உயர்வை வணிகத்தில் எட்டுகிறோம்
- மதுரை மல்ட்டி கிராப் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் மேலூர், கோட்டநத்தம்பட்டி, மதுரை கிழக்கு மற்றும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த 1,002 உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். 95% பேர் பெண்களாகவும், 10 பெண்கள் நிர்வாக இயக்குநர்களாகவும் உள்ள இந்நிறுவனத்தில் ரூ. 30 லட்சம் மூலதன நிதி திரட்டப்பட்டுள்ளது.
TNRTP திட்ட தொழில் நிதி:
- TNRTP திட்டத்தின் மூலம் முதல் தொழில் நிதி வழங்கப்பட்டு, நிறுவன உள்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது தொழில்நிதி வழங்கப்பட்டு, அதில் தீவனம் அரைக்கும் இயந்திரம் மற்றும் பால், தேங்காய், வாழை, நிலக்கடலை, காய்கறிகள், இயற்கை உள்ளீடுகள் மொத்தமாகத் திரட்டப்பட்டு மதிப்புக் கூட்டி விற்கப்பட்டுவருகின்றன. இத்துடன் நமது நிறுவனப் பங்குதாரர்களிடம் இருந்து உற்பத்தி செய்யப்படும் பால், ‘சர்வோதயா பால்’ நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. ‘MMM கால்நடை தீவனம்’ வணிக அடையாளம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
நிறுவன தர மேம்பாடு:
- கால்நடை தீவன உற்பத்திக்காக இயந்திரம் வாங்கப்பட்டு, தீவனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெற்றிகரமாகச் செயல்படும் இந்நிறுவனத்திற்கு மாத வருவாய் ரூ. 30,000/- வரை கிடைக்கிறது. நிறுவன தரத்திற்கு விதை விற்பனை உரிமம், MSME பதிவு, FSSAI சான்று ஆகியவை பெறப்பட்டுள்ளன.
‘தங்கம்’ தங்கமாக மிளிரும் கதை!
- கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம், குருடம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த 40 வயதான தங்கம், சிறிய அளவிலான முறுக்குச் சங்கிலி (முறுக்கப்பட்ட பாரம்பரிய மாதிரி சங்கிலி) உற்பத்திப் பட்டறையை நடத்தும் குடும்பத்தில் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார். புகுந்த வீட்டு வியாபாரம் பெரிய அளவில் நடைபெறவில்லை என்று அவருக்குத் தோன்றியது. ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியிருந்தாலும் அவரது தொழில் முனைவோர் தீப்பொறி குறையவில்லை. தனது புகுந்த வீட்டினருடன் இணைந்து பணியாற்றிய தங்கம், பாரம்பரிய முறுக்கப்பட்ட மாடலைத் தயாரிப்பதில் தன் கைவினைத்திறனைக் காட்டினார்.
- இருப்பினும், முதலீடு செய்வதற்கும் விரிவுபடுத்து வதற்கும் வரையறுக்கப்பட்ட வழிமுறைகளுடன், 20 ஆண்டுகளாக வளர்ந்த கடை மிதமான அளவில் செயல்பட்டு வந்தது. தங்கம் தனது நீண்டகாலக் கனவான வணிகத்தை மேம்படுத்தும் நோக்கத்தை நனவாக்க புதிய நடவடிக்கைகளை எடுத்தார். மகளிர் சுயஉதவி குழுவில் இணைந்து, மற்ற உள்ளூர் பெண் தொழில்முனைவோருடன் இணைந்தார். ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் இருந்து இணை மானிய நிதித் திட்ட (MGP) கடன்களுக்கு விண்ணப்பிக்க ECP வழிகாட்டினார். MGP சிறு வணிக நிதியுதவியில் ரூ. 2,22,222 ரூபாய் நிதியுதவி கிடைத்ததும் அவரது மன உறுதியை வளர்ந்தது.
- புதிய மூலதனத்தைப் பெற்றதும், தங்கமும் அவருடைய கணவரும் கருவிகளை மேம்படுத்தியதோடு, திறமையான கைவினைஞர்களை வேலைக்கு அமர்த்தியதன் மூலம் தொழிலை மேம்படுத்தினர். ஆரம்பகாலக் கஷ்டங்கள் முதல் தொழில்முனைவோராக வெற்றியடைந்தது வரை தங்கத்தின் வெற்றிக் கதை, நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. தரமான முறுக்கு கவரிங் சங்கிலிகள், இப்போது பிராந்தியரீதியாகப் புகழ்பெற்ற அவரின் பெயர், இந்தியா முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு உத்வேகமாக நிற்கிறது.
- கடுகு சிறியதானாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப தங்கத்தின் செயல்பாடுகள் இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. இவரின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் சென்ற மாதம் வார இதழ் ஒன்றில் இவரின் சிறப்புப் பேட்டி வெளியானது. “மென்மேலும் சாதனை புரியவும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் வழங்கிய வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றி” என்கிறார் தங்கம். | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600 / 155 330
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 01 – 2025)