இரும்புக் காலம் ஏன் முக்கியம்?
- மனிதா்கள் இரும்புக்கு முன்பாகவே தாமிரத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா். ஆனால், இரும்பின் அளவுக்கு தாமிரம் உறுதியான உலோகம் இல்லை என்பதால்தான், காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்குவதில் தாமிரத்தின் பங்கு பெரிய அளவில் இல்லை. அதனால், பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாமிரத்தை விட இரும்பின் உருகும் வெப்பநிலை அதிகம். தாமிரத்தை உருக்கும் உலைகளும் அக்காலகட்டத்தில் இல்லை. ஆகவே, ஒரு சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறியத் தொடங்கியதென்றால், இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின் அடுத்த கட்டத்துக்கு நகரத் தொடங்கியிருக்கிறது என்றே நாம் அறியலாம்.
- இதற்குப் பிறகு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட சமூகம் உருவாகி, உபரி உற்பத்தி, செல்வம், இனக்குழுக்களுக்குத் தலைமை, அரசு ஆகியவையும் உருவாகத் தொடங்கியது. ஆகவேதான், இரும்புக்காலத்தின் தொடக்கம் மிக முக்கியமானது என்று ஆய்வாளா்கள் கருதுகிறாா்கள். உலக அளவில் மிகப் பழமையான இரும்பு 1911-ஆம் ஆண்டில் வடஎகிப்தில் அல்-கொ்செவில் என்ற இடத்தில் இருந்த கல்லறையில் இருந்து எடுக்கப்பட்டது. அந்தக் கல்லறையில் இருந்து 9 மணிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. இவற்றின் காலம் கி.மு. 3400 முதல் 3100 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவை இரும்புத்தாதை உருக்கிச் செய்யப்பட்டவை அல்ல. மாறாக, விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில் செய்யப்பட்டவை. இரும்புத்தாதை உருக்கி இரும்பு செய்யும் தொழில்நுட்பம் கி.மு.1300 வாக்கில் அனடோலியா என்று அழைக்கப்பட்ட தற்போதைய துருக்கி பகுதியில் தொடங்கியது. அங்கிருந்தே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. ஆனால், இரும்பின் பயன்பாடு எப்படித் தொடங்கி, எப்படிப் பரவியது என்பது தொடா்பான தொடா் விவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
- தமிழ்நாட்டில் 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல்துறை ஆதிச்சநல்லூா், சிவகளையில் கிடைத்த மாதிரிகளை வைத்து காலக்கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறது. இவற்றின் காலம் கி.மு. 3345 வரை இருக்கலாம் என்று தமிழகத் தொல்லியல்துறை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அப்படியானால், 5350 ஆண்டுகளுக்கு முன்பு,, இரும்பின் பயன்பாடு தமிழ்நாட்டில் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.
- கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் கிடைத்த இரு இரும்புப் பொருள்களுடன் இருந்த கரிமப் பொருள்கள் ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடும் முறையில் கணக்கீடு செய்யப்பட்டபோது, ஒரு கரிமப் பொருளின் சராசரி மைய அளவீட்டுக் காலம் கி.மு. 2122 என்று தெரிகிறது. அதனுடைய அடிப்படையில் தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததாக அறியலாம்.
- சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டத்தில் உள்ள மாங்காடு என்ற இடத்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் இரும்பு வாள் ஒன்று கிடைத்தது. இந்த வாளைக் காலக்கணக்கீடுக்கு உட்படுத்திய போது அதன் காலம் கி.மு. 1604 முதல் கி.மு.1416 வரை இருக்கலாம் என்று தெரிகிறது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, கீழ்நமண்டியில் 2023-இல் நடந்த அகழாய்வில் சில ஈமப் பேழைகள் கண்டெடுக்கப்பட்டதில் அவற்றின் இரும்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அக்காலகட்டம் கி.மு. 1769 முதல் கி.மு.1615 வரை இருக்கலாம் என்று தெரிகிறது.
- ஹரப்பா நாகரிகத்தை ஆரம்ப கால ஹரப்பா நாகரிகம், முதிா்ந்த ஹரப்பா நாகரிகம், பிற்கால ஹரப்பா நாகரிகம் எனப் பிரித்துப் பாா்க்கிறபோது ஆரம்ப கால ஹரப்பா நாகரிகம் என்பது கி.மு. 3300- ஆம் ஆண்டுவாக்கில் தொடங்கியது. தற்போது சிவகளையில் கிடைத்திருக்கும் இரும்பு அதேகாலகட்டத்தைச் சோ்ந்தது. ஆனால், ஹரப்பா நாகரிகத்தைப் பொருத்தவரை அங்கு இரும்பு கிடையாது. செம்புதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதே காலகட்டத்தில், தமிழ்நாட்டில் இரும்பு உருக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறெனில், வடஇந்தியா செம்பு காலத்தில் இருந்த போது, விந்திய மலைக்குத் தெற்கே இருந்த பகுதிகள் இரும்புக்காலத்தில் இருந்தன என்று மிக திட்டவட்டமாக முடிவுக்கு வரலாம்.
- வடஇந்தியாவில் கிடைத்ததைப் போல, தமிழ்நாட்டில் அதிக அளவு செம்பு கிடைக்காத காரணத்தால், இங்கு செம்பு காலம் வழக்கத்தில் இருக்கவில்லை. இருந்த போதிலும், ஆதிச்சநல்லூரில் கிடைக்கப் பெற்ற ஈமத் தாழிகளில் கி.மு. 15-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தைச் சோ்ந்த உயா்தர தகர மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
- இரும்புக்கால பயன்பாடு மத்திய ஐரோப்பாவில் கி.மு. 8-ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலும் இருந்திருக்கிறது. மத்திய தரைக் கடல் பகுதியில் கிரேக்க ரோமப் பேரரசு காலத்தில் உருவான வரலாற்று மரபுகளுடனும், இந்தியாவில் பௌத்த சமயம் ஆகியவற்றின் எழுச்சியுடனும், சீனாவின் கன்பூசியனிசத்தின் தோற்றத்துடனும் இரும்புக் காலம் முடிவுக்கு வந்தது.
- வடஐரோப்பிய பகுதிகளில் இது மத்திய கால தொடக்கப் பகுதிகளில் நீடித்தது. வரலாற்றில் இரும்புக் காலத்தை வரையறை செய்கிறபோது, வெண்கலக் காலம் வழக்கிழந்த பகுதியும், இரும்புக்காலம் தொடங்கிய பகுதியும் என்பது கி.மு. 1400 முதல் கி.மு.1300 வரையிலானது எனச் சொல்லலாம். செம்மையான இரும்புக்காலம் கி.மு. 1300 முதல் கி.பி 500 வரை என்று கருதப்படுகிறது. அதாவது, பழைய இரும்புக்காலம் கி.மு. 1300 முதல் கி.மு. 475 வரையிலும், மத்திய இரும்புக்காலம் என்பது கி.மு.475 முதல் கி.பி.250 வரையிலும் புதிய இரும்புக்காலம் என்பது கி.பி 250 முதல் கி.பி 500 வரை என்று கால அளவுகோலைக் கருதலாம்.
- இரும்புக்காலத்தின் போது தாமிரக் கருவிகளையும், ஆயுதங்களையும் உருவாக்க எஃகு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை இரும்பும், கரிமமும் சோ்ந்த கலவையாகும். கரிமத்தின் அளவு கருவியின் எடையில் 0.3 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதம் வரை கலக்கப்பட்டிருக்கிறது. எஃகை விடக் குறைந்த கரிம அளவு கொண்ட தேனிரும்புப் கருவிகள் தயாரிக்கப்பட்டாலும், அவை குறைந்த அளவு கடினத்தன்மையுள்ள கருவிகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. எஃகை கடினப்படுத்தும்முறை மத்திய தரைகடல் பகுதிகளிலும், ஆப்பிரிக்க பகுதிகளிலும் பெரிதளவு மாறுபட்டிருக்கிறது. சில பகுதிகளில் ஆயுதங்கள் மொத்தமாக கரிமம் சோ்த்து எஃகால் ஆக்கப்பட்டிருக்கின்றன.
- வட இந்தியாவிலும், தக்காணத்திலும் கி.மு. 2000 ஆண்டுகளிலேயே உலோகவியல் தோன்றிவிட்டது. மல்கா், தாதாபூா், உத்தர பிரதேசத்தின் லாகூா், தேவா போன்ற இடங்களில் இரும்புக்காலம் கி.மு. 18 -ஆம் நூற்றாண்டில் இருந்து கி.மு. 12 -ஆம் நூற்றாண்டு வரை ஆரம்பமாகியிருக்கிறது. ஆந்திர பிரதேசத்தின் ஹைதராபாத் நகரில் காணப்படும் இரும்புகளின் காலம் கி.மு. 13 -ஆம் நூற்றாண்டு அளவிலானதாகும். ஆகவேதான், தமிழகத்திலும், இலங்கையிலும் இரும்பின் தோற்றம் கி.மு. 1000ஆவது ஆண்டுகளிலேயே தொடங்கியிருக்கிறது.
- இரும்புப் பொருள்களின் பழமை கி.மு. 13 -ஆம் நூற்றாண்டு அளவு கூட சொல்லலாம். இவ்வாறெனில், இதன் மூலம் தமிழகத்தில் இரும்புக் காலத்தை கி.மு. 2000 அளவு மாற்றி அமைக்க வேண்டியிருக்கிறது.
- பண்டைய கிழக்காசிய நாடுகளில் இரும்புக் காலம் சீனம், கொரியா, ஜப்பான் என்ற வழியில் பயணிக்கிறது. சீனாவின் இரும்புக்காலம் கி.மு. 9 -ஆம் நூற்றாண்டிலேயே தொடங்குகிறது. இங்கு காணப்படும் பெரும் முத்திரையின் எழுத்துகள் கி.மு. 8 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவையாகவும், யாங்சி பகுதியில் காணப்படும் இரும்பு பொருள்கள் கி.மு. 6 -ஆம் நூற்றாண்டு பழைமையானதாகவும் கண்டறியப்பட்டது. கொரியாவின் மஞ்சள் கடல் பகுதியில் இரும்புக்காலம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டிலும், ஜப்பானில் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 3 --ஆம் நூற்றாண்டு வரை இரும்புக்காலம் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு வரலாற்றை ஆய்வு செய்கிற போது தமிழகத்தின் இரும்புக்கால நாகரிகம் என்பது 5300 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கிறது. இரும்பைப் பிரித்தெடுக்கும், இரும்பை உருக்கும் அறிவைத் தமிழா்கள் பெற்றிருந்திருக்கிறாா்கள்.
- கி.மு. 500 தொடங்கி கி.பி 300 வரைக்குமான சற்றேறக்குறைய 800 ஆண்டு காலத்தில் தமிழகத்தின் வரலாற்றை இரும்புக்காலம் என்றே அழைக்கலாம். சங்ககாலம் என்று இக்காலகட்டத்தை இலக்கியத் திறனாய்வாளா்கள் கணக்கிட்டுள்ளனா். இக்காலகட்டத்தின் வரலாற்றை தொல்லியல் பொருள்கள், செம்மொழி இலக்கியங்கள், குறிப்பாக எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும், பழந்தமிழ் கல்வெட்டுகள், இவற்றோடு பானையோட்டு எழுத்துக் கீறல்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. இவற்றில் இருந்து வரலாற்றுச் சான்றுகளை நாம் அறியலாம். இவ்வாறான சான்றுகளையும், தரவுகளையும் பெறுவதற்கு இரும்புக் கருவிகள் பெரிதும் உதவியிருக்கின்றன.
- ஏனென்றால், அக்காலத்து மக்கள் பானையோட்டுக் கீறல்களை இரும்புக் கருவிகளைக் கொண்டே பயன்படுத்தியிருக்கின்றனா். அதேபோன்று, இரும்பிலான எழுத்தாணியைக் கொண்டே செம்மொழி இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு வகையான தொழில்நுட்பமாகும்.
- வரலாற்றில் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது ஒரு கருத்தியலும் உருவாக்கப்படுகிறது. கல்வி, கருத்தியல், தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடா்புடையவை. எப்போதும் தொழில்நுட்பம் மக்களிடையே ஒரு பிளவினைத் தோற்றுவிக்கும். அப்போது அங்கு அதிகாரம் உருவாகும். அதிகாரம் படைத்த அறிவுடையவா்கள், தொழில்நுட்பத்தைக் கையாண்டு வரலாற்றின் நிலையான சான்றுகளை உருவாக்குகிறாா்கள். இவ்வாறே இச்சான்றுகள் தோன்றியிருக்கின்றன.
நன்றி: தினமணி (12 – 02 – 2025)