அரசமைப்பால் உயர்ந்து நிற்கும் தேசம்!
- “இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டால், அதிகாரத்துக்காக இந்தியர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள்; அரசியல் சச்சரவுகளில் சிக்கி இந்தியா சீர்குலைந்துவிடும்” என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் அன்றைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இறுமாப்புடன் பேசினார். அவரைப் போலவே மேற்கத்திய நாடுகளைச் சார்ந்த பலரும் பேசியும் எழுதியும் வந்தனர்.
- ஆனால், அந்தக் கணிப்புகளை முறியடித்தது சுதந்திர இந்தியா! எண்ணற்ற சவால்கள், பலவீனங்களைக் கடந்து, இறையாண்மைமிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக சுதந்திர இந்தியா சீராக முன்னேறிவருகிறது. இதற்கு அடித்தளமாக இந்திய அரசமைப்பு திகழ்ந்துவருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டு நிறைவுறும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது.
அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா:
- சுதந்திர இந்தியாவின் முதன்மையான சமூக ஆவணமாக, சட்ட ஆவணமாக இந்திய அரசமைப்புச் சட்டம் உள்ளது. சமூக மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அல்லது அத்தகையதொரு சமூக மாற்றத்தை வென்றெடுப்பதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான எண்ணற்ற பிரிவுகளை அரசமைப்புச் சட்டம் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது.
- குறிப்பாக, சமூக, அரசியல்-பொருளாதார விடுதலையை முன்னிறுத்தும் சமூக மாற்றத்தை அடைவதற்கான லட்சிய முழக்கங்களை உள்ளடக்கிய பகுதிகளாக அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 3 (அடிப்படை உரிமைகள் - Fundamental Rights), பகுதி 4 (அரசுக் கொள்கைக்கான வழிகாட்டும் கோட்பாடுகள் - Directive Principles of State Policy) ஆகியவை ஒளிருகின்றன.
- குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள், அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டும் கோட்பாடுகள் ஆகிய இரண்டு பகுதிகளையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா என்று அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். விடுதலைப் போராட்டக் காலத்தின்போது எழுப்பப்பட்ட லட்சிய முழக்கங்களின் சாரம்தான் அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளாக, அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டும் கோட்பாடுகளாகப் பிரதிபலிக்கின்றன. வருங்காலத்தில், முழுமையான விடுதலை (சமூக-பொருளாதார விடுதலை) மலர வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன்தான் அரசமைப்புச் சட்டத்தில் இவை சேர்க்கப்பட்டன.
அடிப்படை உரிமைகள்:
- மக்களின் சுதந்திரத்தை, அதாவது தனிநபர் சுதந்திரத்தை அரசின் யதேச்சதிகாரப் போக்கு ஆக்கிரமித்துவிடக் கூடாது என்கிற நோக்கத்துடன் அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது கூறில் (பிரிவுகள் 12 முதல் 35 வரை) குடிநபர்களுக்கான அடிப்படை உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
- சட்டத்தின் முன் அனைவரும் சமம், கருத்துச் சுதந்திரம், கண்ணியமான முறையில் வாழ்வதற்கான உரிமை, மதம் - வழிபாட்டு உரிமை, கல்வி - கலாச்சார உரிமை, உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அவற்றைச் சட்டப்படியான வழிமுறைகளின் மூலம் பெறுவதற்கான உரிமை (Right to Constitutional Remedies - பிரிவு 32) என்று நுட்பமான பல்வேறு உரிமைகள் குறித்து மிக விரிவாகவே அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. தனிநபர் சுதந்திரமும் உரிமைகளும் செல்வாக்குமிக்க வெகு சிலருக்கு மட்டுமே உரித்தானவை அல்ல; அவை அனைத்தும் குடிமக்களாகிய அனைவருக்கும் உரித்தானவை என்கிற மகத்தான செய்தியை அரசமைப்புச் சட்டம் பிரகடனப்படுத்தியிருக்கிறது.
வழிகாட்டும் கோட்பாடுகள்:
- இந்தியச் சமூக அமைப்பில் பல நூற்றாண்டுகளாக மிக மோசமான நிலையில் இருந்த கோடிக்கணக்கான மக்களுக்குச் சமூக, பொருளாதார விடுதலை சாத்தியப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் அரசமைப்புச் சட்டத்தின் பகுதி நான்கில் (பிரிவுகள் 36 முதல் 51 வரை) அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டும் கோட்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதன் சாரம், பிரிவு 38இல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
- இந்திய அரசு, மக்கள் நல அரசாகச் செயல்பட வேண்டும் என்று நமது தேசத் தலைவர்கள் விரும்பினார்கள். எனவே, சுதந்திர இந்தியாவில் மத்திய - மாநில அரசுகள் சட்டங்களை இயற்றும்போது, இந்தக் கோட்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக வலியுறுத்தப்படுகிறது.
- சமூக வளங்கள் அனைத்தும் பொதுநலன் கருதி அரசின் கட்டுப்பாட்டில் இருந்திட வேண்டும் என்றும், சமூக முன்னேற்றத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செல்வ வளங்கள், உற்பத்திக் கருவிகளின் குவிப்பு ஏற்படக் கூடாது என்றும், அதற்கேற்பப் பொருளாதார முறை இயக்கப்பட வேண்டும் என்றும் பிரிவு 39 வழிகாட்டுகிறது.
- கல்வி உரிமை, வேலை பெறும் உரிமை, வேலையில்லாக் காலத்துக்கான நிவாரணம், மூத்த குடிநபர் நலன் (ஓய்வூதியம் போன்றவை) ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ப அரசு செயல்பட வேண்டும் என்று பிரிவு 41 அறிவுறுத்துகிறது. இப்படியாக, சமூக மாற்றத்துக்கான ஒரு கொள்கை அறிக்கையாக அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாடுகள் திகழ்கின்றன.
விடுதலை இயக்கத்தின் தாக்கம்:
- குடிநபர்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடர்பான கோரிக்கையானது, தேசிய விடுதலை இயக்கத்தின் ஆரம்பக் காலக்கட்டத்திலேயே எழுப்பப்பட்டது. ‘சுயராஜ்ய சட்ட மசோதா’ (The Constitution of India Bill, 1895) பிரிவு 16இல் பேச்சுரிமை, சொத்துரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், கட்டணமில்லாக் கல்வி, இன்ன பிற உரிமைகள் என்று தனிநபர் உரிமைகளுக்கான கோரிக்கைகள் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டன.
- ஆங்கிலேயர்களுக்கு இணையாக இந்திய மக்களுக்கும் சிவில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி 1917 முதல் 1919 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- முதல் உலகப் போர் உண்டாக்கிய தாக்கம், சோவியத் புரட்சி, மாண்டேகு-செல்ம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் (1919) மூலம் ஏற்பட்ட ஏமாற்றம், இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகளின் வருகை ஆகியவை காரணமாக, மக்களின் தேவைகள், விருப்பங்கள் குறித்த புதிய விழிப்புணர்வை, உத்வேகத்தை 1920களின் மத்தியில் நமது தேசத் தலைவர்கள் பெற்றார்கள்.
- தனிநபர் சுதந்திரம், ஆரம்பக் கல்விக்கான உரிமை, கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, பாலினச் சமத்துவம், இன்ன பிற உரிமைகள் ‘The Commonwealth of India Bill 1925’ சட்ட மசோதாவில் இடம்பெற்றன. 1928இல் அமைக்கப்பட்ட மோதிலால் நேரு குழு அறிக்கையிலும் அடிப்படை உரிமைகள் பற்றிய ஒரு விரிவான பகுதி இடம்பெற்றிருந்தது. இந்த அறிக்கையின் ஏராளமான பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள், அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டும் கோட்பாடுகள் பகுதிகளில் நிலைபெற்று ஒளிருகின்றன.
- இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் 1931 கராச்சி மாநாட்டுத் தீர்மானமும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. “அரசியல் விடுதலை என்பது, பட்டினிக் கொடுமையில் உழன்றுகொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் உண்மையான பொருளாதார விடுதலையையும் உள்ளடக்கியதாக இருந்திட வேண்டும்” என்கிற மையக் கருத்து இந்தத் தீர்மானத்தின் அடிநாதமாகத் திகழ்ந்தது.
- அடிப்படை உரிமைகள் குறித்த இந்தத் தீர்மானத்தின்மீது மகாத்மா காந்தியும் இம்மாநாட்டில் பேசியுள்ளார். முக்கியத் தொழில்-சேவைத் துறை, கனிம வளங்கள், ரயில்வே துறை, நீர்நிலைகள், கப்பல் - இதரப் பொதுப் போக்குவரத்துத் துறை ஆகியவை அரசின் கட்டுப்பாட்டில் இருந்திட வேண்டும் என்றும் கராச்சி மாநாட்டுத் தீர்மானம் வலியுறுத்தியது.
அரசமைப்பைக் கொண்டாடுவோம்:
- இதுவரையிலான நமது தேசிய வாழ்வுக்கான கலங்கரை விளக்கமாக நிலைபெற்று, அரசமைப்புச் சட்டம் வழிகாட்டிவருகிறது. கடந்த 75 ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் புதிய மதிப்பீடுகள் உருவாக வேண்டும். இந்திய அரசமைப்பு குறித்த மேம்பட்ட புரிதலைப் பெண்கள், இளைஞர்கள், மாணவர்களிடையே பரவலாக்க வேண்டும். அரசமைப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதில் அரசியல் கட்சிகளும் குடிமைச் சமூக அமைப்புகளும் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 01 – 2025)