அனைத்திலும் கண்ணன்
- சிறுகூடல்பட்டி முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கவியரசு கண்ணதாசன், கண்ணன் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல, கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை, கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை, கங்கைக் கரை தோட்டம், கண்ணன் வந்தான் போன்ற பாடல்கள், கண்ணன் மீது கண்ணதாசன் கொண்ட ஈடுபாட்டை பறைசாற்றுகின்றன.
- காதல், மனைவி, குழந்தை, குடும்பம், சமுதாயம், மகிழ்ச்சி, விரக்தி என அனைத்திலும் கண்ணனை வைத்து கண்ணதாசன் பாடியுள்ளார் என்பதை ஓர் ஆராய்ச்சி கட்டுரை போல், சுவை குன்றாமல் ஆசிரியர் தென்காசி கணேசன் அளித்துள்ளார். இத்துடன் பகவத் கீதை, மகாகவி பாரதி, வேத கருத்துகள், ஆதிசங்கரரின் ஸ்லோகங்கள், திருமூலர், ஜகத்குருக்கள் ஆகியோரின் உபதேச மொழிகள் ஆகியவற்றை கண்ணதாசன் உள்வாங்கி எழுதிய பாடல்களையும் குறிப்பிட்டுள்ளார்.
- பகவத் கீதையை எளிமைப்படுத்தி, முன்னைப் பழமைக்கும் பழமையான கீதையை பின்னைப் புதுமைக்கும் புதுமையான இலக்கியங்கள், திரைப்படப் பாடல்களுடன் இணைத்துக் காட்டியுள்ளார். அபிராமி அந்தாதியை முற்றும் கற்று உணர்ந்த கண்ணதாசன் தாமும் அதுபோல் ஓர் அந்தாதி நூல் எழுதவேண்டும் என்ற எண்ண மேலோட்டத்தில் கிராம தேவதையான மலையரசி அம்மனைப் பற்றி எழுத நினைத்தாலும், நிறைவில் கண்ணன் பெயரில் ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி என்ற நூலை இயற்றினார் என ஆசிரியர் சில அரிய அறியப்படாத தகவல்களையும் இந்நூலில் குறிப்பிடுகிறார்.
- எளிமையில் இலக்கியம், இலக்கியத்தில் எளிமை. எழுத்து வரிகள் இதயங்களில் தூவப்படும்போது செழித்து வளர்வது ஒரு தனி மனிதன் அல்ல. சமுதாயம் என்பதே உண்மை. எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம் என்ற மகாகவியின் கூற்றை, கண்ணதாசனின் ஆன்மிக, தத்துவப் பாடல்களை கேட்கும்போது நாம் புரிந்து கொள்ளலாம். கண்ணன் மீது கண்ணதாசன் கொண்ட காதலை, ஆத்மார்த்த அனுபவத்தை அனைவரும் ரசித்து படிக்கும்படி ஆசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 01 – 2025)