எழுதாதீர்கள்...
- ‘வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள், சார்லஸ் புகோவ்ஸ்கி என்று கேட்டால் பொசுக்கென்று இப்படியா செல்வது? ஓர் எழுத்தாளராக இருந்துகொண்டு எழுதாதே என்று மற்றவர்களைப் பார்த்து எப்படிச் சொல்ல முடிகிறது உங்களால்?’ இப்படிக் கோபத்தோடு என்னைக் கேட்பவர்களுக்கும் சேர்த்து நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எழுதாதீர்கள். உற்சாகமான நாள். இன்று ஒரு கதை எழுதினால் நிச்சயம் நன்றாக வரும் என்று நம்புகிறீர்களா? எழுதாதீர்கள்.
- ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அருவி ஒன்று உங்களுக்குள் பொங்கிப் பீறிட ஆரம்பிக்கும். எழுது, எழுது, உன்னால் முடியும் என்று அது உங்களை ஊக்குவிக்கும். எழுதாதீர்கள். ஒரு மோசமான கவிதையை வாசிக்கும்போது, நாமே ஏன் எழுதக் கூடாது? நிச்சயம் இதைவிட நன்றாக எழுத முடியும் என்னும் உறுதியான நம்பிக்கை தோன்றும். எழுதாதீர்கள்.
- இதே கதையை வேறு மாதிரியாக மாற்றினால் முற்றிலும் புதிய ஒரு கதை கிடைக்கும் என்று ஒரு புதுமையான சிந்தனை பளிச்சிடுகிறதா? எழுதாதீர்கள். யாருக்கும் தோன்றாத ஒரு வித்தியாசமான கதை உங்களிடம் மட்டும் பதுங்கி இருக்கிறதா? பதுங்கியே கிடக்கட்டும். எழுதாதீர்கள். நான் ஒரு நல்ல வாசகன்.
- உலகின் சிறந்த படைப்புகள் பலவற்றைத் தேடித் தேடி, ரசித்து ரசித்து வாசித்திருக்கிறேன். ஒரு படைப்பு எப்படி உருவாகிறது என்பதைக் கூர்ந்து ஆராய்ந்திருக்கிறேன். எழுதுவதற்கு இதைவிட வேறொரு தகுதி தேவையில்லை என்கிறீர்களா? எழுதாதீர்கள். எல்லாப் பெரிய படைப்புகளும் ஒரு தீப்பொறியில்தான் தொடங்குகிறது. அந்தத் தீப்பொறி என்னிடம் தோன்றிவிட்டது என்று உணர்கிறீர்களா? எழுதாதீர்கள்.
- நிலவு. குலுங்கும் வண்ண மலர். உறங்கும் குழந்தை. பனி. ஓர் அழகிய மாலை நேரத்து நதி. கதிவரவனின் முதல் ஒளி. இவற்றில் ஒன்றைப் பார்த்தவுடன் ஆ, இது ஒரு கவிதைத் தருணம் என்று உள்ளம் கொந்தளிக்கிறதா? எழுதாதீர்கள். எழுத்து என்பது திறமை அல்ல, பயிற்சி. ஓர் எழுத்தாளருக்குத் தேவை கடினமான உழைப்பு. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தால் ஓர் அற்புதமான தருணத்தில் அழகிய படைப்பொன்று உங்களிடம் இருந்து எதிர்பாராமல் தோன்றும் என்று யாராவது உங்களிடம் சொன்னார்களா? அல்லது எங்காவது படித்துவிட்டு அதையே உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்களா? வேண்டாம். தயவு செய்து எழுதாதீர்கள்.
- நானும், நானும் என்று சொல்லி எழுதிக் குவித்தவர்களின் நூல்களில் சிலந்தி வலை பின்னி வைத்திருக்கிறது. காலத்தைக் கடந்து நிற்கும் என்று கனவு கண்டவர்களின் கதைகளைக் கறையான்கள் சுவைத்து முடித்துவிட்டன. பெரிய பெரிய சிந்தனைகளைத் தாங்கி நிற்கும் பெரிய பெரிய புத்தகங்கள் ஒரே ஒரு வரிகூடப் படிக்கப்படாமல் மூலையில் முடங்கிக் கிடக்கின்றன. உயிரைக் கொடுத்து எழுதிய பலரின் கவிதைகளில் உயிர் அல்ல, உயிரின் நிழல்கூட இல்லை. மிகுந்த நம்பிக்கையோடு, மிகுந்த உற்சாகத்தோடு எழுதப்பட்ட எண்ணற்ற படைப்புகளின் பெயர்களைக்கூட நினைவில் வைத்திருக்க மறுத்துவிட்டது காலம். எனவே எழுதாதீர்கள்.
- உங்களுக்குப் பணம் முக்கியமா? புகழ் வேண்டுமா? அங்கீகாரம்தான் உங்கள் தேவையா? அதை உங்கள் புத்தகம் பெற்றுத் தரும் என்று நம்புகிறீர்களா? எழுதாதீர்கள். ஒரு வரியை எழுதுவதற்குள் ஒன்பது முறை அடிக்கவும் திருத்தவும் மாற்றியமைக்கவும் வேண்டி யிருக்கிறதா? எழுதாதீர்கள். என் கற்பனை என்னைத் தேடி வரும் என்று கையில் பேனாவைப் பிடித்துக் கொண்டு காத்திருக்கிறீர்களா? பேனாவைக் கீழே வைத்துவிடுங்கள். எழுதாதீர்கள்.
- போதுமான கதைகள் எழுதப்பட்டுவிட்டன. நீங்கள் கண்ட அதே நிலவை, அதே மலரை, அதே மேகத்தை, அதே நதியை உங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் தரிசித்து விட்டார்கள். உத்வேகம் கொண்டு எழுதித் தள்ளி விட்டார்கள். உங்கள் மகிழ்ச்சியை, உங்கள் வேதனையைப் பலர் திரும்பத் திரும்பப் பதிவு செய்துவிட்டார்கள். உறக்கத்தில் உங்களுக்குத் தோன்றிய பல அற்புதமான கற்பனைகளை பலர் ஏற்கெனவே விரித்து எழுதிவிட்டார்கள். மலைபோல் குவிந்திருக்கும் காகிதங்களோடு உங்கள் காகிதமும் சேர வேண்டும் எனும் துடிதுடிப்போடு எழுதாதீர்கள்.
- இனி என்னால் இங்கே தங்கி இருக்க முடியாது என்று அலறியபடி உங்கள் உடலிலிருந்து, உங்கள் இதயத்திலிருந்து, உங்கள் ரத்த நாளங்களிலிருந்து, உங்கள் சதைத் துணுக்குகளில் இருந்து, உங்கள் நரம்புகளிலிருந்து ஒரு சொல் கிழித்துக்கொண்டு பாய்ந்து வருகிறதா என்று பாருங்கள். வரவில்லை என்றால் எழுதாதீர்கள். ஐயோ, என்னைக் கிழித்துக்கொண்டா வரவேண்டும்? எனக்கு வலிக்குமே என்று அஞ்சுகிறீர்களா? அந்த அச்சத்தை உதறித் தள்ளும்வரை எழுதாதீர்கள்.
- உண்மையை உண்மை என்றும் பொய்யைப் பொய் என்றும். உன்னதத்தை உன்னதம் என்றும் கீழ்மையைக் கீழ்மை என்றும் சொல்லும் துணிவு உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள். போகப் போக வளர்த்துக்கொள்வேன் என்று சொல்வீர்களானால் எழுதாதீர்கள்.
- அமர்ந்து, யோசித்து, சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து, அழகு சேர்த்து எழுதவேண்டிய தேவையே இல்லாமல் எரிமலைபோல் சொற்கள் உங்கள் கரங்கள் வழியே வழிந்து வந்து காகிதங்களை நிரப்பித் தள்ளிக்கொண்டு போகிறதா என்று பாருங்கள். அது நடக்கவில்லை என்றால் எழுதாதீர்கள். ஒரு கதையோ கவிதையோ உங்களைத் தானாகவே தேர்ந்தெடுக்காதவரை நீங்கள் எழுதும் எதிலும் சாரம் இருக்காது. உண்மை இருக்காது. வலி இருக்காது.
- மகிழ்ச்சி இருக்காது. வாழ்வு இருக்காது. ஒவ்வோர் எழுத்தும் ஒரு சிங்கம்போல் உறும வேண்டும். ஒவ்வோர் எழுத்தும் முழுக்காட்டையும் அழிக்கக்கூடிய கனல்போல் நின்று எரிய வேண்டும். ஒவ்வோர் எழுத்தும் பிரபஞ்சத்தின் ஆற்றலைத் தனக்குள் வளர்த்து வைத்திருக்க வேண்டும். அப்படி ஓர் எழுத்து உங்களிடம் அதுவாகவே தோன்றும்வரை எழுதாதீர்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 03 – 2025)