கடற்கரைகளில் திணிக்கப்படும் நீலப் பொருளாதாரம்!
- உலக வங்கியின் நிதியுதவியுடன், ‘ரூ.1,675 கோடி செலவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், ‘தமிழக நெய்தல் மீட்சி இயக்கம் (Tamil Nadu Coastal Restoration Mission)’ செயல்படுத்தப்படும்’ என்று 2023இல் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டமானது கடலோர உயிர்ப் பன்மை மேம்பாடு, சூழலியல் பாதுகாப்பு, வாழ்க்கைத்தர மேம்பாடு, ஞெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- கடந்த 2021 முதல் நெய்தல் மீட்சி இயக்கம், காலநிலை இயக்கம், பசுமை இயக்கம், சதுப்புநில இயக்கம் என மொத்தமாக நான்கு இயக்கங்களைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இவற்றை நிர்வகிக்க ‘தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம்’ (Tamil Nadu Green Climate Company) என்கிற நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளது.
- இதுவரை இரண்டு காலநிலை மாநாடுகளைத் தமிழக அரசு நடத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக நிலப்பரப்பில் 33% பகுதியைக் காடுகள்/மரங்கள் சூழ்ந்த பகுதியாக மாற்றுவதைக் காலநிலை மாற்ற இலக்குகளாகக் கொண்டுள்ளது. அதேவேளையில், நெய்தல் மீட்சி இயக்கம், கடலோர மக்கள் கடல் சார் சூழலியல் மீட்சி எனக் கூறிக்கொண்டாலும், அதன் நோக்கம் நீலப் பொருளாதாரத்தையே முன்னிலைப்படுத்துகிறது. இதன் எதிர்மறை விளைவுகளைப் பற்றி விவாதிப்பது அவசியமாகிறது.
பின்னணி என்ன?
- நீலப் பொருளாதாரம் என்பது கடலைப் பகுதிவாரியாகப் பிரித்துச் சுற்றுலா, கடல் மீன்பிடித்தல் போன்றவற்றைக் கடலிலும் கடலோரப் பகுதிகளிலும் தீவிரப்படுத்தும் கொள்கை. இது காலநிலை மாற்றம், சூழலியல் சிதைவு, மாசுபாடு ஆகிய மூன்றையும் சரிசெய்ய நீடித்த வகையில் கடலோர வளங்களைப் பயன்படுத்த உதவும் என்று அரசு சார்பில் கூறப்படுகிறது. இது 2012இல் நடந்த மூன்றாவது புவி உச்சி மாநாட்டில் (Third Earth Summit Conference - Rio+20) கவனம்பெற்றது.
- சொல்லப்போனால், 1992இல் நடந்த இரண்டாவது புவி உச்சி மாநாட்டிலேயே இதற்கான முன்னெடுப்பு ‘ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மை’ (ICZM - Integrated Coastal Zone Management) எனத் தொடங்கப்பட்டது. இந்தச் சூழலில், 2004இல் மத்திய அரசின் வனம் - சுற்றுச்சூழல் அமைச்சகம், கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை, 1991 (coastal Regulation zone -CRZ)-ஐ குறித்து மீளாய்வு செய்ய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, 1991இலிருந்து 2004 வரை நடைபெற்ற சட்டவிதிமீறல்களைப் பற்றியோ, அறிவிப்பாணையை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது குறித்தோ குறிப்பிடாமல், புதிய கடலோர மேலாண்மை (ஒழுங்குமுறைக்கு மாற்றாக) சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிட்டது.
- இது கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மைத் திட்டத்தை முன்னிலைப்படுத்தி அமைந்திருந்தது. இதற்கு மீனவர்கள் / மீனவர் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மே 2008இல் இந்த அறிக்கை அடிப்படையில், அதுவரை நடைமுறையில் இருந்த, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை-1991க்கு மாற்றாக, கடலோர மண்டல மேலாண்மை அறிவிப்பாணை வரைவு (Draft Coastal Management Zone Notification) 2007ஐ மத்திய அரசு வெளியிட்டது. இதற்கும் மீனவ மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழவே, அரசு பின்வாங்கியது.
- எனினும், 2010இல் உலக வங்கி நிதியுதவியுடன் ICZMP (Integrated Coastal zone Management Plan) என்கிற திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இந்தத் திட்டம் குஜராத், ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னோட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், நீலக்கொடி கடற்கரைகளை உருவாக்கக் கடற்கரைச் சுற்றுச்சூழல் - அழகியல் மேம்பாட்டுத் திட்டமும் (BEAMS) ஏழு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது. கடற்கரைச் சூழலியல் சிதைவுக்கு அதிக அளவில் வித்திடுவதாகவே இத்திட்டம் அமைந்தது.
- எனினும், இதன் தொடர்ச்சியாக ரூ.1,557 கோடி மதிப்பில் என்கோர் (ENCORE [(Enhancing Coastal and Ocean Resource Efficiency]) என்கிற இரண்டாம் கட்டத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தியது இந்நிலையில், 2022இன் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (CAG) ஆய்வறிக்கை, “ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், மத்திய அளவிலும், மாநில அளவிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் குறைபாடுகள் இருந்தன.
- கடற்கரையில் மாசைக் குறைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இந்தத் திட்டத்தின் நோக்கமே சிதைக்கப்பட்டது” எனச் சுட்டிக்காட்டியுள்ளது. என்கோர் திட்டம் தமிழகம் உள்பட 9 கடலோர மாநிலங்கள், 4 மத்திய ஆட்சிப் பகுதிகளில், 2020 முதல் செயல்படுத்தப்பட்டது.
- தமிழகத்தில் சுமார் ரூ.336 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டது. ஐசிஇசட்எம்பி, என்கோர் திட்டங்களின் தொடர்ச்சியாகவே, நீலப் பொருளாதாரத்தை மையப்படுத்தி, நெய்தல் மீட்சி இயக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், தமிழகச் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துக்கான துறை உலக வங்கியிடம் நிதி கோரியிருப்பது இதுவே முதன்முறையாகும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.90 கோடி மதிப்பில், தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் சர்வதேச ஆவுளியா (Dugong) பாதுகாப்பகம் அமைக்கப்படவுள்ளதாகவும்; இது அரசுப் பகுதி, பகுதி அளவிலான அரசுப் பகுதி, தனியார் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சுற்றுலாவுக்கான கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன என்றும் கூறப்படுகிறது.
- இதேவேளையில், தமிழகக் காலநிலை இரண்டாவது மாநாட்டில் கரிம உமிழ்வைக் குறைப்பது தொடர்பான அறிக்கையில் ‘தமிழகத்தின் கரிம உமிழ்வைக் குறைப்பதில் கடல் காற்றாலைகள் முக்கியத்துவம் கொண்டவை’ என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இந்தக் கடல் காற்றாலைகள் அமையவிருக்கும் எல்லை என்பது தஞ்சாவூர், புதுக்கோட்டை கடற்பகுதியில் 449.34 சதுர கி.மீ. பரப்பளவில் தமிழக அரசால் ஆவுளியா பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு நெருக்கமாக அமைகிறது.
- தமிழகத்தில் உள்ள 10 கடற்கரைகளை ரூ.100 கோடி மதிப்பில் நீலக்கொடிக் கடற்கரைகளாக அங்கீகாரம் பெறத் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்தது. நீலக்கொடிக் கடற்கரைகள் என்பவை சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளுக்காகச் சுத்தமான கடற்கரை, கேளிக்கை வசதிகள் ஆகியவற்றைக் கொண்டதாக உருவாக்கப்படுகின்றன.
- நாகப்பட்டினம் மாவட்டத்தின் காமேஸ்வரம் கடற்கரையில், செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் எல்லை, மீனவ மக்களின் படகு நிறுத்தும் இடத்துக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இக்கிராமத்தின் பொருளாதார நிலை உயரும் எனவும், மீனவர்களின் மாற்று வாழ்வாதாரத்துக்கு உதவும் எனவும் அரசு முன்வைக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தின் அறிக்கை, திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு மொத்தமாக 31 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறுகிறது. இப்பகுதி ஆமை முட்டையிடும் இடமாகவும் தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- நீலக்கொடி திட்டம் இப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டால், மீனவ மக்கள் சுதந்திரமாகச் சென்றுவந்த கடற்கரைகள் வேலியிடப்படும். மீனவ மக்கள் மீன்பிடிச் செயல்பாடுகளில் ஈடுபட முடியாது; கடற்கரை என்னும் நிலம் சார்ந்த அவர்களுடைய உரிமைகள் பறிபோகும். கடற்கரைகளுக்குக் கட்டணம் விதித்து, வேலியிட்டு, சர்வதேசப் பயணிகளின் கேளிக்கைப் பூங்காவாக வணிகமயமாக்குவதே நீலக்கொடிக் கடற்கரைத் திட்டம். இப்படியாக நெய்தல் மீட்சி இயக்கம் கடல்சார் சூழலியலையும் வணிகமயமாக்குகிறது.
மறுக்கப்படும் சமூக நீதி:
- நெய்தல் மீட்சி இயக்கம், கடலையும் கடல் சார் சூழலியல் அமைவையும் கரிமச் சந்தையாக வணிகமயமாக்குவதையும், சுற்றுலாவைத் தீவிரப்படுத்துவதையும் முதன்மையாகக் கொண்டுள்ளதே தவிர, அடிப்படை நோக்கமான, சூழலியல் மீட்சி (resilience), நீடித்த வகையில் கடலோர வளங்களைப் பயன்படுத்துவது என்பதற்கே எதிரானதாக அமைந்துள்ளது.
- காலநிலைக்குத் தகுந்த கடற்கரைக் கிராமங்கள் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள திட்டமும் முத்துப்பேட்டை, கோடியக்கரை, பிச்சாவரம், பழவேற்காடு போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அமைவது மக்களை அப்புறப்படுத்தும் திட்டமாக அமைந்துவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு இந்தப் பிரச்சினைகளை நன்கு பரிசீலித்து, சூழலியல் பாதுகாப்பு, மக்கள் நலன் ஆகியவற்றை மதிப்பிட்டுத் தகுந்த முடிவை எடுக்க வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 01 – 2025)