TNPSC Thervupettagam

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் பூனைக் கறி அரசியல்!

September 17 , 2024 4 hrs 0 min 9 0

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் பூனைக் கறி அரசியல்!

  • அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் பூனைக் கறி தின்பதாக ஒஹையோவிலுள்ள ஸ்பிரிங்ஃபீல்டைச் சேர்ந்த ஒரு பெண் சமூக ஊடகங்களில் பகிர்ந்த நிலைத் தகவல் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தையே ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது.
  • அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும் குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். விறுவிறுப்பாகத் தேர்தல் பிரசாரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
  • ஹைதி நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருப்போர் வளர்ப்புப் பூனைகளைக் கொன்று இறைச்சியை உண்கிறார்கள் என்பதாக மற்றொரு நண்பரின் மகளிடமிருந்து தெரிந்த ஒரு நண்பர் மூலமாகக் கேள்விப்பட்ட இன்னொரு நண்பரின் வழியே தாம் அறிந்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டிருக்கிறார்.
  • ஆனால், இப்படியெல்லாம் நம்பத்தகுந்த எந்தத் தகவலும் இல்லை என்றும் புலம்பெயர் மக்களிடையே வளர்ப்புப் பிராணிகள் துன்புறுத்தப்படுவதாகவோ, கொல்லப்படுவதாகவோ எவ்விதமான புகார்களும் வரவில்லை என்றும் ஸ்பிரிங்ஃபீல்ட் நகர் அலுவலர்கள் மறுத்திருக்கின்றனர்.
  • இன்னொரு பக்கம் அரோராவில் குடியிருப்பு வளாகங்களை வெனிசுவேலாவிலிருந்து வந்திருக்கும் மக்கள் கூட்டம் கைப்பற்றியதாகப் பரவிய தகவல்களையும் கொலராடோ அலுவலர்கள் மறுத்திருக்கின்றனர். இந்த நகரில் இருக்கும் வெனிசுவேலா மக்களின் எண்ணிக்கையே மிகவும் குறைவு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
  • பூனையைக் கொன்று  ஒரு பெண் சாப்பிட முயலுவதைப் போல சமூக ஊடகங்களில் பரவிவரும் ஒரு விடியோவும்கூட ஒஹையோ மாகாணத்தில்  கான்டன் நகரிலிருந்துதான் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது, ஸ்பிரிங்ஃபீல்டிலிருந்து அல்ல. தவிர, இந்த விடியோவில் இடம் பெற்றிருக்கும் பெண்ணும் அமெரிக்கக் குடிமகள்தான்; இவருக்கும் ஹைதிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. மேலும் கலங்கலான ஒரு புகைப்படத்தில் ஒரு மனிதன் எடுத்துச் செல்வது செத்துப்போன ஒரு வாத்து போலதான் தெரிகிறது. இதுவும் கொலம்பஸ் என்ற வேறொரு நகரில் எடுக்கப்பட்டிருக்கிறது.
  • ஆனால், இவ்வாறு உதிரிகளாகப் பரப்பப்படும் விடியோ, புகைப்படங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்,  புலம்பெயர் மக்களுக்கு எதிரான அவருடைய வழக்கமான பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ‘ஸ்பிரிங்ஃபீல்டில் தொடங்கி புலம்பெயர்ந்து வந்திருப்போரை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். இதிலென்ன கொடுமையெனில், இவர்களில் பெரும்பாலானோர் ‘தாற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்ட தகுதிநிலை’ என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகத்தான் தங்கியிருக்கிறார்கள்!
  • ‘நம் நாட்டின் வரலாற்றில் விரைவில் மிகப் பெரிய அளவிலான நாடு கடத்தல் நடைபெறவிருக்கிறது’ என்று கலிபோர்னியாவில் ராஞ்சோ பாலோஸ் வெர்தஸிலுள்ள டிரம்ப் தேசிய கோல்ப் கிளப்பில் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப் தெரிவித்துள்ளார். ‘ஸ்பிரிங்ஃபீல்ட், அரோராவிலிருந்துதான் நாங்கள் தொடங்கப் போகிறோம்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார் டிரம்ப்.
  • ஸ்பிரிங்ஃபீல்டில் புதிய பாசிச தீவிரவாத குழுவான ‘பெருமைகொண்ட இளைஞர்கள் (ப்ரௌட் பாய்ஸ்)’ பேரணியாகச் சென்றதும் நகரில் புலம்பெயர் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது போன்றவற்றுடன் சேர்த்து, டிரம்பின் இந்த அறிவிப்பால் மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறார்கள் டிரம்பின் அடிப்படைவாத ஆதரவாளர்கள். ஆனால், ‘இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் பற்றியெல்லாம் தனக்கு எதுவும் தெரியாது’ என்றிருக்கிறார் டிரம்ப்.
  • ‘ஸ்பிரிங்ஃபீல்ட் மிகவும் அழகான நகர். இப்போது நரகமாகிக் கொண்டிருக்கிறது. இது மிகவும் துயரமானது. நான் இருந்தால் இப்படி நடக்காது. இப்போதே சொல்லிக் கொள்கிறேன்’ என்றும் எச்சரித்துள்ளார் டிரம்ப்.
  • டொனால்ட் டிரம்ப் பேசுகிற பேச்சையும் பிரசாரத்தையும் பார்த்தால் இரண்டாம் உலகப் போர்க் கால இடைத்தங்கல் முகாம்கள்தான் நினைவுக்கு வருகின்றன என்பதாக அமெரிக்க மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
  • அமெரிக்காவில் தற்போது சட்டவிரோதமான புலம்பெயர் மக்கள் சுமார் 1.20 கோடி பேர் இருப்பதாகத்தான் மதிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கையையும் 2 கோடி என்பதாகக் குறிப்பிடுகிறார் டிரம்ப்.  கொலராடோவில் குடியிருப்புகளை வெனிசுவேலா கூட்டத்தினர் கைப்பற்றுவதாகக் கூறப்படுவதைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘இவர்களை வெளியேற்றுவதுதான் ரத்தக் களரியாகப் போகிறது’ என்கிறார் அவர்.
  • புலம்பெயர் மக்களைக் கொண்டு தங்களையும் தனது பொருளாதாரத்தையும் அமெரிக்காவிலுள்ள நகரங்கள் புதுப்பித்துக் கொள்வதென்பது வழக்கமான ஒன்றுதான். சுமார் 40 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட லெவிஸ்டன் நகரம், ஆரம்பத்தில் வெள்ளை இனத்தவரின் எதிர்ப்பு இருந்தபோதிலும்கூட, 1999-ல் தொடங்கிக் கூடுதலாக 12 ஆயிரம் சோமாலியாவைச் சேர்ந்த புலம்பெயர் மக்களைத் தம் மக்களாக உள்வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நகரின் மறு உருவாக்கத்தில் சோமாலியர்கள் எந்த அளவுக்கு இணைந்திருக்கின்றனர் என்பது பாராட்டப்பட்டு வருகிறது.
  • ஆனால், இந்த உண்மைகளையெல்லாம் – இன்னமும் ஹைதி மக்கள் நாய்களைத் தின்கிறார்கள், பூனைகளைத் தின்கிறார்கள், வாத்துகளைத் தின்கிறார்கள் (இதற்கு அதிபர் வேட்பாளர்டிரம்ப்பும் ஆமாம் போடுகிறார்)  என்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் டிரம்ப் ஆதரவு தீவிரவாதிகள் (அல்லது அடிப்படைவாதிகள்) ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அல்லாமல் நாய்கள், பூனைகளைக் கொன்று உண்பதற்காக தீயில் சுட வைப்பதைப் போன்றகொடூரமான விடியோக்களையும் புகைப்படங்களையும் - ஸ்பிரிங்ஃபீல்டிலுள்ள ஹைதி மக்களிடமிருந்து கிடைத்தவை என்று குறிப்பிட்டு – பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.
  • இதனிடையேதான், ‘பூனைக் கறி தின்னும் புலம்பெயர் மக்கள்’  என்ற இந்த நிலைத் தகவலை சமூக ஊடகத்தில் பகிர்ந்த பெண்மணி, இதற்காகத் தாம் மிகவும் வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ‘நான் ஏதோ சொல்லப் போனேன், ஆனால், இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை. நான் இனவெறி கொண்டவள் அல்ல’ என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் எரிகா லீ என்ற அந்தப் பெண் தெரிவித்துள்ளார். கூடவே, ‘நானும் என் மகளும் வெவ்வேறு இனப் பின்னணியிலிருந்து வந்தவர்கள், தவிர, பால்புதுமையாளரும்கூட (எல்ஜிபிடிக்யு)’ என்றும் அறிவித்துள்ளார்.
  • உள்ளபடியே இந்த முறை, 2024 ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் தேர்தலும் தேர்தல் பிரசாரமும் முன்னெப்போதுமில்லாத அளவுக்குக் ‘கன்னாபின்னா’வெனச் சென்றுகொண்டிருக்கிறது எனலாம்.
  • தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் சுடப்பட்டார். காதோடு காயப்படுத்திவிட்டுத்  துப்பாக்கிக் குண்டு போய்விட உயிர் தப்பிய டிரம்ப், பிளாஸ்திரி ஒட்டிய காதையே அணிகலனாக்கிப் பிரசாரத்தைத் தொடர்ந்தார். இன்னமும் இதன் மர்ம முடிச்சே  அவிழ்க்கப்படவில்லை (அதற்குள்ளாக டிரம்ப்பின் கோல்ப் திடலுக்கு வெளியே அவரைக் கொலை செய்ய ஒருவர் காத்திருந்ததாக இன்னொரு கொலை முயற்சி செய்தியும் வந்துவிட்டது).
  • வழக்கத்துக்கு முன்னதாக நடந்த குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புடன் நடந்த நேருக்கு நேர் விவாதத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன், முதுமை, மறதி காரணமாகச் சொதப்பிவிட வேட்பாளராகத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.
  • அதிபர் ஜோ பைடனை எதிர்த்து டிரம்ப் வெற்றி பெறுவது எளிது எனப் பரவலாகக் கருதப்பட்ட நிலையில், கமலாவின் எதிர்பாராத என்ட்ரி அதிர்ச்சியளிக்க, குழாயடிச் சண்டை போல, கமலா  ஹாரிஸுக்கு எதிராகத் தரைமட்டத்துக்கு இறங்கிவந்து பேச – பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் டிரம்ப்.
  • கறுப்பு – இந்திய கலப்பினத்தவரான கமலா ஹாரிஸுக்கு எதிராக வெள்ளை இனத்தவர் - அடிப்படைவாதிகளின் வாக்குகளை முழுமையாகத் திரட்டக் கருதிப் பொய்யான பல்வேறு பிரசாரங்களையும்கூட டிரம்ப்பும் அவருடைய ஆதரவாளர்களும் கட்டவிழ்த்து விடுகின்றனர் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
  • இதனிடையே, டொனால்ட் டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பல வகையிலும் டிரம்ப்பை அம்பலப்படுத்தினார் கமலா. இதைத் தொடர்ந்து, அதிபர் தேர்தலில் கமலாவுக்கு ஆதரவு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் வெளிவரத் தொடங்கின.
  • இந்த நிலையில் அமெரிக்கர்களிடையே புலம்பெயர் மக்களுக்கு எதிரான உணர்வுகள் தூண்டிவிடப்படுகின்றன. சமூக ஊடகங்களில் நிறைய மீம்கள் உருவாக்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன. நாய்கள், பூனைகளின் காப்போன் போல டிரம்பைச் சித்திரித்தும் பூனைக் கறி விருந்துக்கு வரவேற்பதைப் போல கமலாவைக் காட்டியும் மீம்கள் தூள் பறக்கின்றன.
  • அதிபர் தேர்தலுக்கு இன்னமும் சரியாக 50 நாள்கள் இருக்கின்றன. அடுத்தடுத்து இரு வேட்பாளர்களுக்கும் இடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இன - வெறுப்பு அரசியலை மையமாகக் கொண்டு இப்போது பூனைக்கறி, நாய்க்கறி என்றெல்லாமும் வரத் தொடங்கியிருக்கின்றன. வாக்குப் பதிவு நெருங்க, நெருங்க இன்னும் என்னவெல்லாம் நடைபெறப் போகின்றனவோ? வல்லரசுக்குத்தான் வெளிச்சம்!

நன்றி: தினமணி (17 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories