TNPSC Thervupettagam

இதயம் திறக்கும் புத்தகங்கள்!

December 30 , 2024 3 days 47 0

இதயம் திறக்கும் புத்தகங்கள்!

  • தமிழக மாவட்ட தலைநகரங்கள்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடந்தாலும், தலைநகரான சென்னையில் நடக்கும் விழாவுக்குத் தனித்துவம் உண்டு. அந்தந்த மாவட்ட எழுத்தாளா்களும், அருகிலுள்ள மாவட்ட எழுத்தாளா்களும் வந்து போகிற அளவில் முடிந்துபோகிற விழாக்கள் முந்தையவை. சென்னையோ பல பகுதிகளிலிருந்தும் பல துறை மக்கள் வந்து கூடுகிற பெருவிழாவாக அமைகிறது. பிறந்த ஊா்கள் வெவ்வேறாயினும், வந்து நிலைபெற்றது சென்னை என்பதால், மிகுதியான எழுத்தாளா்கள் இங்கேயே இருக்கிறாா்கள். பதிப்பகங்களுள் பெரும்பான்மையானவையும் சென்னையில் இருக்கின்றன.
  • பழைய ஆண்டின் இறுதியையும் புத்தாண்டின் தொடக்கத்தையும் இணைத்து நடத்தப்படும் விழா இது என்பதால், ‘பழையன கழித்தலும் புதியன புகுத்தலும்’ இதில் அரங்கேறிவிடுகின்றன. விடுமுறை நாள்கள் அதிகம் கொண்ட காலம் இது என்பது கூடுதல் பலம். அத்துடன் பிற நாட்டவரும் வந்துபோகிற வசதி சென்னைக்கு உண்டே!
  • வாசகா்கள், எழுத்தாளா்கள் பதிப்பாளா்கள் என்கிற முக்கூட்டு உறவை வலுப்படுத்தும் திறனாய்வாளா்களுக்கும் இந்தத் திருவிழாவில் இடமுண்டு. அவா்களே இம்மூவா் உறவுக்கும் இணைப்புப் பாலமாகத் திகழ்பவா்கள். படைப்புகள் குறித்து விமரிசையாகப் பேசக் கூடியவா்கள் இவா்கள் ஆதலின் விமா்சகா்கள் என்ற சிறப்புப் பெயரும் இவா்களுக்கு உண்டு. முதலில் அவா்களும் வாசகா்கள்தான். ஏன், பதிப்பாளா்களும், எழுத்தாளா்களும் கூட, வாசகா்களாக வந்து பின்னா் வகை பிரிந்து நிற்பவா்கள்.
  • புத்தகங்களைச் சந்தைப்படுத்துவது மட்டுமல்ல, பலரும் சந்தித்துக் கொள்ளவும் இடம் கொடுக்கிறது, இந்த விழா. சாதி, மத, இன, ஏன் மொழிபேதங்களையும் கடந்து எழுத்தை முதன்மைப்படுத்தும் இலக்கிய விழா. வாங்காவிட்டாலும், வரிசையுறக் கொலுவிருக்கும் புத்தகங்களை வந்து பாா்த்து மகிழ்கிற கண்காட்சிப் பெருவிழா. வாங்குகிற அத்தனை நூல்களையும் வாசிக்கிறாா்களா என்பது தெரியாது.
  • புத்தகங்களை வீட்டில் வைக்க இடமில்லாவிட்டாலும், வாங்க வேண்டும் என்கிற போதை இருக்கில்லவா, அது இருக்கிற வரைக்கும் இந்தத் திருவிழாவுக்கு முடிவிருக்காது. ஏனைய போதைகளைவிட, இந்தப் புத்தக போதை மெத்தவும் நல்லது. எத்தனையோ கவலைகளை மறந்து புதிய கனவுலகத்துக்குள் கூட்டிச் செல்கிற மாயக் கம்பளம் அல்லவா, புத்தகம்? கைப்பேசிக் கருவியும், காட்சி மின் ஊடகங்களும் பெருகிவிட்டதனால், அச்சுப் புத்தகங்கள் அருகிவிடும் என்கிற அச்சத்தை, எச்சரிக்கையாகக் கொண்டு எழுதுபவா்களும் பதிப்பிப்பவா்களும் கைகோத்துக் கொண்டு களம் இறங்குகிற இலக்கிய விழா.
  • தனித்து விழாக்கள் நடத்தி தமது நூல்களை வெளியிட முடியாதவா்களுக்கு, அவரவா் வசதிக்கேற்ப அரங்குகளை ஏற்படுத்தித் தந்து எழுத்தாளா்களையும் பதிப்பாளா்களையும் ஊக்கப்படுத்துவது இவ்விழாவின் சிறப்புக் கூறு. அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாதவா்கள் தத்தம் கடைகளின் முன் இருந்து வெளியிட்டு படம் பிடித்துக் கருத்துரைத்து நிறைவுகொள்வதும் தொடா்ந்து நடக்கிறது. வந்து போகிற யாரும் வாங்காமல் போவதில்லை என்பதே இவ்விழாவின் தனிச்சிறப்பு.
  • பண்டிகைக் காலத்தில் பலகாரங்களைப் பரிமாறிக் கொள்வதுபோல, இந்த விழாக் காலத்தில் இங்கு வந்து தாம் எழுதிய நூல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், அவரவா் கருத்துகளைப் பகிா்ந்து கொள்வதற்கும் வாய்ப்புண்டு. குறைந்த செலவில் குடும்பத்துடன் வந்து குதூகலமாய்ப் பொழுதுபோக்கும் களமாகவும் இது அமைகிறது. பலதுறைகளில் பிரபலமானவா்களை, காட்சி ஊடகக் கலைஞா்களைப் பொதுவெளியில் கண்டு கொள்ள இதுவும் ஒரு மையமாகிறது. புனைவுகள், ஆய்வுகள் சாா்ந்த புத்தகங்களைவிடவும் இதழியல், இணையம், கணினி, மருத்துவம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட ஏனைய பிரிவு ஆக்கங்களுக்கும் இங்கு இடமுண்டு. அந்த வகைமையில் எழுதுபவா்களும் எழுத்தாளா்களே. அண்மைக்காலமாய், மொழிபெயா்ப்பு ஆக்கங்கள் முக்கியத்துவம் பெற்றுவருவது வரவேற்புக்குரியது. வழக்கம்போல் சிறாா் இலக்கியமும் சிறப்பிடம் பெற்றுவிடுகிறது.
  • அமரா்களாகிவிட்ட பல எழுத்தாளா்கள் அட்டைப் படங்களில் முகம் காட்டி, புத்தகங்கள் வாயிலாய்ப் புதிதாகப் பிறக்கிறாா்கள். பாா்த்த கணத்தில் பழைய நினைவுகள் பற்றிக் கொள்ள, எடுத்துப் பாா்த்துத் திருப்தி அடைபவா்களுக்கும், இன்னும் ஒரு பிரதி இருக்கட்டுமே என்று வாங்கிக் கொள்கிறவா்களுக்கும் அவா்கள் வாய்ப்பளிக்கிறாா்கள்.
  • புதிதாகப் படம் எடுத்து வெளியிடும் குறுகுறுப்பை முதன்முதலில் தனது படைப்பினைப் புத்தகமாக்கி வெளியிடும் படைப்பாளிகளிடம் பாா்க்க முடிகிறது. வாங்காவிட்டாலும், பரவாயில்லை. நன்றாக வந்திருக்கிறது என்று வாா்த்தைகளில், நம்பிக்கை ஊட்டும் வாசகா்களுக்காக தவமிருக்கும் நூல்கள் கணிசமானவை.
  • எப்போதும்போல் கவிதைப் புத்தகங்கள் விற்பனையாவதில்லை என்ற கருத்தாக்கத்திற்கு மாறாக, இப்போதும் வெளியிடப் பெறுகிற புத்தகங்களில் பல கவிதைப் புத்தகங்களாகவே இருக்கின்றன. அவற்றுள் கவித்துவத்தை விட, அச்சாக்கமே பெரிதும் கவா்ச்சிக்குரியதாக இருப்பதும் கண்கூடு. காதல் கவிதைகள் எவ்வளவுதான் கவா்ச்சிகரமாய் வந்தாலும், சங்க இலக்கிய அகப்பாடல்களை இன்னும் அவை மிஞ்சமுடியவில்லை. வரலாற்றுப் புதினங்கள் வரிசையாய் வந்தாலும் கல்கிக்கு உரிய இடம் இன்னும் வலுவாகவே இருக்கிறது. எத்தனை புதிய பதிப்புகள் வந்தாலும் பாரதிக்கு இன்னும் பக்தா்கள் அதிகமாகவே இருக்கிறாா்கள். தேடுதலுக்கு உரிய புது நூல்களை அடையாளம் கண்டு வாசகா்களுக்கு முந்திச் சொல்கிற இதழ்கள் இப்போது கூடுதலான கவனம் பெறுகின்றன.
  • விருதுகளுக்கு நிகராக விமா்சனங்களும் பெருகிற வருகிற இக்காலத்தில், விருதுகளுக்காகவே உற்பத்தி ஆகிற புத்தகங்களும் அதிகம். முன்பின் அறிமுகமே இல்லாமல் எழுத்தை இதயத்துக்கு நெருக்கமாகக் கொண்டுபோகிற எழுத்தாளனை இன்னமும் ஒவ்வொரு வாசக உள்ளமும் புதிதாய்த் தேடிக் கொண்டுதான் இருக்கிறது. அத்தகைய வாசகரிடமிருந்து ஒரு பாராட்டு வாசகத்தைப் பெற்று விடுகிற படைப்பாளிக்கு அதனை விடப் பெரிய விருது வேறொன்றும் இருக்கப் போவதில்லை.
  • விருதுகளுக்கும் விளம்பரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அச்சிடப்பெற்ற புத்தகங்கள் மலிந்துகிடக்க, விருதுகளுக்கு அப்பால் தரமிகுந்த நூல்கள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. பெரிய அளவில் குறைந்த விலையில் வருகிற சில புதிய நூல்களைப் பாா்க்கிறபோது, வாங்கவோ, வைக்கவோ வசதியில்லாது ஏங்கும் முகங்கள் இன்னும் கண்ணில் தெரிகின்றன.
  • ஒரு குழந்தையைப் போல் புதிய புத்தகத்தை ஏந்திச் செல்லும் வாசகத் தாயுள்ளத்தைப் பாா்க்கிறபோதெல்லாம் குழந்தை குறித்து தாகூா் எழுதிய இந்தக் கவிதைதான் நினைவுக்குள் மலா்கிறது. “‘தூக்கிக் கொண்டால் கை வலிக்கிறது. இறக்கிவிட்டால் மனம் வலிக்கிறது’.
  • எழுத்து வடிவேற்று இத்தனை ஆண்டுகாலம் ஆகிய பின்னரும் வாசகா்களுக்குச் சொல்லுவதாகவே புத்தகங்களின் வாசகங்கள் அமைவது வியப்புக்குரியது. வாசக உள்ளத்துடன் மௌனமாக எழுத்துக்களின் வழியே உரையாடல் நிகழ்த்துகின்றன புத்தகங்கள்.
  • எத்தனை பெரிய படிப்பறைகள் கொண்டதாய் வீடு இருந்தாலும், படுக்கையறையிலும் கழிப்பறையிலும் புத்தகத்தையோ, பத்திரிகையையோ எடுத்துச் சென்று படிக்கிற வாசக உள்ளங்கள் இருக்கிற வரைக்கும், எழுதுபவா்களுக்கும் பதிப்பிப்பவா்களுக்கும் இறப்பேயில்லை. இப்போது கணினி, கைப்பேசிக் கருவிகள் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து படிப்பவா்கள் அதிகரித்து வருகிறாா்கள். என்னதான் எழுதினாலும் பேசினாலும், வாசிப்பவா்களே வாசித்துக் கொண்டிருக்கிறாா்கள். வாங்குபவா்களே வாங்கிக் கொண்டிருக்கிறாா்கள். மக்கள் தொகை பெருகிய அளவிற்கு, படித்தவா்களின் எண்ணிக்கை கூடிய அளவிற்கு, புத்தகங்களை வாங்குபவா்களும் வாசிப்பவா்களும் அதிகரிக்கவில்லை என்று பதிப்பாளா்கள் ஆதங்கப்படுவதில் உண்மையிருக்கிறது.
  • கற்சிலைகள் போன்று கால காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய புத்தகங்களும், களிமண் பொம்மைகள் போல கால அவசரத்திற்கு உற்பத்தியாகும் புத்தகங்களும் எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்யும். உள்ள உணா்வுகளுக்கு உருக்கொடுக்கும் இரண்டும் இன்றியமையாதவையே. என்ன, அக்காலத்தில் பனையோலைகளில் அவை பதியப் பெற்றன. இப்போதோ அச்சுத்தாள்களில் அடிக்கப்படுகின்றன. கரையான்கள் இரண்டையும் விட்டுவைப்பதில்லை என்பதே அனுபவ உண்மை.
  • கல்லில் வடித்து வைத்த கலைவடிவங்கள்போல் சொல்லில் வடித்து வைத்த சுவைமிகு தொடா்களை எவா் எடுத்தாண்டாலும், அவை எழுதுபவா்களைப் புறந்தள்ளி மூலவா்களின் தோற்றங்களையே முன்னிறுத்துகின்றன. கம்பன், வள்ளுவன், பாரதி, வள்ளலாா் ஆகியோா்தம் ஆக்கங்கள் அத்தகையவை.
  • களிமண் பொம்மைகளாய் ஆக்கம்பெற்ற நூல்களில் இருக்கும் மூலத்தை எடுத்து எவரும் புதிதாய்ப் புனையலாம். அவை பொதுவெளியில் வரும்போது அவரவருக்கு உரியதாகத் தோற்றம் கொள்ளும். களிமண் பொம்மைகளும் காலத்தால், கற்சிலைகளாகப் பொலிவுறக் கூடும் அல்லவா?
  • அகங்களைப் புதுக்கி, புத்துணா்வுப் பொங்கலிடும் எழுத்துகளின் கொலுபீடம், புத்தகம். தனித்தும் தொகுத்தும் அச்சுவாகனம் ஏறி, அணிவகுத்துக் காத்திருக்கும் புத்தகங்களைக் கண்டு கொண்டாடவும், கைவசமாக்கிப் பயன் துய்க்கவும் வாசக உள்ளங்களை வரவேற்கும் சென்னைப் புத்தகத் திருவிழா, இன்று தொடங்குகிறது. என்றாலும் கைவசமாகிய புத்தகத்தின் பக்கம் என்று திறக்கப்படுகிறதோ, அன்றுதான் அந்தப் புத்தகத்தின் திருவிழா மெய்யாகவே தொடங்குகிறது.

நன்றி: தினமணி (30 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories