'அஸர்' எச்சரிக்கை!
- 'பிரதம்' என்ற அரசுசாரா அறக்கட்டளை அண்மையில் வெளியிட்டுள்ள 'அஸர் 2024' ஆண்டறிக்கை நாடு முழுவதும் பள்ளிக் கல்வியில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
- இந்த அறக்கட்டளை நாடு முழுவதும் 605 மாவட்டங்களில் 3 வயது முதல் 16 வயது வரை உள்ள கிராமப்புற மாணவர்கள் 6.5 லட்சம் பேரிடம் அவர்களது கல்வித் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்களைச் சேர்ந்த 876 கிராமங்களில் 28,984 மாணவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
- நாடு முழுவதும் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 2022-இல் 72.9%-ஆக இருந்தது 2024-இல் 66.8% ஆகக் குறைந்துள்ளது. கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய கடுமையான பொருளாதார சுமையால் அரசுப் பள்ளியை நாடிய பெற்றோர்கள், அதன் தாக்கத்தில் இருந்து ஓரளவு விடுபட்டுள்ளதால் தனியார் பள்ளிகளை நோக்கி மீண்டும் திரும்பி உள்ளதையே இது காட்டுகிறது.
- நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 3-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில், 2-ஆம் வகுப்புப் பாடங்களை சரளமாகப் படிக்க முடியும் என்பவர்களின் எண்ணிக்கை 2018-இல் 20.9% என்றிருந்தது. 2022-இல் அது 16.3% ஆகக் குறைந்தது. இப்போது இந்த எண்ணிக்கை 23.4% ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதிலும், 3-ஆம் வகுப்பைச் சேர்ந்த 76.6% மாணவர்களால் 2-ஆம் வகுப்புப் பாடத்தைப் படிக்க முடியவில்லை என்பது தெரியவருகிறது.
- 5-ஆம் வகுப்பு மாணவர்களில் 44.8% பேரால் மட்டுமே 2-ஆம் வகுப்புப் பாடங்களைப் படிக்க முடிகிறது. அவர்கள் 8-ஆம் வகுப்புக்கு வரும்போது 67.5% பேரால் 2-ஆம் வகுப்புப் பாடங்களைப் படிக்க முடிகிறது. 8-ஆம் வகுப்புக்கு வந்த பின்னரும் 32.5% பேரால் 2-ஆம் வகுப்புப் பாடங்களைக்கூட படிக்க முடியவில்லை.
- அதேபோன்று, 3-ஆம் வகுப்பில் 66.3% மாணவர்களால் எளிமையான கழித்தல் கணக்குகளைச் செய்ய இயலவில்லை; 5-ஆம் வகுப்பு மாணவர்களில் 69.3% பேரால் எளிமையான வகுத்தல் கணக்குகளைச் செய்ய இயலவில்லை-இதுவும் இந்த ஆண்டறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
- 59 மாநிலங்கள் மற்றும் தேசிய கல்வி வாரியங்கள் 2023-இல் நடத்திய பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மத்திய அரசு ஆய்வு செய்ததில் 65 லட்சம் மாணவர்களால் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு ஆய்வுகளைக் கருத்தில்கொண்டு, 5, 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி முறையை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. 16 மாநிலங்கள், தில்லி உள்பட 2 ஒன்றிய பிரதேசங்களில் 5, 8-ஆம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- எனினும், தமிழகத்தில் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்தால் இடைநிற்றல் அதிகரித்துவிடும் என்ற கருத்து உள்ளதால், மாற்றாக கல்வித் தரத்தை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகள், பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட படிப்புகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள், தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்திருந்தால் வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இருந்தபோதும், தமிழகத்தில் கிராமப்புறங்களில் 2022-இல் 75.7 %-ஆக இருந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 2024-இல் 68.7% -ஆகக் குறைந்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. மாணவர்களின் அடிப்படை வாசிப்பு, கணக்குப் பயிற்சி போன்றவற்றை மேம்படுத்துவதற்காக 'எண்ணும் எழுத்தும்', 'இல்லம் தேடி கல்வி' போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
- 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தால் தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு, அரசு உதவி பெறும் 45,924 பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனில் உள்ள இடைவெளி தொடர்பாக சுமார் 10 லட்சம் பேரிடம் அண்மையில் ஆய்வு மேற்கொண்டது வரவேற்புக்குரியது.
- ஆனால், 'அஸர்' அறிக்கையின்படி தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு மாணவர்களில் 37% பேரால் மட்டுமே 2-ஆம் வகுப்புப் பாடங்களைப் படிக்க முடிகிறது என்பதும், 20.2% பேரால் மட்டுமே வகுத்தல் கணக்குகளைச் செய்ய முடிகிறது என்பதும் நாம் இன்னும் அதிகத் தொலைவு பயணிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
- தமிழகத்தில் உள்ள சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 46 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அதே நேரம், 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
- பல பள்ளிகளில் எல்கேஜி வகுப்புக்கே ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கட்டணம் வசூலிக்கும் நிலையில், தாங்கள் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டாலும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருதி தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மனநிலை நடுத்தர வர்க்கத்தினரிடையே உள்ளது. அரசுப் பள்ளிகள் குறித்த இந்த மனநிலை மாற்றப்படுவதற்கு பெரும் முயற்சிகள் தேவைப்படுகின்றன.
- 'வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற இலக்கு அடையப்பட வேண்டுமானால், தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலுமே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
நன்றி: தினமணி (10 – 02 – 2025)