அமைதி திரும்ப வேண்டும்!
- கடந்த 21 மாதங்களாக அவ்வப்போது நிகழும் வன்முறையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த வியாழக்கிழமை (பிப். 13) அமல்படுத்தப்பட்டுள்ளது.
- அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது புதிதொன்றுமல்ல. அங்கு 1960-களில் இருந்தே ஆயுதம் தாங்கிய குழுக்கள் தனிநாடு கோரி போராடி வருகின்றன.
- 1980-ஆம் ஆண்டு முதலே அந்த மாநிலம் பாதிக்கப்பட்ட பகுதி (டிஸ்டர்ப்டு ஏரியா) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாட்டிலேயே அதிகபட்சமாக சுதந்திரத்துக்குப் பின்னர் 11-ஆவது முறையாக அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
- கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பாஜக கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரேன்சிங் முதல்வரானார்.
- ஹிந்துக்களான மைதேயி இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் (எஸ்டி) சேர்க்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு அந்த மாநில உயர்நீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 27-இல் உத்தரவிட்டது வன்முறைக்கு வித்திட்டது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதி, இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கிறிஸ்தவர்களான குகி இனத்தவரின் மணிப்பூர் அனைத்துப் பழங்குடியின மாணவர் அமைப்பினர் 2023 மே 3-ஆம் தேதி நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது.
- அப்போது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய கலவரத் தீ காரணமாக அவ்வப்போது இரு தரப்பினரும் ஆயுதங்களால் தாக்கிக் கொள்ள முற்பட்டனர். இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
- கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆளும் பாஜகவிலும் பிரேன் சிங்குக்கு எதிராக குரல் ஓங்கியது. கடந்த பிப். 10-ஆம் தேதி தொடங்கவிருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பிரேன் சிங் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது.
- வடகிழக்கில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) பிரேன் சிங் அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடந்த நவம்பரில் அறிவித்தது. அந்தக் கட்சிக்கு 7 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் அவர்களது அறிவிப்பால் ஆட்சிக்கு பாதிப்பில்லை என்றாலும் மேகாலயத்தில் ஆட்சியில் உள்ள அக்கட்சியின் ஆதரவு பாஜகவுக்கு பல வகைகளில் முக்கியமானதாகும்.
- இந்தப் பின்னணியில்தான், வேறு வழியில்லாமல் பிரேன் சிங் ராஜிநாமா செய்ய நேரிட்டது. ஆனால், அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் பாஜகவுக்குள் கருத்தொற்றுமை ஏற்படாததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு சட்டப்பேரவை இடைக்காலமாக முடக்கப்பட்டுள்ளது.
- பிரேன் சிங் ராஜிநாமா செய்துள்ளது அமைதியை மீட்டெடுக்கும் முயற்சிக்கு வழிகோலினாலும் மத்திய அரசுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.
- ஏற்கெனவே மைதேயி, குகி ஆகிய பழங்குடியினரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில் சமீபத்திய நிகழ்வுகள் ஆழமான பகையை ஏற்படுத்தி உள்ளன. கடந்த 21 மாதங்களில் இருதரப்பினரும் காவல் துறை, ராணுவத்தினரிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்ளையடித்து சேர்த்து வைத்துள்ளனர். ட்ரோன்கள், ராக்கெட் குண்டுகளை இரு தரப்பினரும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
- அண்டைநாடான மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவி மணிப்பூரில் வசிப்பவர்களின் உதவியை இந்தியாவுக்கு எதிராகப் போராட குகிக்கள் நாடுகின்றனர் என்பது மைதேயி இனத்தவர் குற்றச்சாட்டு. மேலும், கஞ்சா பயிரிடுபவர்களும் கலவரத்தைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
- மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள அந்நாட்டுப் பகுதிகள் ராணுவத்துக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் பாதுகாப்புப் படை (பிடிஎஃப்) வசம் உள்ளது. அவர்கள் மணிப்பூரில் போராடி வரும் போராளிக் குழுக்களுக்கு அடைக்கலம் அளிப்பதுடன் ஆயுதம், பணம் உள்ளிட்ட உதவிகளைச் செய்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
- குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட சில நாள்களில் குகி தேசிய ராணுவம் (கேஎன்ஏ), காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 12 தீவிரவாதிகள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர், கிழக்கு இம்பால், விஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காங்போக்பி பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் ராணுவத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றன.
- இந்த நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு காவல் துறையினரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஆயுதக் குழுக்கள் பொதுமக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
- மைதேயி, குகி இனத்தவரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அமைதியான வாழ்க்கை உறுதி செய்யப்பட வேண்டும். நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் சூழல் விரைந்து உருவாக்கப்பட வேண்டும்.
- அதுவே அங்குள்ள மக்களுக்கும், இந்தியாவின் நன்மதிப்புக்கும் மத்திய அரசின் மீதான நம்பகத்தன்மைக்கும் உகந்ததாக இருக்கும்.
நன்றி: தினமணி (19 – 02 – 2025)