TNPSC Thervupettagam

இந்திய மக்களுக்கு போக்குவரத்து செலவுகளால் ஏற்படும் நெருக்கடி!

February 12 , 2025 5 hrs 0 min 2 0

இந்திய மக்களுக்கு போக்குவரத்து செலவுகளால் ஏற்படும் நெருக்கடி!

  • இந்திய மக்களின் பிரதான செலவுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், கிராமப்புறங்களில் 7.6 சதவீதமும், நகர்ப்புறங்களில் 8.5 சதவீதமும் அன்றாட போக்குவரத்துக்கு செலவழிக்கின்றனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. தனிநபர் மாதாந்திர நுகர்வு செலவு (எம்பிசிஇ) எனப்படும் இந்த புள்ளி விவரம் குடும்பங்களின் பொருளாதார நிலையை கணக்கிடுவதற்கும், வறுமை விகிதங்களைக் கணக்கிடவும் முக்கிய அளவுகோலாக கருதப்படுகிறது.
  • முந்தைய ஆண்டில் கிராமப்புறங்களில் ரூ.3,773 ஆக இருந்த நுகர்வு செலவு, கடந்த ஆண்டு ரூ.4,122 ஆக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் ரூ.6,459-ல் இருந்து ரூ.6,996 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் மக்களின் போக்குவரத்து செலவுகள் உயர்ந்து வருவதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
  • கல்வி, வேலைக்காக மக்கள் அன்றாடம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் இருப்பவர்கள் தினமும் நகர்ப்புறங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். உயர்ந்துவரும் எரிபொருள் செலவு மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் அவர்களது செலவை அதிகரித்து வருகிறது.
  • நாடு முழுவதும் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எடுத்த கணக்கெடுப்பில், கேரளாவில் உள்ள கிராமத்தினர் அதிக அளவில் அதாவது, மொத்த செலவில் 11.38 சதவீதம் போக்குவரத்துக்காக செலவழித்துள்ளனர். கோவா, தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலங்கள் அடுத்தடுத்த நிலையில் வருகின்றன. போக்குவரத்து செலவுகள் அதிகரித்து வருவது நடுத்தர மக்களின் சுமையாக மாறி வருவதையே இவை உணர்த்துகின்றன.
  • தமிழகத்தில் ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்பட்ட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பெங்களூருவில் பேருந்து கட்டணம் சமீபத்தில் 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் கட்டணமும் அதிகபட்சம் ரூ.60-ல் இருந்து ரூ.90 ஆக உயர்த்தப்பட்டது. நெரிசல் நேரம் மற்றும் நெரிசல் அல்லாத நேரம் என வகைப்படுத்தப்பட்ட இரண்டு தனித்தனி கட்டணங்களையும் பெங்களூரு மெட்ரோ அறிமுகம் செய்துள்ளது. இதனால், அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளது மட்டுமின்றி, மெட்ரோ ரயில் பயணத்தை புறக்கணிக்கும் முடிவை எடுத்து சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யும் நிலைக்கு சென்றுள்ளனர்.
  • தற்போதைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்ப வேண்டிய நிலையில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தினசரி சென்று வருவதற்கே தங்களது வருமானத்தில் கணிசமான தொகையை செலவழிப்பதால், அவர்களது பொருளாதார சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • வாகனங்களில் சென்று வருவதற்கான பெட்ரோல், டீசல் செலவு கணிசமான அளவை எட்டும்போது, அதில் இருந்து தப்பிக்க அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்தையே பொதுமக்கள் நம்புகின்றனர். அந்த கட்டணமும் உயரும்போது மக்கள் செய்வதறியாது திகைக்கும் நிலை ஏற்படுகிறது.
  • விலைவாசி உயர்வு, பணவீக்கம், மக்களின் வாங்கும் சக்தி என பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்புகள் அன்றாட போக்குவரத்துக்கு மக்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதையும் ஆராய்ந்து, அதற்கேற்ப நியாயமான கட்டண விகிதங்களை நிர்ணயிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories