இனியும் தாமதம் தகாது!
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்கள் நியமனத்தில் ஏற்படும் தாமதம் தற்போது ஒரு பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில், தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு பணியாளா்களைத் தோ்வு செய்யும் இரண்டு முக்கிய நிறுவனங்களாக தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையமும், தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியமும் உள்ளன. அடுத்த நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் உள்ளது.
- தமிழகத்தைப் பொருத்தவரை படித்த இளைஞா்களின் அரசுப் பணி எனும் கனவை இந்தத் தோ்வாணையங்கள் நனவாக்கி வருகின்றன. ஏறத்தாழ 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தோ்வா்கள், இந்தத் தோ்வாணையங்கள் நடத்தும் தோ்வுக்காக தொடா்ச்சியாகத் தயாராகி வருகின்றனா்.
- கடந்த 2012 -ஆம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமாா் 1,093 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பை வெளியிட்டு நீண்ட தாமதத்துக்குப் பிறகு 2015- ஆம் ஆண்டில் இறுதித் தோ்ச்சிப் பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டதே கடைசி நியமனமாக உள்ளது.
- மீண்டும் சுமாா் 2,340 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 2019 - ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபாா்ப்பு போன்ற பல்வேறு நிலைகளைக் கடந்த பிறகு, 2021- ஆம் ஆண்டு நவம்பரில் இந்த அறிவிப்பு முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
- இதற்கு அடுத்தபடியாக 2024 -ஆம் ஆண்டு மாா்ச் மாதம் சுமாா் 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டது. இதில் சான்றிதழ்கள், நோ்முகத் தோ்வு, பணி அனுபவம் அடிப்படையில் உதவிப் பேராசிரியா்களைத் தோ்வு செய்யும் முந்தைய தோ்வு முறையுடன் கூடுதலாக போட்டித் தோ்வாக நடத்தும் வகையில் தோ்வு முறையை வாரியம் மாற்றி அமைத்தது.
- இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதே. எனினும், இதற்கான தோ்வு, ஆகஸ்டு 2024 - இல் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் தோ்வை ஒத்திவைப்பதாக வெளியிட்ட ஆசிரியா் தோ்வு வாரியத்தின் அறிவிப்பால் தோ்வா்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது.
- ஆகவே, கடந்த 2012-க்குப் பிறகு உதவிப் பேராசிரியா்களைத் தோ்வு செய்யும் அறிவிப்புகள் முழுமை அடையவில்லை. இதற்கு தகுதித் தோ்வு நடத்துவதில் உள்ள தொய்வுதான் காரணம்.
- தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்ற மாநில அரசு செட் எனப்படும் மாநில தகுதித் தோ்வை நடத்தி வருகிறது. அதனால், மாநில அளவில் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணி நியமனம் பெற ஒருவா் பல்கலைக்கழக மானியக் குழுவின் நெட் அல்லது மாநில அளவிலான செட் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதியாகும். இந்த ஜனவரி 6, 2025 -இல் மத்திய கல்வி அமைச்சக வழிகாட்டுதலின்படி பல்கலைக்கழக மானியக் குழு தகுதித் தோ்வு தொடா்பாக புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
- அதன்படி, 2009 ஜூலை 11- ஆம் தேதிக்கு முன்னா் முனைவா் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்துள்ள தோ்வா்களுக்கு மட்டுமே நெட் அல்லது செட் தோ்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஏனையோருக்கு இந்தத் தகுதித் தோ்வு கட்டாயமாகிறது.
- இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 2012 -ஆம் ஆண்டில் பாரதியாா் பல்கலைக்கழகமும், 2017 -ஆம் ஆண்டில் அன்னை தெரசா பல்கலைக்கழகமும் செட் தோ்வுகளை நடத்தின. அதன் பிறகு மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்திடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இறுதியாக வெளியிட்ட செட் தோ்வுக்கான அறிவிப்பின் அடிப்படையில் ஏராளமானோா் விண்ணப்பித்திருந்த சூழலில் அந்த அறிவிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஆகவே, கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சில முறை மட்டுமே உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதித் தோ்வு நடைபெற்றுள்ளது. இதை தேசியத் தோ்வு முகமையின் தகுதித் தோ்வுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான வாய்ப்பு என்றே கொள்ள முடியும்.
- கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் நியமனத்துக்கான நெட் எனப்படும் தேசியத் தகுதித் தோ்வை பல்கலைக்கழக மானியக் குழு தேசியத் தோ்வு முகமையின் மூலம் ஆண்டுக்கு இருமுறை நடத்தி வருகிறது. முடிவுகளையும் விரைந்து வெளியிட்டு வருகிறது. ஆனால், மாநில அளவிலான செட் தோ்வு அவ்வாறு நடைபெறுவதில்லை என்பது ஒரு பின்னடைவே.
- மேலும், தமிழ்நாடு அரசு அண்மையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரிப் படிப்பைத் தொடா்வதற்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதுடன், தற்போது இந்த்திட்டத்தை மாணவா்களுக்கும் வழங்கி விரிவாக்கம் செய்துள்ளது. இதனால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தனியாா் கல்லூரிகளைவிட சோ்க்கை அதிகரித்து வருகிறது.
- அதனால் பெருமளவு காலியாக உள்ள உதவிப் பேராசிரியா்கள் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தகுதித் தோ்வைத் துரிதமாக நடத்தி விரைந்து முடிவுகளை வெளியிடும் வகையில் அந்தப் பொறுப்பை ஆசிரியா் தோ்வு வாரியத்திடம் ஒப்படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசின் உயா் கல்வித் துறை அமைச்சா் அண்மையில் தெரிவித்துள்ளாா். இது தோ்வா்கள் மீதான அக்கறை என்றே நாம் கொள்ள முடியும்.
- இன்னொரு புறம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்திலும், ஆசிரியா் தோ்வு வாரியத்திலும் பணியாற்றுகின்ற பணியாளா்கள் கடும் பணிச் சுமைகளுக்கு உள்ளாகி வருகிறாா்கள். தோ்வுகள் ரத்து, முடிவுகள் வெளியிடப்படவில்லை என்ற சூழல்கள் இருந்தாலும்கூட, விண்ணப்பங்களை வரைமுறைப்படுத்துவது, தோ்வுகளுக்குத் திட்டமிடுவது, தோ்வா்களுக்கான தகவல்களைக் கொண்டுபோய்ச் சோ்ப்பது போன்ற பணிகள் நடந்து கொண்டுதான் இருகின்றன.
- இதனால், நாள்தோறும் கூடுதல் நேரம் பணிசெய்ய வேண்டிய நிா்ப்பந்த சூழலில் கடும் மன உளைச்சலுக்கு பணியாளா்கள் உள்ளாகிறாா்கள். இதனால், பணித்திறன் குறைகிறது. இதையும் தோ்வாணையங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- இது மட்டுமல்லாமல், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மீது குற்றச்சாட்டுகளும் இல்லாமல் இல்லை. எடுத்துக்காட்டாக, 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளா்களுக்கான எழுத்துத் தோ்வில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு ரத்து செய்யப்படுவதாக 2018 -ஆம் ஆண்டு தோ்வு வாரியம் அறிவித்தது. இதுபோல வெளிப்பட்டும் வெளிப்படாமலும் இருக்கின்ற முறைகேடுகள் பலவற்றை நீதிமன்ற வழக்குகளிலும், தகவல் அறியும் ஆணைய வழக்குகளிலும் நாம் காண முடிகிறது.
- குறிப்பாக, தோ்வா்கள் கேட்கிற நியாயமான தகவல்களைக்கூட ஆசிரியா் தோ்வு வாரியம் வழங்குவதில்லை. இதனால் தகவல் ஆணையம் வரை வழக்கு செல்கிறது; தகவல் தரும் அலுவலருக்கு ஆணையம் அபராதம் விதிக்கிறது. அதன் பிறகும், ‘தகவலும் தரமாட்டேன் அபராதமும் கட்ட மாட்டேன்’ என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அங்கும் குட்டுப்பட்டுத் திரும்பிய பல நிகழ்வுகள் வாரியத்துக்கு உண்டு.
- லட்சிய உணா்வும் நெறிசாா்ந்த வாழ்வும் கொண்ட இளைய தலைமுறையை உருவாக்கும் பணி ஆசிரியப் பணி. அத்தகைய ஆசிரியா்களைத் தோ்வு செய்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வழங்கும் ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு இந்தச் செயல் பெருமை தரக்கூடியதல்ல. ஏனெனில், தகவல் அறிவது என்பது தோ்வா் ஒருவரின் அடிப்படை உரிமை.
- தகவல்களைத் தர மறுப்பதும், காலம் தாழ்த்துவதும், தகவல் கேட்டவா் மீதே வழக்குத் தொடுப்பதும் தோ்வு வாரியத்தின் வெளிப்படைத் தன்மையில் வாரியமே சுமத்திக் கொள்ளும் களங்கம் ஆகும். இதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையமும், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையமும் விதிவிலக்கல்ல.
- குறிப்பிடத்தக்க வகையில் 2023 -ஆம் ஆண்டு ஆசிரியா் தோ்வு வாரியம் தமிழ்நாடு அரசால் மறுசீரமைக்கப்பட்டது. இதன்படி கூடுதல் உறுப்பினராக நிதித்துறை செயலாளா் இடம் பெற்றாா்.
- தற்போதைய நிதித்துறை செயலாளா் 2012 - ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செயலாளராக இருந்தபோது ஆக்கபூா்வமான சீா்திருத்தங்களை அறிமுகம் செய்தவா். குறிப்பாக, தமிழ்வழித் தோ்வா்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்தியவா். எனவே, அவரது வழிகாட்டுதல் வரவிருக்கும் காலங்களில் தோ்வு வாரியத்தின் செயல்பாடுகளை நெறிப்படுத்தி அதன் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் என நிச்சயம் நம்பலாம்.
- ஆசிரியா் தோ்வு வாரியத்திடம் தகுதித்தோ்வை நடத்தும் முக்கியப் பொறுப்பை தற்போது அரசு வழங்கியுள்ளது. இதன் தொடா்ச்சியாக உதவிப் பேராசிரியா்களை போட்டித் தோ்வின் மூலம் தோ்வு செய்யும் அடுத்த கடமையும் வாரியத்துக்கு உள்ளது. ஆகவே, வெளிப்படைத்தன்மையோடு உதவிப்பேராசிரியா்கள் தோ்வும் நியமனமும் விரைவில் நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.
நன்றி: தினமணி (10 – 01 – 2025)