இதற்கா, 800 கசையடிகள்? கவிஞர் அஷ்ரஃப் ஃபயாத்!
- இது சௌதி அரேபியாவில். இன்றுவரை முழுமையான முடியாட்சி முறையை விடாது காத்துவைத்துக் கொண்டிருக்கும் உலகின் மிகச் சில நாடுகளில் சௌதி அரேபியாவும் ஒன்று. இங்கு அரசரே அனைத்தும் - நிர்வாகம் (நாட்டின் பாதுகாப்பு உள்பட), சட்டமியற்றல், மற்றும் நீதியமைப்பின் உயர் தலைவர் அவரே! சங்க காலத் தமிழ் வேந்தர்களும் இவ்வாறுதான் முத்தலைமைக் கூறுகளும் ஒன்றிணைந்த முடித் தலைமை அணிந்திருந்தனர். அன்று ‘அறந்துஞ்சும் செங்கோல்’ ஆட்சி செய்தது; சர்வ அதிகாரமும் தமிழ் மன்னர்களது மணிமுடியில் குவிந்திருந்தாலும், ‘சர்வாதிகாரம்’ என்பதை இன்று நாமறிந்திருக்கும் பொருள்வகை ஆட்சி அன்று அறவேயில்லை.
- மன்னன் எவ்வழியிலாவது, எப்போதாவது தவறிழைக்க நேர்ந்தால், தப்பாது இடித்துரைத்து மன்னனை வழிப்படுத்த இருந்தனர் நல்லோர், புலவர்கள். அப்படியெல்லாம் எதுவும் அரபு நாடுகளில் இன்று எதிர்பார்க்க வாய்ப்புகளில்லை. சர்வாதிகாரம்தான்! புனித குர்ஆன் மற்றும் முஹம்மதுவின் சுன்னா (போதனைகள்) சௌதி அரேபியாவின் அரசியலமைப்பு என அறிவிப்புப் பெற்றுள்ளது. ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி, அரேபிய மொழி.
நிகழிடம்:
- தெற்கு சௌதி அரேபியாவில், அபா (Abha) நகரிலுள்ள ஒரு உணவகம் (கஃபே).
நாள்:
காட்சி 1:
- அந்த உணவரங்கக் கூடத்தின் ஒரு பகுதியில், மீசையை ஒட்டமழித்துப் பளபள முகத்தோற்றங் கொண்ட, 35 வயது நபர் ஒருவர் - அவரது கவிதைத் தொகுப்பு நூல் (Instructions Within) ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு, தான் அமர்ந்திருந்த மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்த ஓரிருவரிடம் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.
காட்சி 2:
- தீயணைக்க விரைந்தது போலத் திபு திபுவென உணவரங்கில் உள்நுழைகிறது அந்நாட்டின் மதக் காவல் படை (Religious Police), நீட்டிய கைகளில் பிஸ்டல்களுடன். அக்கணத்தில் இலக்கு யாரென எவரும் அறியாததால், உணவகத்திலிருந்த ஒவ்வொருவரையுமே உயிர்ப் பயம் சூழ்ந்தது; இறுதியிடத்தின் கனத்த அமைதி கவ்வியது அங்கே. அனைவருமே அச்சத்தில் விரிந்த கண்களுடன் அசைவற்று, அரவமின்றி உறைந்தார்கள். அப்படைக் காவலர்களுடன் வந்த ஒரு (சிவிலியன்) நபர், சற்று முன் சென்று (காட்சி 1 இல் கண்ட, கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு, நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த) நபரை மதக் காவல் படைக்குக் கைநீட்டி அடையாளம் காட்டுகிறார்.
காட்சி 3:
- எதிரிகளைச் சுற்றி வளைக்கும் லாவகத்தோடு, அதீத விரைவில், உடன் வந்த நபர் விரல் நீட்டிச் சுட்டிய (‘கையில் புத்தகம்’, ‘நண்பர்களிடம் பேச்சு’ என்று முன்பே தகவலில் தரப்பட்ட சாட்சியங்களும் ஒத்துப்போவதால்) அந்த நபரருகே, நீட்டிய பிஸ்டல்களுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் வலையாகச் சுற்றி நின்றது மதக் காவல் படை. சுற்றிவளைக்கப்பட்ட நபருடன் சில நொடிகளுக்கு முன்பு வரை பேசிக்கொண்டிருந்தவர்கள் நைசாக வலையிலிருந்து நழுவிக் காற்றில் கலந்து காணாமற் போயினர். என்ன நடக்கிறது அங்கே என்பதை ஊகிக்கக்கூட முடியாத அதிர்ச்சியில் எழுந்து, மற்றவர்களைப்போலவே, உறைந்து நின்ற அந்த நபரைக் ‘கையுங் கவிதைப் புத்தகமுமாக’க் கைது செய்தனர். அந்த நபர், அஷ்ரஃப் ஃபயாத்.
- யார் அஷ்ரஃப் ஃபயாத்? காசா (பாலஸ்தீன) அகதிகளான பெற்றோருக்குச் சௌதி அரேபியாவில் பிறந்தவர். வயது 35, கவிஞர், நுண்கலைகள் மீது தீவிர ஆர்வலர். ‘எட்ஜ் ஆஃப் அரேபியா’ என்ற பிரிட்டிஷ் - சௌதி கலை அமைப்பில் உறுப்பினராக உள்ளார். அந்த அமைப்பின் சார்பில் சௌதியிலும், ஜெட்டா மற்றும் வெனிஸ் போன்ற நகரங்களிலும் குறிப்பிடத்தக்க கலை நிகழ்வுகளை, காட்சி அமைப்புகளை நடத்தியவர்.
முத்தவ்வ ஊன், அல்லது முத்தவ்வா யின்:
- சௌதி அரேபியாவில் ‘மக்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி மேம்படுத்த’, மக்களைத் தீமைகள் அண்டவிடாமல் தடுக்க’ எனும் நோக்கங்களுக்காக (Moral Policing) ஒரு கமிட்டி / துறை (Committee for the Promotion of Virtue and the Prevention of Vice) அரசரால் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து நகர்களிலும் - காவல் நிலையங்கள் இருப்பது போல - முத்தவ்வ ஊன் அல்லது பேச்சு வழக்கில், முத்தவ்வா யின், ( Muṭawwaʿūn , colloquially, Muṭawwaʿīn) என அழைக்கப்படும் அதி தீவிர மத பாதுகாப்பு அமைப்புக்கும் காவல் நிலையங்களுண்டு.
- அதில் பணி செய்யும் காவலர்கள் பெரும்பாலும், சீருடையிலாச் சாதாரண உடையில் இயங்குவர். பெண்கள் முறையாக முக்காடு (ஹிஜாஃப்) அணிவதைக் கண்காணிப்பது; தொழுகை நேரங்களில் கடைகள், அலுவலகங்கள் போன்றவை மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துதல்; ரமலான் மாதத்தில் குடிமக்கள் முறையாக நோன்பு நோற்பதை ஒற்றறிவது; நோற்காதவர்களைக் கண்டறிந்து தண்டனைக்குள்ளாக்குவது; இஸ்லாமியக் கட்டளைகளை அமல்படுத்துவது; இஸ்லாமிய ஒழுக்க மீறல்களுக்கு, நீதிமன்றங்கள் தண்டனை விதிக்கும் முன்பே, உடனடியாச் சவுக்கடி போன்ற உடல் ரீதியான தண்டனைகளைத் தாமே விதித்து நிறைவேற்றுவது போன்றவை அவர்களது விரிவான, வரையிலாக் கடமைகளில் சிலவாகும். இஸ்லாம் மதச்சார்பே மாறாக் கொள்கையாகக் கொண்டிருக்கும் அரசின் முழு ஆதரவுடன், மதம் தொடர்பான அலப்பறைகள் அதிகம் நிகழ்த்தும் ஆர்வக் குழுவாக இந்தக் காவல்துறைப் பிரிவு செயல்பட்டு வருகிறது என்பது மனித உரிமை அமைப்புகளின் மதிப்பீடு.
சுருக்கமான பின்புலம்:
- 2014 முதல் 2017 வரை அமலில் இருந்த ‘சௌதி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’, "நாத்திகச் சிந்தனையை ஊக்குவிப்பதை" பயங்கரவாதச் செயலாக வரையறுத்து வைத்திருந்தது (நவம்பர் 2017 இல், பழைய சட்டத்திற்குப் பதிலாக ஒரு புதிய சட்டம் - "பயங்கரவாதம் மற்றும் அதன் நிதியுதவிக்கான தண்டனைச் சட்டம்" 2017 - நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தில் நாத்திகத்தை வெளிப்படையாகப் ‘பயங்கரவாதம்’ என்று குறிப்பிடவில்லை. என்றாலும், அதிகாரிகளிடையே தெளிவற்ற நிலை, வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் இல்லாமை, அதிகாரிகளை விமர்சிப்பதைக்கூடக் கிரிமினல் குற்றமயமாக்குதல் போன்ற பரந்த பல பிரச்சினைகள் தொடர்கின்றன. 2017 ஆண்டுச் சட்டமானது விமர்சனங்கள், அரசியல் கருத்து வேறுபாடு, மதம், மதநம்பிக்கை போன்ற விஷயங்களில் கூடப் ‘பயங்கரவாதம்’ என்ற விரிப்பின் கீழ் சிறுபான்மையினரைத் தண்டிப்பதைத் தீவிரமாக நோக்கமாகக் கொண்டுள்ளது.)
சிறு ப்ளாஷ்பேக்:
- அபா (Abha) கஃபேயில் அஷ்ரஃப் கைது செய்யப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன் (கஃபேயில் அவரை அடையாளம் காட்டினாரே அந்த நபர்- பெயர் ஷாஹீன் பின் அலி அபு மிஸ்மர், Shaheen bin Ali Abu Mismar), அந்நகரிலுள்ள மதக் காவல் நிலையத்திற்கு மிகுபதட்டத்துடன் வந்து, குறிப்பிட்ட கஃபேயில் ஒரு நபர், “ கடவுள், முஹம்மது நபி பற்றியும், சௌதி அரசைப் பற்றியும் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருப்பதைத்தான் கேட்டதாகவும், அச்சமயத்தில் அந்த நபர் தன் கையில் வைத்திருந்த ஒரு கவிதைப் புத்தகத்தை உயர்த்திக்காட்டி அந்நூலில், ‘இதுமாதிரி கடவுள் மறுப்பு / நாத்திகவாதக் கருத்துகள் நிறைய இருப்பதாக’ உணவகத்தில் இருந்த அனைவருக்கும் கேட்கும்படி கடவுள் நிந்தனை செய்து கொண்டிருப்பதைக் கண்டதாகவும்’’ ஒரு புகாரளித்தார்.
- இது போதாதா அலப்பறை அமைப்புக்கு? பேராபத்தல்லவா? நொடித் தாமதமும் இல்லாமல் புயலெனப் பறந்தது படை, புகாரளித்த நபருடன், அந்த கஃபேயை நோக்கி.
தொடர் நிகழ்வுகள்:
- அதன்பின், நிகழ்ந்தவைதான் (ப்ளாஷ்பேக்கிற்கு) முன் விவரிக்கப்பட்ட அஷ்ரஃப் கைது. அதில், புகாரளித்த நபர் அடையாளங் காட்டுகிறார்; அடையாளம் காட்டப்பட்ட அஷ்ரஃப் கையில் அவரது கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றை வைத்திருக்கிறார்; படை நுழையும்போது அந்த நபர் தன் எதிரிலமர்ந்து இருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததைப் படைக் காவர்கள் கண்ணால் கண்டனரே. வேறென்ன ஆதாரம் வேண்டும்? (அதனால்தான் அந்த நபருடன் பேசிக்கொண்டவர்கள் நைசாக நழுவியதைக்கூடப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை மதக் காவல் படை).
- ‘கையுங் கவிதைப் புத்தகமுமாகக் காணப்பட்ட’ குற்றவாளியை (அஷ்ரஃப்பைத்தான்!) படை அந்த உணவகத்திலிருந்து பிடித்துச் சென்றது. அவரை ஒரு நாள் மட்டும் காவலில் வைத்திருந்துவிட்டு அதிசயமாக, அடுத்த நாளே அவரை விடுவித்தனர். புகாரளித்தவரோ அல்லது புகாரைப் பெற்ற நொடியிலேயே புயலெனப் புறப்பட்டுச் சென்று, அஷ்ரஃப்பைக் கஃபேயில் கைது செய்து கொண்டுவந்த காவலர்களோ அரபு மொழி வல்லுநர்களில்லை; மேலும், அரபி மொழியில் அஷ்ரஃப் எழுதிய கற்பூரக் கவிதை வாசனையையும் அறியா உயிரினங்கள்!
- ஆகவே, அஷ்ரஃப் கவிதை ‘நாத்திக பிரச்சாரம்’ என்பதை மதக் காவல்துறை உடனடியாக நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் கைவசமில்லை என்பதால்தான் அடுத்த நாளே விடுதலை செய்தார்கள் எனக் கூறப்படுகிறது. விடுதலை செய்தாலும் விட்டுவிடவில்லை அவர்கள். அஷ்ரஃப் நீண்ட தலைமுடி வைத்திருந்ததற்காகவும் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டிருந்ததற்காகவும் மதக் காவலர்கள் அஷ்ரஃப்பை மிக மோசமாக நடத்தினர், திட்டினர், எச்சரித்தனர்.
- புகைப்பிடித்தலும், நீண்ட தலைமுடி வைத்துக்கொள்வதும் சௌதி அரேபியாவில் சட்டப்படி குற்றம் இல்லை. ஆனாலும், மதக் காவலர்கள் அஷ்ரஃப்பை குற்றம் சாட்டினர். தெளிவற்ற ஷரியா வழிகாட்டுதல்களை அமல்படுத்தவும் மதக் காவலர்களுக்கு அதிகாரம் உள்ளதே காரணம்.
- நான்கு மாதங்களுக்குப் பின்னால், புத்தாண்டுப் பரிசாக, திடீரென ஜனவரி 1, 2014 இல் மத பாதுகாப்பு காவல் அதிகாரிகள் அஷ்ரஃப்பை மீண்டும் கைது செய்தனர். மதக் காவல்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், அரசு வழக்குரைஞர்கள், அந்நாட்டு நீதிமன்ற அமைப்பில், முதல் நிகழ்வு நீதிமன்றத்தில் (Court of First Instance) வழக்குத் தொடுத்தனர்.
அஷ்ரஃப் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு:
- ‘கடவுள் நிந்தனை’; ‘கடவுள் மற்றும் தீர்க்கதரிசிகளின் வசனங்களைக் கேலி செய்து கொச்சைப்படுத்துதல்’; ‘குர்ஆனை மறுப்பது’; ‘மறுமை நாளை மறுப்பது’; ‘விதி மற்றும் தெய்வீக ஆணையை எதிர்த்தல்’; ‘நாத்திகத்தைப் பரப்புதல்’ பொது இடங்களில் இளைஞர்கள் மத்தியில் நாத்திகத்தைப் பரப்புவதும், மொத்தத்தில் இறை விசுவாச துரோகம் புரிந்திருப்பதற்காகத்திற்காக (apostasy); மேலும், பல பெண்களுடன் தானும் இருக்கும் படங்களை தனது போனில் சேமித்து வைத்திருப்பதால் பெண்களுடன் தகாத உறவை வளர்த்ததாகவும் - எனக் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன அஷ்ரஃப் மீது.
- இறுதியாகக் கூறப்பட்டுள்ள ‘பெண்களுடன் தகாத உறவு’ பற்றிய குற்றச்சாட்டு பற்றி முதலில் சற்று காண்போம் : நுண்கலைகள் மீது ஆர்வலரான அஷ்ரஃப், இங்கிலாந்து - சௌதி அரேபியா நாடுகளின் கூட்டு அமைப்பான ‘எட்ஜ் ஆஃப் அரேபியா’ என்ற அமைப்பில் உறுப்பினராக இருப்பதும், அந்த அமைப்பின் சார்பில் சௌதி அரேபியாவிலும், இத்தாலி போன்ற பிற நாடுகளிலும் குறிப்பிடத்தக்க கலை நிகழ்வுகள், காட்சி அமைப்புகளை நடத்தியவர் என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம்.
- அபா கஃபேயில் அஷ்ரஃப்பைக் கைது செய்தபோது அவரிடமிருந்த செல்போனும் மதக் காவல் அணியினரால் பறிமுதல் செய்யப்பட்டது. காவலர்கள் அந்த செல்போனை ஆராய்ந்தபோது அதில் சில படங்கள், தனித்தனியே வெவ்வேறு பெண்களுடன், அஷ்ரஃப் நின்று கொண்டிருக்கும் படங்களாகும். அந்தப் படங்களின் பின்புலங்களைக் கவனித்தாலே தெரியும் அந்தப் படங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு ஓவியக் கண்காட்சியிலோ, சிற்பம் போன்ற பிறகலைப் படைப்புகளின் கண்காட்சியிலோ எடுக்கப்பட்டவை என்பது. அஷ்ரஃப்புடன் படங்களில் நிற்கும் பெண்கள் ஒன்று பின்புலத்தில் காணப்படும் கலைப்படைப்பை உருவாக்கிய கலைஞராக, அல்லது உருவாக்கிய கலைஞரின் உறவினராக / நண்பராக இருக்கும். அல்லது அந்த ஓவியத்தையோ, சிற்பத்தையோ ரசித்து, காட்சி அமைப்பாளரான அஷ்ரஃப்பிடம் விவரங்கள் கேட்டறிந்தவராகவோ இருக்கலாம்.
- பல பெண்களுடன் அஷ்ரஃப் நிற்கும் படங்களைப் போலவே, பல ஆண்களுடனும் அதே மாதிரி கலைப்படைப்புகளின் பின்புலத்தில் அவர் நிற்கும் படங்களும்தான் அந்த செல்போனில் உள்ளன. தம்மிடம் அகப்பட்ட எவரையும் தப்பவிடாமல் மாட்டிவிடுவதே தலையாய பணி நோக்கமாகக் கொண்டு செயல்படும் மதக் காவல் அதிகாரிகளுக்கு, அஷ்ரஃப் பல ஆண்களுடனும் - பெண்களுடன் நிற்பது போன்ற - பின்புலங்களில் நிற்பது கண்ணில் படவில்லை போலும். கண்டிருந்தாலும் அது ‘பெண்களிடம் தகாத உறவு‘ என்று புனையப்படும் குற்றச்சாட்டுக்குத் துணை வராது என்பதால் செல்போனிலிருந்த ஆண்கள் படங்களைப் பற்றி புகாரில் ஏதும் குறிப்பிடவில்லை.
- மேற்செல்லுமுன் இவ்வழக்கில் தொடர்புள்ள சில செய்திகளைச் சுருக்கமாக அறிந்துகொண்டு தொடர்வது உதவும்.... வாங்க.
சௌதி அரேபியா சட்ட மற்றும் நீதித்துறை அமைப்பு:
- ஈரான் இஸ்லாமிய குடியரசிலும், சௌதி அரேபியா இராஜ்ஜியத்திலும் ஷரியா சட்டங்கள்தான் பின்பற்றப்படுகின்றன. அவை, அந்தந்த உள்நாட்டு மத / சட்ட விற்பன்னர்கள் (?) அளிக்கும் விளக்கங்களின் அடிப்படையில் பொருள் கொள்ளப்படுகின்றன. இரு நாடுகளிலும், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான, திருமணத்திற்கு வெளியேயுள்ள அனைத்து பாலியல் உறவுகளையும் - இருவரது இசைவின் பேரில் நிகழ்வதாயினும் - கிரிமினல் குற்றமாக்குகின்றன என்பது இங்கு குறிப்பிட உரியது. அதனால்தான், அஷ்ரஃப் மீது ‘பல பெண்களிடம் தகாத உறவு’ என்ற குற்றச்சாட்டும் ஏற்றப்பட்டது.
- மேலும், சௌதி சைபர் கிரைம் தடுப்பு சட்டத்தின்படி, ஒருவர் தனது செல்போனில் பெண்களின் புகைப்படங்களை எடுத்து சேமித்து வைத்திருப்பது குற்றம். ஆகவே, நாட்டின் சைபர் கிரைம் தடுப்பு சட்டத்தை மீறியதாகவும் அஷ்ரஃப் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜித்தா கலைக் கண்காட்சியில் பெண்களுடன் அருகருகே நிற்பதைக் காட்டும் அவரது தொலைபேசியில் உள்ள புகைப்படங்களின் அடிப்படையில் 'பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்தார்' என்ற குற்றச்சாட்டும் ஏறியது.
- சௌதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், அதன் நீதி அமைப்பில் இஸ்லாமிய சட்டத்தின் - ஷரியா அடிப்படையில்தான் சிவில், கிரிமினல் ஆகிய இருவகை வழக்குகளுக்கும் விசாரணையும் தீர்ப்பும். அரசரே நீதியமைப்பின் உயர் தலைவர். மேல்முறையீடுகளின் இறுதி நீதிமன்றமாகவும், அரச மன்னிப்புக்கான ஆதாரமாகவும் செயல்படுவது அரசரே.
சௌதி அரேபியா நீதிமன்றங்களின் வகைப்பாடு:
- சௌதி அரேபியாவில் நீதித்துறை நான்கு அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றங்கள், முதல் நிகழ்வு நீதிமன்றங்கள், அமலாக்க நீதிமன்றங்கள் என்பன. அமைப்பு ரீதியாக அவை ஒவ்வொன்றுமே தனித்தனி வகை; தனித்தனிச் சட்டங்களின் கீழ் இயங்குவன.
ஷரியா (இஸ்லாமிய சட்டம்):
- ஷரீஅத் என்பது இஸ்லாமிய சட்டத்தின் அமைப்பைக் குறிக்கிறது. இது சௌதி அரேபியாவில் உள்ள அனைத்து சட்ட விஷயங்களுக்கும் வழிகாட்டியாகச் செயல்படுகிறது. முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தை முதன்மையாக புனித குர்ஆனிலிருந்தும், இரண்டாவதாக, முஹம்மது நபியின் வாழ்நாளின் நடைமுறைகள் மற்றும் கூற்றுகளிலிருந்து- சுன்னாவிலிருந்தும்- பெறுகிறார்கள். இதற்கு மேலும் சில சட்ட மூலங்களுண்டு சௌதியில்.
- குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒரு பிரதிவாதி, நிரபராதி என்றும், கடுமையான குற்றங்களில் அல்லது மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களின் வழக்குகளில் மட்டுமே கடுந் தண்டனைகளை அனுபவிக்க நேரிடும் என்றும் ஷரியா கருதுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், நடைமுறையில் எடுத்தவுடனே கூடக் கொடுந்தண்டனைகள் வழங்கப்படுவதைக் காண்கிறோம்.
அஷ்ரஃப் வழக்கு:
- ஜனவரி 1, 2014 முதல் அஷ்ரஃப் சிறையிலடைக்கப்பட்டிருந்தாலும், பிப்ரவரியில்தான் முதல் நிகழ்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கியது. அதுமுதல் மே 2014 க்கு இடையில், ஆறு அமர்வுகளாக, நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, அஷ்ரஃப் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தார்.
- ‘கவிதைதான் குற்றம், பத்தாண்டுக்கு முன் வெளிவந்த தன் கவிதை நூல்தான் தற்போது குற்றம்’ என்று கூறுவது பொருந்தாது. கவிதைத் தொகுப்பு (Instructions Within) வெளியாகி ஏற்கெனவே ஒரு தசாப்தமாகிவிட்டது. அந்தத் தொகுப்பு காதல் கவிதைகளின் தொகுப்பு என்றும், மதத்தை அவமதிக்கும் நோக்கத்தில் எதுவும் அக்கவிதைகளில் எழுதப்படவில்லை என்றும் அஷ்ரஃப் விளக்கிக் கூறினார். பத்தாண்டுகளாக, இதுநாள் வரை புழக்கத்திலிருந்த கவிதை நூல் திடீரெனத் தற்போது எப்படிக் கடவுள் நிந்தனைக் குற்றத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்றும் வினவினார். அஷ்ரஃப்பின் கேள்விகளும் அவர் நீதிமன்றில் முன்வைத்த வாதங்களும் சரியானவைதான். ஆனால் அவற்றின் அடிப்படையிலா ஷரியா நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும்?
- மேலும், மதக் காவல் துறையில் தன்னைப் பற்றிப் புகாரளித்த நபரான, ஷாஹீன் பின் அலி அபு மிஸ்மர், தன் மீது தனிப்பட்ட விரோதம் கொண்டவர் என்பதை நம்பத் தகுந்த மூன்று சாட்சிகளை வைத்து அஷ்ரஃப் நிரூபித்தார். மூன்று சாட்சிகளும் நீதிபதியின் முன் தனிப்பட்ட தகராறைத் தொடர்ந்துதான் அந்த நபர் அஷ்ரஃப் மீது புகார் அளித்திருப்பதாகத் தெளிவுபடுத்தினார்கள். அவ்வாறு சாட்சியமளித்த அந்த மூவரில் ஒருவர், அஷ்ரஃப் மீது புகாரளித்த அலி அபு மிஸ்மரின் தாய்மாமன். அவரும் மற்ற இருவரளித்த தகவலை-புகாரளித்தவருக்கும் அஷ்ரஃப்புக்கும் முன்விரோதம் இருந்ததை - வலுவாக உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிட உரியது.
- மூவருமே தாங்கள் அஷ்ரஃப்பை அறிந்திருக்கும் காலத்தில் - இதுவரை – அவர் ‘கடவுள் அவதூறு’ ஏதும் கூறித் தாங்கள் கேட்டதில்லை என்றும், குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள படியான ‘துர் நடத்தை’ கொண்டிராதவர், அவ்வாறு ஏதும் அவர் செய்திராதவர் என்றும் ஐயம் திரிபறச் சாட்சியம் அளித்தனர். சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுவதாயின், அஷ்ரஃப் அன்றைய நாளிலேயே விடுதலை செய்யப்பட்டிருப்பாரே!
- ஆறு அமர்வுகளின் கடைசி அமர்வு விசாரணையின்போது, அஷ்ரஃப் “எனது நூலில் உண்மையாகவே இறை நிந்தனை குறித்து எதுவுமே இல்லையென்பது என் மனதறியும் உண்மை என்றாலும், மதக் காவல் அதிகாரிகள் அவ்வாறான அவமதிப்பு இருப்பதாகக் கருதக்கூடிய வாய்ப்பு எனது நூலில் இருக்குமாயின் அதற்கும் சேர்த்து எனது உள்ளார்ந்த வருத்தத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், “மிக உயர்ந்தோனாகிய இறைவனிடம், இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள எனது கவிதை நூலில், நானறிந்தவரை இல்லாவிட்டாலும், இருப்பதாக (மற்றவர்களுக்குத்) ‘தோன்றியவைகளுக்காக’ (though not existing but what appeared to exist) மனங்கசிய மன்னிப்பை மன்றாடுகிறேன்” என்று கல்லுங் கரையும் உருக்கமாகத் தான் கொண்டிருக்கும் இறை நம்பிக்கையையும் வெளிப்படுத்தி, “இறை அவமதிப்பு எதுவும் கருதாத, செய்யாத நான் நிரபராதி’’என்று உறுதிபட உரைத்தார்.
- இவ்வளவையுங் கேட்டு, முதல்நிலை, அபா பொது நீதிமன்றம் அஷ்ரஃப் ஃபயாத் குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இறை நிந்தனைக்குக் கூடுதலாக 800 கசையடிகளும் விதித்தது. விசாரணையில் சாட்சியங்கள் அஷ்ரஃப் ஃபயாத்துக்கும் அவர்மீது மதக் காவல் துறையில் புகாரளித்த நபருக்கும் இடையிலான "முன் விரோதத்தை" முழுமையாக வெளிப்படுத்தியிருப்பதாலும், அத்துடன் அஷ்ரஃப் ஃபயாத் இறை மன்னிப்பை நீதிமன்றில் வெளிப்படையாகக் கோரித் தனது ‘மனந்திரும்புதலை’ உணர்த்தியிருப்பதாலும், அரசுத் தரப்பு வழக்குரைஞர், ‘விசுவாச துரோகத்திற்காக’ அஷ்ரஃப்புக்கு அவசியம் மரண தண்டனை விதிக்கவேண்டும்’ என்று வலுவாக முன்வைத்த கோரிக்கையை அபா பொது நீதிமன்றம் நிராகரித்தது.
- ஒருமுறை மத போலீஸார் ஒரு இளைஞரைப் பொது இடத்தில் தாக்கும் வீடியோவை அஷ்ரஃப் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதால் அஷ்ரஃப் ஃபயாத், மத போலீஸாரின் வெறித்தாக்குதலுக்கான இலக்காக மாறியிருக்கலாம் என்று அஷ்ரஃப் நண்பர்களால் ஊகிக்கப்படுகிறது.
- விடவில்லையே அரசுத் தரப்பு! அபா பொதுநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசு வழக்குரைஞர் மேல்முறையீடு செய்தார். (இன்று வரை, மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவால் அந்த அரசுத் தரப்பு மேல்முறையீட்டு நகலைப் பெற முடியவில்லை.) மேல்முறையீட்டு நீதிமன்றம் பொது நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றியமைத்தது. மரண தண்டனை விதிக்கக்கூடிய விசுவாச துரோகத்திற்காக (‘apostasy’) அஷ்ரஃப் ஃபயாத் உண்மையில் தண்டிக்கப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்து, மறுவிசாரணைக்காக அவரது வழக்கை பொது நீதிமன்றத்திற்குத் திருப்பி அனுப்பியது.
- அதன்படி, பொது நீதிமன்றம் வழக்கை, ஒரு புதிய நீதிபதிகள் குழுமூலம் மீண்டும் விசாரித்தது. அக்குழு 2015 நவம்பர் 17 ஆம் நாள் வழங்கிய தீர்ப்பில், அஷ்ரஃப்பை 'விசுவாச துரோக' குற்றவாளி என்று, மேல் முறையீட்டு நீதிமன்றம் கூறியவாறே, உறுதிப்படுத்தியது. விசுவாச துரோகத்திற்காக அஷ்ரஃப் ஃபயாத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எப்படிப்பட்ட மரணதண்டனை? உத்தியோகபூர்வ தீர்ப்பு அவரது மரண தண்டனையை “வாளால் தலை துண்டித்து (beheading by sword)” நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறியது, கொடுமையாக. தீர்ப்பின் மூர்க்கத்தனத்தைத் தீந்தமிழில் எழுதுவதே தீமை. (‘பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்’!).
- தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற சொல்லாடல், அஷ்ரஃப் விஷயத்தில், ‘தலைப்பாகைக்கு வந்தது, தலையையே துண்டிப்பதாக மாறியது’ என்ற கொடுமை வாசகமாகி மனங்கலங்க வைக்கிறதல்லவா?
- இந்தத் ‘தலைவெட்டி’த் தீர்ப்பளித்த மறுவிசாரணை நீதிபதிகள், ஆரம்ப விசாரணையில் அளிக்கப்பட்ட அஷ்ரஃப் தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களை ஒற்றை வரியில் தள்ளுபடி செய்தனர்; மேலும், அஷ்ரஃப்பின் ‘இறை மன்னிப்புக்கோரும் மனந்திரும்புதல்’ வாக்குமூலம் மரண தண்டனையைத் தவிர்க்கும் அளவிற்குப் போதுமானதல்ல என்று எடைதூக்கித் தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், இது தொடர்பாக, "மனந்திரும்புதல் (Repentance) மீது இறுதிநாளில் / மறுமையில், ‘மேலேயுள்ள நீதிமன்றில்’ இறை வழங்கும் தயை, மன்னிப்பு மன்றாடுபவரைக் காக்கலாம்; ஆனால், பூமியிலுள்ள நீதித்துறை அமைப்புகள் அவ்வாறான இறைத் தயை காட்டும் மையங்கள் அல்ல” என்று அரியதொரு ‘நீதிமொழி’ அருளினர்.
- ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்பதில் ‘எவரையும் மன்னித்தருள்வது இறையே’ இங்குள்ள நீதிமன்றங்கள் அல்ல’ என்பதாகப் பொருள்கொள்ளலாம் போலும், இந்நீதிபதிகளின் தீர்ப்பின்படி. சௌதி நீதிமன்றங்களின் அமைப்பின்படி, இந்தத் தீர்ப்பு / வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு அடுத்து நகர்கிறது. இந்த தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும். அங்கீகரித்தால், அஷ்ரஃப் தலை வெட்டித் துண்டாக்கப்படும் நிலைதான்.
- சௌதி அரேபியாவில் 2015 ஆம் ஆண்டில் 152 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, இது 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்டிருக்கும் உயர் எண்ணிக்கையாகும். பெரும்பாலான மரண தண்டனைகள் தலை துண்டிக்கப்படுவதன் மூலம் - சில நேரங்களில் பொது இடங்களிலும்-நிறைவேற்றப்படுகின்றன. சௌதி நீதிமன்றங்கள் வழக்கமாக கொலை மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காகவும், எப்போதாவதுதான் இறைவிசுவாச துரோகம் மற்றும் சூனியம் போன்ற பிற "குற்றங்களுக்கு" இவ்வாறான ‘தலைவெட்டு’ மரண தண்டனைகளை வழங்குகின்றன என்பதும் அறிந்திருக்க வேண்டிய தகவல்.
- தன் மகன் அஷ்ரஃப் ஃபயாத்திற்கு 2015 நவம்பரில் மரண தண்டனை விதிப்பைக் கேள்விப்பட்ட அவரது தந்தை மாரடைப்பால் இறந்துவிடுகிறார்; அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அஷ்ரஃப் ஃபயாத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
- “எழுத்தும் இலக்கியமும் முன் எப்போதையும் விட இப்போது மிகவும் அவசியமாகிறது” என்றுதான் எழுத்தறிந்த, இலக்கியத்தின் வலிமையையும், அது விளைவிக்கும் பயனும் உணர்ந்த பலர் கருதியும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். தற்காலத்தில், ‘இலக்கியம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க வல்லதொரு கூர்கருவி’யாகும் புதுநிலையை எய்தி வருகிறது எனவும் கூறி வருகிறார்கள். ஒரு நல்ல கவிதை, அல்லது கவிதை நூல், உலகின் எப்பகுதியிலும் சர்வாதிகாரத் தலைகளை வீழ்த்தும் பேராற்றலைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்ற கருத்து நிலைப்பாட்டை ஏளனம் செய்து எளிதாக ஒதுக்கிவிடமுடியுமா நம்மால்? முடியாது, இப்போது.
- இதுவரை நாம் கண்டுவந்திருக்கும் கவிஞர்கள் - இஸ்ரேலில் பாலஸ்தீனப் பெண் கவிஞர் டாரின் டட்டூர்; இலங்கையின் மன்னாரமுது எனும் அஹ்னாப் ஜெஸீம்; ரஷ்யாவின் ஆர்டெம் கமர்டீன்; ஜோர்தானின் இஸ்லாம் சம்ஹன்; ஈரானின் பெண்கவிஞர் ஃபதேமே எக்தேசரி; மியான்மரின் சா வை; இந்தியாவின், மஹாராஷ்ட்ர மாநில மஜ்ரூஹ் சுல்தான்புரி; இந்தியாவின் அஸ்ஸாம் கல்லூரி மாணவி வர்ஷாஸ்ரீ புரோகோஹைன்; எகிப்தின் கலால் எல் பிஹைரி; பாகிஸ்தானின் ஹபீப் ஜாலிப்; மற்றும் கத்தாரின் முகமது அல் அஜாமி போன்றவர்கள் தங்கள் எழுத்துக்களால்தானே, ஆட்சியாளர்களை விமர்சித்ததற்காகத்தானே, ஆட்சியாளர்கள் அச்சமுற்று ஆத்திரங்கொண்டதால்தானே சிறைப்பட்டனர்; துயருற்றனர்; சொல்லொணா இழப்புகளை எதிர்கொண்டனர்?.
- கட்டற்ற அதிகாரங்களோடும் கடுமையான, மக்கள் விரோத நடவடிக்கைகளோடும் தங்கள் நாடுகளை ஆண்டுவரும் ஆட்சியாளர்களைத் தங்கள் முனை மழுங்கா எழுத்துக்கள் கொண்டு மோதி விமர்சித்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட, அடைக்கப்பட்டுவரும் கவிஞர்கள், படைப்பாளிகளின் பட்டியல் நீண்டு வளர்ந்து கொண்டே போவது எதைக்காட்டுகிறது?
- ‘கவிதை ஏதோ செய்கிறது’ என்பதை - குறிப்பாகக் கொடுங்கோலாட்சியாளர்களை என்னவோ செய்கிறது என்பது நிதர்சன நிரூபணமாகிறது அல்லவா?
- கவிதை வெறும் சொற்களால் மட்டும் ஆனதல்ல; அதற்கும் மேலே, அராஜக ஆட்சிகளை ஆட்டங்காணச்செய்ய, அதிகாரக் குவியலிலமர்ந்து ஆட்சிசெய்வோரின் உறக்கத்தைப் போக்கச் சூட்சுமப்பொறி ஏதோ ஒன்று கவிதைகளில் இயல்பாகவே பொதிவாகி இயங்கி வருகிறது போலும்.
- சீனா, பிரான்ஸ், பிலிப்பின்ஸ் போன்ற அரசாங்கங்களும் அவற்றின் தலைவர்களும்கூடத் தங்கள் நாட்டுக் கவிஞர்களின் வீரியச் சொற்களின் வீச்சுகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கவிஞர்களைச் சிறையில் அடைக்க, அவர்களைக் காணாமல் போகச்செய்ய, அதிக, அதீதத் தண்டனைகளுக்கு உள்ளாக்க, அவர்களுக்கான தண்டனைகளும் இழப்புகளும் வருங்காலத்தில் மற்ற கவிஞர்களுக்கு எச்சரிக்கைப் பாடமாக, அச்சுறுத்தும் உதாரணங்களாக இருக்க வேண்டுமென ஆட்சியாளர்கள் ஆர்வங்காட்டுகிறார்கள். கவிதைகளின் மகாசக்தி ஆட்சியாளர்கள் ‘தலைவீழ் இடி’ போல் அச்சமும் ஆபத்தும் ஏற்படுத்தும் அதே சமயத்தில் - சக்தி மிக்க கவிதைகளே- அக்கவிதைகளைப் படைத்த கவிஞர்களுக்கு மரண ஆபத்தையும் கொண்டுவந்து விடுகிறதே! இதோ அஷ்ரஃப் ஃபயாத்தின் கவிதைகள் அவரது தலை துண்டிக்கப்படக்கூடிய நிலையை அவருக்குக் கொண்டு வந்துள்ளது.
- நல்ல வேளையாக, உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில், பிப்ரவரி 2016 இல் தலை தப்பியது, ஆம், ‘தலைவெட்டுத் தண்டனை’, எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, 800 கசையடிகள் என்று கருணையோடு குறைக்கப்பட்டது. கூடுதலாகப் பொதுவெளியில், ஊடகங்கள் வாயிலாகவும், மக்கள் முன் நின்று ஒருமுறையும், தனது கவிதையில், கவிதைத் தொகுப்பு (Instructions Within) நூலில், ‘இறை நிந்தனை’ செய்தமைக்காக மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் நிபந்தனை சுமத்தப்பட்டது.
- ஆரம்பத்தில் 2013 ஆம் ஆண்டில் கஃபேயில் அஷ்ரஃப் ஃபயாத் கைது செய்யப்பட்டதே சட்டவிரோதமானதுதான். ஏனெனில் கைது, மாநில வழக்குத் தொடுனர் அலுவலகத்தால் உத்தரவிடப்படவில்லை. கூடுதலாகக் கவிஞருடன் தனிப்பட்ட தகராறு இருந்ததாகக் கூறப்படும் ஷாஹீன் பின் அலி அபு மிஸ்மர் முன்வைத்த விசுவாச துரோக குற்றச்சாட்டு, ஷரியா சட்டத்தின் எந்த விதிகளுக்குக் கொள்கைகளுக்கு எதிரானது என்று ஏற்றுக்கொள்ள உரிய எந்த ஆதாரங்களாலும் உறுதிப்படுத்தப்படவேயில்லை. இருப்பினும், முன் சொல்லப்பட்டபடி, பிப்ரவரி 2016 இல் தலைவெட்டுத் தண்டனை மாற்றப்பட்ட போதிலும், உச்ச நீதிமன்றமும் ஃபயாத்தின் இறை நிந்தனைக் குற்றத்தை நிலைநிறுத்துவதைக் காண்கிறோம்.
- சௌதி சிறை அலுவலர்கள் மிகுந்த கடமையுணர்வோடு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின்னுள்ள சிறைவாசத்தின்போது 16 தனித்தனி சந்தர்ப்பங்களில் தலா 50 முறை 800 கசையடிகள் அஷ்ரஃப்புக்குத் தள்ளுபடியேதுமின்றி வழங்கிவிட்டனர். சிறையில் அஷ்ரஃப் கையில் கிடைக்கும் தாள்களில் எல்லாம் இடம் விடாது அவரெழுதிய கவிதை வரிகள்; அவரது உடல் முழுதும், அங்குலம் விடாமல், அரசெழுதிய சாட்டை வரிகள்!
- தன்னைத் தனது தாய்நாடான பாலஸ்தீனத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு 2019 முதல் 2021வரை, அஷ்ரஃப் ஃபயாத் பலமுறை நீதிமன்றங்களில் கோரிக்கை விடுத்தார். ஒரு முறை இந்த வேண்டுகோள் முறைப்படி நிராகரிக்கப்பட்டதாக அவருக்குத் தகவல் தரப்பட்டது. அதன்பிறகும் அஷ்ரஃப் அளித்த வேண்டுகோள் மனுக்கள் எத்தகவலும் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டன. இதற்கிடையில், அஷ்ரஃப் தனது இரண்டாவது கவிதை நூலை, பக்கவாதம் (Stroke) என்ற தலைப்பில், அவரது தந்தையின் நினைவாக, சிறையிலிருந்து வெளியிட்டார்.
- அபா நகர் உணவு விடுதியில், 23 ஆகஸ்ட் 2013 இல் அனாவசியமாகக் கைது செய்யப்பட்ட அஷ்ரஃப், முதல் நிகழ்வு நீதிமன்றம் 2014 இல் விதித்த நான்காண்டுத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்திருந்தால் ஆகஸ்ட் 2017 இல் அவர் விடுதலையாகியிருப்பார். ஆனால், மேல் முறையீட்டு மன்றம், சிறைத் தண்டனைக்குப் பதில் சிரச்சேதம் செய்யப்பட அல்லவா கொடுந்தீர்ப்பு வழங்கியது.
- அதனால், அஷ்ரஃப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியம் பிறந்தது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அஷ்ரஃப் தலையைக் காத்தது; ஆனால், தளை எட்டாண்டுகள் என விதித்தது. அதன்படி, முதலில் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து (23 ஆகஸ்ட் 2013) கணக்கிட்டால், கவிஞர் அஷ்ரஃப்பின் எட்டாண்டுச் சிறைத் தண்டனை 22, ஆகஸ்ட் 2021 இல் நிறைவுற்றதாகக் கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது தொடர்பான அசைவு சிறிதும் காணப்படவில்லை அங்கு.
- இவ்வாறு தொடர்ந்தது இடர்நிலை. தமிழ்த் திரைப்படங்களில் கடைசி ஒரு காட்சியில், அதுவரை வாழ்நாள் பணியாகப் படுபாதகங்கள் விளைவித்துக் கொண்டிருந்த கொடிய வில்லன், திடீரென ஞானோதயம் பெற்றதுபோல, மனந்திருந்தி நாயகனிடமோ அல்லது அந்தக் கடைசிக் கணத்தில் காட்சியளிக்க விரைந்து வந்த காவல் துறையினரிடமோ சரணாவது போல – தலைநகர் ரியாத்திலிருந்து எந்த அரச முறை அறிவிப்புமில்லாமல், 22 ஆகஸ்ட் 2022 இல் சிறைக்கதவுகள் திறக்கப்பட்டு, அஷ்ரஃப் விடுவிக்கப்பட்டார். திடீர் முடிவுக்கான காரணங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாகத் தற்போது வரை தெரியவில்லை.
- எவ்வாறாயினும், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தாம் தொடர்ந்து மேற்கொண்டு வந்த முயற்சிகள் பலனளித்ததாக மகிழ்ச்சியும் திருப்தியும் அடையும் தருணமாகப், பாரெங்குமுள்ள மனித உரிமை ஆர்வலர்களது மனமும், அஷ்ரஃப்பின் உறவும் நட்பும் கொண்டாடும் (35, 42 ஆகி வெளிவந்த) நாளாகியது அந்தாள்!
- சௌதி அரேபிய நாட்டின் ஆரம்ப நிலை முதல் நிகழ்வு நீதிமன்றத்திலிருந்து, உச்ச நீதிமன்றம் வரை, கவிஞர் அஷ்ரஃப்பின் கவிதைத் தொகுப்பு நூலில் (Instructions Within) இறை நிந்தனைக் கருத்துகள் இருந்ததாகவும், நாத்திகக் கருத்துகள் பரப்பப்பட்டுள்ளன என்றும் குற்றம் ஏற்றப்பட்டுத்தான் வழக்குகள், முறையீடுகள் நிகழ்ந்தன. அந்தக் குற்றத்திற்காகவே முதலில் நான்காண்டு சிறைத் தண்டனை+ 800 கசையடி, அடுத்து தலை துண்டிக்கப்பட, இறுதியாக எட்டாண்டுச் சிறைத் தண்டனை+ 800 கசையடி என்று விதவிதமாகத் தண்டனைகள் வழங்கப்பட்டன. சிறைத் தண்டனையை முழுமையாகவும் அதற்கு மேலும் அஷ்ரஃப் அனுபவித்து விட்டார். தீர்ப்பில் வழங்கப்பட்ட 800 கசையடிகளும் அவரது உடலில் இறங்கியது. ஆனாலும் இதுவரை வெளியிலறியப்படாத உண்மை என்னவென்றால், கவிஞர் அஷ்ரஃப் ஃபயாத்தின் கவிதை நூலில் (Instructions Within) எந்தப் பகுதி / வரிகள், இறை நிந்தனை செய்வதாக உள்ளன? எந்தப் பகுதி / வரிகள் நாத்திகக் கருத்துக்களைப் பரப்புகின்றன? என்பதே. “ஐயா, எனக்கொரு உண்மை தெரிந்தாகனும்” என நாமும் கேட்கத் தோன்றுகிறதல்லவா?
(கொஞ்சம் நீண்ட பி.கு):
- தன் பெயர் வெளிப்பட வேண்டாம் எனத் தன்னடக்கத்துடன் கேட்டுக் கொண்ட கற்றறிந்த, அரபி மொழி தேர்ந்த, இஸ்லாமிய சமய நூல்களாய்ந்துள்ள நண்பரொருவருடன் இவ்விஷயமாக விவாதித்தபோது, தான் அரபி மொழியில் அக்கவிதைத் தொகுப்பை வாசிக்கச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்றும் அதனால் அந்த இரு வினாக்களுக்கு உறுதியான பதிலை, விளக்கத்தை அளிக்க இயலவில்லை என்றும் நேர்மையுடன் கூறினார். அவர் அளித்த மற்றொரு கருத்து குறிப்பிட உரியதாகையால் இப்பின்குறிப்பு நீள்கிறது.
- அக்கருத்து எதுவெனில், “சௌதி பற்றி நானறிந்துள்ள வகையில் வழக்குகளில் சம்பந்தப்பட்ட கவிஞர் அஷ்ரஃப் ஃபயாத்தின் கவிதை நூலில் (Instructions Within) எந்தப் பகுதி / வரிகள், இறை நிந்தனை செய்வதாக உள்ளன? எந்தப் பகுதி / வரிகள் நாத்திகக் கருத்துக்களைப் பரப்புகின்றன? என்பது - சரியோ தவறோ - குற்றச்சாட்டுகளிலும், நீதிமன்றத் தீர்ப்புகளிலும் இடம் பெற்றிருக்கலாம். சௌதி, குர்ஆனில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ள நாடு.
- பத்திரிகைத் தணிக்கையைக் கடுமையாகக் கசிவுகளின்றி நிறைவேற்றும் அமைப்பும் திறனும் கொண்டிருக்கும் நாடு. சௌதி போன்ற நாட்டில் உள்ள இஸ்லாமிய மதகுருக்கள், அத்தகைய இறை நிந்தனைக் கருத்துகள் எங்கெங்கு அஷ்ரஃப் ஃபயாத்தின் கவிதை நூலில் உள்ளன என மீண்டும் வெளிப்படையாக (நீதிமன்றத்துக்கு அப்பால்) தெரிவிப்பதும்கூட “இறைநிந்தனைதான்” என அரசுக்கு ஆலோசனையாக அறிவுறுத்தியிருக்கலாம்; அதனடிப்படையில்கூட அச்செய்திகள் மீது திரை விழுந்திருக்கலாம்” என்பது அவரது கருத்து. இருக்கலாம்.
நன்றி: தினமணி (18 – 01 – 2025)