TNPSC Thervupettagam

ஏழை மாணவர்களின் உயர் கல்வி தடைபடக் கூடாது

October 7 , 2024 13 hrs 0 min 22 0
  • உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஏழை தலித் மாணவரின் உயர் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகத் தனது சிறப்பு அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள திதோரா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் அதுல் குமார். பொறியியலுக்கான பொதுநுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) வெற்றி பெற்ற இவருக்கு தன்பாத் ஐஐடியில் பி.டெக். மின் பொறியியல் பாடப் பிரிவில் இடம் கிடைத்தது.
  • கல்லூரியில் அவரது சேர்க்கையை உறுதிசெய்வதற்காக ஜூன் 24 மாலைக்குள் 17,500 ரூபாயைக் கட்டும்படி நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அதுல் மிகுந்த சிரமப்பட்டுப் பணத்தைத் திரட்டிவிட்டார். எனினும், கடைசி சில நிமிடத் தாமதத்தால் பணம் செலுத்த முடியாமல் கல்லூரியில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்திடம் முறையிட்டும் பலனில்லை.
  • பிறகு, கல்லூரி அமைந்திருக்கும் ஜார்க்கண்ட மாநிலச் சட்டச் சேவைகள் மையத்தை அணுகியபோது, ஜேஇஇ தேர்வை நடத்திய சென்னை ஐஐடிதான் இதற்குத் தீர்வு காண வேண்டும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அதில் சிக்கல் நீடித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தை அதுல் அணுகினார். உச்ச நீதிமன்றத்திடம் முறையிடும்படி சென்னை உயர் நீதிமன்றம் வழிகாட்ட, இறுதியில் உச்ச நீதிமன்றமே அதுலின் உயர் கல்விக் கனவை நனவாக்க உதவியது.
  • அதுலைச் சேர்த்துக்கொள்ளும்படி கல்லூரி நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூவர் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 142ஆவது பிரிவின்படி, தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
  • “அதுல் குமார் திறமையான மாணவர். கல்வி வேண்டி உச்ச நீதிமன்றத்துக்கு வரும் எந்தவொரு குழந்தையும் ஏமாற்றத்தைச் சந்திக்கக் கூடாது. விளிம்பு நிலையில் இருக்கும் அவர், தனது உயர் கல்விக்காகத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறார். இதுபோன்றதொரு தீர்ப்பை வழங்குவதற்காகத்தான் சிறப்பு அதிகாரங்கள் பயன்பட வேண்டும்” எனத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
  • ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால், அதுலுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்ட மாணவரைக் கல்லூரி நிர்வாகம் நீக்கிவிடக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அதுலின் நான்கு ஆண்டுகாலக் கல்விச் செலவு அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக உத்தரப் பிரதேச மாநில அரசு உறுதியளித்துள்ளது. அதுல் வழக்கில் அவர் போதுமான தகுதி பெற்றிருந்தும் கல்விக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட சில நிமிடத் தாமதத்தால், அவர் உச்ச நீதிமன்றம்வரை சென்று போராட வேண்டியிருந்தது.
  • நெருக்கடியான சூழலில் எல்லா மாணவர்களும் இப்படி உறுதியுடன் போராடுவார்கள் என்று சொல்ல முடியாது. அப்படியே போராடினாலும் அனைவருக்கும் கல்வி கிடைத்துவிடாத அளவுக்குத்தான் பல கல்வி நிறுவனங்களின் விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, வறுமையின் காரணமாக எந்தவொரு மாணவரின் உயர் கல்வியும் தடைபடாமல் இருப்பதைக் கல்வி நிறுவனங்களும் மத்திய – மாநில அரசுகளும் உறுதிசெய்ய வேண்டும்.
  • கல்லூரியில் சேர்க்கை தொடர்பான சிக்கல்களுக்குக் கல்லூரி அளவிலேயே தீர்வு காணும் வகையிலும் மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகக் கல்லூரி நிர்வாகங்களை எளிதில் அணுகும் வகையிலும் விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். அதுதான் எந்தவொரு மாணவரின் உயர் கல்வியும் தடைபடாமல் காக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories