TNPSC Thervupettagam

எல்லையற்ற கவியும் அத்துமீறிய சீனாவும்... கவிஞர் ஜெண்டன் லுன்ட்ரப்!

February 23 , 2025 1 hrs 0 min 11 0

எல்லையற்ற கவியும் அத்துமீறிய சீனாவும்... கவிஞர் ஜெண்டன் லுன்ட்ரப்!

  • ஜெண்டன் லுன்ட்ரப், (50) (Gendun Lhundrup), வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில், ரெப்காங் கவுண்டியில் உள்ள ரோங்வோ மடாலயத்தில் முன்பு துறவியாக இருந்தவர், நன்கு அறியப்பட்டு, நன்மதிப்புப் பெற்றிருக்கும் திபெத்திய கவிஞர், எழுத்தாளர். நடைமுறையிலுள்ள சீன ஆக்கிரமிப்பு ஆதிக்கத்தின் கீழ் ‘வாயை மூடிக்கொண்டு பேசவேண்டிய’ அவலத்திலுள்ள  திபெத் மக்களுக்கு, குறிப்பாகக் கவிஞர்களுக்கு, சுதந்திரமாகக் கருத்துக் கூறும் உரிமை வேண்டும் என்பதைத் தனது, சொற்பொழிவுகளில், உரைநடை எழுத்தில், கவிதைகளில் உள்ளார்ந்து வலியுறுத்தி வருபவர்.
  • உரிமை பேசினால் சும்மா இருக்குமா செஞ்சீன அதிகாரம்? அதுவும் ஆக்கிரமிக்கப்பட்ட (உய்குர், திபெத் போன்ற) பகுதிகளில்? (உய்குர் இனக் கவிஞர் குல்னிசா இமின் சீன அரசின் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு இன்றும் அல்லற்பட்டு வருவதை, கவிதைதான் குற்றம்  - 13 மூலம் அறிந்து வந்திருக்கிறோம்.)
  • உலகின் கூரை (Roof of the World) என்று அறியப்பட்டிருக்கும் திபெத், 1949 வரை, இமயமலையில் ஒரு சுதந்திர நாடாக இருந்தது, பூகோள ரீதியாகப் பரந்த தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள இயலாத சூழல்களில், உலகின் பிற பகுதிகளுடன் மிக அளவான தொடர்பையே கொண்டிருந்தாலும், திபெத் ஒரு வளமான கலாச்சார களஞ்சியமாக விளங்கியது. திபெத்தியர்களை ஒன்றிணைக்கும் கருப்பொருள் - அவர்களின் சொந்த மொழி, இலக்கியம், கலை மற்றும் புத்த மதம் சார்ந்த அவர்களது உலகக் கண்ணோட்டம் ஆகியவைகளே. உலகின் அதிக உயரத்தில், கடுமையான இயற்கை சூழல்களுக்கிடையே இமாலயச் சூழலுடன் இணைந்த சமநிலையில் திபெத்தியர்கள் அமைதியாக வாழ்ந்து வந்தனர். அது நீடிக்கவில்லை.
  • சீனா 1950 இல் 40,000 ராணுவத்தினருடன் படையெடுத்துச் சென்று அந்நாட்டுடன் திபெத்தைப் பலவந்தமாக இணைத்துக்கொண்டது. இப்போது 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், இந்த ‘வன்சேர்க்கையை’  திபெத்தியர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துத்தான் நிற்கிறார்கள்.  ஆனால், திபெத்தைக் கைப்பற்றியதன் மூலம், சீனாவுக்கு இரட்டை லாபம். திபெத்தின் ஏராளமான இயற்கை வளங்களை அபகரித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு, மறு வாய்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்திய எல்லையை சீனா எளிதாக அணுகக் கிடைத்திருப்பது. எப்படியென்றால், இந்திய - திபெத் எல்லை - பெரும்பாலும் அருணாசலப் பிரதேசத்தையொட்டி- சுமார் 800 கி.மீ. நீண்டு கிடக்கிறது. திபெத்தைச் சீனா ஆக்கிரமித்து அபகரித்துத் தன்வசப்படுத்தியிருப்பதன் விளைவாகப், பெயரளவில் அது இந்திய - திபெத் எல்லையாக இருந்தாலும், தற்போது அது தலைவலிதரும் இந்திய - சீன எல்லை! நாம் கவலையுடன் அறிந்து கண்காணிப்பாக இருந்து எதிர்கொள்ள வேண்டிய தொல்லை.
  • திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீன கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக 2008 ஆம் ஆண்டில் பிராந்திய அளவிலான வலுவான கிளர்ச்சிகள் எழுந்ததைத்  தொடர்ந்து, கருநெஞ்சங்கொண்ட செஞ்சீன ராணுவத்தால் திபெத்தில் ஏற்படுத்தப்பட்ட இரக்கமற்ற உயிர்ச்சேதம் கையறுநிலை உலகறிந்தது. அப்படிப்பட்ட இராட்சத அடக்குமுறையின் தொடர்ச்சியாக, திபெத்தில் உரிமை பற்றிப் பேசுபவர்கள், திபெத்திய தேசிய அடையாளம், அதன் கலாச்சாரத்தைக் காக்க மக்களை ஊக்குவிக்கும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், பிற கலைஞர்கள் ஆகியோரை கண்காணிப்பு வலைபோட்டுத் தேடிப்பிடித்து, அடிக்கடி அணியணியாக சீன அதிகாரிகளால் விசாரணைக்கு என ‘அழைத்து’ச் செல்லப்படுகிறார்கள். தடுப்புக் காவலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ‘அதில் பலர் நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்கள். இது வாடிக்கையாகியிருக்கும் சூழலில், உரிமைப் பேச்சை உரக்கச் சொல்லிவந்த ஜெண்டன் லுன்ட்ரப், தானாகவே சீன அதிகாரிகளின் கண்காணிப்பு வலைக்குள் நுழைந்தார் என்றுதான் கருதவேண்டும். ஜெண்டன் லுன்ட்ரப் குறித்தும், அவருக்கு 2020 ஆம் ஆண்டு முதல் நேர்ந்தவைகளையும் அறியலாம், வாங்க.
  • ஜெண்டன் லுன்ட்ரப் 1974 ஆம் ஆண்டில் திபெத்திய பீடபூமியின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாரம்பரியச் சிறப்புள்ள ஆம்டோ பிராந்தியத்தில் உள்ள ரெப்காங்கில் பிறந்தவர். இளம் வயதிலேயே துறவியாகி ரெப்காங் டார்கி மடாலயத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் ரெப்காங் ரோங்போ மடாலயம், லாப்ராங் தாஷி கைல் மற்றும் செர்டா லாப்ராங் ஆகியவற்றில் கல்வி கற்றார். இளம் வயதிலேயே துறவு வாழ்க்கையைத் தேர்ந்த லுன்ட்ரப், இருபது வயது இளைமையில் (1994 முதல்) கவிதைகள் எழுதத் தொடங்கினார். இனிய காதற் கவிதைகளும் எழுதியுள்ளார், இளந்துறவி. 
  • எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கட்டுப்பாடு இல்லாமல் வெளிப்படுத்த ஏதுவான தளைகளற்ற சுதந்திரம் தேவை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வாஸெங் - டிராக் என்ற இணையதளத்தில் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதினார், அவரது கவிதைகள், கருத்துகள் திபெத்தியர்களிடையே, குறிப்பாக இளைஞரிடையே  நல்ல வரவேற்புப் பெற்றன. (அதுதானே ஆபத்து சீன ஆக்கிரப்பு திபெத்தில்!) லுண்ட்ரப்பின் கவிதைத் தொகுப்புகள், அவரது இலக்கியத் திறன்கள் உள்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள திபெத்தியர்களால் மிகவும் மதிக்கப்படுவதாயின. அக்டோபர் 2022 இல், அவர் "கோர்வா" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார்.
  • சீனப் போலீசார் நீண்ட காலமாக (அரசியல் அதிருப்தி அறிகுறிகளுக்காக) லுன்ட்ரப் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தனர். அவரது புதிய கவிதைத்தொகுப்பு ‘கோர்வா’ கண்காணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தூண்டியது போலும். அவர் கவிதைகள் மூலம் ஒலித்து வரும் உரிமைக் குரலை ஒடுக்கக் களமிறங்கினர்.
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 2 காலையில், ரெப்காங் மடாலயக் கருத்தரங்கு ஒன்றில் சொற்பொழிவாற்ற “மடாலயத்தருகே அவர் நடந்து சென்று கொண்டிருக்கையில், கருப்புக் கார் ஒன்று இடைமறித்தது; அவரைக் காருக்குள் சிலர் தள்ளி ஏற்றிக்கொண்டு சென்றதைக்” கண்டதாகச் சம்பவம் நடந்த பகுதியில் காய்கனிகள் விற்றுக்கொண்டிருந்த ஒரு வியாபாரி அளித்த தகவல் மட்டுமே முதலில் கிடைத்தது.
  • அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார்? என்ன காரணத்திற்காக? என்ற எந்தத் தகவலும் அவரது குடும்பத்தாருக்குக் கூடத் தெரிவிக்கப்படவில்லை. எவ்வளவு நாளாக? பத்து மாதங்களுக்கு மேலாக!
  • கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழிந்து, 2021 செப்டம்பர் 27 இல் லுன்ட்ரப் வீட்டிற்குத் தொலைபேசியில் அழைத்த ஒரு அதிகாரி “லுன்ட்ரப், வழக்கு பற்றிய விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்” என்ற “விரிவான தகவலை” அளித்துவிட்டு, இணைப்பைத் துண்டித்து விட்டார். அதுவரை அவருக்கு என்ன நடந்தது? உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்றெல்லாம் நாளும் மருகிக் கொண்டிருந்த குடும்பத்தார்க்குத் தற்போது அவர் கைது செய்யப்பட்டு ‘இருக்கிறார்’ என்ற செய்தியே ஆறுதலளிப்பதாக இருந்தது! களநிலவரம் புரிகிறதா?.
  • எங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார்? என்ன காரணத்திற்காகக் கைது? எந்த குற்றத்திற்கு, எந்தச் சட்டப்படி வழக்கு? என்பதெல்லாம் அறியக் காத்திருக்கத்தான் வேண்டும். ஆம், அவ்விவரத்துடன்கூடிய ‘கருணைச் செய்தி’ அடுத்து எப்போது வருமெனக் காத்திருக்கத்தான் வேண்டும்! அதுதான் சீன ஆக்கிரமிப்பு ஆட்சியில் திபெத்தில் நிலை.
  • இதற்கிடையில், சமூக ஊடகங்களில் "லுன்ட்ரப் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் தீயெனப் பரவத் தொடங்கியது. நாடுகடத்தப்பட்டு வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத திபெத்தியர் ஒருவர் "லுன்ட்ரப் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் பலர் பெயர் குறிப்பிடாமல் [சீனாவின்] கம்யூனிச ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். லுன்ட்ரப் கடந்த காலங்களிலும் பல முறை விசாரணைக்கெனப் இம்மாதிரி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் குறிப்பிடுகிறார்கள்” என்றார்.
  • மேலும், “லுன்ட்ரப் திபெத்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர், அந்தக் காரணத்திற்காக அயராது உழைத்துள்ளார்," என்று சமூக ஊடகங்களில் பதிவிடும் பலர் “கவிஞரின் படைப்புகள் திபெத்திற்கு உள்ளேயும் நாடுகடத்தப்பட்ட சமூகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அக்டோபரில், லுண்ட்ரப் "கோர்வா" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளதோடு, "வாஸெங் - டிராக்" என்ற இணையதளத்திலும் கருத்துரிமைக் கவிதை வெளியிட்டுள்ளார். அதன் காரணமாகத்தான் அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்ற யூகங்களைப் பலர் வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • கவிஞர், துறவி, கைது செய்யப்படுமுன், 2020 அக்டோபரில், அவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு 'கோர்வா' வெளியிடப்பட்டது உண்மைதான். அதைத் தொடர்ந்துதான், ரெப்காங் கவுண்டியில் சீன அதிகாரிகளால் ஜெண்டன் லுன்ட்ரப் கைது செய்யப்பட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்த யூகம் வர, வர, உறுதியானது.
  • கருத்துக்கூற உரிமை கேட்ட கவிதைதான் குற்றம்! ‘கோர்வா’ கவிதைத் தொகுப்பிலிருக்கும் எந்தக் கவிதை குற்றமாச்சு என்பதைக் கைது செய்த காவல்துறை தெரிவிக்கவில்லை. (வேறு எதைத்தான் அவர்கள் விவரமாகத் தெரிவித்தார்கள்?)
  • 2020 டிசம்பர் 2, முதல், அவர் இருக்கும் இடம் அல்லது அவரது உடல்நிலை முதலியன குறித்து பொதுமக்களுக்கோ அல்லது அவரது மடாலயத்திற்கோ, ஏன், குடும்பத்தினருக்குக்கூட அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை என்று முன்பே கண்டோம். ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரது கைது குறித்து அவரது குடும்பத்தார் ஒருவருக்காவது அல்லது அவரது வழக்குரைஞர்க்காவது தகவல் தர வேண்டும்.
  • அப்படி, யாரிடம் எந்த நாள் / நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது என்ற விவரங்கள் கைது செய்யப்பட்டுள்ள வருக்கான காவல் நிலையக் கோப்பில் குறித்து வைக்கப்பட வேண்டும் என்பது உலகளாவிய மனித உரிமைக் கோட்பாடுகளின் எதிர்பார்ப்பு. பல நாட்டுச் சட்டங்களிலும் இது குறித்த சட்டப்பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அதெல்லாம் சீன மக்கள் குடியரசில் உள்ள (சொந்த) குடிமக்களுக்கே கிடையாது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு இதெல்லாம் அறவே எட்டாத உரிமைகள்! அவர் கைது செய்யப்பட்டு 11 மாதங்களுக்கு பின்னரும், அவருடைய நிலைமை பற்றியோ அல்லது அவர் காவலில் வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்தோ அலுவலர்கள் அளித்த தகவல் என்பது ஒரு குறளளவிலும் கொஞ்சம்தான்!
  • ஜெண்டன் லுன்ட்ரப்பின் குடும்பத்தினரை செப்டம்பர் 2021-க்குப் பிறகு இரண்டாவது முறையாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அலுவலர் ஒருவர் ‘கருணைச் செய்தி’யாக “கவிஞரது வழக்கு விசாரணை தேதி விரைவில் நிர்ணயிக்கப்பட இருப்பதாக” தெரிவித்தார். ஆக,  லுன்ட்ரப் உயிரோடு வைக்கப்பட்டிருக்கிறார்; அவர் மீது வழக்கு போடப்படுகிறது; விரைவில் விசாரணைக்கு வரும்; அப்போதாவது அவரைச் சந்திக்கலாம் என்று குடும்பம் நிம்மதி பெற்றது. வேறென்ன செய்ய?
  • ஆனால், இது குறித்து எந்த மேலதிகத் தகவலும் குடும்பத்திற்குக் கிட்டவில்லை. லுன்ட்ரப்பின் விசாரணை மிக இரகசியமாக, மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்ததா அல்லது அவர் இன்னும் சட்டபூர்வ வழக்குரைஞர் பிரதிநிதித்துவம் இல்லாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என்பதும் தெரியவில்லை.
  • சிலர், லுன்ட்ரப் அரசியல் மறுகல்விக்கு ( சிறையைவிட மோசமான முகாமில் அடைத்து மூளைச்சலவைக்கு) உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருத்துக்கூறி வந்தனர். அதிகாரப்பூர்வ தகவல் மட்டும் வருவதில்லை. எல்லாம் ‘கசியும்’ தகவல்களே! ஆக்கிரமிக்கப்பட்ட (உய்குர் போன்ற ) பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் சீன அரசின் “சிறப்புத்” திட்டமான இத்தகைய ‘மறுகல்வித்திட்டத்தின் நோக்கம் அப்பகுதிகளிலுள்ள தனிநபர்களின் இன, தேசிய அடையாள உணர்வை பலவீனப்படுத்துவதும், சீன கம்யூனிஸ்ட் கட்சியால் ஆபத்தானவை என்று கருதப்படும் முற்போக்கு எண்ணங்களை, அகற்றுவதும் ஆகும். இந்த மறுகல்வி முகாம்களில் சீன (மண்டாரின்) மொழியில் பௌத்தத்தின் “சீனமயமாக்கப்பட்ட” வடிவம் கற்பிக்கப்படும், திபெத்திய மொழியை மறக்கடிக்க வேண்டுமே!. திபெத் தன்னாட்சி பிராந்தியம் என்று அழைக்கப்படும் பகுதிக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கட்சிச் செயலாளரான வாங் ஜுன்ஜெங்கின் அதிகாரத்தின் கீழ், இந்த அரசியல் மறுகல்வி திட்டங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டன.
  • கருத்துரிமை வேட்கையைக் கவிதையாக்கிய குற்றத்துடன், லுன்ட்ரப் மீது சீன அதிகாரிகளின் சினம் அதிகமாக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அது, திபெத்திய பௌத்த நூல்களை மாண்டரின் சீன மொழியில் மொழிபெயர்க்க உதவுமாறு அதிகாரிகளால் உத்தரவிடப்பட்ட லுன்ட்ரப், இதைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை கேள்வி கேட்டார் என்பதாகும். இவ்வாறு கேள்வி கேட்டதால் அதிகாரிகளுக்கும் அவருக்கும் வெளிப்படையான கருத்து வேறுபாட்டிற்கு வழிவகுத்தது என்கிறார்கள். இவ்விஷயத்தில், அவர் தனது ஆட்சேபனைகளை வெளிப்படுத்திய சில நாள்களுக்குப் பிறகுதான் கைது செய்யப்பட்டார்" என்றாலும், மொழிபெயர்க்க மறுப்புக்காட்டியது அவரைக் கைது செய்தபின் அவரைக் கடுமையாக நடத்தச் செய்தது.
  • "பல திபெத்திய அறிஞர்கள் மற்றும் திபெத்திய அடையாளத்தை ஊக்குவிக்கும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் சீன அரசாங்கத்தின் ‘இலக்கு’களாக மாறுகிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் இறுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்கள்" என்று லண்டனைத் தளமாகக் கொண்ட உரிமைகள் குழுவான திபெத் வாட்சின் ஆராய்ச்சியாளர் பெமா கயால் கூறுகிறார். "திபெத்திய அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை அடக்குவது திபெத்தின் அடையாளத்தை அழிக்க உதவும் என்று சீன அரசாங்கம் நம்புகிறது, எனவே சீனாவின் மொழிக் கொள்கைகள், திபெத்திய பௌத்த நூல்களை சீன மொழியில் மொழிபெயர்ப்பது அனைத்தும் திபெத்திய மொழியை மறையச் செய்யும் பெரிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்" என்று கயால் கருதுகிறார். ‘மொழியை ஒடுக்குவது, இனத்தை அடக்குவதற்கு வாகான கருவி’ என்பது புரிகிறதா நமக்கு?
  • சமீபத்திய ஆண்டுகளில் தேசிய அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான திபெத்திய முயற்சிகளுக்கு மொழி உரிமைகள் ஒரு குறிப்பிட்ட செயல்களமாக மாறியுள்ளன, திபெத்தியர்கள் முறைசாரா வழிகளில் முறையில் ஏற்பாடுகள் செய்து தமது  மொழியைப் படிப்பதைக்கூட "சட்டவிரோதமாகக் கூடுவது” என்பதாகக் கருதுகிறது அரசின் எண்ணம். அதனால், அவ்வாறான குழுக்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்காகக் கைது செய்யப்படுகிறார்கள்.
  • 2020 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பின்னர் ஒரு வருடத்திற்கும் மேலாகத் தொடர்பு கொள்ள முடியாமல் வைக்கப்பட்டுள்ள ஜெண்டன் லுன்ட்ரப், சிலிங்கில் (சீன, ஜினிங்) உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று அவரது தற்போதைய நிலைமையை ‘கசியும்’ ‘ஏதோவொரு வழியில் அறிந்த திபெத்தியர்கள் தகவல் தெரிவித்தனர். இதுபோன்று செய்திகளைக் ‘கசிய’ விடுவதும் அதிகாரத்தின் நயவஞ்சகச் செயல்பாடுகளில் ஒன்று. அதிகார வழித் தகவல் தரப்படாது. ஆனால் அதிகாரிகளிடமிருந்து அவர்கள் கசியவிட விரும்பும் தகவல்கள் கசிய விடப்படும்! என்னே தந்திரம்!
  • "இதுவரை எங்கிருக்கிறார் என்று தெரியாத ஜெண்டன் லுன்ட்ரப் சிலிங்கில் உள்ள ஒரு தடுப்புகாவல் மையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்" என்று திபெத் தன்னாட்சி பிராந்தியத்திற்குள் வசிக்கும் ஒரு திபெத்தியர் கூறியதாக ரேடியோ ஃப்ரீ ஆசியா அறிவித்தது. "இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் இன்னும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை, மேலும், அவரது நிலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை." திபெத்திய பௌத்த இலக்கியங்களை (மாண்டரின்) சீன மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு லுன்ட்ரப் அரசியல் மறுகல்வி திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி மேலும் கூறியது.
  • திபெத்திய பௌத்த ஆய்வுகள் சீன மொழியில் பிரத்தியேகமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திவருவது வெளிப்படைதான். திபெத்திய மொழிக்குப் பதிலாக மாண்டரின் சீன மொழியைப் பயன்படுத்துமாறு பௌத்த துறவிகளுக்கும் கன்னியாஸ்திரிகளுக்கும் சீன அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். செப்டம்பர் 2021 இல் கிங்காயில் நடந்த புத்தமத மாநாட்டில், திபெத்திய பௌத்த மடாலயங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் வகுப்பறைக்கான நூல்களை திபெத்திய மொழியிலிருந்து சீனாவின் "பொது மொழியான மாண்டரின் சீனத்திற்கு" மொழிபெயர்க்கத் தொடங்க வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகள் அறிவுறுத்தல்களை (மிரட்டல்கள்) வழங்கினர்.
  • துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள், தங்கள் சொந்த மொழிக்குப் பதிலாக சீன மொழி கற்றுக்கொள்ளவும் ஒருவருக்கொருவர் பேசவும் அதனைப்பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது, (இந்தியாவிலும் இதுமாதிரிக் குரல்கள்தான் இப்போது கேட்கின்றனவோ?) இது நாடு முழுவதும் புத்த மதத்தை (எதையும் விடுவதில்லை போலும். கம்யூனிஸ்ட்களுக்கு மதத்தைப்பற்றி என்ன கவலை?) ‘சீனமயமாக்குவதற்காக’ சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் விடுத்துள்ள அழைப்பின் ஒரு பகுதியாகும் என்கிறார்கள்.
  • சீன அதிகாரிகள் செப்டம்பர் 2021 தொலைபேசி அழைப்பில் லுன்ட்ரப்பின் குடும்பத்தினரிடம் “எழுத்தாளரின் விசாரணை விரைவில் நடைபெறும்” என்று கூறியதை அறிந்தோமல்லவா? ஆனால் அதன் பின்னர் வேறு செய்திகள் எதுவும் குடும்பத்தவர்க்கு அறியத்தரவில்லை அதிகாரிகள். "லுன்ட்ரப்பிற்கு நெருக்கமான ஒரு ஆதாரத்தின்படி, அவரது விசாரணை குறித்து எந்த செய்தியும் இல்லை, அவர் ஒரு சிறப்பு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அங்கு அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை" என்று மட்டும் அறியப்பட்டுள்ளது.
  • கவிஞர் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், அவரது குடும்பத்தினர் பலமுறை தகவல் கேட்ட போதிலும், அவர் இருக்கும் இடம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அல்லது அவரது உடல்நிலை முதலியன குறித்து போலீசார் எந்த விவரங்களையும் வழங்கவில்லை என்று ரேடியோ ஃப்ரீ ஏசியா (RFA) தெரிவித்தது.
  • லுன்ட்ரப்பின் உறவினர்கள் அவர் எங்கு இருக்கிறார், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய ரெப்காங் கவுண்டியில் உள்ள அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். "இருப்பினும், அவர்களின் கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை". குடும்பம் லுண்ட்ரப்பிற்கு ஏதாவது பொருட்களை அனுப்ப விரும்பும் போதெல்லாம், சீன அரசாங்கத்தின் ரெப்காங் கவுண்டி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் பொருட்களை அவர்களிடம் விட்டுச் செல்லச் சொல்கிறார்கள், மேலும், அவர்கள் அவற்றை லுன்ட்ரப்பிற்கு அனுப்புவோம் என்று கூறுகிறார்கள். "அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படாததால் அவரது நலம் பற்றி அறிய வாய்ப்பில்லை. கூடுதலாக, லுன்ட்ரப்பின் தண்டனைக்கான ஆதாரமாக அதிகாரிகள் எந்த விவரங்களையும் ஆவணங்களையும் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
  • லுன்ட்ரப் போலவே 2016 ஆம் ஆண்டில், திபெத்திய மொழி வழக்குரைஞர் தாஷி வாங்சுக் என்பவரும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலில் இரண்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டு, ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையின் ஒரு பகுதியை அனுபவித்த பின்னர்தான் வழக்குரைஞர் தாஷி 2021 இல் விடுவிக்கப்பட்டார்.
  • ஒருவழியாக நவம்பர் 9, 2024 இல்,  தற்போது 50 வயதாகிவிட்ட லுன்ட்ரப், பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு ஆதாரங்களின்படி, அன்று விடுவிக்கப்பட்டார் என்ற ‘கசிவுச்’ செய்தி கிடைத்தது. விடுதலையானாலும் அவர் தொடர்ந்து கடுமையான கண்காணிப்பு, கட்டுப்பாடுகளின் கீழ் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். இதனால் அவரிடமிருந்து அல்லது அவர் பற்றிக் கூடுதல் தகவலில்லை.
  • ஆனால், அவரது ஆதரவாளர்கள் அரசாங்க கண்காணிப்புக்கு மத்தியிலும் தைரியத்தைக் காட்டுவதுபோல, லுன்ட்ரப்பின் "மே இட் பி ஆஸ்பீசியஸ்’’ (மங்களகரமாகட்டும்) என்ற- விடுதலைக்குப்பின் 19 நவம்பர் 2024 இல் எழுதிய - அவரது கவிதையை ஏராளமான திபெத்திய சமூக ஊடகங்களில்-  அவரது விடுதலையைக் கொண்டாடுவதுபோல் - பதிவு செய்து வருகிறார்கள்.
  • "வருடங்களும் மாதங்களும்
  • கடந்து போயின, காற்றோடு.
  • கண்கள்
  • கண்ணீர் பெருக்கினாலும்
  • எல்லா இடங்களிலும்
  • இடைவிடாக் கண்காணிப்பு இருந்தும்
  • நான் இந்த
  • தைரியமான வார்த்தைகளை எழுதினேன்,
  • என் இதயத்திலிருந்து
  • இன்னும் எழுதுவேன்.
  • ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை" என்கிறது அக்கவிதை.
  • லுன்ட்ரப் தன் படைப்புகளை 'Za' (கிரகம் / வான உடல்), 'Ge Nyon' (மேட் மாங்க்) மற்றும் 'Lham Kog' (ஷூ) போன்ற பல்வேறு புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். பலபுனைப் பெயர்கள், உடனடிக் கைது நடவடிக்கைகளில் இருந்து காத்துக் கொள்வதற்கான உத்திதான்!  அவரது வெளியிடப்பட்ட படைப்புகளில் ஆறு கவிதைத் தொகுதிகள் அடங்கும்: 'தி கிரே காங்லிங்', 'தி பொயட்ரி ஆஃப் தி கிரேட் தெய்வம்', 'தி பிளாக் ரோசரி', 'தி மெலடி ஹார்ஸ் ஆஃப் லைஃப்', 'தி ஒயிட் வால்யூம்' மற்றும் 'சம்சாரா'. புனைவு, கட்டுரை போன்ற பல்வேறு வகைகளில் அவர் பல நூல்கள் எழுதியுள்ளார். வேறுவேறு புனை பெயர்களில் எழுதுவதால், எழுதியது லுன்ட்ரப் என்று தெரியாமலே இவரது இரண்டு படைப்புகளுக்குச் சீன அரசின் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதும் நமட்டுப் புன்னகையுடன் குறிப்பிட உரியதாகிறது.
  • படைப்பு எழுத்து, எடிட்டிங் கற்பித்தல், வழிகாட்டியாய் இருத்தல் ஆகிய பல களங்களில் லுன்ட்ரப் ஆர்வமுடன் செயல்பட்டார். அவரது கவிதைகள், இலக்கியப் பங்களிப்புகள், அறிவார்ந்த சொற்பொழிவுகள் முதலியன அவரை திபெத்தில் ஒரு நன்கறியப்பட்ட, முக்கிய நபராக நிலைநிறுத்தின. அவரடைந்த அந்த முக்கிய நிலை / செல்வாக்குதான் அவரைச் சீன அதிகாரிகளின் “இலக்காகவும்” மாற்றியது. அதனால்தான் நான்காண்டுச் சிறைவாசம், கூடுதல் இரண்டாண்டுக் கண்காணிப்பு, கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கும் தற்போதைய நிலைக்கு அவரை இட்டு வந்துள்ளது.
  • டிசம்பர் 2021 இல், ஜினிங் இடைநிலை மக்கள் நீதிமன்றம் அவருக்கு "பிரிவினைவாதத்தைத் தூண்டியது" என்ற குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாகவும், மேலும் இரண்டு கூடுதல் ஆண்டுகளுக்கு அவரது அரசியல் உரிமைகளைப் பறித்து ஆணையிட்டிருப்பதாகவும் அலுவலர்கள் வழி  உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்தத் தண்டனை, சீன அரசின் அடக்குமுறைக் கொள்கைகளை, திபெத்தியரின் மொழி உரிமைகளை, அவர்களது கருத்துச் சுதந்திர மறுப்பை எதிர்த்து நின்று, திபெத்திய அடையாளம், கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக களமாடும் திபெத்திய அறிவுஜீவிகளுக்கு சீன அரசு தெரிவிக்கும்  பதில் மொழியாகவும் எச்சரிக்கையாகவும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
  • அவரது தண்டனை காலம் முழுவதும் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இடம் வெளியிடப்படவேயில்லை, விசாரணை விவரங்களும் தெரியவில்லை. நான்காண்டுச் சிறைவாசம் முடிந்தும் மேலும் இரண்டாண்டுகளுக்கு வெளியுலகிலிருந்து யாரும் அவரைத் தொடர்பு கொள்ள இயலாது. சிறையில் வைக்கப்பட்டிருந்தபோதும் அதே நிலைதானே? அதுவேதான் தொடரும் அடுத்த ஆண்டு வரை.
  • கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அடக்குமுறை, சமூக பாகுபாடு, பொருளாதார வளர்ச்சி மறுப்பு, சுற்றுச்சூழல் அழிவு, திபெத்திய மொழியை மறைத்து  ஓரங்கட்டுதல், பதிலாக மண்டாரின் சீன மொழிக்கு அளவுக்கதிகமான ஊட்டங்கொடுத்தல், திபெத்திய புத்தமதம் உள்ளிட்ட பண்பாட்டுக்கூறுகளைச் சீனமயமாக்கல், திபெத்தியர்கள் என்பதை அம்மக்கள் மறந்து சீன தேசக்குடிமக்களாக உணரச்செய்தல் – ‘ஒரே நாடு, சீனநாடு’ என்ற மனப்பாங்கைத் திபெத் மக்களுக்குப் புகட்டுதல் - ஜின்ஜியாங் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் உய்குர் இன அழிப்புக் கூறுகளனைத்தும் தாராளமாகத் திபெத்திலும் நடைமுறைப்படுத்தல் எனத் திபெத்தின், திபெத்தியர்களின் அனைத்து அடையாளங்களையும் அழிக்க வகை வகையான கொடுமைகளை நாளும் நிகழ்த்திவரும் நாட்டுடன் சுமார் 800 கிலோமீட்டர் நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் பக்கத்து நாட்டவர்கள் நாம், தற்போது.

நன்றி: தினமணி (23 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories