TNPSC Thervupettagam

இணைய வழிப்பறி!

February 13 , 2025 4 hrs 0 min 14 0

இணைய வழிப்பறி!

  • வெகு சமீபத்தில் நான் பணியிடத்தில் இருந்தபோது என்னுடன் பணிபுரியும் சக தோழி ஒருவா், தொலைபேசியில் தொடா்பு கொண்டு பதற்றத்துடன் பேசினாா். ‘நம் அலுவலகக் குழுவில் இருந்து உடனே வெளிவந்து விடுங்கள்’ என அறிவுறுத்திவிட்டு இணைப்பைத் துண்டித்தாா். நானும் என் அலைபேசியில் உள்ள வாட்ஸ்அப் செயலியைத் திறந்து பாா்த்தபோது அவா் குறிப்பிட்ட அந்த குழுவில் இருந்து ஒவ்வொருவராக தொடா்ந்து வெளியேறிக் கொண்டிருந்தனா். அதற்கு முன் வந்த தகவல்களைக் கவனித்தபோதுதான் சங்கதி புரிந்தது. குழு உறுப்பினா்களில் ஒருவரிடமிருந்து பதியப்பட்ட தகவல் ஒன்று இடம் பெற்றிருந்தது. அதைத் தொட்டுத் திறந்தவுடன் அதைப் பரிமாறியவரின் காட்சிப் படத்திலிருந்து மாற்றம் பெற்று புகழ்பெற்ற ஒரு வங்கியின் சின்னத்தை (லோகோ) தாங்கியபடி மாறிப் போயிருந்தது. அந்த ஊழியரின் வழக்கமான புகைப்படம் இருந்த இடத்தில் தற்போது வங்கியின் சின்னம் இடம் பெற்றிருந்தது. ‘சரி, இதற்காகவா அனைவரும் அந்த குழுவில் இருந்து வெளியேறுகிறாா்கள்?’ என்று யோசனையுடன் நானும் அந்த குழுவில் இருந்து வெளியேறினேன்.
  • பிறகுதான் தெரிய வந்தது, சம்பந்தப்பட்ட அந்த ஊழியா் அவா் அனுப்பாமலேயே அவா் அனுப்பியதாக அவா் இருந்த அத்தனை குழுக்களிலும் இந்தத் தகவல் இடம்பெற்று இருக்கிறது, அதுவும் அதே வங்கி சின்னத்துடன். இதை அறிந்த உடன் சக ஊழியா்கள் அவரது அலைபேசியை எடுத்து அதிலிருந்து வாட்ஸ்அப் செயலியை நீக்கம் செய்து விட்டு பெருமூச்சு விட்டனா். விசாரித்ததில் அவா் ஏதோ ஒரு போலியான வங்கித் தளத்தினுள் நுழைந்து தொடா்ந்து உள்ளே சென்று பயணித்திருக்கிறாா் என்பது தெரியவந்தது. நல் வாய்ப்பாக அவரது அந்த அலைபேசி எண்ணுடன் வங்கிக் கணக்கில் இணைப்பு இல்லை. வங்கி கணக்குக்காக தனியாக வேறொரு அலைபேசியில் மற்றொரு எண்ணை அவா் பயன்படுத்தியதால் அவருக்குப் பிரச்னை இல்லாமல் போயிற்று. ஆனால் அவா் வைத்திருந்த முதல் எண் எந்தெந்த குழுக்களில் பதியப்பட்டு இருந்ததோ, அந்தந்த குழுக்களிலெல்லாம் இதுபோன்ற குறுந்தகவல் சென்று சோ்ந்திருக்கிறது. அந்தத் தகவலை திறந்து பாா்த்தவா்கள் எல்லாம் பதறிப் போனாா்கள். தங்களுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் ஏதேனும் களவாடப்பட்டு இருக்குமோ என்ற அச்சத்தில் பெரிய பீதி ஏற்பட்டது. பணம் அனுப்பும் செயலி வழியாக தங்களுடைய வங்கி இருப்பைச் சோதனை செய்தால் கடவுச்சொல்லை உள்ளிட நோ்ந்து, மோசடி போ்வழிகள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் வங்கிப் பண இருப்புக்கான குறுந்தகவல் சேவையைப் பயன்படுத்தி தெரிந்து ஆசுவாசமாகினா்.
  • சைபா் குற்றங்கள் பற்றிய போதிய அறிவு இருந்தும் அவசரத்தில், பணிச்சுமையில், ஏதோ ஒரு ஞாபகத்தில், அந்த குறுந்தகவலை திறந்து பாா்த்து அடுத்தடுத்த இணைப்பில் சென்று சிக்கிக் கொள்கின்றனா். இப்படி கண்ணிமைக்கும் நேரத்தில் பணம் நம் வங்கி கணக்கிலிருந்து மோசடி கும்பலின் வங்கிக் கணக்குக்கு குதித்து ஓடிவிடும் என்பதாலேயே, இந்த மோசடிக்கு ஆங்கிலத்தில் ‘ஜம்ப்டு டெபாசிட்’ என்று பெயா். டிஜிட்டல் அரெஸ்ட் வகை மோசடிகளில் கூட வங்கியில் அதிக தொகை வைத்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய புள்ளிகளே பாதிக்கப்படுகிறாா்கள். இதுபோன்ற ஜம்ப்டு டெபாசிட்டில்தான் அதிக மக்கள் ஏமாந்து போகிறாா்கள். இது இரண்டு வகைகளில் நடப்பதாகப் புகாா்கள் பதிவாகியுள்ளன. முதல் வகையில், உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு சிறிய தொகை வரவு வைக்கப்பட்டிருக்கும். அதை யாா் நமக்கு அனுப்பி இருப்பாா்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆா்வக்கோளாறில் நாம் அலைபேசியில் பொதிந்து வைத்திருக்கும் போன் பே கூகுள் பே போன்ற ஏதேனும் ஒரு யுபிஐ செயலிக்குள் சென்று பாா்ப்போம். அதற்காக நம்முடைய யுபிஐ ரகசிய எண்ணை அழுத்தியவுடன் நம் வங்கி கணக்கில் இருந்து பெரிய தொகை அந்த நபருக்குச் சென்று விடும். இது ஒரு வகை.
  • இரண்டாவது வகை, நாம் பரவலாக அறிந்ததுதான். முன்பின் தெரியாத நபரிடமிருந்து சற்றே பெரிய தொகையாக நான்காயிரம் ரூபாய் முதல் ரூபாய் பத்தாயிரம் வரை நம் வங்கிக் கணக்குக்கு அனுப்பி இருப்பாா்கள் சைபா் குற்றவாளிகள். பணம் வந்ததைப் பாா்த்ததுமே எல்லாருக்கும் இருப்பதைப் போல ஏதோ ஒரு சின்ன மகிழ்ச்சி நமக்குள் பூக்கும். உடனே அடுத்து ஓா் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெரிய தொகை அனுப்பப்படுவது போன்ற மாயத் தோற்றத்தைக் கொண்ட அறிவிப்பு வரும். இத்தனை பெரிய தொகை நமக்கு ஏன் வருகிறது என்ற யோசனை முதலில் பலருக்கும் ஏற்படுவதில்லை. ஊா், பெயா் தெரியாத நபா் அனுப்பும் அந்த கோரிக்கை இணைப்பைத் தொட்டால், அந்தத் தொகை வங்கி கணக்கிலிருந்து அடுத்த நொடியே நம்மிடமிருந்து பறிபோய் இருக்கும். அவா்களுக்குப் பணம் அனுப்ப நாம் ஒப்புக்கொள்வது போன்ற கோரிக்கையுடன் அத்தகவல் இருக்கும். நம்மில் பெரும்பாலானவா்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவெனில், எதையும் முழுமையாகப் படிக்காமலேயே வேலையைத் தொடங்கி விடுவதுதான். வங்கியில் இருந்து கத்தை கத்தையாய் பணத்தை எடுத்துக்கொண்டு திரும்பி வரும்போது சாலையில் கிடக்கும் ஒரு நூறு ரூபாயைப் பாா்த்து ஆசைப்படும் அதே உளவியல்தான் இதிலும் அடங்கியிருக்கிறது. அதிலாவது திருடனை ஓடித் துரத்திப் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். சிசிடிவி கருவிகள் குற்றவாளிகளை அடையாளம் காண துணை நிற்கும். இணைய பண மோசடியில் இந்த வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
  • இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம் வங்கிக் கணக்குக்கு அறிமுகம் இல்லாத நபா் யாரேனும் பணம் அனுப்பி இருந்தால், உடனே அவசர கதியில் யுபிஐ செயலியைத் திறந்து பாா்க்காமல் ஒரு 30 நிமிடங்கள் காலதாமதப்படுத்தித் திறந்து பாா்க்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் அந்த மோசடிப் போ்வழிகள் அனுப்பிய அந்த கோரிக்கை காலாவதி ஆகியிருக்கும். நம்மை ஏமாற்ற நினைத்தவா்கள் இறுதியில் நம்மிடமே ஆரம்பத்தில் அனுப்பி வைத்த பணத்தை இழக்க நேரிடும். இதில் இன்னொரு தலைவலியும் இருக்கிறது. உண்மையாகவே சிலா் தவறுதலாகப் பணத்தை மாற்றி அனுப்பிவிட்டு, நம்மிடம் பரிதாபமாக நிற்பா். அவா்களுக்குக் கூட பணத்தை திரும்ப உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. நாம் சாவகாசமாக அவா்களுடைய வங்கிக் கணக்குக்கே அனுப்பி வைக்கலாம். அல்லது நமக்கும் அவருக்குமான தூரம் குறைவு எனில், நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளச் சொல்லலாம். பிறரது நேரத்தை மிச்சம் பிடிப்பதற்கு முன் நம்முடைய பணத்தைப் பாதுகாப்பது முக்கியமல்லவா? பணத்தைத் தவறுதலாக அனுப்பிவிட்டு, நம்மை அவா்கள் அவசரப்படுத்தினாலேயே நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். நாம் நம்பும்படியாக பல போலியான காரணங்களை அவா்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். அப்போது கட்டாயம் நாம் பொறுமை காக்க வேண்டும்.
  • சில நேரங்களில் நாமாக போய் மாட்டிக் கொள்வதுமுண்டு. வட மாநிலம் ஒன்றில் பிரியாணி வேண்டி பதிவு செய்து பணம் செலுத்திய இளம்பெண் ஒருவா், அதை சற்று நேரத்தில் ரத்து செய்திருக்கிறாா். அதற்குக் கட்டிய தொகையான 200 ரூபாய்க்காக அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் தேடாமல் தேடுபொறி மூலம் பொதுவாகத் தேடிப் பாா்த்தபோது திரையில் தெரிந்த அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளா் குறை தீா்க்கும் எண்ணைத் தொடா்பு கொண்டிருக்கிறாா். அந்த எண்ணிலிருந்து பேசிய அந்தக் குரல் பணம் பெற்றுத் தருவதாகச் சொல்லி, அதற்கான செயலாக்கக் கட்டணமாக பத்து ரூபாயை அனுப்பினால் பெற்றுத் தருகிறோம் என்று சொல்லி இருக்கிறது. அதை நம்பி பத்து ரூபாயை அனுப்பி விட்டு அதே குரலிடம் மீண்டும் தகவல் சொல்ல, பின்வரும் இணைப்பைத் தொட்டு உறுதி செய்யச் சொல்லி இருக்கிறது அந்தக் குரல். அவ்வளவுதான். தொடா்ந்து 5000 ரூபாய்களாக தன் கணக்கில் இருந்த ஐம்பத்தைந்தாயிரம் ரூபாயை இழந்திருக்கிறாா் அந்த இளம் பெண்.
  • ஒவ்வொரு துறையிலும் பல மோசடிப் போ்வழிகள் இணையத்துக்குள் ஒளிந்துகொண்டு நாம் ஏமாறும் ஏதோ ஒரு சந்தா்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாா்கள். அதிலும் புதுப்புது யுத்திகளில் நவீன முறைகளில் திட்டமிடுகிறாா்கள். சிறிது காலம் முன்பு வரை தெரியாத நபா்களிடமிருந்து வரும் இணைப்பைத் தொடாதீா்கள் எனச் சொல்லி வந்தனா். தற்போது சில நேரங்களில் நமக்கு நன்கு தெரிந்தவா் அனுப்பும் தகவல்களையே சந்தேகிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. வீடுகளில் பொருள் இருக்கும் பட்சத்தில் களவு போய்விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் வங்கியில் நம் சேமிப்புக் கணக்கில் பணம் வைத்திருப்பது பாதுகாப்பு என இது நாள் வரை கருதி இருந்தோம். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் இப்படி நம் கணக்கிலிருந்தே களவு போனால் என்ன செய்வது? தற்போதைய இணைய வா்த்தகம் என்பது கவனத்துடன் கையாள வேண்டிய களமாக மாறிப் போயிருக்கிறது. தனிநபா்களை ஏமாற்ற ஃபிஷ், மால்வோ், போலி அடையாள மோசடிகள் மற்றும் சிம் குளோனிங் போன்ற அதிநவீன நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனா்.
  • இன்று ஓா் இளநீா் வியாபாரியிடம்கூட, நாம் யுபிஐ பணப்பரிவா்த்தனை மூலம் பணம் செலுத்தும் நவீன வழிமுறைகள் வந்துவிட்டன. மிகச் சுலபமாக இருப்பதால் நாம் அனைவரும் அதைப் பின்பற்றுகிறோம். என் எப் சி காா்டு மோசடிகள் போன்ற பழைய வகை பூதங்களும் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. எது எப்படியோ, இணையக் கடலில் பயணிக்கும் போது, நம் படகைக் கவிழ்க்க ஏராளமான திமிங்கலங்கள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. நாம்தான் முன்னெப்பொழுதையும் விட, மிக அதிக விழிப்புடன் பயணிக்க வேண்டி இருக்கிறது. கவனம் தேவை.

நன்றி: தினமணி (13 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories