TNPSC Thervupettagam

கட்டிட சிமிட்டிப் பூச்சு உயிரிழப்புகள் தவிர்க்க என்ன செய்வது?

January 23 , 2025 13 hrs 0 min 4 0

கட்டிட சிமிட்டிப் பூச்சு உயிரிழப்புகள் தவிர்க்க என்ன செய்வது?

  • மக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வேண்டித்தான் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்பு என்பது இரண்டு வகைப்படும். பாரம், காற்று, நிலநடுக்கம் போன்ற தாக்கங்களிலிருந்து காப்பது முதல் நிலை. சிறுசிறு சிதைவுகளிலிருந்து காப்பது இரண்டாம் நிலை.
  • சிறு சிதைவுகள் என்பதால் இழப்புகளும் சிறிய அளவில் இருக்கும். அதற்காக நாம் பாராமுகமாக இருந்துவிட முடியாது. குறிப்பாக, இரண்டு நிகழ்வுகள் பலரின் கவனத்தை ஈர்க்காமல் தொடர் நிகழ்வாக அரங்கேறுகின்றன.
  • ​திரு​வண்ணாமலை - போளூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்​குமார் (16), தினகரன் (15) சகோதரர்கள். இறுதி ஆண்டுத் தேர்வுக்​காகப் படித்து​விட்டு நள்ளிரவு தாண்டித் தூங்கச் சென்றுள்​ளனர். தினகரனுக்கு மட்டும் அது மீளாத இரவாக மாறிவிட்டது.
  • மேற்கூரை இடிந்து விழுந்​ததில் தினகரன் இறந்ததாக ஓர் ஊடகம் (28.04.2022) தெரிவிக்​கிறது. புதுக்​கோட்டை - எஸ்.களபம் கிராமப் பள்ளியில் ‘மேல்தளம் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்​த​தால், பரத் எனும் மாணவர் காயமடைந்தார்’ என்று மற்றொரு செய்தி (21.06.2022) தெரிவிக்​கிறது.

பிழையான தகவல்:

  • மேற்சொன்ன விபத்து​களில் விழுந்தது கான்கிரீட் கூரையல்ல, சிமிட்​டிக்காரை மட்டும்​தான். ஒருவேளை, கூரை விழுந்​திருந்தால் திருவண்ணா​மலைத் துயரங்கள் மீண்டும் அரங்கேறியிருக்கும். இப்படிப்பட்ட செய்தி​களால் வருத்தம் மேலோங்​கு​கிறது.
  • ஏனென்​றால், வல்லுநர் யாரும் ஆய்வு செய்யாமல் பிழையான தகவல்கள் தொடர்ச்​சி​யாகக் கடத்தப்​படு​கின்றன. இறப்பின் எண்ணிக்கை அதிகமாக இருந்​தால்தான் வல்லுநர் வரவழைக்​கப்பட வேண்டும் என்பதல்ல. சிறு காயம்​கூடப் போதும். அதைவிட முக்கியமாக, தவறான தகவல் நம் கவனத்தைச் சிதைக்​கிறது.

சிமிட்டிப் பூச்சு எதற்கு?

  • சிமிட்டிப் பூச்சு கான்கிரீட்டின் தன்மை​யை​விடத் தாழ்ந்தது. பிறகு ஏன் அது பூசப்​படு​கிறது? சாரம் முறையாக அமைத்து, கம்பிகளுக்குச் சரியான மேலுறை அமைய உரிய இடைவெளி கொடுத்து, தரமான கான்கிரீட் வார்த்து, இறுதியில் சாரத்தைப் பிரிக்​கும்போது கம்பி தெரியாமல், குறைபாடு இல்லாமல் மேற்பரப்பு தென்பட்டால் உரிமை​யாளரைவிட, கட்டிடப் பொறியாளர்தான் அதிகம் மகிழ்​வார்.
  • அப்படிப்பட்ட கட்டிடங்​களுக்கு சிமிட்டிப் பூச்சு தேவையில்லை. நம்மூர் மேம்பாலங்​களின் அடிப்பு​றத்தைச் சற்று நோக்கினால் இந்த உண்மை விளங்​கும். வெளிப்புறத் தோற்றத்தை மேலும் மேம்படுத்த விரும்​பினால் பூசலாம். பெரும்​பாலான சூழலில், கட்டு​மானத் தவறுகளை மறைக்கும் கவசமாக மட்டுமே இது பயன்படு​கிறது.

மணல் ஒரு பொறியியல் பொருள்:

  • இந்தியத் தரநிலைப் பணியகம் பூச்சு வேலைக்கு உகந்த மணலின் தரத்தை (IS:1542) நிர்ண​யித்​துள்ளது. 1980கள் வரை ஆற்றுமணல் இலவசமாகக் கிடைத்தது. ஆற்றுப்​படு​கையி​லிருந்து எடுத்துவர ஆகும் செலவுதான் அதன் விலை. அதனாலேயே அதன் மதிப்பும் பொறியியல் குணங்​களும் யாரையும் ஈர்க்க​வில்லை. ஆற்றுமணலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்​டபோது இந்தச் சூழல் வியாபாரி​களுக்குச் சாதகமாக மாறியது. ‘எம்.​சாண்ட்’, ‘பி.சாண்ட்’ எனப் புது அவதாரங்களை உருவாக்​கி​னார்கள். அவை சிறப்​பாகக் கோலோச்​சுகின்றன.
  • இந்தியத் தரநிலைப் பணியகம் ‘பி.சாண்ட்’ என்று எதையும் வகைப்​படுத்​தவில்லை. ‘எம்.​சாண்ட்’ என்கிற வகை உண்டு. ஆனால், அது இதுவல்ல. விதிநூல் ஐஎஸ்: 383-2016ஐப் படித்தால் உண்மை விளங்​கும். மணலின் பொறியியல் தன்மை, சிமிட்​டிக்​காரையின் பொறியியல் நெறிமுறை ஆகியவற்றைப் பாராட்டாத வரையில் இப்படிப்பட்ட இழப்புகள் தொடரும்.

வீழும் விதானங்கள்:

  • பட்டினப்​பாக்​கத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் சையது குலாம் குடியிருந்​தார். சில நாள்களுக்கு முன்பு வேலை முடிந்து வீடு திரும்​பி​னார். வீட்டை நெருங்​கும்போது மூன்றாவது மாடியி​லிருந்து விதானம் (Sunshade) உடைந்து, கீழே இருந்த விதானங்​களையும் உடைத்​துக்​கொண்டு அவர் தலையில் வீழ்ந்து உயிரிழந்​தார். கடந்த மே மாதம் கூடுவாஞ்​சேரியில் கபிலன் என்னும் சிறுவன் இறந்துள்ளான். புதுவை​யிலும் இப்படிப்பட்ட ஒரு விபத்தை நான் களஆய்வு செய்துள்ளேன். பட்டியல் நீளும். விதானங்கள் ஏன் வீழ்கின்றன?

இரும்புக் கரிப்பு:

  • இரும்புக் கம்பிகளால் கான்கிரீட் வலுவூட்​டப்​பட்டுக் கட்டிடங்கள் வானுயர்ந்து நிற்கின்றன. அவ்வளவு சிறப்பு​மிக்க இரும்​புக்கு ‘கரிப்பு’ (Corrosion) ஒரு சாபக்​கேடு. சுமார் பத்தாண்​டு​களைக் கடந்த கட்டிடங்களை ஆய்வுசெய்தால் பெரும்​பாலான விதானங்​களில் வெடிப்பு இருப்​பதைக் காணலாம். விதானங்​களின் தடிமன் பெரும்​பாலும் 10 செ.மீ. இருக்​கும்.
  • கம்பிக்குத் தேவையான உறை கிடைப்​ப​தில்லை. மற்ற பாகங்​களுக்குக் கொடுக்​கப்​படு​கின்ற கவனம் விதானங்​களுக்குக் கிடைப்​ப​தில்லை. முக்கியமாக, விதானங்கள் எப்போதும் வெயிலையும் மழையையும் எதிர்​கொள்ள வேண்டும். பல கட்டிடங்​களில் விதானங்​களைத் தொட்டிபோல் அமைத்து மழைநீரைத் தேங்க​விட்டு விடுவார்கள். விதானங்​களைக் கட்டும்போது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், யதார்த்​தத்தில் நிகழ்வது முற்றிலும் மாறானது.

இரும்புக் கரிப்பின் கோரமுகம்:

  • இரும்புக் கம்பிகள் கரிப்பு, தகைவு (stress) ஆகிய இரண்டு காரணங்​களால் செயலிழக்​கின்றன. அதிகத் தகைவினால் செயலிழக்கும் முன் தகைவு போதிய எச்சரிக்கை கொடுக்​கும். ஆனால், கரிப்பு அப்படியல்ல. ஒரே எச்சரிக்கை​தான். கான்கிரீட்டுக்கும் கம்பிகளுக்கும் இடையே ஓர் இயல்பான பிணைப்பு உண்டு. கம்பிகளின் மேலுள்ள முறுக்கு அந்தப் பிணைப்பை மேம்படுத்துகிறது.
  • கம்பிகளில் கரிப்பு ஏற்பட்​டால், அந்தப் பிணைப்பு விலக ஆரம்பிக்​கும். அது ஆபத்தின் ஆரம்பநிலை. பிணைப்பு முழுமையாக விலகும்போது இரண்டு நிகழ்வுகள் உடன்நிகழ்​கின்றன. கான்கிரீட் திடீரென்று முறிந்து கம்பிகளின் பிடியி​லிருந்து முழுமையாக விடுவித்​துக்​கொள்​ளும். எல்லாக் கம்பிகளும் கட்டிடத்​திலேயே இருக்க கான்கிரீட் முழுவதும் உருவப்​பட்டு​விடும். கம்பிகளின் அமைப்பில் ஒரு சிறு மாற்றத்தைப் புகுத்​தினால் இப்படிப்பட்ட விபத்​துக்களை முற்றிலும் தவிர்க்​கலாம்.

மாற்றம்: அவசியம்​-அவசரம்:

  • கட்டிடங்​களில் சிமிட்டிப் பூச்சைத் தவிர்ப்​பதால் இரு பயன்கள் விளையும். தவறுகள் வெளிப்​பட்டு​விடும் என்பதால் எச்சரிக்கை​யுடன் செயல்​படு​வார்கள். அரசாங்கக் கட்டிடங்​களுக்குப் பூச்சுவேலையை முற்றிலும் தவிர்ப்பது உத்தமம். தேவையற்ற பூச்சுக்கு ஆகும் செலவும் மிச்ச​மாகும்.
  • தேவைப்​பட்டால் பொறியியல் நுணுக்​கத்​துடன் செயல்பட வேண்டும். அடுத்​ததாக, விதானங்​களில் கம்பிகளின் முனையை வளைத்து​வைத்தால் கரிப்​பினால் கான்கிரீட் முறிந்​தாலும் விழுவதற்கு முன் போதிய அவகாசம் கிடைக்​கும். முறுக்குக் கம்பிகளுக்குப் பொதுவாகத் தேவையில்லை என்றாலும், சமீபகால விபத்​துக்​களைக் கருத்தில் ​கொண்டு கம்​பிகளின் நுனியில் ‘L’ ​கொக்கி அமைப்பதை உறுதி செய்தால் ​விபத்​துகளை நிச்​சயம் தவிர்​க்​கலாம்​!

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories