TNPSC Thervupettagam

ஒழியட்டும் பெண்களுக்கு எதிரான வன்முறை

November 25 , 2024 6 hrs 0 min 4 0
  • இந்தியா திருமணத்தை ஒரு புனிதமான, சமூக நிறுவனமாகப் பார்க்கிறது. பல ஆண்கள் தங்கள் மனைவிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் துன்பகரமான இன்பத்தை அனுபவிப்பதாக உளவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பல பெண்கள் சித்திரவதை மற்றும் அவமானங்களிலிருந்து தப்பிக்க தற்கொலைகூட செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுறார்கள். இதில் சில விதிவிலக்குகளும் இருக்கலாம்.
  • இந்திய மகளிர் ஆணையத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் சுமார் 26% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது குடும்ப வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை ஒரு பெண் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறாள் அல்லது வரதட்சிணைக்காக துன்புறுத்தப்படுகிறாள். ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள்.
  • பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது பாலியல் தாக்குதல் மட்டுமல்லாமல், அது உடலைச் சிதைக்கும் நிலையையும் எட்டியுள்ளது. 2012-ஆம் ஆண்டு நடந்த நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கு, ஆசிஃபா கூட்டுப் பலாத்கார வழக்கு, பிரியங்கா ரெட்டி கும்பல் பலாத்கார வழக்கு என இதை நிரூபிக்க ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
  • கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்திய காவல்துறை பதிவு செய்த 60 லட்சம் குற்றங்களில் 4,28,278 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடையவை. கடந்த ஆறு ஆண்டுகளில் இது 26.35% அதிகமாகியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான வழக்குகள் பெண்கள் கடத்தல், வீட்டு வன்முறை, வரதட்சிணை மரணங்கள் சார்ந்தவை எனத் தெரிகிறது. மேலும், 107 பெண்கள் அமில வீச்சுக்கும், 1,580 பெண்கள் கடத்தலுக்கும், 15 சிறுமிகள் விற்பனைக்கும் உள்ளாகி இருக்கின்றனர். இணைய வழி குற்றங்களால் 2,668 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ராஜஸ்தானும், மகாராஷ்டிரமும் உள்ளன.
  • சமீபத்திய புள்ளி விவரங்களின்படி 76,263 பெண்கள் கடத்தப்பட்டிருக்கின்றனர். இது 2016-ஆம் ஆண்டின் புள்ளி விவரமான 66,544 -ஐ விட 14% அதிகமாகும். 2021-ஆம் ஆண்டு காவல்துறையினர் 1,37,956 பெண்களிடம் இருந்து புகார்களைப் பெற்றுள்ளனர். நான்கு நிமிடங்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு எதிரான ஒரு குற்றம் பதிவாகிறது. 2016-ஆம் ஆண்டில் 1,10,434 பெண்கள் காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர். 2021 இல் இது 27% அதிகமாகியுள்ளது. பெண்கள் மீதான ஆண்களின் பார்வைக்கு அவர்களின் இளமைக்கால வளர்ப்பு முறையே அடிப்படைக் காரணமாகும்.
  • பலர் பாலியல் தொழிலுக்காகவும், வீட்டுப் பணிகளுக்காகவும் கடத்தப்படுகின்றனர். கடத்தப்பட்ட 28,222 பெண்களில் பெரும்பாலானோர் கட்டாயத் திருமணத்திற்காக கடத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது. கணவர் அல்லது அவரது உறவினரால் இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
  • 1961-இல் வரதட்சிணை சட்ட விரோதச் சட்டத்தையும், 1983-இல் வரதட்சிணைக் கொடுமைக்கு எதிரான 498 ஏ என்ற சட்டப் பிரிவையும் இந்திய அரசு அமல்படுத்தியது. எனினும், மணமகள் குடும்பத்தினரிடம் வரதட்சிணை கேட்பது தொடர்கிறது. அண்மைக்கால உலக வங்கியின் புள்ளிவிவரப்படி இந்திய கிராமப்புறங்களில் நடைபெறும் 95% திருமணங்களில் வரதட்சிணை தரப்படுவதாக தெரியவருகிறது. கடந்த ஆண்டு காவல்துறையின் பதிவின்படி சராசரியாக 77 நிமிடத்துக்கு ஒரு வரதட்சிணை மரணம் நிகழ்கிறது.
  • பெண்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் பாகுபாடு பற்றிய சட்டங்கள் மாற வேண்டும். அரசியல், சமூக போராட்டங்களில் பெண்கள் பங்கேற்பது அதிகமாக இருக்க வேண்டும். பெண் மக்களாட்சி பிரதிநிதிகள் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்குச் சமமாக இருக்க வேண்டும்.
  • கல்வி, வேலைவாய்ப்பு, தனித்திறன் வளர்ப்பு என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தமக்கென ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பெண்கள் அடிப்படையில் உழைப்பாளிகள். ஆனால், அவர்களின் உழைப்பு முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை.
  • சமூக புனரமைப்புத் திட்டங்களில் மகளிரின் பங்களிப்பு மேலும் அதிகமாக வேண்டும். தமிழக அரசு சமூக நலத் துறையின் மூலம் பெண்கள், குழந்தைகள், நலிவுற்றோர், ஏழைகள், மூத்தகுடிமக்கள், திருநங்கைகள் போன்றோரின் நல்வாழ்வு சமூக நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு பள்ளிகளிலேயே அளிக்கப்பட வேண்டும்.
  • இக்காலகட்டத்தில் குடும்பச் செலவைச் சரிகட்ட ஆணும் பெண்ணும் சம்பாதிக்க வேண்டியுள்ளது. பெண்கள் தங்கள் கல்வியறிவையும், வேலைவாய்ப்புக்கான திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் நல்ல வேலைவாய்ப்புகளை அவர்களால் பெற முடியும். இதனால் பொருளாதாரத்தில் தற்சார்பையும் அவர்கள் பெற முடியும். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களையும், அதிலிருந்து மீண்டு வந்தோரையும் கண்ணியத்துடன் நடத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
  • நம் வாழ்வில் தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக ஆண் வர்க்கத்திற்கு பல தியாகங்களைச் செய்து நம் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பவர்கள் பெண்கள். அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அடியோடு ஒழிப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டிய நேரமிது.
  • (நவம்பர் 25, சர்வதேச பெண்களுக்கு எதிரான கொடுமை ஒழிப்பு நாள்).

நன்றி: தினமணி (25 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories