இந்திய அறிவியலுக்குப் புத்துயிர் தந்த ராமன்!
- இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் என்பது இந்திய தேசிய அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதன் பேரில், 1986இலிருந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. ஏனைய நாடுகளில் அந்த நாட்டினுடைய தலைசிறந்த அறிஞர் அல்லது விஞ்ஞானி ஒருவருடைய பிறந்த நாளைத் தேசிய அறிவியல் நாளாக அறிவித்து, அதை அனுசரிக்கிறார்கள்.
- ஆனால், நம் நாட்டில் அறிவியல் நாள் என்பது உண்மையான அறிவியல் கொண்டாட்டமாகும்.
- சர் சி.வி.ராமன் 1928 பிப்ரவரி 28 அன்று ‘ராமன் விளைவு’ என்கிற தன் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இந்தக் கண்டுபிடிப்புக்காக 1930இல் அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்த நாளைத்தான் இந்தியா கொண்டாடுகிறது. இந்தப் பெருமை ஒருபுறம் இருக்கட்டும்... ராமன் விளைவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?
இந்திய ஆய்வகத்தில்...
- ஒரு காலத்தில் வெள்ளைக்காரர்கள் ஏற்படுத்திய ஆய்வுக்கூடங்களில் பெரும்பாலும் ஆங்கிலேயர்களே ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். அந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவிலிருந்து ஆய்வாளர்கள் உருவாக வேண்டும் என்கிற குறிக்கோளோடு 1876இல் வங்க அறிவியல் அறிஞர் மகேந்திரலால் சர்க்கார் தன் வீட்டிலேயே இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தை உருவாக்கிச் செயல்படுத்தி வந்தார். இதனால், பல வகையில் ஆங்கிலேயர்களால் அவர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவந்தார், பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டார். ஒரு சிறு ஆய்வகத்தை உருவாக்கிய பெருமையோடு 1904இல் அவர் காலமானார்.
- அவர் மறைந்த இரண்டு ஆண்டுகள் கழித்து சி.வி.ராமன் இந்திய நிதிச் சேவை நிறுவனத்தின் உதவிக் கணக்காளர் ஜெனரல் என்னும் பதவி பெற்று, கொல்கத்தாவுக்குச் சென்றார். மகேந்திரலால் சர்க்கார் ஏற்படுத்திய இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம் (Indian Association for the Cultivation of Science) என்கிற அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டு, ஓய்வு நேரத்தில் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
- முழுக்க முழுக்க இந்தியர்களால் வடிவமைக்கப்பட்ட இந்தியக் கருவிகளை உள்ளடக்கிய அந்த ஆய்வகத்தில், தன்னுடைய ராமன் விளைவைக் கண்டுபிடித்து வரலாறு படைத்தார். அதனால்தான் ஏனைய கண்டுபிடிப்புகளைவிட ராமன் விளைவு என்பதை இந்தியா கொண்டாடுகிறது.
- அறிவியல் மீதான அளவற்ற ஈடுபாடு காரணமாகத் திரவங்களின் மீதான ஒளியியல் குறித்த தன்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் தனது கண்டுபிடிப்பு குறித்த விளக்கத்தோடு 1926இல் ராமன் வெளியிட்டார். அதிலும் ஓர் இந்தியத் தன்மை உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் அறிவியல் கட்டுரைகளைப் பெரும்பாலும் அயல் நாட்டு அறிவியல் ஆய்விதழ்களில்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள். ராமன், தான் சார்ந்திருந்த இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தினால் தொடங்கப்பட்ட இந்திய இயற்பியல் இதழ் (Indian Journal of Physics) என்னும் ஆய்விதழில் தன் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.
- அது வெளிவந்ததற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து 1928 பிப்ரவரி 28 அன்று அந்தக் கண்டுபிடிப்பை முழுமையாக நிகழ்த்திக்காட்டி இந்திய அறிவியலின் மீது உலகின் பார்வை பட வைத்தார். இவ்வளவுக்கும் இன்றைய அறிவியல் உலகோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த அரிய கண்டுபிடிப்புக்காக ராமன் பயன்படுத்திய ஆய்வுக் கருவியின் மொத்த விலையே அன்றைய மதிப்பில் சில நூறு ரூபாய்தான். கோடிக்கணக்கில் செலவு செய்தால்தான் அறிவியல் ஆய்வு என்கிற இன்றைய சூழலோடு ஒப்பிட்டால், அவருடைய அர்ப்பணிப்பு எவ்வளவு உயர்ந்தது என்பது விளங்கும்.
நாட்டுக்கு அர்ப்பணித்தவர்:
- தன் வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் அறிவியலுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் ராமன். தங்கள் நாட்டுக்கு வந்து பணிபுரியுமாறு பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அவருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டபோதெல்லாம், “என் உழைப்பையும் வாழ்வையும் என் தாய்நாட்டுக்கே அர்ப்பணிப்பேன்” என்று அவர் பிடிவாதமாக இருந்தார். இந்தியா தன்னுடைய உயரிய விருதான பாரத ரத்னா விருதை அறிவித்தபோது, அது முதலில் ராமனுக்கு வழங்கப்பட்டது என்பது வரலாறு.
- ராமன் தெளிந்த அறிவியல் சிந்தனைகள் கொண்டவர். பெங்களூருவில் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் (Raman Research Institute) என்னும் ஆய்வகத்தைக் கட்டமைத்தபோது சகுனம் எல்லாம் பார்க்காமல், ராகு கால நேரத்தில் ஆறு கைம்பெண்களை வைத்து, அந்தக் கட்டிடத்துக்கான வாசல்கால் பதிக்கும் நிகழ்வை நடத்தி உலகறியத் தன்னுடைய அறிவியல் அணுகுமுறையை நிரூபித்தவர் ராமன்.
- ராமன் முன்வைத்த அறிவியல் கருத்துகள் இன்று நினைவுகூரப்பட வேண்டும். இன்று அறிவியலின் தேசமாக நம்முடைய நாடு மிளிர்கிறது. அதற்கு ராமன் உட்பட நூற்றுக்கணக்கான அறிஞர்களின் அர்ப்பணிப்பு மிக முக்கியமானது. அயல் நாடுகளில் பணிபுரிந்துகொண்டிருந்த விக்ரம் சாராபாய், ஹோமி ஜஹாங்கிர் பாபா போன்ற துடிப்புமிக்க இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்துவந்து, தன்னுடைய தலைமையில் அறிவியல் ஆய்வுகளைத் தொடரவைத்தவர் ராமன்.
- அது மட்டுமல்ல, மூடநம்பிக்கைகள், தவறான தகவல்கள் போன்றவற்றைக் கண்மூடித்தனமாகப் பரப்புவதை எதிர்த்து அறிவியலாளர்கள் போராட வேண்டும் என்று அழைப்புவிடுத்தவர் அவர். “மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி, வேளாண்மை, பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சமூகம் அறிவியல் மனப்பான்மையோடு இருப்பது மட்டுமே வழிவகுக்கும்” என்று கோவையில் நடைபெற்ற ஜி.டி.நாயுடுவின் மகள் திருமணத்தின்போது நிகழ்த்திய உரையில் ராமன் குறிப்பிட்டிருக்கிறார்.
அறிவியல் சமூகத்தை வளர்த்தெடுக்க...
- இன்றைக்கு நாம் புதிய சவால்களை எதிர்கொண்டு இருக்கிறோம். காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள், எரிசக்திப் பற்றாக்குறை, கோவிட் 19 காலத்துக்குப் பிறகு ஏற்பட்ட பொது சுகாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றைச் சமாளிக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக நம் சமூகத்தை ராமன் வகுத்த அறிவியல் பாதையில் செலுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
- அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சி தொழில்துறை வளர்ச்சிக்கு உதவுவதோடு புதிய வேலைவாய்ப்புகளையும் மனிதர்களின் அடிப்படை வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றால், இந்தச் சமூகம் அறிவியல் மனப்பான்மை உடைய சமூகமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
- வேகமாக மாறிவரும் உலகுக்கு ஏற்ப ஒரு நாடு தன்னை உருமாற்றிக்கொள்வதற்கு, அன்றாட வாழ்க்கைச் சவால்களைச் சமாளிப்பதற்கு மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு, பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வதற்குத் தேசிய அறிவியல் நாளை நாடு முழுவதும் பரவலாகக் கொண்டாட வேண்டும். பகுத்தறிவு அறிவியல் சமூகத்தைப் படைப்போம் என்று ராமன் வழிநின்று உறுதி ஏற்போம்.
- பிப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள்
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 02 – 2025)