TNPSC Thervupettagam

என்னவாயிற்று சுனிதா வில்லியம்ஸுக்கு?

July 3 , 2024 6 hrs 0 min 30 0
  • சமீபத்தில் சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்த விண்வெளி வீராங்கனையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் பூமிக்குத் திரும்புவதில் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார் என்ற செய்தி பரபரப்பாகப் பேசப்படுகிறது. அவர் எதிர்கொண்டிருக்கும் சிக்கல் எப்படிப்பட்டது?

சோதனை ஓட்டம்:

  • கடந்த ஜூன் 6 ஆம் தேதி நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கொண்ட குழு போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தைச் சோதனைஓட்டம் செய்வதற்காக, அதை விண்வெளிக்கு ஓட்டிச் சென்று, சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தது. பூமியிலிருந்து சுமார் நான்கு முதல் ஆறு மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்துவிட முடியும்.
  • என்றாலும் சோதனையோட்டம் என்பதால், வேண்டுமென்றே 25 மணி நேரத்தை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். பொதுவாக, இவ்விண்கலம் தானியங்கி முறையில் விண்வெளிக்குச் சென்று, தானே விண்வெளி மையத்தை அடையும் திறன் கொண்டது என்றாலும், தானியங்கிக் கணினியை முடக்கிவிட்டுக் கையால் கருவிகளை இயக்கிச் சோதனை மேற்கொண்டார்கள்.
  • சுமார் ஒருவாரம் தங்கி சோதனைகளை முடித்துக்கொண்டு ஜூன் 14ஆம் தேதி திரும்புவதுதான் திட்டம். திரும்பும் கலத்தை இயக்கும் முன்னர் சோதனை மேற்கொண்டபோது, அதில் உள்ள ஹீலியம் குடுவையில் கசிவு இருந்தது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விண்கலத்தின் சில உந்து ராக்கெட்டுகள் சரியாக வேலை செய்யவில்லை.
  • எனவே, திரும்பும் திட்டம் ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் புதிய கோளாறுகளும் தெரியவந்ததன் விளைவாகத் தற்போது ஜூலை 6ஆம் தேதி பூமிக்குத் திரும்புவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆக, ஒரு வார காலப் பயணம் தற்போது ஒரு மாத காலப் பயணமாக மாறியுள்ளது.

என்ன கோளாறு?

  • பூமிக்குத் திரும்புவதற்கு முன்னர், விண்வெளி மையத்தில் தற்போது இணைந்துள்ள விண்கலத்தை முதலில் பிரித்து எடுக்க வேண்டும். இரண்டுக்கும் இடையே உள்ள பிணைப்பைக் கழற்றுவது கடினம் அல்ல. ஆனால், விண்வெளி மையத்துக்கும் விண்கலத்துக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்த வேண்டும். இதுதான் சவால்.
  • நீந்தும்போது முதலில் காலால் நீச்சல் குளத்தின் சுவரை எட்டி உதைத்து உந்தம் பெற்று நீரில் நீந்துவதுபோல, விண் குடிலோடு பிணைந்த விண்கலம் பிணைப்புத் திசையில் உந்துதல் தந்தால் மட்டுமே எதிர்த் திசையில் பிரியும். இந்த உந்தத்தைத் தர, விண்கலத்தில் பற்பல சிறுசிறு உந்து ராக்கெட்டுகள் உள்ளன. மேலும், பயணக் குழுவினர் அமர்ந்து செல்லும் கலன், எரிபொருள் இன்ஜின் போன்ற கருவிகளைத் தாங்கிய சேவைக் கலன் என விண்கலத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன.
  • விண்வெளி மையத்திலிருந்து பிரிந்து பூமியை அடைய உந்துதல் தர இரண்டும் சேர்ந்து செயல்பட வேண்டும். இந்தக் கட்டத்தில் விண்கலத்தின் சுற்றுப்பாதையை மாற்ற, அதன் நோக்குதிசை, தன்னைத் தானே சுழற்றிக்கொள்ளும் வேகம் முதலியவற்றைக் கட்டுப்படுத்த பயணக் குழு அமரும் கலத்தையும் இன்ஜின், எரிபொருள் முதலியவை அடங்கிய சேவைக் கலத்தையும் பிரிக்கவும் 20 சிறு ஏரோஜெட் ராக்கெட்டைன் இன்ஜின்கள் உள்ளன.
  • அதேபோல சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பிணைப்பை அறுத்துத் தள்ளித் தொலைவை அடைந்து பூமிக்குத் திரும்புவதற்குத் தேவையான உந்தம் பெற்று விடைபெறவும் விண்கலத்தின் திசை, பாதை முதலியவற்றைக் கட்டுப்படுத்தவும் 28 எதிர்வினைக் கட்டுப்பாட்டு உந்து ராக்கெட்டுகள் உள்ளன.
  • பார்வைக்கு தீபாவளி ராக்கெட் அளவைவிடச் சிறிதாக இருக்கும் இந்த உந்து ராக்கெட்தான், விண்வெளிக்குச் சென்ற பின்னர் அதன் இலக்கான விண்வெளி மையத்தை அடையவும் பின்னர் பூமிக்குத் திரும்பவும் தேவையான உந்துதலைத் தரும்.
  • இந்தச் சிறு ராக்கெட்டுகளில்தான் கோளாறு ஏற்பட்டுள்ளது. முதலில் B1A3 என்னும் எதிர்வினைக் கட்டுப்பாட்டு உந்து ராக்கெட்டில் ஹீலியம் கசிந்து வருவதைக் கண்டனர். அதன் பின்னர், மொத்தம் ஐந்து உந்து ராக்கெட்டுகளில் ஹீலியம் கசிவு கண்டறியப்பட்டது.

ஹீலியம் எதற்கு?

  • கார், ஸ்கூட்டர் போன்றவற்றில் பெட்ரோல் டேங்கின் கீழே இன்ஜின் இருக்கும். ஈர்ப்பு விசை காரணமாக இரண்டையும் இணைக்கும் குழாய் வழியே எரிபொருள் இன்ஜினுக்கு வந்துசேரும். விண்வெளியில் இது சாத்தியம் இல்லை.
  • அங்கே ஈர்ப்புவிசை கொண்டு எரிபொருளை நகர்த்த முடியாது. எனவே, எரிபொருள் டேங்கின் மேல் உள்ள ஹீலியம் குடுவையின் வாயைத் திறந்துவிட்டால், ஹீலியம் வாயு குபுகுபுவென எரிபொருள் குழாய் வழியே இன்ஜினை அடையும். இதன் வழியே தேவையான இலக்கு உந்தத்தைப் பெற முடியும்.
  • ஹீலியம் கசிந்துவிட்டால் அழுத்தம் குறையும்; எனவே போதிய உந்துதல் இருக்காது. இதுதான் சிக்கல். முதலில் கோளாறு இனம் காணப்பட்ட B1A3 உந்து ராக்கெட்டை இயக்கியபோது வெறும் 11% விசையே உற்பத்தி ஆனது. கடந்த இரண்டு வாரமாக ஒவ்வொரு உந்து ராக்கெட்டாகச் சோதனை செய்துவருகிறார்கள்.
  • வெறும் 1.2 நொடிக்கு இந்த உந்து ராக்கெட்டை இயக்கி அதன் வழியே விண்வெளி மையத்தில் ஏற்படும் உந்தம் எவ்வளவு எனக் கணக்கீடு செய்து பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, உந்து ராக்கெட்டுகளைச் சோதனை செய்து தரவுகளைத் திரட்டி வருகிறார்கள்.

இனி என்ன?

  • சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைவதற்கு முன்னர் அங்கே ஏற்கெனவே ஐந்து பேர் தங்கியுள்ளனர். ஆறு பேர் கொண்ட குழு பல மாத காலம் பாதுகாப்பாக அங்கே தங்கியிருக்க முடியும். நான்கு பேர் விண்வெளிக்குச் சென்ற கலமும் இப்போதும் அங்கேயேதான் உள்ளது.
  • எனவே, யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை. அவசர காலத்துக்கு என ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். ஸ்பேஸ் டிராகன் விண்கலத்தையும் பயன்படுத்த முடியும். எனவே, விண்வெளியிலிருந்து எப்போது வேண்டுமென்றாலும் பூமிக்குத் திரும்பிவர மாற்று வழிகளும் உண்டு.
  • ஏற்கெனவே, போயிங் விமானங்களின் தரம் தொடர்ச்சியாக மோசமடைந்து அடிக்கடி செயலிழப்பதாக இருபதுக்கும் மேற்பட்ட போயிங் பணியாளர்களே தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் போயிங் நிறுவனம் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது.
  • இந்த விண்கலத்தை விண்ணில் ஏவும்போதே ஹீலியம் கசிவு இனம் காணப்பட்டுவிட்டது. எனினும், தேவையைவிட நூறு மடங்கு அதிகமாக ஹீலியம் உள்ளது. எனவே, கவலை இல்லையென இந்தப் பழுதைப் பொருட்படுத்தாமல் ஏவிவிட்டார்கள் என்ற உள்தகவலும் கசிந்துள்ளது.
  • தவிர, போயிங் ஸ்டார்லைனரின் முதல் ஓட்டம் தோல்வியில் முடிந்தால் பெருத்த அவமானம் நேரும்; அந்த நிறுவனத்தின் எதிர்கால வியாபாரம் பாதிப்புக்கு உள்ளாகும். எனவேதான், மாற்று முறைகளைக் கையாள்வதற்கு முன்னர் அந்தக் கலத்தைச் சரிபார்த்துத் திரும்பக் கொண்டுவர பெரும் முயற்சி செய்துவருகிறார்கள்.
  • பழுதான உந்து ராக்கெட்டின் மாதிரியைத் தரையில் உள்ள சோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்த பிறகுதான், விண்ணில் தற்போது இருக்கும் விண்கலத்தைத் தரையிறக்குவது என நாசா முடிவெடுத்துள்ளது. எனவே, குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் கடந்த பின்னர்தான் அந்த விண்கலத்தைத் தரையிறக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். எப்படியிருந்தாலும் சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்புவார்!

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories