TNPSC Thervupettagam

எம்.டி.வாசுதேவன் நாயர்: சங்கடங்களை மீட்டிய கலைஞன்

December 28 , 2024 2 hrs 0 min 25 0

எம்.டி.வாசுதேவன் நாயர்: சங்கடங்களை மீட்டிய கலைஞன்

  • மலையாள எழுத்​தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமாகி​விட்​டார். எம்டிக்கு முன்னும் பின்னும்கூட எம்டி அளவுக்​குக் கொண்டாடப்​பட்ட முழு​மையான எழுத்​தாளர்கள் மலையாளத்​தில் இல்லை. வைக்கம் முகம்மது பஷீரைச் சொன்​னாலும் அவருக்கு ஒரு சினிமா முகம் கிடை​யாது; வேறு எந்த எழுத்​தாள​ருக்​குமே இந்த முகம் இல்லை. பத்ம​ராஜன் போன்ற சில எழுத்​தாளர்கள் சினி​மா​வில் இயங்கி​யிருக்​கிறார்​கள்.
  • ஆனால், எம்டி அளவுக்கு சினி​மா​வின் சூத்​திரம் அறிந்​தவர்கள் இல்லை. எழுதத் தொடங்கிய 50களி​லிருந்து இந்த இரண்டாயிரத்தின் தொடக்கம் வரை சினி​மா​விலும் இலக்​கி​யத்​தி​லும் கோலோச்சிய தனித்து​வமான ஆளுமை எம்டி. இந்த நூற்​றாண்​டின் மாற்​றங்​களுக்​குத் தாக்​குப்​பிடிக்க முடியாத கடந்த காலக் கற்பிதங்​களைத் தரவாட்டை முன்னிறுத்​திச் சொல்வது எம்டி கதையின் பொது இயல்பு.
  • எம்டி​யின் தொடக்கக் காலக் கதைகளில் இந்த அம்சத்​தைப் பார்க்க முடி​யும். சிறுகதைகள் வழியாகத் தன் கதைகளுக்கான மொழியை​யும் உலகத்​தை​யும் பழக்​கிப் பதப்​படுத்​திக்​கொண்​டார் அவர். தனது முதல் நாவலை வந்தடைவதற்கான நடைப்​ப​யிற்​சி​யாகத் தனது சிறுகதைகளைப் பயன்​படுத்​திக்​கொண்​டார். சிறுகதைகளின் தொடர்ச்​சியாக ‘நாலுகெட்டு’ நாவலை அவர் எழுதினார். வடக்​கேபாட்டுத் தரவாட்​டின் கதை இது.
  • எம்டி​யின் தெக்​கேபாட்டுத் தரவாட்​டின் கதையும் இதனூடே வழிந்து இந்த நாவலுக்​குள் ஓடுகிறது. ஒரு காலக் கட்டத்​தில் தரவாடு இருந்த இருப்பும் புதிய சமூக மாற்​றத்​தால் அது வீழ்ந்த நிலை​யும் இந்த நாவலில் சொல்​லப்​பட்​டிருக்​கும். இதற்​கிடை​யில் அலைக்​கழி​யும் அந்தத் தரவாட்​டின் சந்த​தி​களின் பாட்​டை​யும் எம்டி இதில் சொல்​லி​யிருப்​பார்.
  • தரவாடு என்கிற வெற்றுப் பெரு​மிதம் மனிதர்​களின் மனத்தை ஆட்கொண்டு அவர்​களது வாழ்க்கையைப்​ படுத்​தும் பாட்டை உணர்வு​பூர்​வ​மாகச் சொன்ன நாவல் இது. இந்தத் தன்மைக்காக இந்த நாவல் இந்திய அளவில் முக்​கி​யத்துவம் மிக்க நாவலாக​வும் வாசிக்​கப்​படு​கிறது. எம்டி​யின் கதைகளில் வெளிப்​படும் கேரளி​யத்​தன்மை விசேஷம் மிக்​கது.
  • மகாபாரதக் கதையில் சரியான இடம் அளிக்​கப்​படாத பீமனை எம்டி அழைத்​துத் தன் கதையின் நாயக​னாக்கிய நாவல்​தான் ‘ரெண்​டாம்​மூழம்’. மகாபாரதத்​தின் தெய்விகத் தன்மை​யைக் களைந்தது இந்த நாவலின் எடுத்​துச் சொல்​லக்​கூடிய சீர் பணி. பீமனும் தன் தெய்வி​கத்​தன்மை​யைக் களைந்து ஒரு சாதாரண மனித​னாகவே இந்த நாவலுக்​குள் இறங்​கு​கிறான். இது எம்டி என்னும் படைப்​பாளனால் சாத்​தி​ய​மாகிறது. ஏற்கெனவே நமது பண்பாட்​டின் ஓர் அம்சமாக உள்ள காவி​யத்தை இன்றைய காலக்​கட்ட வாழ்க்கை​யுடன் மோதச் செய்திருப்​பார் எம்டி. வள்ளுவ நாடன் வட்டார மொழிக்​காகக் கொண்​டாட​வும் விமர்​சிக்​க​வும் பட்டவர் எம்டி.
  • நாயர் தரவாடும் வள்ளுவன் நாடன் மொழி​யும் இல்லை​யென்​றால் எம்டி இல்லை என்ற கிண்டல் கூற்​றை​யும் எம்டி தன் ‘மஞ்சு’ என்கிற உரைநடைக் கவிதை​யால் மாற்றி​யிருப்​பார். இமயமலைப் பகுதி​யில் நடக்​கும் ஓர் அழகானகாதல், கவித்துவம் மிக்க விவரிப்பு மொழி​யில் இந்த நாவலில் சொல்​லப்​பட்​டிருக்​கும்.
  • தலைவனுக்​காகத் தலைவி காத்​திருப்பது என்கிற தமிழ்ச் செவ்​வியல் தன்மை​யுடன் இந்த நாவலை ஒப்பிட்டுப் பார்க்​கலாம். வருவான் என்கிற எந்த நிச்​சய​மும் இல்லாமல் ஒரு தலைவி​யின் காத்​திருப்பு இந்த நாவலில் சொல்​லப்​பட்​டிருக்​கும். அவளது காத்​திருப்பு உணர்வு இந்த நாவலின் அஃறிணை​களுக்கு மேலே​யும் உயர்​திணை​களுக்கு மேலே​யும் ஒரு மேகத்​தைப் போலப் பறந்​து செல்​லும். செடி, கொடிகள், மரங்​கள், மலைகள், படகோட்டி எல்லோரும் நாவலில் காத்​திருக்​கிறார்​கள், மனிதர்கள் மரணத்​துக்​காகக் காத்​திருப்​பது​போல.
  • எம்டி எழுத்​தாளராக​வும் இயக்​குநராக​வும் மலையாளத்​தில் வெற்றி​பெற்ற ஓர் ஆளுமை. அவர் எழுதி இயக்கிய ‘நிர்​மால்​யம்’ இந்திய சினி​மாக்​களில் முக்​கியமான ஒன்றாக​வும் முன்னிறுத்​தப்​படு​கிறது. ஒரு கோயில் சாமி​யாடி​யின் வறிய நிலை​யின் வழி இந்த நூற்​றாண்​டின் பிரச்​சினையை இதில் சித்தரித்​திருப்​பார். பி.ஜே.ஆண்டனி சாமி​யாடியாக நடித்த இந்தப் படம் பல விருதுகளைப் பெற்​றது. புது​மைப்​பித்​தனின் ‘பொன்னகரம்’ கதையைப் போன்ற முடிவைக் கொண்டது இது. சாமி​யாடி சம்பா​திக்க முடியாத நிலை​யில், சாமி​யாடி​யின் அரிவாளை மகன் விற்கத் துணி​கிறான். வறிய நிலை​யிலும் சாமி​யாடிக்கு அது தர்ம​மாகப் படவில்லை.
  • கடந்த காலத்​தின் அறம், நிகழ்​காலத்​தின் பச்சையான யதார்த்​தத்​தின் முன்​னால் கையறு நிலை​யில் நிற்பதை எம்டி இதன் வழி சொல்​லி​யிருப்​பார். கமல்​ஹாசன் கதாநாயகனாக அறிமுகமான சேது மாதவனின் ‘கன்னி​யாகுமரி’ எம்டி​யின் கதைதான். அரபு நாடு​களுக்கு வேலைக்​குப் போகும் முதல் தலைமுறை மலையாளிகள் பற்றிய ‘வில்​காணுண்டு ஸ்வப்​னங்​கள்’ எம்டி​யின் ‘நாலுகெட்​’டைப் போன்​றது. வீழ்ச்சி அடைந்த தரவாட்​டைக் கைப்​பற்றும் ‘நாலுகெட்​’டின் அப்புண்​ணி​யைப் போல் இந்த சினி​மா​வின் நாயகன் அந்த உணர்ச்​சி​யால் நிரப்​பப்​பட்​ட​வனாக இருக்​கிறான். இந்த உணர்ச்சி அவனை எல்லா அறத்​தை​யும் மீறச் செய்கிறது.
  • தரவாட்​டைக் கைப்​பற்றும் அளவுக்​குச் செல்​வத்​தை​யும் சேர்த்து​விடு​கிறான். ஆனால், வாழ்க்கை அவன் கையை​விட்டுப் போய்​விடு​கிறது. கற்பிதப் பெரு​மை​யால் சிதை​யும் தனிமனித வாழ்க்கையை எம்டி இதில் சித்தரித்​திருப்​பார். இயக்​குநர் ஐ.வி.சசிக்காக அவர் எழுதிய ‘ஆள் கூட்​டத்​தில் தனியே’ ஒரு நாவலைப் போன்​றது. மம்மூட்டி, மோகன்​லால் ஆகிய இரு பெரும் நடிகர்கள் நடித்த இந்தப் படம், குடும்பத்​திற்காக மனிதர்கள் தொலைக்​கும் சுயத்​தைப் பேசுகிறது. தன் மீதான வெறுப்பை சீமா​வின் கதாபாத்​திரம் கடக்​கும் விதம் இந்தத் திரைக்​கதை​யில் ஏற்றுக்​கொள்​ளும் விதத்​தில் சித்தரிக்​கப்​பட்​டிருக்​கும்.
  • சிபிமலயி​லின் ‘சதயம்’ எம்டி​யின் திரைக்​கதை​தான். குழந்தை​களைக் கொடூர​மாகக் கொன்ற ஒரு கதாபாத்​திரத்​தில் மோகன்​லால் நடித்​திருப்​பார். அந்தக் கதாபாத்திர உருவாக்​கம், தூக்​குக்​காகக் காத்​திருக்​கும் அந்தக் கொலை​காரன் மீது இரக்​கத்தை வரவழைக்​கும். ஹரிகு​மார் இயக்​கத்​தில் வந்த ‘சுக்​ருத’த்​தில் உயிருடன் இருக்​கும்​போது மரணத்​துடன் இருக்​கும் ஒருவனைப் பற்றி எம்டி எழுதி​யிருப்​பார். பேராசிரியர் இறந்​து​விட்​டார் என்று அஞ்சலிக் குறிப்பு எழுதப்​பட்டு​விடும். ஆனால், பேராசிரியரான மம்மூட்டி திரும்ப வந்து​விடு​கிறார். மேஜை​யில் உள்ள அஞ்சலிக் குறிப்​பை​யும் பார்த்து​விடு​கிறார். மரணத்தை அவரது உடல் வென்​று​விடு​கிறது. உயிர் பிழைத்து​விடு​கிறார்.
  • ஆனால், மனத்​தால் வெல்ல முடிய​வில்லை. மீண்​டும் மரணத்தை நோக்​கிச் சென்​று​விடு​கிறார். இருப்​புக்​கும் இல்லாமைக்​குமான மனப் போராட்டம் இந்தப் படத்​தில் உணர்ச்​சிகர​மாகச் சித்தரிக்​கப்​பட்​டிருக்​கும். தெலுங்கு நாவலை அடிப்​படை​யாகக் கொண்டு எம்டி இயக்கிய ‘ஒரு செறு புஞ்​சிரி’ மென்​மையான படம். வயதான தம்ப​தி​யரின் அழகான காதலை பரபரப்பான இளம் தலைமுறை வாழ்க்கைக்கு இடையில் ஒரு முரணாகக் காண்​பிக்​கும் படம் அது.
  • எம்டி நாவலிலும் சினி​மா​விலும் நாயகர்களை உருவாக்க​வில்லை. உணர்ச்​சிமிக்க மனிதர்​களையே உருவாக்​கினார். அதனால், அவரது நாவல்கள் திரும்பத் திரும்ப வாசிக்​கப்​பட​வும், அவரது படங்கள் திரும்பத் திரும்​பப் பார்க்​கப்​பட​வும் செய்​கின்றன. வாழ்க்கை​யைக் குறித்த நம் கற்​பனை​களும் அது எ​திர்​கொள்​ளும் குரூரமான ய​தார்த்​த​மும்​தான் எம்டி கதைகளி​லும் நாவலிலும் ​முன்​வைத்த கருப்​பொருள். இந்த மோதலால் உரு​வாகும்​ சங்​கடங்​களை மீட்​டிய கலைஞன்​ என எம்​டியைச்​ சொல்​லலாம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories