TNPSC Thervupettagam

இந்தியாவின் பட்டினிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் | எம்.எஸ்.சுவாமிநாதன் நுற்றாண்டு தொடக்கம்

August 7 , 2024 5 hrs 0 min 24 0
  • ஆங்​கிலேயர் வணிகம் செய்ய இந்தியாவில் காலடி வைத்த​போது, உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக நம் நாடு இருந்தது. உலகப் பொருளாதார அளவில் 24% இந்தியாவில் உற்பத்தி செய்யப்​பட்டது. 200 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் வெளியேறியபோது, இந்தியப் பொருளாதார உற்பத்தி உலகப் பொருளாதா​ரத்தில் 4% ஆகச் சுருங்​கிப்​போனது. அந்த அளவுக்கு மிகப் பெரிய கொள்ளை ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தது. பசியும் பஞ்சமும் சகஜமான நிகழ்வுகளாக மாறிப்​போயின.
  • விடுதலைக்குப் பின்னர், உணவு உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு திட்டங்​களைத் தொடங்​கியது. நீர்த்​தேக்​கங்கள், கால்வாய்கள் கட்டும் முயற்சிகள் முதலியன தொடங்கின. ஆனாலும் அவற்றால் உணவு தானியப் பற்றாக்​குறையை விரைவில் தீர்க்க முடிய​வில்லை. உணவு தானியங்களை இறக்குமதி செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகத் தொடர்ந்தது.

எம்.எஸ்.சுவாமிநாதனின் முன்னெடுப்பு:

  • நீர்ப்பாசன வசதிகளை அதிகரிக்கும் திட்டங்​களுடன், அதிக மகசூல் தரும் உயர்தர ரக விதைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் பயிரிடலாம் என்னும் ஒரு யோசனை முன்வைக்​கப்​பட்டது. மெக்சிகோவில் வெற்றிகரமாக வீரிய ஒட்டு கோதுமை ரகங்களை உருவாக்கிய நார்மன் போர்லாகை எம்.எஸ்.சுவாமிநாதன் தொடர்​பு​கொண்​டார். அவர் மூலம் வீரிய கோதுமை ரகங்களை இறக்குமதி செய்து, சரியான ரகங்களை அடையாளம் கண்டு, இந்தியச் சூழலுக்​கேற்ப மாற்றியமைத்து வெளியிட்​டார்.
  • வீரிய கோதுமை ரகங்களை அடையாளம் கண்டு, தென் அமெரிக்கா - ஆசிய நாடுகளில் உணவு உற்பத்​தியைப் பெருமளவு உயர்த்தி​யதற்காக, நார்மன் போர்லாக் 1970 ஆண்டு நோபல் பரிசு பெற்றார். அவர், டாக்டர் சுவாமிநாதனுக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்​கண்டவாறு குறிப்பிடுகிறார்:
  • ‘பசுமைப் புரட்​சியின் வெற்றி, இந்திய விஞ்ஞானிகள், அலுவலர்கள், நிறுவனங்கள், உழவர்கள் என ஒரு குழுவின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. அதற்கான பாராட்​டுக்கள் அனைவருக்கும் சேரும் என்றாலும், மெக்சிகக் குட்டை இனக் கோதுமை விதைகளின் விளைச்சல் சாத்தி​யங்களை அடையாளம் கண்டு முன்னிறுத்திய உங்களின் பங்களிப்பு முதன்மையானது. அதுதான் பசுமைப் புரட்சித் திட்டத்தைப் பெரிய வெற்றியடையச் செய்தது.’

இரட்டைப் பொறுப்பு:

  • கோதுமையைத் தொடர்ந்து நெல்லிலும் ஐ.ஆர்-8 போன்ற உயர் விளைச்சல் ரகங்கள் அறிமுகப்​படுத்​தப்​பட்டு பெரு வெற்றியடைந்தன. டாக்டர் சுவாமிநாதன், 1972ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குநராக நியமிக்​கப்​பட்​டார்.
  • அரசின் முடிவு​களுக்​கும், விஞ்ஞானிகளின் ஆராய்ச்​சிகளுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து, மிக வேகமாக உணவு தானிய உற்பத்தி தொடர்பான கொள்கை முடிவுகளை முன்னெடுத்துச் செல்ல​வேண்டிய காலக்கட்டமாக இருந்​த​தால், இந்திய அரசின் வேளாண்மைச் செயலராகவும் ஒரே சமயத்தில் அவர் நியமிக்​கப்​பட்​டார். இதன் விளைவாக, அரசின் கொள்கை முடிவுகள் தாமதமின்றிச் செயல்​படுத்​தப்​படும் சூழல் உருவாக்​கப்​பட்டது.

பரிசும் பங்களிப்பும்:

  • 1980ஆம் ஆண்டு, திட்டக் குழுவில் பணியாற்ற அனுப்​பப்பட்ட சுவாமிநாதன், வேளாண்​மையில் பெண்களின் பங்களிப்பு, சுற்றுச்​சூழலின் முக்கியத்​துவம் போன்றவற்றை ஆய்வுகள் வழியே அறிந்து​கொண்​டார். 1982இல், மணிலாவில் உள்ள பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக நியமிக்​கப்​பட்​டார். இப்பத​விக்கு நியமிக்​கப்பட்ட முதல் ஆசியர் சுவாமிநாதன் தான்.
  • இங்கே அவர் நெல் உற்பத்திச் சூழலில் மகளிரின் பங்கு என்ன என்பது தொடர்பான முதல் உலக மாநாட்டை நடத்தினார். இந்த நெல் ஆராய்ச்சி நிலையத்தில் அவர் முன்னெடுத்த திட்டங்கள் உலக ஆய்வுத் தளங்களில் போற்றப்​பட்டு, 1987ஆம் ஆண்டு முதலாவது ‘உலக உணவுப் பரிசு’ அவருக்கு வழங்கப்​பட்டது.
  • இந்தப் பரிசு வழியே கிடைத்த பணத்தைத் தன் சொந்தப் பயன்பாட்​டுக்கு வைத்துக்​கொள்​ளாமல், ‘எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை’ என ஊரக மக்கள் மேம்பாட்​டுக்கான ஒரு நிறுவனத்தைச் சென்னையில் தொடங்​கினார். தமிழ்நாடு அரசு, அவரது ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க, தரமணியில் ஓர் இடத்தை ஒதுக்கிக் கொடுத்தது. இந்த நிறுவனம் நீடித்து நிலைக்கும் வேளாண்மை வழிகள், பெண்கள், ஊரக மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்து நடத்திவரு​கிறது.

விமர்​சனங்​களைத் தாண்டி...

  • இந்தக் காலக்​கட்​டத்​தில்தான் பசுமைப் புரட்சித் திட்டத்தின் பக்கவிளைவுகள் பேசப்படத் தொடங்கின. அதீத வேதிப் பொருள்​களின் பயன்பாடு, நிலத்தடி நீர் குறைதல், மண்வளம் குறைதல் போன்ற பிரச்​சினைகள் எழத் தொடங்கின.
  • இதை ஆராய்ந்த டாக்டர் சுவாமிநாதன், வேளாண் உற்பத்தி என்பது நீடித்து நிலைக்கும் ஒன்றாக மாற வேண்டும் எனக் குரல் கொடுத்​தார். எந்த ஒரு திட்டத்துக்கும் எல்லைகளும் ஆயுளும் உண்டு. காலத்துக்​கேற்பத் திட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்​தப்​பட்டு மேம்படுத்​தப்பட வேண்டும் என்னும் அறிவார்ந்த தளத்தில் நின்று தன் நிலைப்​பாட்டை முன்வைத்​தார்.
  • 2004ஆம் ஆண்டு இந்திய அரசு, தேசிய உழவர் நலக் குழுவின் தலைவராக சுவாமிநாதனை நியமித்தது. இந்தக் குழு, அக்காலத்​தில் பெரும் சமூக அவலமாக உருவெடுத்த, உழவர் தற்கொலைகளின் பின்னணியில் உருவாக்​கப்​பட்​ட​தாகும். விடுதலை பெற்ற காலத்​திலிருந்து, உணவு தானியம் உள்ளிட்ட வேளாண் பொருள்​களின் உற்பத்தி பல மடங்கு பெருகி​யிருந்​தா​லும், வேளாண்மை என்பது உழவர்​களுக்கு லாபம் இல்லாத ஒன்றாக மாறிப்​போனது.
  • இதன் விளைவாக மகாராஷ்டிரம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்​களில், கடன் தொல்லை தாள இயலாமல் உழவர்கள் பெருமளவில் தற்கொலை செய்து​கொள்ளத் தொடங்​கினார்கள். இந்த அவலத்துக்கான தீர்வுகளை உருவாக்​குமாறு சுவாமிநாதனை அரசு பணித்தது. டிசம்பர் 2004 முதல் அக்டோபர் 2006 வரையிலான காலக்​கட்​டத்​தில், இந்தக் குழு மொத்தம் ஐந்து அறிக்​கைகளை அரசுக்கு அளித்தது. அதில் முதன்​மையானது, உழவர்​களின் உற்பத்​திக்கு நியாயமான விலையை உறுதி​செய்வது.
  • உழவர்​களின் உற்பத்திச் செலவு​களுடன் அவர்கள் உழைப்​புக்கான கூலியையும் சேர்த்து அதன் மீது 50% லாபத்தைக் கொடுப்பதே உழவர்களுக்கு லாபகரமாக இருக்கும் என்னும் அறிவியல்​பூர்வமான ஓர் அடிப்​படையை உருவாக்கி, அரசுக்குச் சமர்ப்​பித்தார் சுவாமிநாதன். கட்சி வேறுபாடுகள் தாண்டி, இந்த அடிப்படை நியாயமான ஒன்று என இந்தியச் சமூகம் ஒத்துக்​கொண்டிருப்பது அவரது முக்கியமான பங்களிப்​பாகும்.

நன்றிக்​குரியவர்:

  • காவிரி டெல்டாவில், மிகப் பெரும் செல்வந்தக் குடும்​பத்தில் பிறந்தவர் சுவாமிநாதன். இளைஞராக இருந்த காலத்​தில், வங்கப் பஞ்சத்தில் கோடிக்​கணக்கான மக்கள் பசியால் இறந்த கொடுமை அவரைப் பெரிதும் பாதித்தது. எனவே, வேளாண்மை படிக்க முடிவெடுத்​தார்.
  • இந்தியச் சமூகத்துக்கு உணவுப் பாதுகாப்பை உருவாக்கும் பெரும் பணியில் தன்னை ஆட்படுத்​திக்​கொண்​டார். வாழ்க்​கையின் முதல் பகுதியில் அறிவியலின் துணை கொண்டு உழைத்​தார். இரண்டாம் பகுதி​யில், பொதுநலத் திட்டங்​களின் வழியே உழ​வர்கள்​ மேம்​பாட்​டுக்கான கோட்​பாடுகளை உரு​வாக்​கினார்.
  • வாழ்​வின் இறுதி விநாடி வரை, உழ​வர்​களுக்​கும் ஊரக மக்​களின் நலனுக்​கும் அர்ப்​பணிக்​கப்​பட்ட ஒரு லட்சி​ய வாழ்க்கை அவருடையது. இந்த பாரத ரத்​தினத்துக்கு இந்​தியச்​ சமூகம் என்​றென்​றும் நன்​றிக்​கடன்​ பட்​டிருக்​கும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories