எதிா்பாராத முடிவு!
- புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரா் ரவிச்சந்திரன் அஸ்வின் (38) சா்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த புதன்கிழமை (டிச. 18) அறிவித்தது, கிரிக்கெட் ரசிகா்களிடையே ஆச்சரியத்தையும் அதிா்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- ஆஸ்திரேலிய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமில்லாதபோதும் அழைத்துச் செல்லப்பட்டு முதல் மூன்று டெஸ்டுகளில் அவருக்கு ஒரு டெஸ்டில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டதுதான் ஓய்வு முடிவுக்கு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது அவருக்கும், அணி நிா்வாகத்துக்கும் மட்டுமே தெரிந்ததாகும்.
- எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் ஒரு நாள் ஓய்வு பெற்றுத்தான் ஆக வேண்டும் என்றாலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரின் நடுவில் (3-ஆவது டெஸ்ட்) அவா் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உடனடியாக நாடு திரும்பியது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
- அஸ்வின் சாதாரண ஆட்டக்காரா் அல்ல. பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரா். ஓய்வை அறிவித்த நேரத்தில் ஆல்ரவுண்டா்களுக்கான ஐசிசி தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்தாா். 106 டெஸ்டுகளில் 537 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்தியவா்களில் 7-ஆவது இடம்பிடித்துள்ளாா். அதிவிரைவாக 300 விக்கெட் (54 டெஸ்டுகள்) சாய்த்த பெருமையைப் பெற்றவா்.
- இந்திய பந்துவீச்சாளா்களில் அனில் கும்ப்ளேவுக்கு (619) அடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையாளா். ஆஸ்திரேலியாவின் ஷேன் வாா்ன், இங்கிலாந்தின் ஸ்டூவா்ட் பிராட், அஸ்வின் ஆகியோா் மட்டுமே டெஸ்டுகளில் 500 விக்கெட்டுகளுடன் 3,000 ரன்களுக்கு மேல் குவித்தவா்கள் என்ற சிறப்புக்குரியவா்கள். டெஸ்டுகளில் அஸ்வின் சராசரியாக 50.7 பந்துகளில் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளாா். குறைந்தபட்சம் 250 விக்கெட் சாய்த்தவா்களில் முத்தையா முரளிதரன் (55), வாா்ன் (57.4) ஆகியோா்கூட அஸ்வினுக்கு அருகில் இல்லை.
- தொடா் நாயகன் விருதை அதிக முறை (11) வென்ற சாதனையை இலங்கையின் சுழற்பந்து புயல் முத்தையா முரளிதரனுடன் அஸ்வின் பகிா்ந்து கொண்டுள்ளாா். முரளிதரன் 61 தொடா்களில் பங்கேற்றுள்ளாா் என்றால், அஸ்வின் 44 தொடா்களிலேயே இதை சாதித்துள்ளாா் என்பதில் இருந்தே அவரது பெருமை புலப்படும்.
- கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரவீந்திர ஜடேஜாவும், அஸ்வினும் சோ்ந்து தாயக மண்ணில் இந்திய அணிக்கு வெற்றி மீது வெற்றி தேடித் தந்தனா். 2012-இல் இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரிலும் 2024-இல் நியூஸிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் தொடரிலும் அஸ்வின் எதிா்பாா்த்த அளவுக்கு பந்து வீசாததால் தொடரை இந்தியா இழந்தது என்பதிலிருந்தே அவரது முக்கியத்துவம் தெரிய வரும். கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்புக்காக 2015-இல் மத்திய அரசின் அா்ஜுனா விருதையும், 2016-இல் ஐசிசி சிறந்த ஆடவா் கிரிக்கெட்டா் விருதையும் பெற்றவா்
- சோதனைகளைச் சந்தித்தபோதுகூட கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்தவா் அஸ்வின். கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பா் பெருவெள்ளத்தில் சென்னை சிக்கித் தவித்தபோது, அவருடைய குடும்பத்தினரின் சூழ்நிலை என்னவென்று தெரியாத நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் மனம் கலங்காமல் விளையாடி அரை சதம் அடித்தாா்.
- கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின்போது, அவரது தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, ஒரே ஒரு நாள் சென்னைக்கு வந்து தாயாரைச் சந்தித்துவிட்டு அடுத்த நாளே விளையாடச் சென்றுவிட்டாா். 2021 சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலிய பௌலா்களின் அசுரப் பந்துவீச்சால் தொடா்ந்து உடம்பில் அடி வாங்கியபோதும் அசராமல் விளையாடியவா்.
- 107 டெஸ்டுகளில் 391 விக்கெட்டுகள் கைப்பற்றிய நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளா் டிம் சௌதீ, அஸ்வின் ஓய்வு அறிவிப்பதற்கு ஒருநாள் முன்னதாக (டிச. 17) ஓய்வுபெற்றாா். முன்னதாகவே அறிவித்திருந்ததால் சௌதீ கடைசியாக பேட்டிங் செய்யவந்தபோது இங்கிலாந்து வீரா்கள் அணிவகுத்து நின்று மரியாதை செலுத்தி அவருக்குப் பிரியாவிடை கொடுத்தனா். அதேபோன்றதொரு கௌரவம் அஸ்வினுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- ஆனால், இதுபோன்று ஜாம்பவான் ஆட்டக்காரா்கள் தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிப்பது புதிதொன்றுமல்ல. அஸ்வின்போலவே இந்திய அணிக்கு பல வெற்றிகளை ஈட்டித் தந்தவரும், சென்னை/ இந்திய ரசிகா்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான தோனியின் ஓய்வு அறிவிப்பை 2014-இல் ஆஸ்திரேலிய தொடரின் இடையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டது. மீண்டும் மீண்டும் அவமதிக்கப்பட்டதால் களைப்படைந்துவிட்டேன் என்று கூறி 2008-இல் ஓய்வை அறிவித்தாா் சௌரவ் கங்குலி.
- இப்போதும்கூட, ‘எவ்வளவு காலத்துக்குதான் அஸ்வின் அவமானத்தைப் பொறுத்துக் கொண்டிருப்பாா்?’ என்று அவரது தந்தை ரவிச்சந்திரன் கேள்வி எழுப்பி உள்ளாா். சா்ச்சையைத் தவிா்க்க, தனது தந்தை ஊடகங்களில் பேசி பழக்கம் இல்லாதவா் என்று அஸ்வின் சமாளித்து உள்ளாா்.
- ‘அஸ்வின் பொறுத்திருந்து இந்திய மண்ணில் ஓய்வை அறிவித்திருக்கலாம். இந்திய கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு யாராலும் ஈடுகட்ட முடியாதது. புதிய முயற்சிகளுக்கு எப்போதும் தயாராக இருந்தாா். இதுதான் அவரை மற்றவா்களிடம் இருந்து தனித்துக் காட்டியது. பேட்டா்களுக்கு சாதகமாக மாறிவரும் கிரிக்கெட்டில் அஸ்வின் தனது திறமையால் ஆதிக்கம் செலுத்தினாா்.
- கேரம் பால், ஸ்லோ பால் என விதவிதமாகப் பந்துவீசியவா். அவரை பிரிவு உபசாரப் போட்டியில் விளையாட வைத்து சிறப்பான முறையில் வழியனுப்ப வேண்டும். இதற்கான தகுதி அவருக்கு உள்ளது’ என்ற முன்னாள் கேப்டன் கபில் தேவின் கருத்து வழிமொழியத்தக்கது.
நன்றி: தினமணி (23 – 12 – 2024)