இலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ!
- புகழ்பெற்ற, விருதுகள் பல பெற்ற எழுத்தாளர் ஒருவரின் பேச்சை அண்மையில் கேட்க நேர்ந்தது. “பல யானைகள் வந்தது” என்று பேசிக்கொண்டிருந்தார். கதையின் சுவையில் கிறங்கிக்கிடந்தவர்களுக்கு அது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை.
- அத்தோடு நிற்கவில்லை கதை. “சென்றுப் பார்த்தான்”, “என்றுச் சொன்னார்” என்றும் மும்முரமாக முழங்கிக்கொண்டிருந்தார். அவர் பேசியது உலக இலக்கியத்தில் ஓர் அற்புதமான கதையைக் குறித்து. கதையை விட மனதில்லை என்றாலும், இலக்கணக் கொலையைச் சகிக்க இயலாமல் வெளியேறிவிட்டேன்.
- பொதுவாக, எழுதும்போதுதான் சந்திப்பிழைகள், ஒற்றுப்பிழைகள் வரும் என்பது பட்டறிவு. ஆனால், பேசும்போதே இலக்கணப் பிழை வரும் அளவுக்குப் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் இலக்கணத்தைக் கழித்துவிட்டே இலக்கியம் படைக்க முனைகின்றனர். இவர்களில் சிலரே ‘தமிழ் தேய்கிறதே!’ என்று சமூக ஊடகங்களில் அங்கலாய்க்கும்போதுதான், நமக்கு வாயடைத்துப் போய்விடுகிறது.
இலக்கணத்தின் முக்கியத்துவம்:
- ‘இலக்கியத்துக்கு எதற்கு இலக்கணம்?’ என்கிற கேள்வியே ஆபத்தானது. வரவு-செலவு முதல் வாழ்க்கை முறைவரை எல்லாவற்றையும் திட்டமிட்டுத்தான் வாழ்கிறோம். வணிகம் முதல் பணிகள்வரை எல்லாமே ஒரு திட்டமிட்ட ஒழுங்குக்கு, வரையறைக்கு உட்பட்டே இயங்குகின்றன. எவையுமே வானத்தில் இருந்து குதித்தவை அல்ல. நமது வசதிக்காக உருவாக்கிக்கொண்ட ஒழுங்குகள். அவற்றால்தான் நமது வாழ்வில் சிக்கல்கள் குறைந்துள்ளன.
- மொழியைக் கண்டுபிடித்த மனித இனம் ஏன் அதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்சென்றது? இருப்பதை மென்மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகத்தானே! சக்கரத்தைக் கண்டறிந்த மனித இனம் பாத்திரங்கள் செய்வதோடு அதை நிறுத்திக்கொண்டுவிடவில்லையே! நான்கு சக்கரங்களை இணைத்து வண்டி செய்த பிறகு அதன்மீது சட்டங்களைப் பிணைத்து அமர்ந்த பின்னர் கூடுதலாக ஒரு வசதியை உணர்ந்தது.
- வண்டியின் அழகும் வசதியும் மெருகும் கூடினாலும் நான்கு சக்கரங்களைப் பிணைத்த சட்டகம் என்பதுதானே அடிப்படை...அதுபோலத்தான் இலக்கணமும். நீங்கள் மொழியுடன் விளையாடலாம். ஆனால், இலக்கணம் தேவையா என்று கேட்கும் அளவுக்கு அது சிறுபிள்ளை விளையாட்டாக இருந்துவிட முடியாது.
அர்த்தமற்ற வாதம்:
- இங்கு இன்னொரு வாதம் முன்வைக்கப்பட வாய்ப்பு உண்டு. ‘முழுக்க முழுக்க இலக்கணச் சுத்தமாகவும் யாப்பிலக்கணத்தின்படியும் தமிழ்க் கவிதைகள், செய்யுள்கள் எழுதப்பட்ட காலம் ஒன்று இருந்தது அல்லவா... அதிலிருந்து வசனக் கவிதை உருவாகி, தற்போது நவீனக் கவிதையாக அது மாறியிருக்கிறது. இப்படி இருக்கும்போது மாற்றத்தை ஏற்றுக்கொள்வதுதான் உலக நியதி. இதனால் மொழி ஒன்றும் அழிந்துவிடவில்லையே!’ என்பதே அவ்வாதம்.
- உண்மைதான். தமிழ்க் கவிதையில் வடிவ மாற்றம் நடந்திருக்கிறது. அதேநேரம், மொழிக்கு என்ன வேண்டுமானாலும் ஆகிவிட்டுப் போகட்டும் என்று அது செயல்படவில்லை. அதனால்தான் நாடுகளின் எல்லைகளைக் கடந்தும் கவிதைகள் கிளை பரப்புகின்றன. செய்யுளை எழுதிப் பாடும் வழக்கம் இப்போது இல்லை.
- மாறாக, கவிதை படிக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால், அது கூடுமானவரை இலக்கண ஒழுங்குக்கு உட்பட்டு இயங்கவே விரும்புகிறது. ஒரு வெளிநாட்டவர், அயல்மொழி பேசுவோர் நம் படைப்பின் உள்ளடக்கத்தை மட்டுமல்ல, அதன் வடிவத்தை மட்டுமல்ல, அதன் இலக்கண ஒழுங்கையும் சேர்த்துத்தான் ஒரு பண்பாட்டைப் புரிந்துகொள்வார்.
- இலக்கணத்தின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் புனைவு எழுத்துகளோ, அபுனைவு எழுத்துகளோ தம்மில் வெளிப்படுத்துவதில்லை. ஓர் உரைநடை, குறைந்தபட்ச இலக்கணக் கண்ணியத்தையாவது கொண்டிருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எப்படித் தவறாகும்? ஆங்கிலத்திலோ, வேறு உலக மொழியிலோ இப்படிச் செய்ய முடியுமா? தாய்மொழியின் எளிய இலக்கண விதிகளை மலைபோல் எண்ணி மருகும் படைப்பாளிகள், எட்டாம் வகுப்புத் தரத்திலான இலக்கண நூல்களின் துணையைப் பெற்றாலே தங்குதடையற்ற மொழி வாய்த்துவிடும்.
மொழிக்குச் சேதாரம்:
- அண்மைக் காலத்தில் ஒருமை-பன்மை சார்ந்த இலக்கணப் பிழை எவ்விதக் கூச்சமும் இன்றிக் கோலோச்சுகிறது. ‘அது’ என்பது ஒருமை; ‘அவை’ என்பது பன்மை. தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்குக்கூட இது நன்றாகத் தெரியும். ஒருமையில் தொடங்கிப் பன்மையில் முடிப்பது, பன்மையில் தொடங்கி ஒருமையில் முடிப்பது பரவலாக உள்ளது. மற்றொருபுறம், பல கவிதை, கதைகளில் ‘அவைகள்’ என்று எழுதப்படுகிறது. ‘அவை’ என்கிற தமிழ்ச் சொல்லுக்கு ‘சான்றோர் கூடுமிடம்’ என்று ஒரு பொருள் உண்டு. ‘அவைகள்’ என்று சொல்லும்போது ஒன்றுக்கு மேற்பட்ட அவைகள் (அதாவது, சான்றோர் கூடும் பல இடங்கள்) என்றே பொருள்படும்.
- உரைநடையிலோ கவிதையிலோ ‘ஒரு’ என்ற சொல்லை எங்கு பயன்படுத்த வேண்டும், ‘ஓர்’ என்ற சொல்லை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் பலருக்கும் மயக்கம் இருக்கிறது. உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் ‘ஓர்’ என்றும், மற்றவற்றுக்கு முன் ‘ஒரு’ என்றும் வரும். ‘அருகில்’ என்றால் அண்மையில் என்று பொருள். ‘அருகாமை’யில் என்றால் தொலைவில் என்று பொருள். இந்தப் பொருள் வேறுபாட்டை அறியாமல் பலரும் ‘என் அருகாமையில் வா...’ என்று கவிதை படைத்துக் காதலைத் தொலைவில் வைத்துவிடுகின்றனர்.
- இலக்கியம் எழுதுவோர் இலக்கணத்தில் கொஞ்சம் ஏறக்குறைய இருந்துவிட்டால் என்ன என்று கேட்கலாம். அதில் ஒரு பெரிய ஆபத்து இருக்கிறது. படைப்புலகுக்கு வெளியே இருக்கும் மக்கள் தாங்கள் பின்பற்றும் இலக்கணத்துக்கு, இலக்கியமே வழிகாட்டி என்று நினைக்கிறார்கள். ‘புகழ்பெற்ற கவிஞர் எப்படிப் பிழையுடன் எழுதுவார்?’, ‘எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவர்... அவர் எழுதுவது தவறாகவா இருக்கும்?’ என்று பொதுச்சமூகம் நம்பத் தொடங்கிவிட்டால், சேதாரம் மொழிக்குத்தானே?
- இன்றைக்குச் சமூக ஊடகங்களில் எழுதும் படைப்பாளிகள் பலரும் எழுதும் முறை ‘திக்’கென்று இருக்கிறது. ஒருவர் ‘வந்திருக்கிறது’ என்பதற்குப் பதிலாக ‘வந்திற்கு’ என்று எழுதுகிறார். ‘போய்விட்டது’ என்பது ‘போயிற்கு’ ஆகிவிடுகிறது. இதை ஒரு சாமானிய வாசகன் பின்பற்றத் தொடங்கிவிட்டால் என்னவாகும்? இதேபோல் ‘மாத்திரை விழுங்கு’ என்பது ‘மாத்திரை எடுத்துக்கொள்’ என்று ஆகிவிட்டிருக்கிறது.
- அதன் நீட்சியாக ‘நீங்க என்ன உணவு எடுத்துக்கறீங்க’ என்று தொலைக்காட்சி அலைவரிசைகளில் மருத்துவர்கள் ‘நாகரிக’மாகக் கேட்கின்றனர். கீரைகள், காய்கறிகள், பழங்களை ‘எடுத்துக்கொண்டா’லே உடலுக்கு எல்லா சத்துக்களும் கிடைத்துவிடுமாம். ‘எடுத்தா’லே இவ்வளவு பயன்கள் என்றால், அவற்றைச் ‘சாப்பிட்டால்’ எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்... சிந்திக்க வேண்டுமில்லையா!
தமிழைக் காப்பாற்ற...
- கலையும் இலக்கியமும்தான் காலத்தைக் காட்டும் கண்ணாடிகள். எனவேதான் படைப்பாளிகளின் கைகளில் மொழியைக் காப்பாற்றும் கூடுதல் பொறுப்பும் சேர்ந்தே இருக்கிறது. மொழியை வளர்க்க அரசுகளும் பல்வேறு அமைப்புகளை நடத்துகின்றன. இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அரசின் பொதுநூலகத் துறையின் 4,000க்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு நூல்கள் வாங்கப்படுகின்றன. இந்த அமைப்புகளுக்கும் தமிழைக் காக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
- இந்த அமைப்புகள் இலக்கணமோ மொழி வளமோ இல்லாத நூல்களைத் தொடக்க நிலையிலேயே வடிகட்டிவிட வேண்டும். விருதுகள் முதல் நூலக ஆணை வரை இது கறாராகப் பின்பற்றப்பட்டுவிட்டால், ‘தமிழ் எழுத்துகளும் கற்பனையும் இருந்தாலே போதும், படைப்பாளியாக உலகம் நம்மை ஏற்றுக்கொண்டுவிடும். மொழியோ, இலக்கணமோ தேவையில்லை’ என்கிற எண்ணம் கொண்டோரின் மனம் மாறத் தொடங்கும்.
- படைப்புலகமும் பதிப்புலகமும் இழந்த புதையல் ஒன்று உண்டு. அதுதான் ‘பிழை திருத்துநர்களின் உலகம்’. குறைந்த ஊதியம் பெற்றாலும் கவிதை, கட்டுரை, உரைநடையில் மலிந்து கிடக்கும் களைகளைக் களைந்தவர்கள் அவர்கள். எழுத்துப் பிழைகள் மட்டுமல்லாது, இலக்கணப் பிழைகளையும் திருத்தி மொழியைக் காத்த அந்தச் சமூகம் தேய்ந்து, வழக்கொழிந்தே போய்விட்டது.
- இனியாவது பதிப்புலகமும் படைப்புலகமும் இணைந்து பிழைதிருத்துநர்கள், மொழியியல் வல்லுநர்களைப் போற்றிப் பராமரிக்க வேண்டும். சாத்தியமுள்ள எல்லா வழிகளிலும் முயன்று அடிப்படை இலக்கணத்தையாவது காப்பாற்றியாக வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்ச் சொற்கள் நம் கைகளில் இருக்கும்... தமிழ் இருக்காது.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 03 – 2025)