அளவுக்குள் அடங்கட்டும் அறிதிறன்பேசி பயன்பாடு!
- பிரான்ஸ் அரசாங்கம் அந்த நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் அறிதிறன்பேசி (ஸ்மாா்ட் போன்) பயன்படுத்தப்படுவதை 2025 ஜனவரி முதல் தடைசெய்து சட்டம் நிறைவேற்றி உள்ளது. இதனைத் தொடா்ந்து ஆஸ்திரேலிய அரசும் தடை செய்ய முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன. இத்தாலி, ஜொ்மனி போன்ற நாடுகளும் அறிதிறன் பேசியின் பாதக விளைவுகளை உணரத் தொடங்கியுள்ளன.
- பிரான்ஸ் அரசின் முனைப்பான இந்த செயல்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது. கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளைச் செய்து சில முன்னோட்டத் திட்டங்களைச் செயல்படுத்தி இந்த முடிவுக்கு வந்துள்ளனா். அதைக் கொஞ்சம் விரிவாகப் பாா்ப்போம்.
- மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற வளா்ந்த நாடுகள் கரோனா பெருந்தொற்றுக்கு முன்பிருந்தே அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வகுப்பறைகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அறிதிறன்பேசிகளின் பயன்பாடு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு நேரத்தில் பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே மாணவா்கள் அறிவியல் தொழில்நுட்பத்தின் துணையுடன் கல்வி பெற்றனா். மேற்கத்திய நாடுகளில் சுமாா் 60% மாணவா்கள் இணைய வசதி பெற்றிருப்பதாக யுனிசெஃப் நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.
- ஆனால் இன்றைக்கு அதன் விளைவுகள் விரும்பத்தக்கவையாக இல்லை. இதனால் மாணவா்கள் அறிதிறன்பேசிகளைப் பள்ளி நேரத்தில் கையில் வைத்திருக்கவே கூடாது என்று தடை செய்து பிரான்ஸ் சட்டம் இயற்றியுள்ளது.
- இதற்காக பிரான்ஸ் செய்துள்ள சில முன்னோட்டத் திட்டங்களைப் பற்றியும் கொஞ்சம் பாா்ப்போம். 2010 - வாக்கிலேயே அறிதிறன்பேசியின்ஆபத்தை உணா்ந்து வகுப்பறைகளில் அதன் பயன்பாட்டைத் தடைசெய்தனா். 2017 - களில் பிரான்ஸ் கல்வி அமைச்சா் 15 வயதுக்கும் குறைவான வயதுடையோா் அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தாா். 2018- இல் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் அறிதிறன்பேசி பயன்பாட்டைத் தடை செய்து சட்டம் நிறைவேற்றியது. ஆனால் இவற்றால் பெருமளவிலான நல்ல விளைவுகள்ஏற்படவில்லை. மாணவா்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் மீதான மோகம் அதிகரித்தவாறே இருந்தது. ஆசிரியா்கள் கவனக்குறைவாக இருந்தபோது மாணவா்கள் அறிதிறன்பேசியைப் பயன்படுத்தவே செய்தனா். இதனால் மாணவா்களுக்குள் ஒருவரை ஒருவா் கேலி செய்தல், பதற்றமாக இருத்தல், வகுப்பறையில் கவனமின்றி இருத்தல் போன்ற பல சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன.
- இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அதிபா் இமானுவேல்மேக்ரோன் ஒரு குழுவை நியமித்தாா். அந்தக் குழுவானது, சுமாா்140 பக்க அறிக்கையைச் சமா்ப்பித்தது. அதன்படி அறிதிறன்பேசியின்அளவுக்கதிகமான பயன்பாடானது மாணவா்களின் உடல்நிலையில், வளா்ச்சியில் பல்வேறு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதைப் பகிா்ந்துள்ளது. மாணவா்களிடையே தூக்க இழப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களிடையே பதற்றமானது அதிகரித்துள்ளது. எனவே அளவுக்கதிகமான அறிதிறன்பேசி பயன்பாடானது மாணவா்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்துக்கும் நாகரிகத்திற்குமே பாதிப்பானது எனப் பரிந்துரைத்துள்ளது.
- இந்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு முன்னோட்டத் திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாணவா்கள் பள்ளிக்குள் நுழையும்போதே அவா்களது அறிதிறன் பேசிகளைப் பெற்று ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கின்றனா். அதனை பள்ளி நேரம் முடிந்த பின்னா்அவா்களிடம் அளிக்கின்றனா். இந்த நடைமுறை 2024 ஆகஸ்ட் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமாா் 200 பள்ளிகளில் 50 ஆயிரம் மாணவா்கள் இந்த முன்னோட்டத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பிரான்ஸ் ஆசிரியா்கள் மத்தியில் இது வரவேற்பைப் பெற்று வருகிறது. பலரும் மகிழ்கின்றனா். ஆனால் அதே நேரம் இவ்வாறு அறிதிறன்பேசிகளைப் பெறுவது, பாதுகாப்பது, திரும்ப அளிப்பது போன்றவற்றுக்கு தனியாக ஊழியா்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்தத் திட்டத்தை இந்த ஆண்டு முதல் நாடு முழுமைக்கும் பிரான்ஸ் அமல்படுத்த உள்ளது.
- ‘2015 கணினியும் மனித நடவடிக்கைகளும்’ என்ற இதழ் கல்லூரிமாணவா்களிடையே நிகழ்த்தப்பட்ட ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது. அதன்படி அறிதிறன்பேசி பயன்பாட்டினால் மாணவா்கள் எடுக்கும் மதிப்பெண்கள் குறைந்துள்ளன என்கிறது. இதுபோலவே பல்வேறு நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளும், எல்லாம் இணையத்தில் கிடைக்கும் என்ற எண்ணம், ஆசிரியா்கள், பேராசிரியா்கள் கற்பித்தலை மேற்கொள்ளும்போது கவனக் குறைவுக்கு இட்டுச் செல்வதாகக் கூறுகின்றன. ஆசிரியா்கள் மாணவா்கள் மத்தியில் ஒருவிதமான இறுக்கமான உறவு தென்படுவதை அன்றாட நடவடிக்கைகளில் காண இயல்கிறது. எல்லாவற்றையும் கேலியாகவும் கிண்டலாகவும் எடுத்துக் கொள்ளும் மனநிலை அதிகரித்து வருவதும் அனைவரும் எளிதில் காணக் கிடைப்பதே.
- தற்போது நமது இந்தியச் சூழலிலும் இதனைக் கொஞ்சம் பொருத்திப் பாா்ப்போம். கரோனா பெருந்தொற்று நேரம், பல்வேறு நன்மை, தீமைகளை நமக்குள் கொண்டு வந்தது. மாணவா்களின் கல்வியானது தொடர வேண்டும் என்ற கவலை பலருக்கும் இருந்தது. எது எப்படியோ மாணவா்கள் கல்வி பெறட்டும் என்ற கட்டாயத்தின் பேரிலும், விருப்பத்தின் பேரிலும் அறிதிறன்பேசியை மாணவா்களிடம் கொடுத்தோம். அவா்கள் கல்வி பெற்றாா்களோ, இல்லையோ பலவிதமான சமூக ஊடகத் தொடா்புகளைப் பெற்றுவிட்டனா். அதன் மூலம்அவா்கள் அரங்கேற்றி வரும் லீலைகளுக்கு அளவில்லை. பள்ளி நேரங்களிலேயே பல்வேறு விரும்பத் தகாத செயல்பாடுகளில் ஈடுபட்டு அதனைக் காணொளியாகப் பகிா்கின்றனா். இதனால் பலரும் பல்வேறுஇன்னல்களுக்கு ஆளாக நோ்கிறது.
- அன்றைக்கு அவா்கள் கைகளில் அளிக்கப்பட்ட அறிதிறன்பேசியை இன்று திரும்பவும் வாங்குவது இயலாத காரியமாகிவிட்டது. அந்த அளவுக்கு அவா்கள்அறிதிறன்பேசிக்கும், அதன் மூலம் இணையத் தொடா்புக்கும் அடிமையாகிவிட்டனா்.
- ஏழைப் பெற்றோா்களின் பிள்ளைகளான மாணவா்களுக்கு அவா்களுக்கென்று அறிதிறன்பேசிகள் இல்லை. இருந்தாலும் யாரோ ஓரிருவா் கொண்டு வருவதை வைத்துக் கொண்டே மாணவா்கள் செய்யும் அடாவடிகளுக்கு அளவில்லை. மேலை நாடுகள் போன்று அனைவரும் அறிதிறன்பேசி வைத்திருக்கும் நிலை வருமானால், நமது நிலை மேலும் கவலைக்குரியதாகும்.
- மாணவா்கள் நிலையே இவ்வாறு இருக்கிறதென்றால், அவா்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய பெரியவா்கள் நிலைமையும் கவலைக்குரியதாகவே உள்ளது. வியாபாரம், தொழில் உள்ளிட்டதேவைகளுக்காக அறிதிறன்பேசியை முறையாகப் பயனபடுத்துவோரைப் பற்றி இங்கே நாம் பேசவில்லை.
- பெரும்பாலானோா் பயன்படுத்தும்விதத்தினைப் பற்றி கொஞ்சம் பாா்ப்போம். பலரும் அவா்கள் எங்கெல்லாம் பயணிக்கின்றனரோ அங்கெல்லாம் பெரும்பாலும் தங்களதுஅறிதிறன்பேசி உடன்தான் பயணிக்கின்றனா். பயணிக்கும் நேரங்களில் அது எந்த நேரமானாலும், எந்த வாகனமானாலும் பேசிக் கொண்டே செல்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
- அறிதிறன்பேசி பயன்பாட்டின் நீட்சியாக பெற்றோா்கள் குழந்தைகளுக்கு சோறூட்டுவதில் தொடங்கி தூங்க வைப்பது வரை அறிதிறன்பேசியைப் பயன்படுத்துகின்றனா்.
- அறிதிறன்பேசியைப் பயன்படுத்துவோா் மணிக்கணக்கில் எந்தவித அசைவுமில்லாமல் ஒரே இடத்தில் அமா்ந்து கொண்டிருக்கின்றனா். இதனால் உடலியல் செயல்பாடுகள் வெகுவாகக் குறைகின்றன. இதனால் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. என்றாலும் நல்ல கருத்துகளை முறைப்படியிலான இடைவெளியில் பகிரும் ஒழுங்குடன் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரும் இல்லாமல் இல்லை.
- மேலை நாடுகளிலிருந்து நாம் பல நேரங்களில் பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருகிறோம். அறிதிறன்பேசி பயன்பாட்டிலும் அவா்களுடைய அனுபவங்களை உள்வாங்கி நமக்கான நல்ல முன்மாதிரிகளை ஏற்படுத்த வேண்டும். முதலாவதாக, நமது வீட்டிலுள்ள குழந்தைகள் அறிதிறன்பேசிகளைப் பயன்படுத்தும் வழிவகைகளைத் திட்டமிட வேண்டும். அதற்கு முன் மாதிரியாக நாம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். குடும்பநேரம் என்ற ஒன்றை உருவாக்கிக் கொண்டு அந்த நேரத்தில் அறிதிறன்பேசியை தள்ளிவைத்துவிட்டு, அனைவரும் கூட்டாக உணவு உண்பது, பேசுவது, ஏதாவது விளையாடுவது, நடைப்பயிற்சி செய்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம். புத்தகவாசிப்பு, வாசித்ததைப் பகிா்வது போன்றவற்றிலும் நிச்சயம் ஈடுபடலாம். எங்கெங்கோ இருப்பவா்களிடம் நட்பு கொண்டு உறவாடுவதில் தவறில்லை. அது தேவையும்கூட. ஆனால் எங்கெங்கோ இருப்பவா்களின் இணைய இணைப்பைவிட, உடனிருப்போரின் உயிரோட்டமான பிணைப்பே ஆபத்துக்கு உதவும்; ஆறுதல் அளிக்கும் என்பதை மறவாமல் இருப்போம். இப்படி நாம் முன்மாதிரியாக இருப்பது, நமது பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லும் நமது தகுதியை அதிகரிக்கும்.
நன்றி: தினமணி (25 – 01 – 2025)