அமெரிக்கக் காட்டுத் தீ: காலநிலை மாற்றம் காரணமா?
- அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் பரவியது மிக மோசமான காட்டுத்தீ. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரிடரால் இறந்திருக்கிறார்கள். 12,000 கட்டிடங்கள் உள்படப் பல கட்டுமானங்கள் சேதமடைந்திருக்கின்றன. 1.80 லட்சம் பேர் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். 163 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தீக்கிரையாகியிருக்கிறது. 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (ரூ.17,29,581 கோடி) அதிகமான பொருள்சேதம் ஏற்பட்டிருக்கிறது. நச்சுப்புகையின் பாதிப்பிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் இரவும் பகலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
காரணம் என்ன?
- அமெரிக்காவிலேயே மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில் லாஸ் ஏஞ்சலீஸ் முதன்மையானது. ஆகவே, பொருள்சேதமும் உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறது. கலிஃபோர்னியாவில் அவ்வப்போது காட்டுத்தீ நிகழ்வுகள் ஏற்படும் என்றாலும் இது மிகவும் தீவிரமானது. பொதுவாக, ஜனவரி மாதம் என்பது காட்டுத்தீ ஏற்படும் காலக்கட்டமும் அல்ல. இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதைப் பல வல்லுநர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள்.
- சாண்டா அனா என்பது பொதுவாக கலிஃபோர்னியாவின் கடற்கரையை நோக்கி வீசும் ஒருவகைப் புயல்காற்று. ஓர் ஆண்டில் பல சாண்டா அனா நிகழ்வுகள் ஏற்படலாம். இம்முறை ஏற்பட்ட காட்டுத்தீயின் பரவலுக்கு சாண்டா அனா ஒரு முக்கியமான காரணம். அதிலும் குறிப்பாக மணிக்கு 128 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு சூறைக்காற்றாக சாண்டா அனா வீசியடித்திருக்கிறது. காட்டுத்தீ எல்லா இடங்களிலும் வேகமாகப் பரவுவதற்கு இது ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. காட்டுத்தீ பரவிய பின்னரும் சாண்டா அனாவின் வேகம் குறையாததால் தீயை அணைப்பதும் சவாலாகியிருக்கிறது. 2021ம் ஆண்டு ‘சயின்ஸ்’ இதழில் சாண்டா அனா பற்றிய ஒரு விரிவான ஆய்வுக் கட்டுரை வெளியானது. இதில் 71 ஆண்டு கால சாண்டா அனா தரவுகள் ஆராயப்பட்டன. வருடாந்திர சாண்டா அனாவின் அம்சங்களைத் தொகுத்துப் பார்த்த ஆய்வுக் குழுவினர், சமீபகாலமாக சாண்டா அனா ஏற்படும் காலக்கட்டம் மாறியிருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் சாண்டா அனா நிகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன.
- பொதுவாக, சாண்டா அனா ஏற்படும்போது காற்றில் ஈரப்பதம் இருந்தால் அதன் தீவிரம் குறையும். ஆனால், இம்முறை அது நிகழவில்லை. வழக்கமாகக் கலிஃபோர்னியாவில் ஜனவரி மாதத்தில் மழை பெய்யும். ஆனால், இந்த முறை வறண்ட வானிலையே நிலவியது. அது மட்டுமில்லாமல் கலிஃபோர்னியாவின் மழைக் காலமும் சரிவர அமையவில்லை. வருடாந்திர மழைப்பொழிவில் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவான மழையே பெய்திருக்கிறது. இந்தச் சூழல் சாண்டா அனாவுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.
வெப்பநிலை அதிகரிப்பு:
- இன்னொருபுறம், 2022-2024 காலக்கட்டத்தில் கலிஃபோர்னியாவின் குளிர்காலத்தில் எதிர்பாராத அளவுக்கு அதீத மழைப்பொழிவு இருந்தது. இதனால் அந்த மாகாணம் முழுவதுமே தாவரங்கள் நன்கு வளர்ந்திருந்தன. காட்டுத்தீ நிகழ்வு தொடங்கியதும், அதன் அடுத்தடுத்த பரவலுக்கு இந்த அடர் தாவரங்கள் காரணமாகிவிட்டன.
- எதிர்பாராத அளவுக்கு அதீத மழையும் வறண்ட காலக்கட்டமும் மாறிமாறி ஏற்படுவது மழை-காலநிலை சட்டென மாறும்தன்மை (Hydroclimatic volatility) என்று அழைக்கப்படுகிறது. மழை சார்ந்த காலநிலை எதிர்பாராத விதத்தில் இரண்டு துருவங்களாக அடுத்தடுத்து ஏற்படுவதே இப்படிக் குறிப்பிடப்படுகிறது. அவ்வப்போது இது நடக்கும் என்றாலும் சமீபகாலமாக இது அதிகரித்திருக்கிறது. 20ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இப்போதுவரை உள்ள காலக்கட்டத்தில் இந்த நிகழ்வுகள் 30% அதிகரித்திருக்கின்றன. உலகளாவிய சராசரி வெப்பநிலை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்றும், வெப்பநிலை உயரும்போது இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் பல்கிப் பெருகும் என்றும் ‘நேச்சர்’ இதழில் ஜனவரி 2025இல் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
எதிர்பாராத பேரிடர்:
- வறண்ட சூழலும் பெருமழையும் அடுத்தடுத்து ஏற்படும்போது பேரிடர்கள் நிகழ்வதற்கான சாத்தியம் அதிகரிக்கும். கலிஃபோர்னியாவிலும் இதுவே நடந்திருக்கிறது. மழைக்காலத்தில் செழித்து வளர்ந்த தாவரங்கள், வறண்ட காலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயின் எளிதான பரவலுக்கு உதவின. இதனால் காட்டுத்தீயின் பரவல் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக ஓர் ஆய்வு சொல்கிறது. ஒருவேளை வறண்ட காலக்கட்டத்துக்குப் பிறகு பெருமழைக்காலம் வந்தால் அதுவும் ஆபத்தையே ஏற்படுத்தும். ஈரப்பதம் வெகுவாகக் குறைந்ததால் வறண்டு வெடித்திருக்கும் பூமியில் வெள்ளமாகப் பாயும் மழைநீரால் உடனே உள்புக முடியாது. அது எதிர்பாராத தீவிர வெள்ளமாக (Flash floods) மாற சாத்தியம் உண்டு.
- ஒரே நேரத்தில் இரண்டு பேரிடர்கள் ஏற்படுவது கூட்டுப் பேரிடர் (Compound disaster) என்று அழைக்கப்படுகிறது. கலிஃபோர்னியாவைப் பொறுத்தவரை சாண்டா அனா புயலோடு வறண்ட சூழலும் சேர்ந்துகொண்டதால் பாதிப்பு பல மடங்காகிவிட்டது. அது மட்டுமல்லாமல், ஜனவரி மாதத்தில் பொதுவாகக் காட்டுத்தீ நிகழ்வுகள் இருக்காது என்பதால், தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் இருக்கவில்லை. ஆகவே, மீட்புப் பணியை அவர்கள் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இனி வரும் காலத்தில் இதுபோன்ற கூட்டுப் பேரிடர்களும் எதிர்பாராத இயற்கை மாறுபாடுகளும் அதிகரிக்கும் என்று காலநிலை வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். இவற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்பது மிகப்பெரிய கேள்வி.
- காலநிலை மறுப்பாளரான டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் அதிபராக அமர்வதற்கு முன்பாகவே காலநிலை மாற்றத்தின் கைரேகை அழுத்தமாகப் பதிந்திருக்கும் ஒரு பேரிடரை எதிர்கொண்டிருக்கிறார். எங்கேயோ மூன்றாம் உலக நாடுகளில் நடக்கும் பாதிப்பாகக் காலநிலை மாற்றத்தைப் பார்த்த அமெரிக்கர்கள் பலரும், இயற்கைச் சீற்றத்தால் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ அடிக்கடி நிகழும் என்றாலும் எதிர்பாராத காலத்திலும் தீவிரத்துடன் இது நிகழ்ந்திருப்பதால் மாகாண நிர்வாகம் திணறிக்கொண்டிருக்கிறது. 2024ஆம் ஆண்டில் உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸை எட்டிவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இப்படி ஒரு பேரிடரை உலகம் சந்தித்திருக்கிறது. இது வரப்போகும் மோசமான காலத்துக்கான முன்னோட்டமாக இருந்துவிடக் கூடாது என்பதே காலநிலை வல்லுநர்களின் கவலை.
- அதேநேரம், அதைத் தீவிரமடையச் செய்யும் செயல்பாடுகளை நாம் மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், இதுபோன்ற எதிர்பாராத பெரும் பேரிடர்கள் உலகை ஆட்டிப்படைக்கப் போகின்றன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 01 – 2025)