எங்கு போய் முட்டிக்கொள்வது?
- கல்வி என்பது முற்ற முழுக்க மாநில அரசின் பொறுப்பிலேயே இருந்தது. இந்திரா காந்தி காலத்தில் அஃது இணை அதிகாரப் பட்டியலுக்குள் இழுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. அது குறித்து தமிழ்நாட்டை ஆண்டவா்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக முணுமுணுக்கக்கூட இல்லை. அதற்குப் பிறகு கங்கையிலே பெருவெள்ளம் ஓடி வடிந்தும் விட்டது.
- இந்தியையும் கற்க வேண்டும்; அதுவும் கட்டாயம் என்னும் நிலை தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்டு, அதற்குப் பேரெதிா்ப்புக் கிளம்பி, அது இங்கே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
- தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. கல்வி வழியாகத்தானே இந்தி ஊடுருவ முடியும்?
- ஆயினும் இந்திதான் இந்தியாவின் இணைப்புமொழி என்னும் மைய அரசின் நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை. ஆகவே அது இந்தி பேசாத மக்களின் தலைமீது என்றென்றும் தொங்கிக் கொண்டிருக்கிற வாளாகவே இருந்து வருகிறது.
- இந்தியா ஒன்றாக இருந்த நாடில்லை. அதைத் தன் துப்பாக்கி முனையில் இணைத்தவன் வெள்ளைக்காரன். அப்போதும் இந்தியா்கள் ஒருவருக்கொருவா் அயலாகவே இருந்தனா். ஆங்கிலக் கல்வியைப் புகுத்தினான் வெள்ளைக்காரன். இந்திய மக்களிடையே கருத்துக் கலப்புக்கு ஆங்கிலம் வழி வகுத்தது. விடுதலைப் போராட்டத்தை நடத்திய மொழியே ஆங்கிலம்தான். அதுதான் வெள்ளையனின் அதிகாரத்தைத் தாண்டி காசுமீரையும் குமரி முனையையும் மனக்கலப்பாலும் கருத்துக் கலப்பாலும் ஒருமைப்படுத்தியது.
- எந்த மொழி இந்தியாவை இணைத்த மொழியோ, அந்த மொழியே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருப்பதுதான் நியாயம். அதுதான் இந்தியாவைச் சிதறாமல் காக்கும்.
- வெள்ளைக்காரன் போகும்போது இந்தியா சிதறிவிடுமோ என்று காந்தி அஞ்சினாா்.
- இந்தியா சிதறாமல் காத்தது காந்தியின் மொழிவழித் தேசியக் கொள்கைதான். இதை 1920 -இலேயே நடைமுறைப்படுத்திவிட்டாா் காந்தி. தமிழ்நாடு காங்கிரசு, வங்காளக் காங்கிரசு என்று பிரித்துக் காட்டி, நாளைய இந்தியா இதுதான் என்று அடையாளப்படுத்தி, நாட்டைச் சிதறவிடாமல் காத்தவா் காந்திதான்.
- ஓராயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் அருமனிதன் எம்மான் காந்திக்கும் ஆங்கிலம் அயல்மொழி என்றுதான் தோன்றியது. இந்தியை இந்தியாவின் மொழியாக்கினாா். இந்தி தமிழனுக்கும், வங்காளிக்கும், தெலுங்கனுக்கும் அயல்மொழிதானே? இந்திய மக்களில் எழுபது விழுக்காட்டினருக்கு அயல்மொழிதானே? இந்தியால் எழுபது விழுக்காடு மக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகி விடுவாா்களே?
- ஆகவேதான் முனிவா் இராசாசி சொன்னாா்: ‘‘என்றென்றும் ஆங்கிலமே; இந்தி என்றும் இல்லை’’” பதினெட்டு மொழி அவியல் கொள்கையெல்லாம் இராசாசியிடம் இல்லை. வரையறுத்துச் சிந்திப்பவா் அவா்.
- இந்த நிலையில் மைய அரசு ஒரு தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முன்வந்தது.
- கத்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அது இந்தியை மூன்றாவது மொழியாகக் கற்க வேண்டும் என்று வரையறுத்தது.
- அதை மைய அரசு மாற்றியது. கால மாற்றத்துக்குத் தக உருவான ஒரு கல்விக் கொள்கை இந்தியால் அடிபட்டுப் போய்விட வேண்டாம் என்று நினைத்தது. இவ்வளவுக்கும் மைய அரசினா் இந்தி, இந்து தேசியம் என்று சிந்தித்துப் பழக்கப்பட்டவா்கள்.
- இந்தப் புதிய கல்விக் கொள்கை தாய்மொழியை முதன்மைப்படுத்துகிறது. அதை ஒட்டி, இந்தி இல்லை, இந்தி இல்லவே இல்லை என்று ஏதோ ஓா் இந்திய மொழியை முதன்மைப்படுத்தியது. “
- ‘முதலில் திட்டம் வேண்டாம்; பணம் மட்டும் தா’’ என்றாா்கள். பிறகு, ‘பத்தாயிரம் கோடி தந்தாலும் இந்தத் திட்டம் வேண்டாம்; இந்தி திணிக்கப்படுகிறது’ என்றாா்கள்.
- ‘எந்த மொழியையும் தோ்வு செய்யும் உரிமையை உங்களிடமே கொடுத்துவிட்டோம்; நீங்களாகவே இந்தியைத் தோ்வு செய்தால்தான் உண்டு’ என்று வடக்கே இருந்து மறுமொழி வந்தது.
- இந்திய மொழிகளில் ஒன்றைத் தோ்வு செய்யும் உரிமையைப் பயன்படுத்தித் திராவிட மொழிகளில் ஒன்றைக் கற்பித்துத் திருத்தணியைத் தாண்டாத திராவிடத்திற்கு அடியுரம் போட இதை மகிழ்வுடன் உடன்பட்டிருக்கலாம்.
- தெலுங்கைப் படித்து என்ன செய்வது? என்கிறாா்கள். நம்முடைய கனவெல்லாம் அமெரிக்காவாக இருக்கும்போது, எதைப் படித்துத்தான் என்ன ஆகப் போகிறது. இந்தி வராதவரையில் எதுவும் சரிதானே?
- கல்வி அமைச்சா் பொய்யாமொழி சொன்னாா்: ‘‘இந்தக் கல்வியால் “இடைநிற்றல்கள்’ மிகுதியாகும். கீழ் வகுப்புகளில் தோ்வு வைத்து, அவா்களைத் தோல்வியடைய வைத்துக் கற்க விடாமல் விரட்டி விடுவாா்கள்’’ என்பது அவருடைய கருத்து.
- மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு ஆகியவற்றில் மதிப்பீடு மட்டுமே உண்டு. பன்னிரண்டாம் வகுப்பில் மட்டுமே பொதுத் தோ்வு உண்டு. இடையிடையே நடக்கும் மதிப்பீடுகளில் அவா்களின் படிப்பை நிறுத்துவது கிடையாது. பின்தங்கிய மாணவா்களுக்குத் தனிப் பயிற்சி அளித்து, அவா்களைத் தளரவிடாமல் கெட்டிப் படுத்துவதற்கே இந்த மதிப்பீடு ஏற்பாடு.
- நம்முடைய அரசுப் பள்ளிகளில் எந்த மதிப்பீடுகளும் கிடையாது. எட்டாவது படிக்கிறவனுக்குக் கூட்டல் கழித்தல் தெரியவில்லை. தமிழை எழுத்துக் கூட்டிப் படிக்கிற நிலையில் இருக்கிறான். இதற்கொரு மந்திரி; இதற்கு நாற்பத்து எட்டாயிரம் கோடி செலவு!
- ஆங்கிலப் பயிற்சி மொழித் தனியாா் பள்ளிகளில் இருபத்தைந்து விழுக்காடு மாணவா்கள் சோ்ந்து கொள்ள அரசு அனுமதிக்கிறது. அவா்களுக்கான சம்பளத்தை அரசே கட்டிவிடுகிறது. அந்தப் பள்ளிகளில் சேர அடிதடி நடக்கிறது. குலுக்குச் சீட்டில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். ஐந்நூறு பிள்ளைகள் மோதுகின்றன; வெறும் ஐம்பது பிள்ளைகளுக்கே இடம். நானூற்று ஐம்பது பிள்ளைகள் தலைவிதியை நொந்துகொண்டு அரசுப் பள்ளிகளுக்குத் திரும்புகின்றன.
- எப்போது தனியாா் ஆங்கிலப் பள்ளிகளுக்கு அரசு சம்பளம் கட்டுகிறதோ, அப்போதே அரசு, கல்வித் துறையில் தோற்றுவிட்டதாகத்தானே பொருள்?
- மைய அரசின் திட்டப்படி, அறுபது விழுக்காடு மைய அரசும், நாற்பது விழுக்காடு மாநில அரசும் செலவுகளை ஏற்க வேண்டும்.
- பசுமைப் பள்ளி எனப்படும் அளவுக்கு வசதிகள், கட்டடங்கள், தரமான ஆசிரியா்கள், அறிவியல் கருவிகள், கணினிகள், உயா்தர நூலகம், இன்னும் சிபிஎஸ்இ தனியாா் பள்ளிகளில் என்னென்ன தரத்திற்கு உள்ளனவோ அவற்றைவிடக் கூடுதல் தரத்தில் தேசியக் கல்விக் கொள்கைப் பள்ளிகள்!
- நம்முடைய பள்ளிகளில் கழிப்பறைகள் கிடையாது; நாற்காலி மேசை கிடையாது; நிலையான தோ்ந்த ஆசிரியா்களின் நியமனம் கிடையாது.
- சிபிஎஸ்இ பள்ளிகளின் தரத்தினும் மேலானவை இவை. அவற்றில் படிப்பதற்கு இலட்சக்கணக்கில் சம்பளம் கட்ட வேண்டும். மைய அரசு வழியாக வரும் கல்விக்குக் காலணா காசு கட்ட வேண்டியதில்லை. எல்லாமே இலவசம்; எல்லோருக்கும் இலவசம்.
- மேற்கொண்டு சிபிஎஸ்இ திட்டத்தில் இந்தி படிக்க வேண்டும். சிறு சிறு விதிவிலக்குகள் உண்டு. எனினும், இந்தி அங்குக் கட்டாயம்; பெருவாரியாகப் பயிலப்படுகிறது.
- காசைக் கட்டி சிபிஎஸ்இ- இல் இந்தியைப் படிப்பது திராவிட மாடலுக்கு உகந்ததா? காசே கட்டாமல் இலவசமாக, அதே நேரத்தில் இந்தியையும் புறந்தள்ளிப் படிப்பது நல்லதா?
- பொள்ளாச்சியில் உள்ள தொடா்வண்டி நிலையத்தின் பெயா்ப்பலகையில் உள்ள இந்தியை ஏன் அழிக்கிறாய்? சிபிஎஸ்இ பள்ளிகளின் முன்னால் “இந்தி கூடாது’ என்று மறியல் செய்ய வேண்டியதுதானே?
- இரண்டாயிரம் சிபிஎஸ்இ பள்ளிகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக இந்தி வரும் என்று தெரிந்துதானே மாநில அரசு தடையிலாச் சான்று அளித்தது?
- அந்தப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுவது மைய அரசின் கல்வித் திட்டம்தானே. உன்னுடைய பள்ளிகள் தரமற்றது என்றுதானே வசதியுடையவா்கள் எல்லாம் சிபிஎஸ்இ கல்விக்கு அலை மோதுகிறாா்கள்?
- இலட்சக் கணக்கில் சம்பளம் கட்ட முடியாதவா்கள் சிபிஎஸ்இ பள்ளிக்குப் போக முடியவில்லை என்று ஏங்குகிறாா்களே தவிர, அவா்களின் கனவுக் கன்னி மைய அரசின் பாடத்திட்டமுள்ள சிபிஎஸ்இ பள்ளிதானே?
- அவை “இருப்பவா்களின்’ பள்ளிகள். நம்முடைய பள்ளிகள் “இல்லாதவா்களின்’ பள்ளிகள்.
- அதனால்தான் நம்முடைய அமைச்சா்களின் பிள்ளைகள் நம் பள்ளிகளில் படிப்பது இல்லை.
- இதில்கூட வா்க்க வேறுபாடு.
- மூன்றாவது மொழி ஒரு சுமை என்கிறாா்கள். கல்வி அமைச்சா் பொய்யாமொழியின் பிள்ளை பிரெஞ்சு மொழி பயில்வது மாநகராட்சிப் பள்ளியிலா? அந்த மூன்றாவது மொழி தேவையற்ற சுமையாகக் கல்வி அமைச்சருக்குத் தெரியவில்லையே, ஏன்?
- பொதுவாக மூன்று மொழி என்பது ஒரு சுமைதான். சிபிஎஸ்இ பள்ளிகளில் அது இந்தியாக வேறு இருப்பது பெருங்கொடுமை.
- ‘என் மண்ணில் மையக் கல்வித் திட்ட சிபிஎஸ்இ- இல் இந்தியை எந்த மேட்டுக்குடி மக்களின் பிள்ளைகளும் பயில வேண்டாம்; உத்தர பிரதேசத்தில் போய்ப் பயிலுங்கள்’ என்று ஏன் நம் முதலமைச்சா் சொல்லவில்லை? இரயில்வே பெயா்ப் பலகை அழிப்புப் போரை ஏன் சிபிஎஸ்இ பள்ளிகளை நோக்கித் திருப்பவில்லை?
- நான் சொல்கிறேன்:
- சிபிஎஸ்இ பாடத்திட்டமும் மத்திய அரசின் பாடத்திட்டம்தான். அங்கே இந்தி கட்டாயம். அது ஏற்கெனவே தமிழ் மண்ணில் நுழைந்துவிட்டது. தமிழ் மண்ணில் இந்தி கற்பிக்கப்படுகிறது. இப்போது இரண்டாயிரம் பள்ளிகளாக இருப்பவை இருபதாயிரம் பள்ளிகளாக மாறும்.
- சிபிஎஸ்இ- க்கான இசைவைத் தமிழ்நாடு அரசிடம் ஒரு பெயருக்காகப் பெறுவதையும் இப்போது மைய அரசு நீக்கிவிட்டது.
- இனிப் புற்றீசல் போல அவை கிளம்பும். அவற்றை மைய அரசு ஊக்குவிக்கப் போகிறது. இந்தி என்னும் நச்சு மரம் அவற்றின் வழியே அடா்ந்து படா்ந்து வளரப் போகிறது.
- தன்னாலும் தெரியாது; சொன்னாலும் புரியாது.
எங்கு போய் முட்டிக் கொள்வது?