இலங்கைத் தேர்தல்கள் உணர்த்தும் செய்தி என்ன?
- முப்பது ஆண்டு கால யுத்தம் இலங்கையின் வரலாற்றின் மாபெரும் அவலங்களை விதைத்திருக்கிறது. இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறபோதும் இலங்கையை மாறிமாறி அவலமும் நெருக்கடியும் உலுப்பியபடியே இருக்கின்றன.
- இந்தச் சூழலில் 2019ஆம் ஆண்டில் முன்னாள் அதிபர் கோத்தபயவின் அதிகாரக் கைப்பற்றல், இலங்கை மக்களைப் பசியிலும் தாகத்திலும் தள்ளிய யுகத்தில் முடித்தது. அதிபராக இருந்த கோத்தபய அதிகாரத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டு, நாடாளுமன்றம் வழியாக அதிபராகத் தேர்வான ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சி முடிந்த நிலையில், அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கிறார். பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றிருக்கிறார்.
பழைய வரலாறு:
- தேசிய மக்கள் சக்தி எனப் பெயரிடப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவின் கட்சியின் நிஜமான பெயர் ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) எனப்படும் ஜேவிபி. ஈழத் தமிழர்களுக்கு முன்பே இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட்டம் நடத்தியது ஜேவிபி தான். 1971களில் அரசுக்கு எதிராக ஜேவிபி பெரும் கிளர்ச்சி செய்தது; பல ஆயிரம் ஜேவிபி உறுப்பினர்கள் கொல்லப்பட்டு சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ஜேவிபி முடக்கப்பட்டது.
- 1983இல் நடந்த ஜூலைப் படுகொலைக்கும் ஜேவிபியே காரணம் என்று அப்போதைய அரசு ஜேவிபியைத் தடைசெய்தது. அதன் பிறகும் 1987இலும் ஜேவிபி கிளர்ச்சியில் ஈடுபட்டது. அப்போதுதான் அக்கட்சியின் தலைவர் ரோஹண விஜயவீர கொல்லப்பட்டார். இலங்கையின் அதிபர் பதவியைக் கைப்பற்ற நினைத்த அவரது கனவும் கலைந்தது.
- இந்த நிலையில் 90களின் பின்னர் ஜேவிபி புதிய தலைமையின் கீழ் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியது. 2001ஆம் ஆண்டிலும் 2004ஆம் ஆண்டிலும் ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி’யுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு கூட்டணி ஆட்சியில் பங்கு வகித்தது. அந்தக் காலக்கட்டத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நார்வேயின் ஏற்பாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அரசு ஈடுபடக் கூடாது என்றும், பிரபாகரனுடனான அமைதி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து போரைத் தொடங்கி விடுதலைப் புலிகளை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, அதற்காக சிங்கள மக்களைத் திரட்டிப் போராட்டங்களில் ஈடுபட்டது ஜேவிபி. அதற்காக ஒரு கட்டத்தில் இலங்கை அரசின் கூட்டணியிலிருந்து விலகி அழுத்தம் கொடுத்தது. இலங்கை அரசு போரை நடத்தி புலிகளை வெல்வதற்குத் தாமே மக்கள் ஆணையைப் பெற்று வழங்கியதாகவும் பெருமை பேசியது.
மீள்வரவு:
- 70களில் இலங்கை அதிபர் பதவியைக் கைப்பற்ற முனைந்து தோல்வியுற்ற ஜேவிபி, 54 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதன் இளைய தலைவரான அனுரகுமார திசாநாயக்க செப்டம்பர் 21இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று இலங்கையின் ஒன்பதாவது அதிபர் ஆனார். ஐக்கிய மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் அனுரவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கா படுதோல்வி அடைந்தார்.
- சஜித்தை அனுர வென்றபோதும் 50% வெற்றியை எட்ட வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஏற்ற வகையில் வெற்றிபெறவில்லை. இரண்டாவது தெரிவு முறையாக விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு 57,40,179 வாக்குகளைப் பெற்று அனுர வெற்றிபெற்றார். இந்த நிலையில் அடுத்து நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்க வேண்டிய நிலை அனுரகுமார அரசுக்கு ஏற்பட்டது.
- அதிபர் பதவியில் தோல்வியைத் தழுவினாலும் பிரதமர் பதவியைக் கைப்பற்றுவேன் என்று சஜித் பிரேமதாசா தேர்தலில் குதித்தார். முன்னாள் அதிபர் கோத்தபயவின் பெரமுன கட்சியும் களமிறங்கியது. முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்காவும் தனது ஆதரவாளர்களுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைப் பெறுமா என்கிற கேள்வி தேர்தல் அரசியலில் மேலோங்கியது.
- நவம்பர் 14இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 68 லட்சம் வாக்குகளை தேசிய மக்கள் சக்தி கட்சி பெற்று நேரடி வாக்களிப்பின் மூலம் 141 இடங்கள், தேசிய பட்டியல் மூலம் 18 இடங்கள் என மொத்தமாக 159 இடங்களைக் கைப்பற்றியது. இதன் ஊடாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று இலங்கை வரலாற்றில் புதிய சாதனையை அனுர அரசு படைத்துள்ளது.
தமிழர்களின் வாக்குகள்:
- கடந்த காலத்தில் நாம் 69 லட்சம் வாக்குகளைப் பெற்றோம் என்று கோத்தபய ராஜபக்ச பெருமை பேசினார். எனினும் அவர் 145 இடங்களையே கைப்பற்றினார். ஆனால் வடக்கு, கிழக்குத் தமிழர் பகுதியில் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அதிக இடங்களை தேசிய மக்கள் சக்தி பெற்று, வடக்கு கிழக்கில் வெற்றி பெற்ற முதல் சிங்களக் கட்சி என்ற பெயரையும் பதிவுசெய்தது.
- அப்படியெனில் ஈழத் தமிழ் மக்கள் சிங்களக் கட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டார்களா அல்லது தனியாட்சியைக் கைவிட்டுவிட்டார்களா என்கிற கேள்வி இங்கே எழலாம். தமிழ் தேசியக் கட்சிகள் உடைந்து தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாகத் தமிழர் பகுதிகளில் அவை வெற்றி பெற்ற கட்சிகளாக அடையாளம் பெறவில்லை.
- மாறாகக் கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கில் 11 தமிழ் இடங்களைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை 8 இடங்களைப் பெற்றதுடன் வேறு தமிழ்க் கட்சிகளும் சில இடங்களைப் பெற்றன. கடந்த காலம்போல தமிழ்த் தரப்புகள் அனைத்தும் ஒரு கட்சியில் நின்று தேர்தலை எதிர்கொண்டிருந்தால் அனுரவின் கட்சி இதே இடங்களுடன் வடக்கு கிழக்கில் இரண்டாம் நிலையைப் பெற்றிருக்கும்.
- கடந்த காலத்தைப் போலன்றி பழுத்துக்கொழுத்த அரசியல்வாதிகள் அனுரவின் அரசில் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இளைஞர்களும் படித்தவர்களும் கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலரைத் தவிர அனைவரும் புதிய முகங்கள். நாடாளுமன்றத்தைச் சுத்தப்படுத்தப் போகிறோம் என்று அனுர சொல்லியிருந்தார். கட்சித் தாவல்கள், ஊழல்கள் இடம்பெறாத ஆட்சியாக இருக்கும் என்று இலங்கை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- கடந்த காலத்தைப் போலன்றி மக்களின் நிதியைச் சுருட்டி, பாரிய பொருளாதார நெருக்கடிகளில் தள்ளாத ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. நிறைவேற்று அதிகார முறையின்படி இறுதி முடிவு அதிபர் அனுர கையிலேயே உள்ளது; அதேநேரம் இனிமேல் நாடாளுமன்றத்துக்கே அதிகாரம் என்று அனுர தரப்பு சொல்கிறது. அதேபோல புதிய அரசமைப்பு அனைத்து இன மக்களுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்படும் என்றும் அதிபர் அனுர சொல்லியிருக்கிறார்.
சீனாவின் ஆதிக்கம்:
- 2009 போருக்குப் பிந்தைய காலத்தில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மிகவும் கடுமையாக நிலவிவருகிறது. சீனாவைப் போலவே அனுரவின் கட்சியும் இடதுசாரி அமைப்பு என்பதால், இம்முறை தேர்தலில் அனுரகுமார வெற்றி பெறுவதையே சீனா விரும்பியதாகச் சொல்லப்பட்டது. சில நாள்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், யாழ்ப்பாணம் வந்து ஊடகச் சந்திப்பை நடத்தினார்.
- இதில் தெற்கை மையப்படுத்திய ஒரு தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் மிகப் பெரும்பான்மையாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அனுரவோடும் தெற்கோடும் தமிழர்கள் கைகோத்துள்ளமை தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இலங்கையோடும் வடக்கு கிழக்கோடும் சீனா தன் தொடர்புகளை இன்னும் வலுப்படுத்தும் என்றும் சென்ஹொங் கூறிஉள்ளார். இதையடுத்து அனுரவின் ஆட்சியில் சீனாவின் ஆதிக்கம் இன்னமும் அதிகரிக்கப் போகிறதா என்கிற விவாதம் எழுந்திருக்கிறது.
- பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து ராணுவம் விலக வேண்டும், தமிழர்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், அரசியல் உரிமையைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளுக்காகத் தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அனுரவுக்கு வாக்களித்துள்ளனர்.
- தற்போது அனுரவின் அரசில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த எவரும் அமைச்சுப் பதவிகளில் இல்லை. தனிச் சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தைப் போல தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பேரினவாதக் கருத்துக்களைப் பாதுகாத்து, மீண்டும் தமிழ் மக்களையே அடக்கி ஒடுக்கி ஆளும் வழியில் அனுரவின் அரசும் செல்லுமா அல்லது ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடுதலையையும் ஆறுதலான வாழ்க்கையையும் ஏற்படுத்துமா என்பதுதான் இன்றைய முதன்மைக் கேள்வி!
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 11 – 2024)