- “குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் / நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்” என்று தமிழ் மண்ணில் நின்று அன்றே அறிவுறுத்தியது அதிவீரராம பாண்டியனின் ‘வெற்றி வேற்கை... நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை’ (50). வடகிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஒரு மிகப் பழமையான நாடாக இருந்துவந்த கொரியாவை, அப்போது வலிமைமிக்க பேரரசாக இருந்த ஜப்பான் 1910 இல், தன் குடைக்குள் வசப்படுத்தியது. ஆனால், இரண்டாம் உலகப்போர், ஜப்பானின் வலிமையைக் ஹிரோஷிமா- நாகசாகியில் அஸ்தியாக்கி, பசிபிக் பெருங்கடலில் கரைத்தது. ஆம், பசிபிக் பெருங்கடலில், டோக்கியோ விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பல் படையின் யுஎஸ்எஸ்மி சௌரி எனும் கப்பல் தளத்தில்தான் நேசநாடுகளிடம் (Allies) சரணடைவதாக செப்டம்பர் 2, 1945 இல் ‘நடைமெலிந்து’ ஜப்பான் கையெழுத்திட்டது. கொரியா, ‘குரங்குகள் கை அப்பமாகியது!’
- ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து, கொரியாவின் எதிர்காலம் குறித்த கேள்வியை நேசநாடுகளின் தலைவர்கள் பரிசீலித்துவந்தனர். அவர்களது கருத்துப்படி, கொரியா ஜப்பானிடமிருந்து விடுவிக்கப்படும்; ஆனால், கொரியர்கள் சுயாட்சிக்குத் தயாராக இருப்பதாகக் கருதப்படும் வரை ஒரு சர்வதேச அறங்காவலரமைப்பின் (International Trusteeship) கீழ் வைக்கப்படும் என்றதொரு புரிதலை எட்டினர். அறங்காவலர் அமைப்பு உருவாக்கப்படும் வரை, கொரிய தீபகற்பத்தை இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கும் எல்லைக் கோடாகப், பூமியின் 38-வது இணைகோடு நிர்ணயிக்கப்பட்டு, தெற்கில் அமெரிக்கா, வடக்கில் சோவியத் (ஆக்கிரமிப்பு) என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த வடக்கு - தெற்கு பிரிவு ஒரு தற்காலிக ஏற்பாடுதான் என்றும் ஆரம்பநிலையில் சொல்லப்பட்டது.
- மாஸ்கோவில் டிசம்பர் 1945 இல், நடைபெற்ற நேசநாட்டு வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில், ஐந்தாண்டு காலத்திற்கு, நான்கு உறுப்பினர்கள் கொண்ட ‘கொரிய அறங்காவலர் அமைப்பு’ ஏற்படுத்தலாம் என்ற கருத்துக்கு உடன்பாடு ஏற்பட்டது. அந்த உடன்பாட்டின்படி அமைப்பு உருவாவதற்குள்ளேயே, ‘போருக்குப் பின்னுள்ள உலகில் யார் வலியவர்?’ என்று அமெரிக்க - சோவியத் யூனியன் பனிப்போர் உருவாகிவிட்டது. இதனிடையே, அறங்காவலர் நிர்வாகத்திற்கு கொரிய மக்களின் வலுவான எதிர்ப்பும் கிளம்பியது. அடுத்த இரண்டு ஆண்டு காலத்தில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே அறங்காவலர் அமைப்புக்கான நியமனங்கள் செய்வது தொடர்பாக நடந்த ‘இழு - பறி’ பேச்சுவார்த்தைகள் இற்று வீழ்ந்தன. ஒரு சுதந்திரமான, ஒன்றுபட்ட கொரிய அரசை மீண்டும் நிறுவுவதற்கான வாய்ப்புகள் அற்றுப்போயின அப்போது.
- அதன்பின், கொரியப் பிரச்னை ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இருநாடுகளும், குறிப்பாகச் சோவியத் ஒன்றியம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவை ஐ.நா வார்த்தெடுத்து வழங்க இயலவில்லை. கொரியாவில், ஐ.நா மேற்பார்வையில்1948 இல் தேர்தல்கள் நடத்தி மக்கள் விருப்பப்படி அரசு அமைக்கலாம் என்ற கருத்தையும் சோவியத் யூனியன் மறுத்ததால் - ஐ.நா மேற்பார்வையில் நடக்கும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்ததால்- அமெரிக்கா ஆக்கிரமித்திருந்த தெற்கில் மட்டுமே தேர்தல்கள் நடத்தப்பட்டன. சிங்மேன்ரீ தேர்தலில் வெற்றி பெற்றார்,
- அதேநேரத்தில் சோவியத் ஆக்கிரமித்திருந்த வடகொரியாவின் தலைவராக கிம் இல் சுங் தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டார். தென் கொரியாவில் ஆகஸ்ட் 15, 1948 இல் கொரியக் குடியரசு நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 9, 1948 இல் வடகொரியாவில் ‘கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு’ நிறுவப்பட்டது. ஆனால், கொரியாவில் நிறுவப்பட்ட இரு அரசுகளுமே முழு கொரிய தீபகற்பத்தின் மீது இறையாண்மையைக்கோரி முட்டிக்கொண்டே நின்றன.
- இரண்டாண்டுகளாக நீடித்த அந்த முட்டல் நிலை, மிருகத்தனமான மோதலாக, கொரியப் போராக (1950 - 1953) வெடித்தது. மூன்றாண்டுப்போர் யாருக்கும் வெற்றியில்லை என்ற ‘முட்டிய நிலையில்’ முடிவுற்று, இரண்டு கொரியாக்களையும் ஒரு ராணுவமற்ற (Demilitarized Zone, DMZ) மண்டலத்தால் பிரித்து வைத்தது. பெயரில்தான் ராணுவமற்ற மண்டலம். ஆனால், எல்லைக்கோட்டின் இருபுறங்களிலும் கனத்த ராணுவக் குவிப்பு காட்சியாகும்.
- பிரிவிற்குப் பிறகு, தென் கொரியா முதலாளித்துவத்தை நோக்கித் திரும்பி, விரைவான தொழில்மயமாக்கலை ஏற்றுக்கொண்டு, மேற்கத்திய நாடுகளுடன், குறிப்பாக அமெரிக்காவுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டது. இன்று, அது தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் உலகளாவிய தலைநிலையில் - சாம்சங் மற்றும் ஹூண்டாய் போன்ற ஜாம்பவான்களின் தாயகமாகி - உள்ளது, தென்கொரியாவின் பொருளாதாரம் ஒரு செழிப்பான, உயர் தொழில்நுட்ப - ஸ்மார்ட்போன்கள் முதல் கார்கள் வரை- உலக அரங்கில் அதன் தயாரிப்புகள் எல்லா இடங்களிலும் இருக்கும் உயர் பொருளாதாரமாகியுள்ளது. வறுமையிலிருந்து செழிப்புக்கு வந்துநிற்கும் தென் கொரியாவின் வளர்ச்சியும் எழுச்சியும் குறிப்பிடத்தக்கது.
- இதற்கு நேர்மாறாக, வட கொரியா, அதன் சோசலிச சித்தாந்தமும் சர்வாதிகார நிர்வாகமும் விளைவித்துள்ள பொருளாதாரப் பிரச்னைகளுடன் நீண்டகாலமாகப் போராடி வருகிறது. மேலும், பன்னாட்டுப் பொருளாதாரத் தடைகள் இருப்பதாலும், வர்த்தக வாய்ப்புகள் இல்லாததாலும் அதன் பொருளாதாரம் மோசநிலையிலுள்ளது. கிம் வம்சத்தின் கீழ் வட கொரியா தனது சோசலிச சித்தாந்தத்தை இரட்டிப்பாக்கி, ஜூச்சே (juche,) அல்லது ‘தன்னிறைவு’ எனுங் கொள்கையை வலியுறுத்தி, ஆட்சியை இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது. வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கொண்டிருக்கும் நிலைப்பாடு, வடகொரியா பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தப்படுவதற்கும் அதன் மக்களுக்கு பரவலான துன்பங்கள் விளையவும்தான் வழிவகுத்துள்ளது. உலக உணவுத் திட்டம் (WFP), உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்ளும் 20 நாடுகளில் வட கொரியாவை தொடர்ந்து பட்டியலிட்டு வருதிலிருந்து உணவு உற்பத்தியில் வடகொரியாவின் தாழ்நிலை புலனாகிறது.
- கொரியப் போரின் சாம்பல்களில் இருந்து பிறந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி காலப்போக்கில் பெருவிரிவாகிவிட்டது. வட கொரியா, தென் கொரியா எனப் பிளவுபட்டுப் பிணக்குக்காட்டி நிற்கும் இருநாடுகளும் பின்னிப் பிணைந்த வரலாற்றைக் கொண்டவைதான். ஆனால், இருநாடுகளிடையே தற்போது வரை நிலவிவருவது கசப்பும் சிக்கலும் விரவிக்கிடக்கும் உறவு. அதன் காரணமாகவே இந்நாடுகளிடையே அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதைக் காண்கிறோம். இந்த நிலவரம் நீடிக்கும் காரணமாகவே பல தசாப்தங்களாகக், கொரிய தீபகற்பம் உலகின் கவனத்தை ஈர்த்து வைத்திருக்கும் பகுதியாக இருந்து வருகிறது. வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான உறவு உலக அரசியலின் மையப் புள்ளியாகவும் இருக்கிறதென்பது இப்போதைய நிச்சயம்.
- சித்தாந்த வேறுபாடுகள், பரஸ்பர அவநம்பிக்கை, வரலாற்றின் கனம் அனைத்தும் கூடியிருப்பதால் ‘இரு நாட்டு நல்லிணக்கம்’ என்பது எளிதான காரியமல்ல என்றுதான் பலரும் கருதுகின்றனர். கொரிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் எதிர்காலம் பல காரணிகளைப் பொறுத்தது: சர்வதேச ராஜதந்திரம், உலகளாவிய அதிகார இயக்கவியலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இரு கொரியாக்களுக்குள்ளும் தலைமைத்துவத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்பவையும் இவற்றிலடங்கும்.
- மிரட்டும் தற்போதைய நிதர்சனமாக, வட கொரியாவின் பியோங்யாங்கில் (ஜனவரி 15, 2024) நடைபெற்ற உச்ச மக்கள் சபையில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங், தென் கொரியாவை "முக்கிய எதிரி" என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார். "போரைத் தவிர்க்கும் எண்ணம் தனக்கு இல்லை" என்று ‘பொன்மொழி’யுடன், தான் ‘தூண்டப்பட்டால் தெற்கை அழிப்பதாக’ச் சவடால் பேச்சும் அவரிடமிருந்து தொடர்ந்து வந்துள்ளது.
- பேச்சு மட்டுமா? செயலுந்தான். புத்தாண்டுத் தொடக்கத்தில், வடகொரியா, தென் கொரியாவிற்கு அருகிலுள்ள அதன் மேற்கு கடற்கரையில் சுமார் 200 பீரங்கி குண்டுகளை ‘சும்மா’ வீசியது, சியோல், இதற்கு சுமார் 400 சுற்று பீரங்கித் தாக்குதல்களுடன் பதிலடி கொடுத்தது. அதோடு நிறுத்தவில்லை வட கொரியா. முன்னோடியில்லாத வகையில், தொடர்ந்து மூன்று நாட்கள் நேரடி பீரங்கிப் பயிற்சிகளை நடத்துவதாகச் சொன்னது, செய்தது. கொரிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை "போரில், இரண்டு விரோதிகளுக்கு இடையிலான உறவுதான்" என்று கிம் வகைப்படுத்திய பின்னர் இத்தகைய நடவடிக்கைகள் பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளன.
- கடந்த ஆண்டு இறுதியிலும் கொரிய தொழிலாளர் கட்சியின் மத்திய குழுவின் முழுஅமர்வின் போது, வடக்கு - தெற்கு உறவுகள், சொந்த நாடுகளாக இருந்து, விரோதமான போர் நிலைக்கு மாறிவிட்டதாக கிம் சந்தேகத்திற்கு இடமின்றி அறிவித்தார். இனி அமைதியான மறு ஒருங்கிணைப்பு என்ற கருத்தை வட கொரியா தொடராது என்றும், தேவைப்பட்டால், தென் கொரியப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான உறுதிப்பாட்டிலேயே தொடரும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பின்னணியில், இப்போது கொரிய தீபகற்பம் போர் நிறுத்த நிலையிலிருந்து, எந்த நேரத்திலும் மோதல் ஏற்படக்கூடிய நிலைக்கு மாறியுள்ளது.
- அரசுகளிடையே மோதல்போக்கு வளர்ந்து கொண்டே போனாலும் மக்களிடையே “இருநாட்டு இணைப்பு” என்ற எண்ணம் ‘கண்ணில்படாது நீருக்குள் ஓடுவதாகச் சொல்லப்படும் சரசுவதி நதியைப்போல’- எண்ண ஓட்டமாக - இருந்து வருகிறதாம். தற்போதுள்ள சூழல் மேக இருளில் ‘ஒருங்கிணைந்த கொரியா’ என்ற கனவு நிச்சயமற்ற தோற்றமாக இருந்தாலும், ஒருவேளை ஒரு நாள், இரு கொரியாக்களும் இடைவெளியைக் குறைத்து, ஒரு புதிய அத்தியாயத்தை ஒன்றாக எழுதலாம். அதற்கான ஒரு வழியைக் அரசுகளும் மக்களும் கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கை,DMZ பகுதியின் இரு எல்லைகளிலுமுள்ள மக்களை ஊக்குவித்துவரும் உள்ளார்ந்த ஒரு இலக்காக உள்ளது. இதற்கான ‘ஒருசோறு பதம்’, இக்கட்டுரை மூலம் நாம் சந்திக்கும் கவிஞர் லீ யூன்- சியோப்.
- இணைப்பு எண்ணம் இருநாட்டு மக்கள் மனதில் வளர்தளிராக முளைவிட்டிருக்குமோ என எண்ணக்கூடிய வாய்ப்புகள் தென்படுவதைத்தான் நாம் சந்திக்கும் கவிஞர் கருத்து வழி உணர்கிறோம். முளைவிடு தளிர் வளர்நிலைவரை, உலகம் பார்த்துக் கொண்டிருக்கும், மூச்சைப் பிடித்துக் கொண்டு; சிறந்ததொரு நிகழ்வை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் அந்நாள்வரை.
- ஜனநாயக நாடான தென் கொரியாவில் நடைமுறையில் இருந்து வரும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் (National Security Act, NSA) குறித்துச் சற்றுவிரிவாக அறிந்து மேற்செல்ல அவசியமிருக்கிறது. வாங்க....
- கொரியாவில் நான்கு தசாப்த கால ஜப்பானிய ஆதிக்கத்தின்போது, கொரிய மக்களிடையே சுதந்திரவேட்கைகள் துளிர்விட்டு விடாமல் தடுக்க, சுதந்திரம் அடைவதற்கென்று எந்த நடவடிக்கைகளும் மக்களாலோ, மக்கள் தலைவர்கள் மூலமாகவோ தலைதூக்கிவிடாமல் ஒடுக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில்தான் தென்கொரிய “தேசிய பாதுகாப்புச் சட்டம்” (National Security Act, NSA) உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம், கொரிய குடியரசு நிறுவப்பட்ட (ஆகஸ்ட்,15, 1948) நான்கு மாதங்களுக்குள்ளாகவே - டிசம்பர் 1, 1948 இல் –இயற்றப்பட்டது என்பது குறிப்பிட உரியது. ‘மனித குலத்தின் பொதுமொழி’ எனப் போற்றப்படுகிற “மனித உரிமைகள்” தொகுக்கப்பட்ட, உலக மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration of Human Rights- UDHR), தென் கொரியா தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இயற்றிய ஒன்பது நாள்களுக்குப் பிறகு -டிசம்பர் 10, 1948 இல்- ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்ற வரலாற்றுச் செய்தியுடன் கடக்கலாம் வாங்க..
- 1948 டிசம்பர் முதல் அமல்படுத்தப்பட்டு வரும் தென் கொரியாவின் தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆரம்பம் முதலே எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதைத் தேர்தலின் மூலம் புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட அதிபர் சிங்மேன்ரீ, சட்டம் இயற்றப்பட்ட முதல் ஆண்டில், தேசிய சட்டமன்றத்தின் பதின் மூன்று உறுப்பினர்கள் உள்பட கிட்டத்தட்ட இரண்டு லட்சம் (188, 621) பேரைக் கைது செய்ய அல்லது சிறையில் அடைக்கப் பயன்படுத்தினார்; 1949 வாக்கில், கம்யூனிஸ்டுகள் என்று குற்றம்சாட்டப்பட்ட முப்பதாயிரம் பேரைச் சிறையில் அடைத்தார் என்ற முதற் தகவலே காட்டும்.
- கொரியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டம் மொத்தம் 25 (Articles) பிரிவுகளையும் ஒரு முடிவுரையையும் (Epilogue) கொண்டுள்ளது. 1948 முதல் இந்தச் சட்டம் ஏழுமுறை திருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் முதன்மை நோக்கம், கட்டமைப்பு, பயன்படுத்தப்படும் முறைகள், கடுமைகள் முதலியவற்றில் கடந்த 76 ஆண்டுகளில் பெருமாற்றம் நிகழாமலே, ‘சீரிளமைத் திற’த்தோடு - வீரியப் பயன்பாடு மாறாமல்- அப்படியே உள்ளது. அடிப்படையில் இந்தச் சட்டம் "மாநிலத்தின் பாதுகாப்பையும் குடிமக்களின் வாழ்வாதாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக, அரசின் பாதுகாப்பைச் சமரசம் செய்ய எத்தனிக்கும், அல்லது அத்திசையில் எதிர்பார்க்கப்படும் எந்த நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும்” என விவரிக்கப்படுகிறது.
- ஆனால், நடைமுறையில் பொதுவாக, தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கடந்த கால இருப்பு முழுவதிலும், "பலநூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், வெளியீட்டாளர்கள், புத்தகக்கடை உரிமையாளர்களைக் கைது செய்யப்பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இச்சட்டத்தை விமர்சனம் செய்யும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.”குடிபோதையில், மிகப் பொதுவான கருத்துக்களை வெளியிட்டதற்காகக் கூட சாதாரண மக்களைக் கைது செய்யவும் தண்டிக்கவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது” என ஒரு வெளிநாட்டு விமர்சகர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரபல கவிஞர் கிம்சிஹா, "வர்க்கப் பிரிவினையை ஆதரித்து" கவிதைகளை எழுதியதற்காக 1970-களில் சிறையில் அடைக்கப்பட்டார். NSA-வைப் பயன்படுத்தி, பெரும்பாலும் நையாண்டி எழுத்தாளர்களைத் தண்டிப்பதற்கும், வட கொரியாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை விநியோகிப்பதன் மூலம் ‘மக்கள் மன உறுதியை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக’ என்ற குற்றச்சாட்டின் கீழ் பலர் மீது இந்தச் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இடதுசாரிகளின் வீடுகள், அலுவலகங்களைச் சோதனை செய்து அச்சுறுத்துவதற்கும் வழக்குகள் தாக்கலாகியுள்ளன.
- அபத்த, அதீத வழக்குகள் அடிக்கடி அணிவகுப்பதுண்டு. இதோ சில எடுத்துக்காட்டுகள்: ஜெர்மனியில் வசித்துவந்த ஒரு தென் கொரிய அதிருப்தியாளர் முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரியாவுக்குத் திரும்பியபோது இந்தச் சட்டப்படி கைது செய்யப்பட்டார். ஒருவெளியீட்டு நிறுவனத்தின் உரிமையாளர், “அமெரிக்காவில் வசித்து வருகிற - வடகொரியாவுக்கு அனுதாபம் காட்டியதாகக் கூறப்படும்- கொரியர்கள் எழுதிய பயணக்கட்டுரைகளை வெளியிட்டதற்காக” கைது செய்யப்பட்டார். ஆராய்ச்சி (PhD) மாணவரான கிம் மியோங்-சூ என்பவர், “ஏற்கனவே தென் கொரியப் பொது நூலகங்களில் பரவலாகக் கிடைக்கும் வட கொரியா பற்றிய புத்தகங்களை விற்றதற்காக” ஆறு மாத சிறைத்தண்டனையும் இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனையும் பெற்றார். ஒரு தென் கொரியப் பெண், “14 வட கொரியப் பாடல்களின் பதிவுகளைத் தன்வசம் சேமித்து வைத்திருந்ததற்காக” இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அப்பெண்ணின் சூழ்நிலை கருதி, தண்டனை நான்கு ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்துவைக்கப்பட்டுள்ளது. நான்காண்டு முடிந்தவுடன் அப்பெண் தானே சிறைவாசலுக்குச் சென்று, இடைநீக்க காலம் முடிந்துவிட்டதால் சிறைவாசத்திற்கு வந்திருப்பதாகச் சொல்லிச் சரணடைய வேண்டும்.
- இரண்டொருமுறை ராணுவப்புரட்சி நடந்து அவர்களது தர்பாரின்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் அதிகடுமையான செயல்பாடு உணரப்பட்டது உண்மைதான். அதன்பின் 1987 முதலுள்ள தாராளவாத அரசாங்கங்களும் NSA-வின் கடுங்கரங்களைத் தளர்த்த முன்வரவில்லை. கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலுள்ள காலகட்டத்தில் எந்த நிர்வாகமும் அச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய யாதொரு தீவிர முயற்சியையும் எடுக்கவில்லை, ஒரே ஒருமுறை (2004) தவிர. ஒருமுறை எடுத்த முயற்சியும் தோல்வியானது. லைடன் பல்கலைக்கழகத்தின் ஸ்டீவன் டென்னி, கிறிஸ்டோபர் கிரீன் போன்ற ஆய்வாளர்கள் “தேசிய பாதுகாப்பு சட்டத்தை (NSA) ரத்து செய்வதற்கு அரசியல் ஆதரவு (Political Support) மிகக் குறைவு” என்று சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும்,“எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வரும்போதும் இந்தச் சட்டத்தைத் தங்கள் விருப்பங்களுக்கிசைய - எதிர்கிறவர்களை அடக்க-பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதையொட்டித் தற்போதைய அரசு / நிர்வாகமும் குறைந்தபட்ச தாராளங் கூடக்காட்டுவது இல்லை” என்றும் இந்த ஆய்வாளர்கள் கருத்தளித்துள்ளனர்.
- சரி, இந்தத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கடுமையான விதிகள் என்று பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும், ஐ.நாவின் மனித உரிமை ஆணைய அறிக்கைகளும் குறிப்பிடுவது யாதெனக் காணலாம், வாங்க.
- "இந்தச்சட்டத்தின் பிரிவு (Article) 2“ அரசுக்கு எதிரான குழுக்கள்" என்பது "நாட்டில் / அரசாங்கத்தின் மீது ஊடுருவலை நடத்த அல்லது ஊடுருவலுக்கு உதவ அல்லது தேசிய இடையூறுகளை ஏற்படுத்தும் நோக்கங்களைக் கொண்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அமைப்புகள் அல்லது குழுக்கள்" என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
- தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மிகவும் விமர்சிக்கப்பட்ட அம்சம், பிரிவு 7 ஆகும். இப்பிரிவு, அரசுக்கு எதிரான குழுவைப் பாராட்டுபவர்கள் அல்லது அனுதாபம் காட்டுபவர்களைத் தண்டிக்க வகைசெய்கிறது. “அரச - விரோதகுழுவைப் "பாராட்டுபவர்கள், ஊக்குவிப்பவர்கள், அக்குழுக்களின் செய்திகளைக் / கருத்துகளைப் பரப்புபவர்கள் அல்லது அவற்றிற்கு ஒத்துழைப்பவர்கள்" ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக் குள்ளாக்கப்படுவார்கள்.
- அதேவேளையில், அந்த செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவிரும்பும் ஒருகுழுவை ஒழுங்கமைக்கும் அல்லது அக்குழுவுடன் சேரும் எவரும் குறைந்தபட்சம் ஒருவருட சிறைத்தண்டனையைப் பெறுவார்கள். "தேசிய ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய தவறான தகவல்களை உருவாக்குபவர்கள் அல்லது பரப்புபவர்கள்" குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
- பிரிவு 7ஐ" மீறும் பொருட்டு“ ஆவணங்கள், (ஓவியம், சிற்பம் போன்ற) கலைகள், கட்டுரைகள், கவிதைகள் அல்லது பிறவெளியீடுகளை வெளியிலிருந்து இறக்குமதி செய்தல், நகல் எடுத்தல், வைத்திருத்தல், கொண்டு செல்லுதல், பரப்புதல், விற்பனை செய்தல் அல்லது பெறுதல்" தண்டிக்கப்படும்.
- பிரிவு 7, உட்பிரிவு 9 இன் கீழ், "அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட அல்லது அவ்வாறு செய்யத்திட்டமிட்டுள்ள நபர்களை மறைப்பதற்கும், சந்திப்பதற்கும், தொடர்பு கொள்வதற்கும், தொடர்பு கொள்வதற்கான பிறவசதிகளை வழங்குவதற்கும், மதிப்புமிக்க பொருள்கள் அல்லது பிற பண நன்மைகள் அல்லது வசதிகளைத் தெரிந்தே வழங்குபவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். “உட்பிரிவு 10 இன்கீழ், “அரசுக்கு எதிரான செயல்களைச் செய்தவர்களைப் பற்றித் தகவல் தெரிவிக்கத் தவறும் எவருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.”
- சட்டத்தின் அத்தியாயம்(Chapter) 3 சாட்சிகளைக் கைது செய்தல், சிறைக்காவலில் தடுத்து வைத்தல், (பிரிவு 18) மற்றும் மேல் முறையீடுகள் (பிரிவு 20) உள்ளிட்ட "சிறப்பு வழக்குத் தொடுப்புகள்" பற்றி பேசுகிறது. பின்னாட்களில் -1980களில்- இந்த சட்டத்தோடு ‘கம்யூனிச எதிர்ப்புச் சட்டமும்’ இணைக்கப்பட்டது
- தென் கொரியா, அதன் முன்னாள் ராணுவ சர்வாதிகாரத்தை 1987 இல் ஜனநாயகமாக மாற்றியமைத்தாலும், சுதந்திரமான பேச்சுரிமையின் மீதான கட்டுப்பாடுகள், பழைய ஜெனரல்களின் சர்வாதிகாரப் போக்குகள் நீடிப்பது உண்மை என்பது சிலஆய்வாளர்களின் கருத்து. 2003 முதல் சராசரியாக ஆண்டுக்கு 60-க்கும் மேற்பட்ட NSA வழக்குகள் தென் கொரிய நீதிமன்றங்களில் தாக்கலாவதை வைத்துத் இதனைத் தெரிந்து கொள்ளலாம்.
- தேசியப் பாதுகாப்புக்கு ஏற்படும் உண்மையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான அளவுக்கு அவசியமான சட்ட வரம்புகள் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்பதை நடுநிலையாளர்கள் உணர்கிறார்கள். அதே சமயத்தில், தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில், சர்வதேச தரங்களை மீறும் வகையில், மக்களது கருத்து சுதந்திரத்தின் மீதான சட்டவிரோத கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதை நியாயப்படுத்தமுடியாதல்லவா? என்றும் குமுறுகிறார்கள்.
- தென் கொரியாவின் தலைநகரம் (சியோல்) அணு ஆயுதம் ஏந்தி, அச்சுறுத்திவரும் சர்வாதிகாரி ஒருவரின் ஏவுகணை வரம்பிற்குள் இருக்கும்போது; "போரைத் தவிர்க்கும் எண்ணம் தனக்கு இல்லை" எனப் பட்டவர்த்தனமாகத் தோள் தட்டும் அரசுத் தலைவர் அண்மை நாட்டில் எதேச்சதிகாரமாக ஆண்டுவரும்போது; இந்த நாட்டை அண்டைநாட்டுத் தலைவர் “முக்கிய எதிரி " என்று வேறு பிரகடனப்படுத்திவரும்போது தென்கொரியாவின் தேசியப் பாதுகாப்புச் சட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தால், ஆச்சரியப்படுவதற்கில்லைதான் என்று அரசுக்கு ஆதரவானதொரு கருத்தும் இருப்பதை நேர்மையாக இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.
- "தென் கொரியா தனது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கணிசமான தளர்வுகளைச் செய்வதன் மூலம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணக்கமாகலாம் அல்லது அந்தச் சட்டத்தை அடியோடு ரத்து செய்வது நாட்டில் ஜனநாயகத்தை உண்மையானதாக்கும். “தென் கொரியப் பொதுமக்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்குவதை ஆதரிக்கவில்லை என்றும், சில உள்நாட்டு சிவில் உரிமை அமைப்புகள், வெளியிலுள்ள மனித உரிமை குழுக்கள், விமர்சகர்கள்தான் விமர்சனம் செய்து வருகின்றன” என்று அரசுத்தரப்பு சமாளித்துவரும் நிலையில் எதிர்பார்க்கும் நல்மாற்றம் நிகழுமா என்பது கேள்வியாக நிற்கிறது.
- மாமியார் வீடு” , “களி தின்னல்” என்ற சொற்கூட்டுப் பிரயோகங்கள் இங்கு பலருக்குச் சிறை வாசத்தை நினைவுபடுத்தலாம். அதுபோலவே "கஞ்சியும் பீன்ஸும் சாப்பிடு” எனும் பொருள்தரும் கொரிய சொற்றொடர், “ஜெயிலுக்குள் போ’’ என்பதை வேறு சொற்களில் சொல்லுவதாகும். தென் கொரியக் கவிஞரான 68 வயது லீ யூன்- சியோப் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகள், 7 & 12-ன் கீழ் அரசு தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கவிஞரை 14 மாதங்கள் “கஞ்சியும் பீன்ஸும் சாப்பிடு” என்று தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் என்ன?
- கவிதைதான் குற்றம்!
- அதுவும் ஒரே ஒரு கவிதைதான் குற்றம்!
- வடக்கைப் (வட கொரியா) புகழ்ந்து ஒரு கவிதை எழுதியது குற்றம்!
- வளமான, ஜனநாயக நாடான தென் கொரியாவில், ஒரு கவிதை மூலம், “நாட்டின் இருப்பு மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தியதற்காக" (threat to the Existence of the State and its Security) தொடுக்கப்பட்ட வழக்கில்தான் 68 வயதான லீ யூன்-சியோப்புக்கு 2023 நவம்பரில் 14 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
- தென் கொரியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), அதன் கடுமைகள் குறித்து முன்னரே குறிப்பிட்டுள்ளோம். வடகொரிய ஊடகங்களை அணுகுவது, வடகொரியாவை அதன் ஆட்சியாளர்களைப் பற்றி நல்லதாக எதுவும் சொன்னாலும், எழுதினாலும் குற்றமாகும் என்பதையும் அறிந்து வந்திருக்கிறோம்.
- வயதான முதியவர் ஒருவர் – நாட்டில் மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் பேச்சில் சாதாரணப் புழக்கத்திலுள்ள “இருநாட்டு இணைப்பு” எனும் உள்ளார்ந்த விழைவை – பொதுவில் எழுத்து மூலம், ஒரு கவிதையாகச் 2016 இல் சொன்னதற்காகச் சிறையிலடைக்கும் தாராளத்தில்தான் தென்கொரியாவில் ஜனநாயகம், கருத்துக்கூற உரிமை என்பதெல்லாம்!
- இந்த வழக்கைப்பற்றிச் சொல்லப்போனால், தென் கொரியாவில் மிக அதிகம் அறியப்படாத ஒரு கவிஞர்தான் லீ. அவர் முழுநேரக் கவிஞருமல்ல; எப்போதாவது கவிதைகள் எழுதும் ‘பகுதி நேரக் கவிஞர்’ என்று கூட அவரைச் சொல்லலாம். மேலும், அவரது கவிதையின் உள்பொருள் ஒன்றும் புதிதல்ல. தென் கொரியாவில் உள்ள வயதான மக்கள் தமக்குள் பேசிக்கொள்ளும் விஷயம்தான் –‘இரண்டு கொரியாக்களும் முன்பு இருந்ததுபோல ஒன்றாக இணைந்திருந்தால் நல்லது’ என்ற பழம்பேச்சு! (நம் நாட்டிலும் பிரிட்டிஷ் ஆட்சியை, ஏன் எமர்ஜென்ஸி காலத்தைக்கூட -உட்கசப்பு மொத்தமாக உணரப்பட்டிருக்கும்போதும் - அக்காலத்தில் நிலவிய ஒழுங்கு, கட்டுப்பாடு போன்ற சில நன்மைகளுக்காகச் சிலாகிப்பவர்களும் உளரே!)
- இந்த வழக்கிலுள்ள குறிப்பிட உரிய விநோதம் என்னவென்றால், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தென்கொரிய அதிபர் பதவி ஏற்கும்போது எடுத்துக்கொள்ளும் உறுதிமொழியில் முதன்மையானது, "நாட்டைப் பாதுகாப்பது மற்றும் அமைதியான முறையில் தாயகத்தின் ஐக்கியத்துக்காக (இணைப்புக்காக) முழுமுயற்சி தொடர்வது." என்பதாகும். அதிபர் பதவி ஏற்கும்போது எடுக்கப்படும் இருநாட்டு ஐக்கியம் (இணைப்பு) என்ற உறுதி குறித்து, சாதாரணரான லீ கவிதை எழுதினால் ஏன் குற்றமாச்சு?
- குற்றமாகப் பார்க்கப்படும் லீயின், “இணைந்திருக்க வழிமுறைகள்” ("Means of Unification"), என்ற கவிதை வட கொரியாவின் மகிமைகளைப் பற்றித் தென் கொரியாவில் யாரையும் அப்படியே நம்ப வைத்துவிடும் என்று கற்பனை செய்து பார்ப்பதே கடினம். மேலும், அக்கவிதை தென்கொரிய ஊடகங்களில் / வலைத்தளங்களில் வெளியாகவில்லை. அக்கவிதை வடகொரிய அரசு வலைத்தளத்தில்தான், அந்நாட்டில் நடைபெற்றதொரு போட்டியில் முதற் பரிசு பெற்ற கவிதை, என்பதால், வெளியாகியுள்ளது. கவிதை எழுதியுள்ளவரின் அடிப்படை எண்ணம், ‘இரு நாடுகளும் இணைந்திருந்தால் நல்லது’ என மக்களிடையே புழக்கத்திலுள்ள கருத்தைப் பொதுப்பந்தியில் பரிமாறுவதே! இணைப்பின் நன்மைகளைச் சொல்ல வரும்போது லீ தன் கவிதையில், கூறியிருப்பதுதான் குற்றச்சாட்டின் மையப்பொருள் எனத் தெரிகிறது.
அப்படி என்ன சொன்னார், லீ யூன் சியோப் தன் கவிதையில்?
- “ஒன்றுபட்ட கொரியாவில், தற்கொலைகள் குறையும்; மக்கள் கடனும் சரியும்” என்றெழுதினார். வட கொரியாவின் சோசலிச அமைப்பின் கீழ் இரண்டு கொரியாக்களும் ஒன்றிணைக்கப்பட்டால், மக்களுக்கு இலவச வீட்டுவசதி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி கிடைக்கும் என்றும் லீ யூன் சியோப் எழுதினார்.
- இதுபோக, ஏற்கனவே, 2013 இல், “வடகொரிய ராணுவம் மிகவும் வலிமையாகவும், கட்டுக்கோப்புடன், ஒரு தலைமைக்கு விசுவாசமாகவும் உள்ளது “ என்ற (உண்மைக்) கருத்தை லீ யூன் சியோப் எழுதியுள்ளார் என்ற பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குற்றமும் சேர்த்துப் பார்க்கப்படுகிறது. அவ்வப்போது வலைப்பதிவுகளில் லீ பதிவிடும் கருத்துகள் 'அரசுக்கு எதிரான உள்ளடக்கத்தை'க் கொண்டிருப்பதாகவும் வழக்குத் தொடுப்புத் தரப்பு கூடுதலாகத் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டம், ‘அரசாங்க விரோத அமைப்பு’களைப் புகழ்வதையும் ஊக்குவிப்பதையும் தடை செய்கிறது’ என்பதும், வடகொரிய விசயங்களைப் பற்றி (நல்லபடியாக) எது பேசினாலும் எழுதினாலும் தேசிய பாதுகாப்புச் சட்ட வலைக்குள் வரும் என்பதும் குற்றச்சாட்டின் வலியுறுத்தல்.
- லீ யூன் சியோப் எழுதிய, குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் கவிதை, வடகொரியாவில் 2016 ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு போட்டியில் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அக்கவிதை வட கொரிய அரசு ஊடகமான ‘Uriminjokkiri’-ல் வெளியிடப்பட்டதும், லீ மீதான குற்றங்களின் கனத்தைக் கூட்டுகிறது.
- கொரியா ஹெரால்டு பத்திரிக்கை வேறொரு சமயத்தில் வெளியிட்ட ஒரு செய்தி இங்கே குறிப்பிட உரியதாகிறது. தென் கொரியாவின் தலைநகர் சியோல் மார்க்கெட்டுக்கு வெளியே ஒரு இளைஞன், வடகொரிய அதிபர் கிம் சிரித்தவாறு (அதுவே அபூர்வம்!) நிற்கும் படம்போட்டு, அதன் கீழே "தோழரே, மலர்ந்த பாதையில் நடக்க வருக" என்ற வாசகம் அச்சிட்ட டீ சர்டுகளை விற்றதற்காகக் கைது செய்யப்பட்டான். உண்மையாகப் பார்க்கப்போனால் இது நடைமுறையிலுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குள்ளாக்கப்படக் கூடிய குற்றம்தான். ஆனால், உயர் அதிகாரிகள் “இது வயிற்றுப் பிழைப்புக்காகப் பணம் சம்பாதிப்பதற்காகத்தான் செய்யப்பட்டது. ஆதலால் தேசியப்பாதுகாப்பு சட்ட வலையில் இந்த இளைஞனைச் சுருட்ட வேண்டாம். நெருக்கடியான மார்க்கெட் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் பனியன் விற்றுக் கொண்டிருந்ததாக வழக்குப் போட்டால் போதும்’’ என்று முடிவெடுத்துள்ளனர்.
- இந்த நிகழ்வு சொல்லும் செய்தி என்னவென்றால், தென் கொரியத் தாராள ஜனநாயகத்தில், வயிற்றுப் பிழைப்புக்குச் செய்யும் தவறு மன்னிக்கப்படலாம்; ஆனால் கருத்துப் பரவலுக்கு (கவிதை எழுதுவது போன்ற) எது செய்தாலும் அது கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட வேண்டிய குற்றங்களாகும் என்பதே!
- "கருத்துக் கொள்ளுதல்’ ‘கருத்துக் கூறுதல்’ முதலிய சுதந்திரத்திற்கான தங்கள் உரிமையை அமைதியாகப் பயன்படுத்துபவர்களைத் துன்புறுத்தவோ, கைதுசெய்யவோ, அவசியமின்றித் தண்டிக்கவோ அல்லது அவர்களை மௌனமாக்கவோ சட்டங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளிலிருந்து அரசாங்கங்கள் அறிந்துகொள்ள வேண்டியதாகும்.
- தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) தனது அரசியல் எதிரிகளை "அரச எதிர்ப்பு சக்திகள்" என்று அடிக்கடி சித்தரிக்கிறார், சாதகமற்ற பத்திரிகை செய்திகள், வழக்கமாக "போலி செய்திகள்" என்று முத்திரை குத்தப்படுகின்றன. மேலும், அவ்வாறு செய்திகளை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்களின் அலுவலகங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. செய்திகள் உண்மையாக இருந்தாலும் கூட, நிர்வாகம், அதன் கூட்டாளிகள் ஆகியோர் மீது அவதூறுவழக்குகள் அரசால் தொடரப்பட்டுள்ளன.
- நாட்டில் மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் பேச்சில் சாதாரணப் புழக்கத்திலுள்ள “இருநாட்டு இணைப்பு” எனும் உள்ளார்ந்த விழைவை – பொதுவில் எழுத்து மூலம், ஒரு கவிதையாக 2016 இல் எழுதியதற்காக 2023 இல் கவிஞர் லீ கைது செய்யப்பட்டுத் தண்டனையும் வழங்கப்பட்டிருப்பது தென் கொரியாவில் யூன் சுக் இயோல் ஆட்சியில் பரவி நிலவுகிற சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
- நவம்பர் 2023 இல் கவிஞர் லீயின் மீது ஏற்றப்பட்ட குற்றச்சாட்டு அவரது முதல் குற்றம் அல்ல என்பதாலும், இப்போதைய தண்டனை இருக்கலாம் என்கிறார்கள் சிலர். இதேபோன்ற கருத்துக்களைக் கூறிய குற்றத்திற்காக லீ யூன் சியோப் முன்பு எப்போதோ 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக கொரியா ஹெரால்டு ஒரு செய்தி வெளியிட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும் ஒரு முதிய கவிஞரை (68 வயதினர்) “தென் கொரியாவிற்கு அச்சுறுத்தலாக” இருந்ததாகக் கூறுவதில் கொஞ்சம் அதிகமாகத்தானே தெரிகிறது அபத்தம்?
- சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் 2023 நவம்பர் 27 இல் அளித்துள்ள தனது தீர்ப்பில்,"பிரதிவாதி (லீ யூன் சியோப்) வட கொரியாவின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும், அதை மகிமைப்படுத்தும் மற்றும் பாராட்டும் வகையாக; நாட்டின் இருப்பு மற்றும் பாதுகாப்பை அல்லது அடிப்படை தாராளவாத ஜனநாயக ஒழுங்கை அச்சுறுத்தும் கணிசமான எண்ணிக்கையிலான நாசகார வெளிப்பாடுகளைத் தயாரித்து விநியோகித்துள்ளார்.எனவே, அவர் கடுமையாகத் தண்டிக்கப்படுவது தவிர்க்க முடியாதது."என்று கூறிப்பிட்டு 14 மாதச் சிறைத் தண்டனை அறிவித்துள்ளது.
- இதற்கிடையில், முறையாக அமைச்சரவையைக் கூட்டித் தீர்மானிக்காமல், தன்விருப்பில், ராணுவச் சட்டத்தைப் பிறப்பித்ததால், தென்கொரிய நாடாளுமன்றத்தால், 14- டிசம்பர் 2024 இல் (Impeachment) ‘பதவிக்குத் தக்காரல்ல’ என அறிவிக்கப்பட்டுள்ளார். 2022 தேர்தலில் வெற்றிபெற்று அதிபரான யூன் சுக் இயோல், இக்கட்டுரை எழுதப்பட்டுள்ள இவ்வாரத்தில், கொரிய அரசியலமைப்பு நீதிமன்றத்தின் (Constitutional Court of Korea) இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார். பதவியிலிருக்கும்போது கைது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள கொரியாவின் முதல் அதிபர் எனும் ‘இழி பெருமை’ பெற்றுநிற்கும் யூன் தலை தப்புமா? விரைவில் தெரியும்!
- கவிஞர் லீ யூன் சியோப் தண்டனைக்காலமான 14 மாதங்கள் கழிந்துவிட்டன. கவிஞர் லீ வெளிவந்து விட்டாரா அல்லது தற்போதும் சிறையில் வாடுகிறாரா என்பது தற்போது தென் கொரியாவில் சூழ்ந்திருக்கும் அசாதாரண அரசியல் நிலவரம் காரணமாக ஊடகங்கள், இணையம் வாயிலாக அறிய முடியவில்லை.
- பி.கு: குற்றமான லீயின் முழுக் கவிதை, அவரது படங்கள் முனைந்து தேடியும் அணுக முடியவில்லை. கவிதையில் லீ குறிப்பிட்டுள்ளதாக இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள செய்திகள், நீதிமன்ற வழக்கு குறித்த ஆவணங்கள், இணைய வளங்களிலிருந்து தேடித் திரட்டப்பட்டவை.
நன்றி: தினமணி (16 – 02 – 2025)