அள்ளித் தந்த தங்கம்
- பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு வகைகள் உள்ளன. இதில் தங்கம் மிகவும் பாதுகாப்பானதாகவும் லாபகரமானதாகவும் கருதப்படுகிறது. தனிநபர்கள் மட்டுமல்லாது உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கூட தங்கத்தை கணிசமாக வாங்கிக் குவித்து வருகின்றன.
- தங்கத்தின் விலை நீண்டகால அடிப்படையில் சராசரியாக 8 முதல் 10 சதவீத உயர்வை சந்தித்து வருகிறது. ஆனால் உலக நாடுகளிடையே ஏற்படும் போர் பதற்றம், பங்குச்சந்தைகளில் ஏற்படும் கடும் சரிவு, பொருளாதார தேக்க நிலை உள்ளிட்டவை ஏற்படும்போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிக்கும். அந்த குறிப்பிட்ட ஆண்டில் தங்கம் விலை வழக்கத்தைவிட அதிக உயர்வை எட்டுவது வழக்கம்.
- அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டில் இந்தியாவிலும் சர்வதேச சந்தையிலும் தங்கம் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த 2010-ம் ஆண்டுக்குப் பிறகு தங்க முதலீட்டுக்கு 2024 சிறந்த ஆண்டாக அமைந்தது. கடந்த 2024-ம் ஆண்டில் இந்தியாவில் 29% வரையிலும் அமெரிக்காவில் 27% வரையிலும் தங்கத்தின் விலை உயர்ந்தது.
- குறிப்பாக, அக்டோபர் மாத இறுதியில் தங்கம் விலை உச்சத்தைத் தொட்டது. எனினும், பின்னர் சற்று குறைந்துள்ளது. ஆனாலும், இந்தியாவில் கடந்த ஆண்டில் தங்கம் 20 சதவீதத்துக்கு மேல் நிகர லாபத்தைக் கொடுத்துள்ளது.
- ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரும் இஸ்ரேல், காசா இடையிலான போரும் கடந்த ஆண்டின் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக இத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
- இதுதவிர, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கியதும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தன. கடந்த ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகள் சுமார் 9 சதவீத நிகர லாபத்தைக் கொடுத்தன. இந்நிலையில், பங்குச் சந்தைகளைப் போல தங்கம் கிட்டத்தட்ட 2 மடங்கு மேல் லாபத்தை அள்ளி வழங்கி உள்ளது.
வெள்ளி 30% உயர்வு:
- தங்கத்தைப்போலவே இந்தியாவில் வெள்ளியின் விலையும் கடந்த ஆண்டில் சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி 1-ம் தேதி 1 கிராம் வெள்ளி ரூ.78.60 ஆகவும் 1 கிலோ ரூ.78,600 ஆக இருந்தது. அதிகபட்சமாக அக்டோபர் 23-ம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000 ஆக அதிகரித்தது.
- டிசம்பர் 31-ம் தேதி ரூ.98 ஆயிரமாக இருந்தது. நடப்பு ஆண்டிலும் உலக நாடுகளிடையே போர் பதற்றம் தொடர்ந்தால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.8 ஆயிரத்தைத் தாண்டும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
70 ஆண்டில் தங்கம் விலை:
- கடந்த 70 ஆண்டுகளில் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 1970 முதல் 1980 வரையிலான பத்தாண்டில் 620% உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2000 முதல் 2010 வரையிலான 10 ஆண்டில் 320% அதிகரித்துள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 01 – 2025)