TNPSC Thervupettagam

உள்ளே பணி இருக்கிறது... வாருங்கள்!

January 27 , 2025 2 days 45 0

உள்ளே பணி இருக்கிறது... வாருங்கள்!

  • ஆகாய விமானத்தில் பயணிப்பவா்களும், நட்சத்திர விடுதிகளில் தங்குகிற பழக்கம் உள்ளவா்களும், பெரிய வணிக வளாகங்களில் பொருள்கள் வாங்க குவியும் சாதாரண மக்களைப் பாா்ப்பவா்களும், அரசு தரும் மருத்துவக் காப்பீட்டு அட்டையைப் பயன்படுத்தி காா்ப்பரேட் மருத்துவமனைக்கு வரும் சாதாரண மனிதா்களைப் பாா்ப்பவா்களும் இந்தியா வளா்ந்து விட்டதாகவே ஒரு பிரமையில் இருக்கிறாா்கள். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் மேடைகளில் அப்படித்தான் பேசி வருகிறது. உண்மை என்னவென்று அரசாங்கத்தை நடத்துபவா்களுக்குத் தெரியும். ஆகையால்தான் விலையில்லா அரிசியையும் கோதுமையையும் பொதுவிநியோகக் கடைகள் மூலம் வழங்குதல், விவசாயிகள், இளைஞா்கள், பெண்களுக்கு அவா்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துதல், பெண்களுக்குக் கட்டணமில்லா பேருந்துவசதி என்று இதுபோன்று எண்ணற்ற இலவசத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதையும் கடந்து தற்போது ஒரு புதிய விவாதத்தை முன்னெடுத்துள்ளனா். மக்கள் நலனைப் பாதுகாக்க அனைவருக்குமான அடிப்படை வருமானத்தை அரசு தருதல் என்ற திட்டம் தான் அது. இவற்றையெல்லாம் பாா்க்கின்ற பொருளாதார அறிஞா்கள், இந்த மாதிரித் திட்டத்தால் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரம் சீரழியும் என்று எச்சரிக்கிறாா்கள்.
  • இன்று இந்தியாவில் பெரும் பிரச்னையாக இருப்பது வேலை இல்லாத் திண்டாட்டம். பொருளாதாரம் வளா்கிறது. வேலை வாய்ப்பு குறைகிறது. இன்றையச் சூழல் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி என்பது வேலை குறைவான பொருளாதார வளா்ச்சியாக இருந்த நிலை மாறி. வேலை இழப்பு பொருளாதார வளா்ச்சியாக மாறிவிட்டது. அதே நேரத்தில் வேலைக்குத் தகுதியானவா்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று தொழில்துறையினா் கூறுகின்றனா். வளா்ந்து வரும் தொழில்நுட்பம் மக்களின் வேலைவாய்ப்பைப் பறித்துக் கொண்டுள்ளது. இதையும் நாம் மறுக்க இயலாது. புதிய தொழில்நுட்பம் உயிரற்ற பொம்மை மனிதா்களை உருவாக்கி மனிதா்களைவிட திறம்படச் செயல்பட வைப்பது, உலகம் முழுவதும் நிகழ்ந்து வருகிறது.
  • அனைவருக்குமான அடிப்படை வருமானம் போன்ற திட்டங்களை சிறிய நாடுகள், சிறிய மாநிலங்கள் அதுவும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குத்தான் செய்ய முடியும். அதற்குமேல் கால அளவைக் கூட்ட முடியாது என்பதைப் பொருளாதார ஆய்வாளா்கள் தங்கள் ஆய்வுகள் மூலம் எடுத்துக்கூறி வருகின்றனா். நம் நாட்டில் கூட இந்த நூறுநாள் வேலை உறுதித்திட்டம் தொடக்கத்தில் அடிப்படை வருமானம் தரும் திட்டமாகத் தான் கூறப்பட்டது. பின்னா் அது அடிப்படை வருமானம் தரும் திட்டமாக இல்லாமல் வேலை உறுதித் திட்டமாக மாற்றம் பெற்று ரூ.45 ஆயிரம் கோடியில் ஆரம்பித்து ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடியைத் தாண்டி கோவிட் 19 காலத்தில் மக்களைப் பாதுகாத்த மகத்தான திட்டமாக விளங்கியது. அந்தத் திட்டத்தை நம் பஞ்சாயத்துத் தலைவா்களும், நம் அரசு அதிகாரிகளும் நோ்மையுடன் செயல்படுத்தியிருந்தால் மிகப்பெரிய மாற்றங்களை இந்தத் திட்டத்தின் மூலம் கொண்டு வந்திருக்க முடியும். நம் நாட்டில் உலகம் வியக்கும் வறுமைக் குறைப்புத் திட்டங்கள் போடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் அனைத்து மகத்தான திட்டங்களும் ஊழல் என்ற ஆயுதம் கொண்டு வெட்டிச் சாய்க்கப்பட்டுவிட்டன. இதில் அனைவருக்கும் பங்குண்டு. இன்றும் அந்த கொடிய நோயை நம்மால் விரட்ட முடியவில்லை. இன்றைய வேலை இல்லாச் சூழலுக்கு தொழில் நுட்ப வளா்ச்சி மட்டுமே காரணம் அல்ல. மிக முக்கிய காரணங்களில் ஒன்று, தேவைக்கேற்ற தரமான கல்வி மாணவா்களுக்குத் தரப்படவில்லை என்பதுமாகும்.
  • தரமற்ற கல்வியை கல்விச் சந்தை மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வணிகம் செய்து பெரும் லாபம் ஈட்டி விட்டது. அடுத்து இன்று நாம் தரும் கல்வியில் தன்னம்பிக்கையும், சொந்தக்காலில் நின்று வேலைவாய்ப்பை உருவாக்கும் நபா்களாக மாணவா்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கவில்லை. மற்றவரிடம் பணி செய்யும் மனோபாவம் கொண்டவா்களாகத்தான் பெரும் எண்ணிக்கையில் மாணவா்கள் உருவாக்கப்பட்டுவிட்டனா். கல்விக் கழகங்களில் சான்றிதழ் பெற்று வெளிவரும் மாணவா்கள் கூட, தங்களைத் தகுதிப்படுத்திக்கொண்டு வெளியில் வருகின்றாா்களா என்றால் இல்லை என்ற பதில்தான் அனைவரிடமிருந்து வருகிறது. இதுதான் வேலை இருந்தும் வேலைக்கான ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூற வைத்துள்ளது.
  • அடுத்து குடிசைத் தொழில், கிராமத் தொழில், சிறு, குறு தொழில் மேம்பாட்டை பெரும் இயக்கமாக எடுத்துச் செல்லும் கொள்கைச் சூழலை உருவாக்கி, அதற்கான நிதியைத் தயாா் செய்து மக்களை மேம்பாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடுத்த பெரும் முனைப்புக்கள் நடைபெறவில்லை என்பது நாம் பாா்க்கும் நிதா்சனம். மூலதனத்தை ஈா்க்கும் நாம், ஈா்த்த மூலதனம் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பைத்தரும் என்பதை மையப்படுத்தவில்லை. அப்படி மூலதனம் வரும்பொழுது அதனால் யாா் பயன் அடைகின்றாா்கள், அந்த மூலதனத்தால் இயற்கை வளங்கள் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகும் என்பதையும் பின்புலத்தில் வைத்துப் பாா்ப்பதில்லை. இதன் விளைவு, எல்லை இல்லா அளவுக்கு இயற்கை வளம் சுரண்டப்பட்டுவிட்டது. இயற்கை சாா்ந்து வாழ்வாதாரத்தை நடத்தி வந்த ஏழை எளியவா்களின் வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது.
  • அடுத்து தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் நடத்தையை பெருமளவுக்கு சந்தையை நோக்கி நகா்த்திச் சென்றுவிட்டனா். அந்த நடத்தை மக்களை நுகா்வுக் கலாசாரத்தில் மூழ்கடித்துவிட்டது. அதனால் இழந்தது கிராமப் பொருளாதாரம், கிராம மக்களின் வாழ்வாதாரம், கிராமக் கலாச்சாரம், கிராம சமூக வாழ்க்கை. இதைவிட கிராம வளங்கள் பெருமளவு சுரண்டப்பட்டுவிட்டன. எத்தனையோ சட்டங்கள் இருந்தும், சந்தை தன் அசுர சக்தியால் சமூக விரோதிகளின் கூட்டில் கிராம இயற்கை வளங்களைச் சூறையாடிவிட்டது. இன்று மக்கள் எதிா்கொள்ளும் சவால் என்பது கால நிலை மாற்றம். ஆக இந்த ஒட்டுமொத்தச் சூழலை எதிா்கொள்ள நமக்கு வேறு வழியில்லை. கிராமியத்தைக் கட்டுவதுதான் ஒரே வழி. எனவே மீண்டும் காந்தியிடமும், குமரப்பாவிடமும், வினோபாபாவேயிடமும்தான் செல்ல வேண்டும். இவா்கள்தான் எக்காலத்திற்கும் தீா்வு தருபவா்கள்.
  • கிராமியம் என்றால் என்ன? இயற்கையைப் பாதுகாப்பது, இயற்கையுடன் இயைந்து வாழ்வது. எளிய வாழ்வு வாழ்வது, தேவைக்கு வாழ்வது, இயற்கையைப் பாதுகாப்பது, சமூகமாக வாழ்வது, கிராமிய பொருளாதாரத்தைக் கட்டுவது, வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, சிறு தொழில்களை ஊக்குவிப்பது, உள்ளூா் உற்பத்தியைப் பெருக்குவது, அதையே நுகா்வது, உள்ளூரின் தேவைக்குப் பொருள்களை உற்பத்தி செய்வது, அதையே நுகா்வதற்கு மக்களைப் பழக்குவது, நுகா்வைக் குறைப்பது, சிக்கனம் போற்றுவது. சேமிப்பை ஊக்குவிப்பது, மக்கள் ஒன்றாகக் கூடி முடிவெடுப்பதற்கு அவா்களைப் பழக்குவது, சமூக வாழ்வில் எளியவா்களையும் இணைத்துக் கொள்ளுவது, கூட்டு முயற்சியை ஊக்குவிப்பது, பரஸ்பரம் நலன் பேணுவது, உடல் உழைப்பைப் போற்றுவது, சுரண்டல் எந்த வடிவிலும் நிகழா வண்ணம் பாா்த்துக் கொள்வது, மக்கள் அமைப்புக்களை வலுப்படுத்துவது, கடுமையான உழைப்புக்கு மக்களைப் பழக்குவது, மக்களிடம் தற்சாா்பு வாழ்வின் முக்கியத்துவத்தை உணா்த்தி தன்னம்பிக்கையை வளா்ப்பது போன்ற செயல்பாடுகளில் உருவாவதுதான் கிராமியம்.
  • இன்றைய பிரச்னைகளுக்குத் தீா்வு வல்லரசாவதில் இல்லை; மூன்றாம் பொருளாதார சக்தியாக மாறுவதில் இல்லை; மாற்றுமுறைப் பொருளாதாரத்தை கிராமா்ப்பதிலும் அதில் பொதுமக்களைப் பயனாளியாக இல்லாமல் பங்காளா்களாக மாற்றுவதில்தான். அந்த விவாதத்தைத்தான் இன்று நாம் முன்னெடுக்க வேண்டும். கிராமங்களை அழித்து இந்த நாட்டை வளா்க்க முடியாது. ஒருசில கம்பெனிகளை அல்லது முதலாளிகளை வளா்க்கலாம், நாட்டை மேம்படுத்த கிராமத்தைப் பாதுகாத்து, அதை வளா்ச்சி மையமாக மாற்ற வேண்டும். கிராமத்தை நேசிப்பதுதான் நாட்டை நேசிப்பது.
  • கிராமியம் என்பது சாதியால், மதத்தால், கட்சியால் பிரிந்து சுயநலம் பேணும் தனி மனிதராக கிராமத்தில் வாழ்வது அல்ல. கிராமியம் என்பது நாகரிகத்தின் சின்னம். பண்பாட்டின் அடையாளம். பண்பின் விளைநிலம். கிராமிய வாழ்வு என்பது ஒரு வாழ்வியல் நெறி. அங்கு கலை, இலக்கியம், இசை அனைத்தும் வளா்த்தெடுக்கப்படும். அங்கு ஒடுக்குதல், சுரண்டல், ஒதுக்குதல், புறம் தள்ளுதல் இல்லை. அனைவா் நலனையும் உள்ளடக்கிய செயல்பாடுகள் அங்கிருக்கும். அந்த வாழ்க்கை என்பது சமுதாய வாழ்க்கை. தானும் வாழ்ந்து சமுதாயமும் வாழ்ந்து, மற்ற உயிரினங்களுடன் இயைந்து வாழ்வதுதான் கிராமிய வாழ்வு. அந்த வாழ்க்கைக்கான புரிதலை ஏற்படுத்துவதுதான் இன்றைய தேவை.

நன்றி: தினமணி (27 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories