உரிமங்கள் பட்டியல் ஒரு பார்வை
- சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி, பதிப்பக நூல்களுக்கான உரிமங்கள் பட்டியலைத் தயாரித்துள்ளது. பல முக்கியமான நூல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. நூல்களைப் பற்றிய ஆங்கிலக் குறிப்புகள், அந்த நூலுக்கான விற்பனை உரிமத்தை வைத்துள்ள பதிப்பகத்தின் பெயர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு, வெளி மாநில பதிப்பாளர்கள், முகவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். புனைவு, கட்டுரை உள்ளிட்ட பிரிவுகளில் நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில நூல்களின் அறிமுகம் இது:
சோளகர் தொட்டி
- எழுத்தாளார் ச.பாலமுருகனின் காத்திரம் மிக்க படைப்பு இது. வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பழங்குடி மக்கள் பட்ட பாடுகளைச் சொல்லும் நாவல் இது. தற்காலப் புனைவில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த நூலை எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கரிசல் கதைகள்
- எழுத்தாளர் கி.ராஜநாநாரயணனைப் பதிப்பாசிரியராகக் கொண்ட கதைகளின் தொகுப்பு இது. கரிசல் பகுதி யதார்த்த மாந்தர்களின் வாழ்க்கையை இந்த நூல் காட்சிப்படுத்துகிறது. இது தமிழ்நாடு பாட நூல் வெளியீட்டுக் கழக வெளியீடாகும்.
யாமம்
- எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணனின் வரலாற்றுப் பின்னணி நாவல் இது. வாசனை திரவியத்தை உருவகமாகக் கொண்டு வரலாற்றை இந்த நாவல் ஆராய்கிறது. இது தேசாந்திரி பதிப்பக வெளியீடு. இந்த நாவல் வரலாற்றுப் புனைவுப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
வாடிவாசல்
- எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் நாவல் இது. தமிழ்க் கிளாசிக்குகளில் ஒன்றான இது. காளைக்கும் மனிதனுக்குமான மோதலை, பண்பாட்டுப் புலத்தில் சொல்கிறது. குறுநாவல் பிரிவில் இடம்பிடித்துள்ள இந்த நாவல் காலச்சுவடு பதிப்பக வெளியீடு.
வல்லிசை
- எழுத்தாளர் அழகிய பெரியவனின் நாவல் இது. பறையிசைக்கும் பண்பாட்டை ஒரு தனி மனிதனின் வாழ்க்கை வழி விவரித்துச் செல்லும் இந்த நாவல், குறுநாவல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நீலம் பதிப்பக வெளியீடு.
மீரான் கதைகள்
- எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான், கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப்பட்டணத்தின் கதையைத் தொடர்ந்து எழுதியவர். முஸ்லிம் பண்பாட்டு மாற்றங்களைச் சொன்ன கதைசொல்லி. அவரது கதைகள் இவை. இது தமிழ்நாடு பாட நூல் வெளியீட்டுக் கழக வெளியீடாகும்.
சாதி, தலித் பெண்கள்
- இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சாதி, பாலினப் பாகுபாட்டைப் பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. கட்டுரை நூல்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த நூலின் உரிமத்தை நீலம் பதிப்பக வெளியீடு பெற்றுள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 01 – 2025)