அமைதி இழந்த உலகம்!
- போர்கள், தேர்தல்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள், அரசியல் மாற்றங்கள் என 2024ஆம் ஆண்டில் உலகம் பல திருப்பங்களைக் கண்டது. புத்தாண்டிலும் தொடரவிருக்கும் அளவிலான தாக்கங்களைச் செலுத்தும் நிகழ்வுகள் என்றும் அவற்றைச் சொல்லலாம். சில நிகழ்வுகள் அந்தந்த நாடுகளின் எல்லையையும் தாண்டி சர்வதேச அளவில் பேசுபொருளாகின.
வல்லரசின் புதிய முகம்:
- உலக மக்கள்தொகையில் 49 சதவீதம் பேர் இந்த ஆண்டு தேர்தலைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பாகிஸ்தான் என 64 நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடந்துள்ளது. நவம்பர் 5இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்க இருக்கிறார்.
- அவரது மீள்வருகை சர்வதேச அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியேற்றக் கொள்கையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற்றப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
- விசா வழங்குவதில் கெடுபிடி அதிகரிக்கும் என்று பேசப்படுவதால் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரும், கல்விக்காகவும் பணிவாய்ப்புக்காகவும் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பவர்களும் தவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 2025 ஜனவரி 20இல் டிரம்ப் பதவியேற்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் அழைப்பு விடுக்கும் அளவுக்கு நிலைமை குழப்பமாக இருக்கிறது.
- மற்றபடி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் இப்போதே முயற்சி எடுத்துவருகிறார். ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அறிவுறுத்தியிருக்கிறார். காஸா போரைப் பொறுத்தவரை, ஹமாஸ் பிடியிலிருக்கும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்திருக்கும் டிரம்ப், வழக்கமான அமெரிக்க அதிபர் பாணியில் இஸ்ரேலுக்கே ஆதரவளிப்பார் என்றே பேசப்படுகிறது. டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்கும் முன்பே காஸாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று பைடன் அரசு முனைப்பு காட்டுகிறது. ஆனால், அது எந்த அளவுக்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை.
காஸாவில் தொடரும் கண்ணீர்:
- 2023 அக்டோபர் 7இல், இஸ்ரேலில் ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இன்றுவரை காஸா மீது கடும் தாக்குதல் நடத்திவருகிறது இஸ்ரேல் அரசு. இதில், இதுவரை 45,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஈரான் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லாவும் (லெபனானைச் சேர்ந்த அமைப்பு) ஹமாஸுக்கு ஆதரவாகத் தாக்குதல் நடத்தியதால், லெபனான் மீதும் கடும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். ஒருவழியாக இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருப்பதால் லெபனானில் அமைதி திரும்பிவருகிறது. காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர எகிப்து, கத்தார் போன்ற நாடுகளும் முயற்சி எடுத்துவருகின்றன.
ஆட்சி மாற்றங்கள்
- சிரியாவில் 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் அரசியல் பேயாட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஹபீஸ் அல்-அசாத் 1971ஆம் ஆண்டு முதல் 2000 வரை ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார். இவர் சோவியத் ஒன்றியத்துக்கு ஆதரவாகப் பனிப்போர்க் காலங்களில் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அவருக்குப் பின்னர் அவரது மகன் பஷார் அல்-அசாத் பதவிக்கு வந்தார். சோஷலிஸ சித்தாந்தம் என்கிற பெயரில் பஷார் நடத்திய ஆட்சி சர்வாதிகார ஆட்சியாகவே இருந்தது. ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் ஆதரவான பஷார், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல், துருக்கி நாடுகளுக்கு எதிரியாக இருந்தவர்.
- அல்காய்தா, ஐஎஸ், இதர தீவிரவாத இயக்கங்கள் இவரது ஆட்சிக்கு எதிராக யுத்தம் நடத்திவந்த நிலையில், ஹயாத் தாஹ்ரிர் அல் -ஷாம் (ஹெச்.டி.எஸ்) அமைப்பு டிசம்பர் 8இல் சிரியாவைக் கைப்பற்றியிருக்கிறது. பஷார் தன் குடும்பத்துடன் ரஷ்யாவில் தஞ்சமடைந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. புதிய பிரதமர் முகமது அல்-பஷீர் சிரியாவில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர முயன்று வருகிறார். கூடவே, சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
- எதிரி நாடுகளான துருக்கியையும் இஸ்ரேலையும் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் சிரியாவின் புதிய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆப்ரிக்க நாடுகள் வறுமை, உள்நாட்டுக் கலவரம், அரசியல் சீரற்ற தன்மைகளால் கடும் பாதிப்பை எதிர்கொள்பவை. அந்த வகையில், மத்திய ஆப்ரிக்க குடியரசு 2012 முதல் உள்நாட்டுப் போரால் சிக்கித் தவிக்கிறது.
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் இந்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. கனிம வளம் நிறைந்திருந்தாலும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியாமல் இந்நாடு தடுமாற உள்நாட்டுப் போரும் மதப் பிரச்சினைகளும்தான் முக்கியக் காரணம்.
- முஸ்லிம் செலெகா ஆயுதக் குழுவினருக்கும், கிறிஸ்துவ ஆன்டி-பலாகா ஆயுதக் குழுவுக்கும் இடையில் நிகழ்ந்துவந்த சண்டைகள் இந்த ஆண்டில் உச்சமடைந்தன. அதிபர் ஃபாஸ்டின் ட்வாடேராவை ரஷ்யா ஆதரிக்கிறது. அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராகியிருப்பதை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன. இதற்கிடையே அண்டை நாடான சூடானில் நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போரின் தாக்கத்தையும் மத்திய ஆப்ரிக்க குடியரசு எதிர்கொண்டுவருகிறது.
- 2015 இல் ஏமன் அரசுப் படைகளுக்கும் ஹூதி போராளிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியது. ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 45 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள். 97 ஆயிரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் வசித்துவருகிறார்கள்.
- ஏமனில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெற்றுவந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் போரால் அந்த முயற்சிகள் தடைபட்டிருக்கின்றன. உலகிலேயே மிக மோசமான வகையில் மனிதாபிமான நெருக்கடி நிலவும் நாடுகளில் ஒன்றான ஏமனில் எப்போது அமைதி திரும்பும் என அந்நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர்.
நகோர்னோ - கார்பாக் பகுதிகள்
- அசர்பைஜானில் உள்ள நிலப்பரப்புகள் ஆகும். சமீபகாலம் வரை அவற்றின் பெரும் பகுதிகள் அங்கீகரிக்கப்படாத அரசால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. இந்தப் பகுதிகளை ஆர்மீனியா தங்கள் நாட்டுடன் இணைக்க முயன்று வந்தது. இதை அன்றைய சோவியத் ஒன்றியம் ஏற்கவில்லை. இந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வசித்தவர்கள் ஆர்மீனிய இனத்தவர். மேலும் பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் தேர்தல் நடைபெற்று, ஒரு தன்னாட்சி அரசாகச் செயல்பட்டது சர்வதேச சட்டத்தின்படி ஏற்கத்தக்கதல்ல என்று அஜர்பைஜான் தெளிவுபடுத்தியது. பல ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே ரஷ்யாவின் முயற்சியால் பல போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தும், அவை சரியாகப் பின்பற்றப்படவில்லை.
- இந்தச் சூழ்நிலையில் 2024இல் இந்த விவகாரம் உச்சமடைந்தது. அசர்பைஜானின் படைகள் நகோர்னோ - கார்பாக் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதனால் அங்கு வாழ்ந்த பெரும்பான்மையான ஆர்மீனிய இனத்தவர் தப்பி ஓடினர். இதன் காரணமாகத் தன்னாட்சிப் பகுதிகள் முறைப்படி கலைக்கப்பட்டன.
வங்கதேசத்தில் கிளர்ச்சி
- வங்கதேசத்தில் ஜனநாயகத்தன்மை குலைந்துவிட்டதாகவும், அடக்குமுறை அதிகரித்து விட்டதாகவும் கூறி மாணவர்கள் நடத்திய கிளர்ச்சியால், ஆகஸ்ட் 5இல் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தது இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஆனால், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸின் ஆட்சியில் சிறுபான்மையினர் - குறிப்பாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தது விமர்சனத்துக்குள்ளானது.
- உணவுப் பொருள் நெருக்கடியும் அந்நாட்டில் அதிகரித்திருக்கிறது. இவ்விஷயத்தில் இந்தியாவிடம் உதவி கோரியிருக்கிறது வங்கதேசம். இதுபோன்ற நெருக்கடிகளால், ஆடைத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடமாறலாம் என்றும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இப்படி இந்த ஆண்டு முழுவதும் பல உலக நாடுகள் போர், நெருக்கடி போன்ற கொந்தளிப்பான சூழ்நிலையிலேயே கழித்திருக்கின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 12 – 2024)