து யுரேனியம் வெளியேறி நிலத்தடி நீரில் கலப்பதாக ஆராய்ச்​சி​யாளர்​களில் ஒருவரான ரேச்சல் கோய்ட் தெரிவிக்​கிறார்.
  • இந்தியாவின் அனைத்து வகையான நீர்நிலைகளிலும் நிலத்தடி நீர் அதிகம் சுரண்​டப்​படு​கிறது என பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC), ஹோமி பாபா தேசிய நிறுவனம் நடத்திய ஆய்வில் உறுதிப்​படுத்​தப்​பட்​டுள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக மாசடைவதற்கு யுரேனியம், ஆர்சனிக், ஃபுளூரைடு உள்ளிட்டவை முக்கியக் காரணிகளாக இருக்​கலாம் என பாபா அணு ஆராய்ச்சி மையம் அடிக்​கோடிட்டுக் காட்டி​யுள்ளது. நிலத்தடி நீரைத் தூய்மைப்​படுத்த எதிர் சவ்வூடு​பரவல் (Reverse osmosis) தொழில்​நுட்பம், இந்தியாவின் சில மாவட்​டங்​களில் மேற்கொள்​ளப்​பட்டு வருவதாக அந்த மையத்தின் ஆராய்ச்​சி​யாளர்கள் தெரிவிக்​கின்​றனர்.

2024இல் நிலத்தடி நீர் அளவு:

  • நிலத்தடி நீரின் தரத்தை வெளியிட்ட மத்திய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீரின் அளவு குறித்த அறிக்கை​யையும் தயாரித்​துள்ளது. அதில், 2009ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நிலத்தடி நீர் அதே அளவில் உள்ளதாக​வும், 73% வட்டாரங்​களில் நிலத்தடி நீர் பாதுகாப்பான அளவில் இருப்​ப​தாகவும் தெரிவித்து உள்ளது. வெளியேற்​றப்பட்ட தண்ணீருக்கு ஈடுசெய்யும் அளவில் நிலத்தடி நீர் மீண்டும் நிரம்​புவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

நடவடிக்கைகள் தேவை:

  • இந்தியா முழுவதும் நைட்ரேட், யுரேனியத்தால் நிலத்தடி நீர் மாசுபடுவதை மதிப்​பிடுவது, அவற்றை நீக்க அவசர கால நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றின் அவசியத்தை ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. இந்தியாவின் நீர் மாசுபாட்டுக்குத் தொழில் துறை, விவசாயக் கழிவு ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவில் உருவாகும் கழிவுநீரில் 70% சுத்தி​கரிக்​கப்​படு​வ​தில்லை.
  • சுத்தி​கரிக்​கப்படாத தொழில் துறைக் கழிவு நீர்நிலைகளில் வெளியேற்​றப்​படு​வ​தால், நிலத்தடி நீர் தொடர்ந்து மாசுபடுத்​தப்​பட்டு வருகிறது; இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு மாசைக் குறைப்​ப​தற்கு மேம்பட்ட தொழில்​நுட்​பங்​களின் பயன்பாட்​டை​யும், கண்காணிப்​பையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரப்​படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories