இருளர் சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் - தடைகளைத் தாண்டி சாதித்த காளியம்மாள்
- நகரப் பகுதி மக்களுக்குக் கிடைப்பதுபோல் கல்வி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கிராமப்புறப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குக் கிடைப் பதில்லை. கிராமப்புறப் பகுதிகளிலேயே இந்நிலை என்றால் குக்கிராம, மலைவாழ் மக்களின் சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஒவ்வொரு தேவையைப் பூர்த்திசெய்வதும் அவர்களுக்குக் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில், குக்கிராமத்தில் பிறந்து, தடைகளைக் கடந்து இன்று தமிழ்நாடு அளவில் இருளர் பழங்குடியினத்தில் முதல் பெண் வழக்கறிஞர் என்கிற நிலையை அடைந்துள்ளார் வழக்கறிஞர் எம்.காளியம்மாள்.
- கோவை, காரமடை அருகே தோலம் பாளையத்தை அடுத்துள்ள கோபனாரி பழங் குடியினக் கிராமத்தில் பிறந்தவர் காளியம்மாள். வீட்டுக்கு ஒரே மகள். இவர்களது கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. “பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மருத்துவம் ஆகிய மூன்றும் எங்களுக்குச் சாதாரணமாகக் கிடைத்துவிடாது. தடைகளைத் தாண்டியே பெற வேண்டும். என்னை நன்றாகப் படிக்க வைக்க என் பெற்றோர் நினைத்தாலும், அதற்கான வசதி அவர்களிடம் இல்லை. தந்தை கூலித் தொழிலாளி. தாய் கால்நடை வளர்க்கிறார். வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோபனாரி அரசுத் தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, 10 கிலோ மீட்டர் தொலைவில், ஆனைக்கட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தேன்” என்று சொல்லும் காளியம்மாள், ஆற்றைக் கடந்துதான் பள்ளிக்குச் சென்றிருக்கிறார்.
- “நாங்கள் கேரள எல்லையில் வசிப்பதால் எங்களுக்குப் பேருந்து வசதி இல்லை. எங்களது பகுதியில் காட்டாறு ஓடுகிறது. பள்ளிக்குச் செல்ல ஆற்றைக் கடக்க வேண்டும். ஆற்றில் நீரோட்டம் அதிகரித்தாலோ, மழைக்காலங்களிலோ எங்கள் உயிரைப் பணயம் வைத்துத்தான் பள்ளிக்குச் செல்ல முடியும். பின்னர், 14 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சீளியூர் அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்தேன். ஒரு பேருந்து மட்டும்தான் இருக்கும். அதைத் தவறவிட்டால், நடந்துதான் செல்ல வேண்டும். பிளஸ் 2 முடித்த பின்னர், கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரமும் மதுரை சட்டக்கல்லூரியில் பிஏபிஎல்-ம் படித்தேன். அரசு கலைக்கல்லூரியில் காலை 8.30 மணிக்கு வகுப்பு தொடங்கிவிடும். காலை 5.45 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால்தான் 40 கிலோ மீட்டரைக் கடந்து நேரத்துக்குக் கல்லூரிக்குப் போக முடியும்” என்று சொல்லும் காளியம்மாள், சட்டப் படிப்பை முடித்து கடந்த 2 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பயிற்சிபெற்று வருகிறார்.
- நானும் குடியரசுத் தலைவரும்: “பெண் குழந்தைகளைப் படிக்கவைக்காத பெற்றோர் மத்தியில் என்னை என் பெற்றோர் படிக்க வைத்தனர். சாலை வசதி, பேருந்து வசதி, வனவிலங்கை எதிர்கொள்ளல், ஆற்றுவெள்ளம் எனப் பல தடைகளைக் கடந்துதான் நானும் படித்தேன். கல்வி கற்க நான் பட்ட சிரமங்களை என் கிராம மக்கள் அனுபவிக்கக் கூடாது, அவர்களுக்கான தடைகளைத் தகர்த்து அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என முடிவெடுத்து வழக்கறிஞர் பணியைத் தேர்ந்தெடுத்தேன். எனது கல்விக்குப் பலரும் உதவினர். நான் கற்ற கல்வியை வைத்து எங்கள் கிராமத்தில் என்னால் இயன்ற சேவைகளைச் செய்கிறேன். எங்கள் கிராமத்திலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் உள்ளனரா எனத் தொடர்ந்து ஆய்வு செய்து, அவ்வாறு இருந்தால் அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து வருகிறேன்.
- 2012இல் இருந்து எங்கள் கிராம மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிறேன். பழங்குடியினக் கிராமத்தில் பிறந்த எனக்குக் கல்விதான் அடையாளத்தைக் கொடுத்தது. ஆடம்பரத்தைவிடக் கல்விதான் அவசியம். உதகை ராஜ்பவனில் கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன். அப்போது அவர் என்னிடம், “நாம் இருவரும் பழங்குடியினப் பெண்கள். இந்நிலைக்கு வர நாம் எவ்வளவு சிரமப்பட்டோம் என்பது தெரியும். நாம் மனது வைத்து இணைந்து நம் மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற பாலமாக இருந்து உதவினால், அவர்கள் உயர்வார்கள்” என்றார். அந்த வார்த்தைகளைச் செயலாக்கும் பணியில்தான் நான் ஈடுபட்டுவருகிறேன்” என்று சொல்லும்போது காளியம்மாளின் கண்களில் அவ்வளவு உறுதி!
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 02 – 2025)