TNPSC Thervupettagam

உயிரி - பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்புக் கொள்கை

September 4 , 2024 6 hrs 0 min 15 0

உயிரி - பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்புக் கொள்கை

  • வேளாண்மை, உணவு உற்பத்தி, மருத்​துவம் உள்ளிட்ட துறைகளில் உயிரியல் தொழில்​நுட்பத்தைப் பயன்படுத்திப் பல சிக்கல்களுக்குத் தீர்வுகள் காணப்​பட்டு வருகின்றன. இந்தியாவில் உயிரி தொழில்​நுட்​ப​வியல் (பயோ டெக்னாலஜி) 1986இல் மத்திய அரசின் அறிவியல் - தொழில்​நுட்ப அமைச்​சகத்தில் ஒரு புதிய துறையாகச் சேர்க்​கப்​பட்டது. பிற நாடுகளால் மதிக்​கப்​படத்தக்க நிலையை அத்துறையில் இந்தியா இன்றைக்கு அடைந்​துள்ளது. கரோனா பெருந்​தொற்றுக் காலத்தில் ஏராளமான நாடுகளுக்கு இந்தியா தடுப்​பூசிகளை வழங்கி உதவியது, அதன் உயிரி தொழில்​நுட்​ப​வியல் வளர்ச்​சிக்கு ஒரு சான்று.

மூன்று இலக்குகள்:

  • கடந்த ஓராண்​டாகவே பிரதமர் நரேந்திர மோடி, ‘விகஸித் பாரத்’ (வளர்ச்சி அடைந்த இந்தியா) என்னும் இலக்கு குறித்துப் பேசி வருகிறார். இந்தியா தனது நூறாவது விடுதலை நாளைக் கொண்டாட உள்ள 2047க்குள் மிகுந்த வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதே அதன் சாராம்சம்.
  • சமூக, பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்​சூழல் வளர்ச்​சியில் நிலைத்த தன்மை, நல்ல அரசு நிர்வாகம் போன்ற பல கூறுகளை இத்திட்டம் உள்ளடக்கி​யுள்ளது. இதன் ஒரு பகுதியாக உயிரி தொழில்​நுட்​ப​வியல் துறையில் உற்பத்​தியைப் பெருக்கும் நடவடிக்கை​களில் இந்தியா முழுவீச்சில் ஈடுபட​வுள்ளது. அதற்காக ‘உயிரி-பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, (Biotechnology for Economy, Environment and Employment - Bio-E3) என்கிற கொள்கைக்குப் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஆகஸ்ட் 24இல் ஒப்புதல் அளித்தது.
  • உயிரி தொழில்​நுட்​ப​வியல் துறையில் உற்பத்தியை அதிகரிக்​க​வைத்து, வளமான, தற்சார்பான, சுகாதாரமான நாடு என்கிற நிலையை அடைவதே இக்கொள்​கையின் நோக்கம். இதற்காக உயிரி தொழில்​நுட்​ப​வியலுடன் பொருளா​தாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய மூன்றையும் ஒருங்​கிணைக்கும் அணுகு​முறையை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.

வழிமுறை என்ன?

  • நுகர்​வோருக்குக் குறிப்​பிட்ட பொருள்கள் கிடைப்​பதில் நிலைத்​த தன்மை இல்லை. உற்பத்​திக்காக மூலப்​பொருள்கள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்​தப்​படு​கின்றன. இதனால் கழிவுகள் அதிகளவில் உருவாகின்றன. இந்தப் போக்கின் காரணமாகக் காட்டுத்தீ, பனியாறுகள் உருகுவது, பல்லுயிர் வளம் குறைவது போன்ற சீரழி​வுகள் ஏற்படு​கின்றன.
  • ‘பசுமையை இழக்காத வளர்ச்சி’ என்ற நோக்கத்​துடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இந்த நிலையை மாற்ற ‘பயோ - ஈ3’ சில செயல்​பாடு​களைக் கொண்டுள்ளது. வேதிப்​பொருள் சார்ந்த தொழில்களை உயிர்மப் பொருள்கள் சார்ந்த தொழில்களாக மாற்றுவதை வெகுவாக ஊக்கு​விப்பது இதன் அடிப்படை நோக்கம்.
  • அழிந்த தாவரம், விலங்​குகள் போன்றவை அடங்கிய உயிர்மப் பொருள்கள் (biomass), குப்பைக்​கிடங்​குகள், பசுங்​குடில் வாயுக்கள் போன்ற​வற்றில் நுண்ணு​யிர்ச் செயல்​பாடு​களைத் தூண்டும் தொழிற்​சாலைகள் வழியே மறுபயன்​பாட்டுக்கு உட்படுத்தி, உயிர்மப் பொருள்களை உற்பத்தி செய்வதும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் அறவே இல்லை என்ற நிலையை அடைவதும் இதன் மூலம் சாத்தி​யப்​படும்.
  • இறைச்​சிக்கு மாற்றாகத் தாவரங்​களி​லிருந்து உருவாக்​கப்​படும் புரதங்கள்; கூடுதலான வைட்ட​மின், புரதம் போன்றவை செயற்​கை​யாகச் சேர்க்​கப்பட்ட உணவு வகைகள்; சில நோய்களைக் கண்டறியவும் குணப்​படுத்​தவும் தேவைப்​படும் செயற்கைப் புரதங்கள்; பழச்சாறு பதப்படுத்​துதல் - காகிதக்கூழ் பதப்படுத்​துதல் போன்ற​வற்றுக்குத் தேவையான நுண்ணுயிர் பெக்டினேஸ் போன்ற தொழில் பயன்பாட்டு நொதிகள்; எத்தனால் போன்ற உயிர்ம எரிபொருள்கள்; தடுப்பூசி மருந்து போன்ற​வற்றைத் தயாரிக்கும் துறைகளில் புத்தாக்கத் தொழில்முனைவோரின் பங்களிப்பு பெரிதும் தேவையாக உள்ளது.

முக்கியக் கூறுகள்:

  • எதிர்​பாராத காலநிலை மாற்றங்​களுக்கு ஈடுகொடுக்கும் வேளாண்மை, சிமென்ட் தயாரிப்பு, அனல் மின்சக்தி உற்பத்தி போன்ற வணிகச் செயல்​பாடு​களால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடைச் சேகரித்து, அதிலிருந்து எரிபொருள் தயாரித்தல் போன்ற பணிகளுக்கும் தேவை ஏற்பட்​டுள்ளது. இதிலும் தொழில் முனைவோரின் வரவு எதிர்​நோக்​கப்​படு​கிறது.
  • சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையிலும் இவை அமல்படுத்​தப்​படு​வதற்கான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்​கப்பட உள்ளது. உயிரி தொழில்​நுட்​ப​வியல் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்​பத்தை இணைத்தல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், அற மதிப்​பீடு​களைத் தக்கவைத்தல், பன்னாட்டுத் தர நெறிமுறை​களுக்குத் தகுந்தபடி இவற்றைக் கட்டுப்​படுத்தும் வழிமுறைகளை வகுத்தல் போன்ற​வையும் ‘பயோ ஈ 3’இன் முக்கியமான கூறுகளாகும்.
  • உயிரித் தொழில்​நுட்பம் சார்ந்த பொருளா​தா​ரத்தின் மதிப்பு 2014இல் 10 பில்லியன் டாலராக இருந்தது. 2024இல் 130 பில்லியனாக அது உயர்ந்​துள்ளது. 2030க்குள் இது 300 பில்லியன் டாலர் என்கிற சந்தை மதிப்பை எட்டக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த இலக்கை விரைவாக எட்ட ‘பயோ ஈ3’ வழிவகுக்கும் என மத்திய அறிவியல் - தொழில்​நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் அண்மையில் கூறியிருந்தது குறிப்​பிடத்​தக்கது.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories