TNPSC Thervupettagam

இயலாமையை வெல்லும் வழி

January 30 , 2025 4 hrs 0 min 6 0

இயலாமையை வெல்லும் வழி

  • வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நமக்கு முக்கியமானது. சில சமயம் எதிர்மறை எண்ணங்களால் நம் வளர்ச்சி தடைபடுகிறது. நம்முடைய இயலாமை நம்மை திசை திருப்பிவிடுகிறது. இயலாமையை வெற்றி கண்டால், வாழ்வில் இனிமையைக் காணலாம்.
  • நவீன வாழ்க்கையை தீர்க்கமான ஒரு கோடு பழமையில் இருந்து வேறு படுத்துகிறது. வாழ்வு எப்போதும் நவீனமாகவே இருக்கும். நாம் பழமை என நினைக்கும் ஒரு சகாப்தம், நம் முன்னோர் காலத்தில் புதுமையாக இருந்தது. இது எக்காலத்துக்கும் பொருந்தும். பலதரப்பட்ட நிகழ்வுகளை நாம் தினமும் எதிர்கொள்ள வேண்டியிருப் பதை நவீனம் என்ற சொல் உண்மையில் உணர்த்துகிறது.
  • நம் முன்னோர் ஒரு சில நிகழ்வுகளை மட்டும் எதிர்கொண்டு திட்டமிட்டு வாழ்ந்தனர். சமூக ஊடகம், தொலைக்காட்சி என்று அப்போது எந்வசதியும் இல்லை இப்போது அனைத்தும் நம் விரல் நுனியில் இருக்கின்றன. காலையில் விழித்தெழும்போது, புது சிருஷ்டியைபோல் ஒரு புதிய நாள்.
  • நேற்று நடந்த சம்பவங்களை பற்றிய நினைவு இருப்பதால் தொடர்ச்சியை உணர்கிறோம். அதன் அடிப்படையில் பழைய, புதிய பிரச்சினைகளை இன்று எதிர்கொள்கிறோம். இப்போது ஒரு நாள் என்பது பல சாதனைகளை கொண்டதாக இருக்கிறது. இந்த சிறிய உலகில் பல பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு சில விஷயங்களில் நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதை அறிவோம்.
  • இந்த ‘இயலாமை’ ஒரு நவீன பிரச்சினை. பல பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இந்த இயலாமை பல பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக இருக்கிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் நம்மிடம் தீர்வுகள் இருக்கலாம். ஆனால் யாரும் நம்மிடம் ஆலோசனை கேட்பதில்லை. இது மற்றொரு பிரச்சினை. பிறரை துன்புறுத்தாத, மற்றவர் நலனில் அக்கறை கொண்ட, தூய, எளிய வாழ்வு வாழ்ந்தாலும் இயலாமையை உணர்கிறோம்.
  • போட்டி நிறைந்த உலகில் வெற்றி பெற விழைகிறோம். எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகிறோம். தற்காத்துக் கொள்ள முயல்கிறோம். சண்டையிட தயாராக இருக்கிறோம். மனோரீதியான பிரச்சினைகள் பாதிக்கும்போது நம்பிக்கை இழக்கிறோம். இந்த நம்பிக்கையின்மை ஆளுமையை பாதிக்கிறது.
  • எல்லோரும் திறமைசாலிகளாக இருப்பதால், உயிர் வாழ்வதே பெரிய சவால் என நினைக்கிறோம். எச்சரிக்கை உணர்வுடன் பேசுகிறோம். இந்த அவநம்பிக்கையும் சந்தேகமும் ஒரு பலவீனம். மற்றொரு புறம் இயற்கையுடன் ஒன்றிணையும்போது மனம் லேசாகிறது.
  • கடல், மலை, வானம், நட்சத்திரங்களை பார்க்கும்போது கவலை மனதை விட்டு பறந்துவிடுகிறது. இயற்கையின் அழகு நம்மை வசீகரிக்கிறது. தேவைகளற்ற நிலையில் வெற்றி பெற்றவராக உணர்கிறோம். உண்மையில் இதைத்தான் நாம் வாழ்வில் தேடுகிறோம். சுயத்துடன் இயல்பாய் இருப்பதுதான் வளர்ச்சி. நமது தேவையும் வளர்ச்சியை தடுக்கிறது.
  • எண்ணங்களே தனிமைச் சிறையில் அடைக்கிறது. எண்ணங்களே தடைக்கற்கள். உள்ளதை உள்ளபடி உணர்ந்து வாழவேண்டும். வளரும் சூழ்நிலையே குணாதிசயமாக மாறுகிறது. உலகஉண்மையை உணர்ந்தால் சிந்தனாவாதிகளைப் போல் சிந்திக்க முடியும். சரி, தவறு இவற்றை அறிந்துகொள்ள ஆழ்ந்த அறிவு அவசியம்.
  • சரியான கோணத்தில் தன்னையும் உலகையும் பார்க்கப் பழகினால் நுண்ணறிவைப் பெற முடியும். நுண்ணறிவை நடைமுறைக்கு கொண்டு வந்து சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலை பெறமுடியும். வல்லமை பொருந்திய நிலையில் இயலாமை எழுவதில்லை. பூரண அறிவும் புரிந்துகொள்ளும் திறனுமே அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories