உயிர் பெறும் நீர்வண்ணம்
- ஓவியம் என்பது பார்க்கும் காட்சியை வெறுமனே பிரதி செய்வதல்ல. எந்த ஒரு சாதாரண கைபேசியும் அதைச் செய்துவிடும். காட்சியை ஓர் ஓவியர் எப்படிப் பார்க்கிறார், எப்படி உள்வாங்கிக்கொள் கிறார், எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது மிக முக்கியம். இன்றைக்குச் செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு ஒரே பாணியில் சலிப்பை ஏற்படுத்தும் ஓவியங்கள் பெருகிவரும் உலகில், மரபு முறைகளில் படைப் பாற்றலை வெளிப்படுத்து வது குறைந்து வருகிறது.
- ஓவியம், சிற்பம் முதலிய நுண்கலைகளைப் பயிலும் மாணவர்களுக்கு உள்ளூர் உதாரணங்கள், காட்சிரீதியிலான உள்ளூர் எடுத்துக்காட்டு களுடன் கோட்பாடுகளை விளக்கும் நூல்கள் குறைவு. இந்தக் குறையை ‘Medium is the Message' நூல் மூலம் போக்கியுள்ளார் பேராசிரியர் எஸ்.இளங்கோ.
- இன்றைக்குக் காட்சித் தொடர்பியல், காட்சி ஊடகத்தைப் பாடமாகப் பயிலும் மாணவர்கள் அதிகரித்து விட்டார்கள். ஆனால், அவர்களுக்குக் காட்சித் தொடர் பியல் குறித்த ஆழமான புரிதல் இருப்பதில்லை. பொதுவாகவே காட்சிக் கலைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்த பயிற்சி நம் ஊரில் இல்லை. அந்த வகையில் ஒரு முன்னடியை வைத்திருக்கிறது இந்த நூல்.
- எப்போது ஒரு நபர் ஒரு கலை ஊடகத்தைச் சரியான வகையில் உள் வாங்கிப் புரிந்துகொள்கிறாரோ அப்போது அந்த ஊடகம் பெரும் அற்புதங்களை நிகழ்த்தும். இந்த நூலின் ஓவியங்களையும், அது சார்ந்த அனுபவத்தையும் இளங்கோ பகிர்ந்துகொள்ளும்போது அதை உணர முடிகிறது.
- தற்போது காட்சித் தொடர்பியல் பேராசிரியராக இருக்கும் இவர், சென்னை கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர். இவருடைய மீடியம் அல்லது ஊடகம் நீர்வண்ண ஓவியங்கள். பல்வேறு காலக்கட்டங்களில் அவர் வரைந்த நீர்வண்ண ஓவியங்கள், கோட்டோவியங்கள் இந்த நூல் முழுவதும் நிறைந்துள்ளன. பல்வேறு ஆளுமைகள், நிலக்காட்சிகள், கலைச்சின்னங்களை அவர் வரைந்துள்ளார்.
- தன் முத்திரை ஊடகமான நீர்வண்ண ஓவியங்களை அதிக அளவில் வரைந்தாலும் மின்னணு ஊடகம் வழியாகவும் தற்போது வரையத் தொடங்கியுள்ளார். அவையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே இருந்த அல்லது மறைந்துவிட்ட ஒரு காட்சிக்கு ஓவியம் உயிர் அளிக்கிறது. வரைவது என்பது ஓவியனுக்கு ஓர் உணர்ச்சிகரமான அனுபவம்.
- இதற்கெல்லாம் மேலாக ஓவியம் வரைவது ஓவியனுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் உள்ளாற்றலையும் தரும் எனக் குறிப்பிடுகிறார் இளங்கோ. நம்மில் ஒரு துண்டை காலத்தில் பதித்துவிட்டுச்செல்வதுதான் கலை. அந்தக் கலையை எப்படி உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்துவது என்பதற்கும், கலையை ரசிப்பதற்கும் இந்த நூல் வழிகாட்டுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 01 – 2025)